Monday, September 6, 2010

நான் இஸ்லாத்தைத் தழுவினேன்-ஆமினா அசில்மி-02

சென்ற பதிவின் தொடர்ச்சி....

இதன் பிறகு தான் நிலைமை மிக மோசமானது. ஆமினா அசில்மி அவர்களின் தாய் அவரை ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டார். அவரது சகோதரியோ அவருக்கு மனநிலை சரி இல்லை என்று மனநல மருத்துவமனையில் சேர்க்கப்  பார்த்தார். அவரது தந்தையோ ஆமினாவை கொலை செய்ய பார்த்தார். நண்பர்களோ அவரை வெறுத்து விட்டார்கள். 

குடும்பமும், நண்பர்களும் ஒருசேர புறக்கணித்து விட்டார்கள். கிட்டத்தட்ட அநாதை. இஸ்லாத்தை ஏற்று கொண்ட சில நாட்களிலேயே ஹிஜாப் அணிய தொடங்கிவிட்டார்கள். அதன் காரணமாக வேலையில் இருந்து நீட்கபட்டார்கள். இப்பொழுது குடும்பம், நண்பர்கள், வேலை அனைத்தும் சென்று விட்டது. காரணம் இஸ்லாம். ஆனால் அவருடைய ஈமான் மேம்மேலும் அதிகரித்தது. எல்லா புகழும் இறைவனுக்கே.

இப்பொழுது அவருடைய ஒரே ஆறுதல் பிரிந்து போன கணவர் மட்டுமே.ஆமினா அவர்கள், அவருடைய கணவரை மிகவும் நேசித்தார்கள், அவரும்தான். ஆனால் ஆமினா அவர்களின் மாற்றத்தை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

விவாகரத்து தவிர்க்க முடியாமல் போனது. ஆமினா அவர்களுக்கு இரண்டு குழந்தைகள். இஸ்லாம் அப்பொழுது அங்கு மிக சிறிதே அறியப்பட்ட நேரம். அந்த சிறிதும் கூட இஸ்லாத்தை பற்றிய தவறான எண்ணங்களாகவே இருந்தன. ஆகவே நீதிபதி அவர்கள், குழந்தைகள் ஆமினா அவர்களிடம் வளர்ந்தால் அவர்களுடைய வாழ்க்கை கேள்வி குறியாகிவிடும்  என்றும், குழந்தைகள் ஆமினாவின் கணவரிடம் வளர்வதே அவர்கள் எதிர்காலத்துக்கு நல்லது என்றும் தீர்ப்பளித்தார். ஆமினா அவர்களால் தாங்க முடியாத துயரம்.
அப்பொழுது நீதிபதி ஆமினா அவர்களுக்கு 20 நிமிடங்கள் அவகாசம் கொடுத்தார். ஆம் அதேதான். ஒன்று அவர் கணவர் சொல்லுவது போல் இஸ்லாத்தை கைவிடுவது அல்லது குழந்தைகளை கணவரிடத்தில் ஒப்படைப்பது.

அவர் தன் குழந்தைகள் மேல் அளவு கடந்த பாசம்

வைத்திருந்தார். ஒரு தாய்க்கு இதை விட பெரிய இழப்பு என்ன இருக்க முடியும். ஒரு நாளல்ல, ஒரு மாதமல்ல, ஒரு வருடமல்ல...வாழ்க்கை முழுவதும் தன் குழந்தைகளை பிரிந்திருக்கவேண்டும். அதே சமயத்தில் இஸ்லாத்தை துறந்து ஒரு பொய்யான வாழ்க்கையையும் வாழ முடியாது. இஸ்லாம் என்ற உண்மையை தன் குழந்தைகளிடம் மறைக்கவும் முடியாது.
"நீங்கள் அறிந்துகொண்டே உண்மையை பொய்யுடன் கலக்காதீர்கள்; உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள்" --- அல்குர்ஆன் 2:42  
"என் வாழ்வின் மிகத்துயரமான 20 நிமிடங்கள் அவை"
வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல், அவர் உடல் நிலையில் உள்ள சில பிரச்சனைகளால் மேற்கொண்டு குழந்தைகள் பெற்றுக்கொள்ள முடியாது என்று மருத்துவர்கள் கூறியிருந்தார்கள்.
"முன் எப்போதும் இல்லாத அளவிற்கு துவா செய்தேன்..............எனக்கு நன்றாக தெரியும், என் குழந்தைகளுக்கு அல்லாவிடம் தவிர வேறு பாதுகாப்பான இடம் இல்லையென்று. நான் அல்லாவை துறந்தால், எதிர்காலத்தில் என் குழந்தைகளுக்கு இறைவனிடம் இருப்பதால் ஏற்படக்கூடிய அற்புதங்களை எடுத்து கூற முடியாமல் போய்விடும்"  
ஒரு தாய்க்கு இதை விட ஒரு பெரிய தியாகம் இருக்க முடியாது. ஆம்....அல்லாவிற்காக குழந்தைகளை (ஒரு ஆண், ஒரு பெண் ) துறந்து விட்டார்...


தன்னால் இஸ்லாத்தை விட முடியாது என்று அழுத்தம் திருத்தமாக சொல்லிவிட்டார்.
"நான் நீதிமன்றத்திலிருந்து வெளியே வந்தபோது என்னால் என் குழந்தைகள் இல்லாமல் வாழ்வது மிகக்கடினம் என்று அறிந்திருந்தேன். இதயம் கனத்தது, ஆனால் எனக்கு தெரியும், நான் சரியானதையே செய்தேன் என்று"
 மீண்டும் இஸ்லாத்தை ஆராய தொடங்கினார்.

தனக்கு தெரிந்த இறைச்செய்தியை மற்றவர்க்கும் தெரியச்செய்தார். இஸ்லாமிய தாவாஹ் பணியை தொடங்கினார். அவர் சென்ற இடங்களில் எல்லாம் அவருடைய அழகிய வார்த்தைகளும், இஸ்லாத்தினால் கற்றுக்கொண்ட  குணமும்  மற்றவர்களை சுண்டி இழுத்தது. குர்ஆன் சொல்லுவது போல மிக அழகிய முறையில் இஸ்லாத்தை எடுத்து கூறினார். இறைவனின் கிருபையால், பலரும் ஆமினா அவர்களின் அழைப்பால் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ள ஆரம்பித்தார்கள்.

இறைவன் ஆமினா அவர்களுக்கு கொடுத்த சோதனைகள் போதும் என்று நினைத்தானோ என்னவோ, அவர்கள் இழந்ததை விட அதிகஅதிகமாக கொடுக்க ஆரம்பித்தான்.
 "அல்லாஹ் எந்த ஒரு ஆத்மாவிற்கும் அது தாங்கிக் கொள்ள முடியாத அளவு கஷ்டத்தை கொடுப்பதில்லை" --- அல்குர்ஆன் 2:286
உண்மைதான்....இஸ்லாமினால் இப்போது அவர் மிகவும் மாறி இருந்தார், மிக பக்குவபட்டவராகவும் ஆனார். அவரை வெறுத்த அவரது குடும்பம் அவரது நல்ல பண்புகளை பாராட்டியது, அந்த பண்புகளை அவரிடத்தில் கொண்டு வந்த மார்க்கத்தையும் தான். ஆமினா அவர்கள் தன் குடும்பத்தை பிரிந்தபோதும், அவர்களிடத்தில் வெறுப்பை காட்டவில்லை, குர்ஆன் சொல்லியது போல் தன் குடும்பத்தை எப்போதும்போல் மிகவும் நேசித்தார்.
"மேலும், அல்லாஹ்வையே வழிபடுங்கள்; அவனுடன் எதனையும் இணை வைக்காதீர்கள்; மேலும், தாய் தந்தையர்க்கும், நெருங்கிய உறவினர்களுக்கும்,   அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும், அண்டை வீட்டிலுள்ள உறவினர்களுக்கும், அருகிலுள்ள அண்டை வீட்டாருக்கும், கூட்டாளிகளாக இருப்போருக்கும், வழிப்போக்கர்களுக்கும், உங்களிடமுள்ள அடிமைகளுக்கும் அன்புடன் உபச்சாரம் செய்யுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் கர்வமுடையோரை, வீண் பெருமை பேசுபவர்களை நேசிப்பதில்லை" --- அல்குர்ஆன் 4:36       
ஒரு பண்டிகை தினமென்றால், அவரது குடும்பத்திற்கு தவறாமல் வாழ்த்து அட்டை அனுப்புவார், மறக்காமல் குர்ஆனில் இருந்தோ ஹதீஸில் இருந்தோ சில வரிகளை அந்த வாழ்த்து அட்டைகளின் முடிவில் எழுதி விடுவார். ஆனால் அது எங்கிருந்து எடுக்க பட்டது என்று குறிப்பிடமாட்டார். 
 
அவரது குடும்பத்தில் இருந்து முதலில் முஸ்லிமானது அவரது பாட்டி. அவருக்கு 100 வயதிற்கு மேல் இருக்கும். ஆமினா அவர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.

அடுத்து முஸ்லிமானது, ஆமினா அவர்களை ஒரு காலத்தில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதற்க்காக கொலை செய்ய துணிந்தாரே அவரேதான், ஆம் ஆமினா அவர்களின் தந்தையேதான் அவர்.

இது நடந்த சில நாட்களுக்கு பிறகு, அவரது தாய் ஆமினா அவர்களை அழைத்தார், தான் முஸ்லிமாக மாறுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று வினவினார். அல்ஹம்துலில்லாஹ், ஆமினா அவர்கள் கண்ணீர் மல்க இறைவனுக்கு நன்றி கூறினார்.  
    " நீங்கள் ஒன்றும் செய்ய தேவை இல்லை, இறைவன் ஒருவனே என்றும் முஹம்மது (ஸல்) அவர்கள் அவனுடைய தூதர் என்றும் சாட்சியம் கூறினால் போதும்"  
அதற்கு அவரது தாய் " அதுதான் எனக்கு முன்னமே தெரியுமே, வேறு என்ன செய்ய வேண்டும்"...
"அப்படியென்றால் நீங்கள் எப்பொழுதோ முஸ்லிமாகிவிட்டீர்கள்"
"ஒ அப்படியா, இறைவனுக்கு நன்றி, ஆனால் உன் தந்தையிடம் நான் முஸ்லிம் என்று சொல்லிவிடாதே. அவர் மிகவும் கோபப்படுவார், நானே பிறகு சொல்லிவிடுகிறேன்"

சுப்ஹானல்லாஹ், அவருடைய தந்தைதான் எப்பொழுதோ முஸ்லிமாகி விட்டாரே. ஆனால் அவரும் மறைத்திருக்கிறார், தன் மனைவி கோபப்படுவார் என்று. ஆக இருவரும் ஒருவருக்கொருவர் தெரியாமல் இத்தனை காலங்களாக முஸ்லிமாக வாழ்ந்திருக்கிறார்கள். ஆமினாவிற்கு என்ன சொல்வதென்று புரியவில்லை. கண்களில் இருந்து கண்ணீர் தாரையாய் வெளியேறியது....
"இறைவா நீ மாபெரும் கிருபையாளன்"
பிறகு முஸ்லிமானது, ஆமினாவை  மனநல மருத்துவமனையில் சேர்க்க வேண்டும் என்று சொன்ன அவரது சகோதரி. ஆம் அவர் இஸ்லாம் தான் மனநலத்திற்கு நல்லது என நினைத்திருக்க வேண்டும்.

16 வருடங்கள் கழித்து, ஆமினா அவர்களின் முன்னாள்  கணவரும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார். பதினாறு வருடங்களாக தான் ஆமினாவை கவனிப்பதாகவும், தன்னுடைய தவறுகளுக்கு மன்னிப்பு கேட்பதாகவும் கூறினார்.  பிரிந்து சென்ற அவரது மகன் தன்னுடைய 21 ஆவது வயதில் தன்னை இஸ்லாத்தில் இணைத்து கொண்டார்.

ஆக, எந்த மார்க்கத்திற்காக ஆமினாவை தனிமை படுத்தினார்களோ, இன்று அதே மார்க்கத்தில் அனைவரும் இணைந்து விட்டார்கள், மிக அதிக பண்புள்ளவர்களாக. எல்லா புகழும் அல்லாஹ்விற்கே.

ஆனால் இறைவனுடைய மற்றுமொரு மாபெரும் பரிசு ஆமினா அவர்களை திக்குமுக்காட செய்தது. ஆமினா அவர்கள் தன்னுடைய விவாகரத்துக்கு பிறகு வேறொருவரை மணந்தார்கள். மருத்துவர்கள் ஆமினா அவர்களுக்கு குழந்தை பிறக்காது என்று சொல்லி இருந்தார்கள். இறைவன் கொடுக்க நினைத்தால் யார் தடுப்பது. ஆம், அந்த அதிசயம் நிகழத்தான் செய்தது. இறைவன் அவருக்கு ஆண் வாரிசை பரிசாக அளித்தான். இது இறைவனின் மாபெரும் கிருபை. அதனால் அந்த குழந்தைக்கு "பரக்காஹ்" என்று பெயரிட்டு மகிழ்ந்தார்கள்.

அல்லாஹ்விற்காக ஆமினா அவர்கள் செய்த தியாகங்கள் நெஞ்சங்களை உருக்குபவை. 
  • ஒரு காலத்தில் அவரை விட்டு விலகிய குடும்பத்தாரில் இன்று பெரும்பாலானோர் முஸ்லிம்கள்.
  • அன்றோ  இஸ்லாத்தை தழுவியதற்காக அவரை விட்டு விலகினர் அவரது நண்பர்கள். இன்றோ அவரை நேசிக்க கூடியவர்கள் கோடானுகோடி பேர்.  
"நண்பர்கள் நான் போகுமிடமெல்லாம் கிடைத்தார்கள்"
  • அன்றோ ஹிஜாப் அணிந்ததற்காக வேலையை இழந்தார்கள். இன்றோ சர்வதேச முஸ்லிம் பெண்கள் அமைப்பின் தலைவர். 

இறைவன் தன்னை நாடிவந்தவர்க்கு தன் அருட்கொடைகளை அளித்து விட்டான். இன்று அவர் பல இடங்களுக்கும் சென்று இஸ்லாத்தை போதித்து வருகிறார். பலரையும் இஸ்லாத்தின்பால் அழைத்து வருகிறார். இவரால் இஸ்லாத்தை தழுவியவர்கள் ஏராளமானோர்.  



கடும் முயற்சி எடுத்து அமெரிக்காவில் பெருநாள் தபால்தலைகளை வெளியிட செய்தது இவரது அமைப்பு. இப்பொழுது பெருநாள் தினத்தை விடுமுறை தினமாக அறிவிக்க முயற்சி எடுத்து வருகிறது இந்த அமைப்பு.


                                        

சில வருடங்களுக்கு முன் அவருக்கு புற்றுநோய் இருப்பதாக கண்டறிந்தார்கள். அது முற்றிவிட்டது என்றும் இன்னும் ஒரு வருட காலத்தில் இறந்து விடுவார்கள் என்றும்  மருத்துவர்கள் கூறிவிட்டார்கள். ஆனால் ஆமினா அவர்களின் ஈமான் இறந்துவிடவில்லை. அது இன்னும் அதிகரித்தது.
"நாம் எல்லோரும் இறக்கத்தான் போகிறோம். எனக்கு நன்றாக தெரியும் நான் அனுபவிக்ககூடிய இந்த வலியில் என் இறைவனின் அருள் உள்ளது என்று"
எல்லா புகழும் அல்லாஹ்விற்கே, இன்றும் ஆமினா அவர்கள் நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார்கள். இன்னும் தனக்கு வந்துள்ள இந்தபுற்றுநோய்தான் தனக்கு இறைவன் கொடுத்துள்ள மாபெரும் கிருபை என்றும் நம்புகிறார்கள்.

இன்று ஆமினா அவர்களிடம் சொந்தமாக ஒரு வீடு கூட இல்லை. தன் 33 வருட தாவாஹ் பணியில் அனைத்தையும் இஸ்லாத்திற்காக கொடுத்து விட்டார்கள். இப்பொழுது அமெரிக்க முஸ்லிம்கள் அவருக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறார்கள்.

ஆனால் ஏழை என்று நினைத்து விடாதீர்கள், அவர் மாபெரும் பணக்காரர், ஆம் இறைவனின் பார்வையில்...அவர் செய்துள்ள நன்மைகளின் அளவினால்.
"ஆனால் பொறுமையுடன் சகித்து எவர் நற்கருமங்கள்செய்கின்றார்களோ, அவருக்கு மன்னிப்பும் மகத்தான நற்கூலியும் உண்டு"  --- அல்குர்ஆன் 11:11    
 " நிச்சயமாக இந்த குரான் முற்றிலும் நேர்வழியை காட்டுகிறது; அன்றியும் நற்கருமங்கள் செய்து வரும் மூமின்களுக்கு நிச்சயமாக மிகப்பெரும் நற்கூலி உண்டு என்றும் நன்மாராயங் கூறுகிறது" --- அல்குர்ஆன் 17:9  

குறிப்பு:
ஆமினா அவர்களின் சொற்ப்பொழிவுகள் பல இணையதளங்களில் கிடைக்கின்றன, யுடுயுப் (youtube) உட்பட. குறிப்பாக பெண்களுக்கான அவரது சொற்ப்பொழிவுகள் மிகவும் பிரசித்தி பெற்றவை.

References:
1. Interview with Rebecca Simmons of  The Knoxville News-Sentinel in Tennessee
2. islamreligiondotcom
3. youtubedotcom
4. famousmuslimsdotcom


தமிழாக்கம்: ஆஷிக் அஹ்மத்

 Source: http://ethirkkural.blogspot.com/ 

நான் இஸ்லாத்தைத் தழுவினேன்- ஆமினா அசில்மி-01



ஆமினா அசில்மி (Aminah Assilmi), மிகப் பிரபலமான இஸ்லாமிய மார்க்க அறிஞர். அமெரிக்காவைச் சார்ந்த  சர்வதேச முஸ்லிம் பெண்கள் அமைப்பின் தலைவர் ( International Union of Muslim Women ). 

ஆமினா அசில்மி, இந்த பெயரை கேட்டாலே இவரைப்பற்றி தெரிந்தவர்களுக்கு ஒரு புது உற்சாகம் பிறக்கும். ஒரு முஸ்லிம் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு ஒரு உதாரணம். தன்னை இஸ்லாத்தில் இணைத்து கொண்ட பிறகு கடந்த 33 ஆண்டுகளாக இவர் செய்து வரும் இஸ்லாமிய சேவைகள் அளப்பறியது. சொல்லி மாளாதது. பல முஸ்லிம்களுக்கு இவருடைய வாழ்கை பயணம் ஒரு பாடம். அதைத்தான் இங்கு காண இருக்கிறோம். இன்ஷா அல்லாஹ். 


"நான் முஸ்லிம் என்று சொல்லிக்கொள்வதில் மிகவும் பெருமை படுகிறேன். இஸ்லாம் என்னுடைய இதயத்துடிப்பு. இஸ்லாம் என்னுடைய பலம். இஸ்லாம் இல்லை என்றால் நான் ஒன்றுமில்லை. அல்லாஹ், அவனுடைய மகத்தான கிருபையை என்னிடம் காட்டாவிட்டால் என்னால் வாழ முடியாது" ----- ஆமினா அசில்மி

ஆமினா அசில்மி அவர்கள் கிறிஸ்துவ பின்னணியில் (Southern Baptist) இருந்து வந்தவர், தன் கல்லூரி காலங்களில் ஒரு மிகச்சிறந்த மாணவியாக திகழ்ந்தவர், பல விருதுகளை பெற்றவர்.

ஒரு கணினி கோளாறு இவருடைய வாழ்க்கையை திருப்பி போட்டது.  


அது 1975ஆம் ஆண்டு. முதன் முதலாக ஒரு வகுப்புக்கு முன்பதிவு செய்ய கணினி பயன்படுத்திய நேரம். ஆமினா அவர்கள் தான் சேர வேண்டிய வகுப்புக்கு தன் பெயரை முன் பதிவு செய்து விட்டு தன் தொழிலை கவனிப்பதற்காக ஒக்ளஹோமா (Oklahoma) சென்று விட்டார். திரும்பி வர தாமதமாக, வகுப்பு துவங்கி இரண்டு வாரம் சென்ற பிறகே வந்து சேர்ந்தார். விட்டு போன வகுப்புகளை வெகு சீக்கிரமே கற்றுக்கொள்ளலாம் என்று நினைத்தவருக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி. ஏனென்றால், கணினி தவறுதலாக வேறொரு வகுப்பில் அவரை முன்பதிவு செய்திருந்தது. அந்த வகுப்பு தியேட்டர் (Theatre) வகுப்பு என்று அழைக்கபட்டது, அந்த வகுப்பில் அடிக்கடி அனைத்து மாணவர்கள் முன்பு பேச வேண்டிருந்தது. இயல்பாகவே ஆமினா அவர்கள் மிகுந்த கூச்ச சுபாவம் கொண்டிருந்ததால் இந்த வகுப்பில் சேர மிகவும் அஞ்சினார். 


மிகவும் தாமதம் என்பதால் இந்த வகுப்பை புறக்கணிக்க முடியாத நிலை. மேலும் இந்த வகுப்பை அவர் புறக்கணித்தால் அவர் பெரும் ஸ்காலர்ஷிப்பை இழக்க வேண்டிய நிலை வரலாம். ஆகவே இந்த வகுப்பில் சேருவதென முடிவெடுத்தார். 


அடுத்த நாள் வகுப்பிற்கு சென்ற அவருக்கு மாபெரும் அதிர்ச்சி. அந்த வகுப்பு முழுவதும் அரேபிய மாணவர்கள். அவ்வளவுதான். இனிமேல் வகுப்பிற்கு செல்ல கூடாதென முடிவெடுத்தார். அதற்கு அவர் சொன்ன காரணம்

"அந்த நாகரிகமற்ற அரேபியர்களுடன் படிக்க மாட்டேன்"
ஆமினா அவர்களின் கணவர் அவருக்கு ஆறுதல் கூறினார், இறைவன் எது செய்தாலும் அதில் ஒரு அர்த்தம் இருக்குமென்று. அமீனா அவர்கள் இரண்டு நாட்கள் வீட்டின் அறையில் அடைந்து இருந்தார். அறையை விட்டு வெளியே வந்த அவர் சொல்லியது

"நான் அவர்களுடன் சேர்ந்து படிப்பேன். மேலும் அவர்களை கிறிஸ்துவராக்குவேன்"
 இறைவன் இந்த அரேபியர்களை மதம் மாற்றுவதற்காகவே தன்னை அவர்களுடன் சேர வைத்ததாக நம்பினார். அரேபியர்களுடன் சேர்ந்து படிக்க தொடங்கினார். அவர்களுக்கு  கிருஸ்துவத்தை எடுத்துரைத்தார்.

 " நான் அவர்களிடம் சொல்லுவேன், ஏசுவை மீட்பராக ஏற்காவிட்டால் எப்படி அவர்கள் நரகத்தில் வதைக்க படுவார்கள் என்று...நான் சொல்வதை அவர்கள் கவனமாக கேட்டுக்கொண்டார்கள். மிகுந்த கண்ணியம் காட்டினார்கள். ஆனால் மதம் மாறவில்லை. பிறகு நான் அவர்களிடம் ஏசு கிறிஸ்து எவ்வளவு ஆழமாக அவர்களை நேசிக்கிறார் என்று விளக்கினேன். அப்பொழுதும் அவர்கள் என் பேச்சை சட்டை செய்யவில்லை"
பிறகு ஆமினா அசில்மி அவர்கள் ஒரு முடிவெடுத்தார்கள்...

   "நான் அவர்களுடைய புனித நூலை படிப்பதென முடிவெடுத்தேன், இஸ்லாம்  ஒரு பொய்யான மார்க்கம், முஹம்மது ஒரு பொய்யான தூதர் என்று நிரூபிப்பதர்க்காக"
ஆமினா அசில்மி அவர்களின் வேண்டுதலின் பேரில் ஒரு மாணவர் குரானையும் மற்றுமொரு இஸ்லாமிய புத்தகத்தையும் கொடுத்தார். இந்த இரண்டு புத்தகங்களையும் அடிப்படையாக வைத்து தன் ஆராய்ச்சியை தொடங்கினார். சுமார் ஒன்றரை ஆண்டுகள் முடிவில் மேலும் பதினைந்து இஸ்லாமிய புத்தகங்களை படித்து முடித்திருந்தார். அப்பொழுதெல்லாம் குரானில் தான் எது சர்ச்சைக்குரியதோ என்று நினைக்கிறாரோ அதையெல்லாம் குறிப்பெடுத்து கொள்வார், இஸ்லாம் பொய் என்று நிரூபிப்பதர்க்காக. ஆனால் குரானின் மூலம் தனக்குள் ஒரு மாற்றம் ஏற்படுவதை உணர்ந்தார்.

" நான் மாறி கொண்டிருந்தேன், சிறிது சிறிதாக, என் கணவர் சந்தேகம் படுமளவிற்கு. நாங்கள் ஒவ்வொரு வெள்ளியும் சனியும் பார் (BAR) மற்றும் பார்ட்டிகளுக்கு சென்று கொண்டிருந்தோம். ஆனால் நான் இனிமேலும் அங்கு  செல்ல விரும்பவில்லை. அது போன்ற இடங்களில் இருந்து என்னை தனிமை படுத்தினேன்."
பன்றி இறைச்சி மற்றும் குடியை நிறுத்தி விட்டார். இது அவருடைய கணவரை சந்தேகம் கொள்ள செய்தது. தன்னை விட்டு செல்லும்படி சொல்லிவிட்டார். ஆமினா அசில்மி அவர்கள் தனி வீட்டில் வசிக்க ஆரம்பித்தார்கள். இப்பொழுது மேலும் இஸ்லாத்தை பற்றி ஆராயச்  செய்தார்கள்.
அப்பொழுது அவர்களுக்கு அப்துல் அஜீஸ் அல் ஷேய்க் என்பவரது அறிமுகம் கிடைத்தது.

"அவரை என்னால் மறக்க முடியாது. நான் இஸ்லாத்தை பற்றி கேட்ட ஒவ்வொரு கேள்விக்கும் மிக பொறுமையாக அறிவுப்பூர்வமாக பதிலளித்தார். அவர், என்னுடைய கேள்வி தவறானது என்றோ, முட்டாள்தனமானது என்றோ ஒரு பொழுதும் கூறியதில்லை. சிறிது சிறிதாக என்னுடைய சந்தேகங்கள் விலகின"
1977, மே 21இல், அப்துல் அஜீஸ் மற்றும் அவரது தோழர்கள் முன்னிலையில் இஸ்லாத்தை அமீனா அவர்கள் ஏற்றுக்கொண்டார்.

   " இறைவன் ஒருவனே என்றும், முஹம்மது (ஸல்) அவர்கள் அவனது  தூதரென்றும் நான் சாட்சியம் கூறுகின்றேன்"
 "நான் முதன்முதலாக இஸ்லாத்தை படிக்க தொடங்கியபோது, எனக்கு இஸ்லாத்தினால் தேவை என்று ஒன்று இருந்ததாக நினைவில்லை. இஸ்லாமும் என் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் நான் நினைக்கவில்லை. ஆனால் முன்பிருந்ததைவிட இப்பொழுதோ என் மனதில் சொல்லமுடியாத ஒரு வித அமைதி, மகிழ்ச்சி. இதற்க்கெல்லாம் காரணம் இஸ்லாம் தான்"
இதன் பிறகு தான் நிலைமை மிக மோசமானது. ஆமினா அசில்மி அவர்களின் தாய் அவரை ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டார். அவரது சகோதரியோ அவருக்கு மனநிலை சரி இல்லை என்று மனநல மருத்துவமனையில் சேர்க்கப்  பார்த்தார். அவரது தந்தையோ ஆமினாவை கொலை செய்ய பார்த்தார். நண்பர்களோ அவரை வெறுத்து விட்டார்கள்.
குடும்பமும், நண்பர்களும் ஒருசேர புறக்கணித்து விட்டார்கள். கிட்டத்தட்ட அநாதை. இஸ்லாத்தை ஏற்று கொண்ட சில நாட்களிலேயே ஹிஜாப் அணிய தொடங்கிவிட்டார்கள். அதன் காரணமாக வேலையில் இருந்து நீட்கபட்டார்கள். இப்பொழுது குடும்பம், நண்பர்கள், வேலை அனைத்தும் சென்று விட்டது. காரணம் இஸ்லாம். ஆனால் அவருடைய ஈமான் மேம்மேலும் அதிகரித்தது. எல்லா புகழும் இறைவனுக்கே.
இப்பொழுது அவருடைய ஒரே ஆறுதல் பிரிந்து போன கணவர் மட்டுமே.
ஆமினா அவர்கள், அவருடைய கணவரை மிகவும் நேசித்தார்கள், அவரும்தான். ஆனால் ஆமினா அவர்களின் மாற்றத்தை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இன்ஷா அல்லாஹ்...தொடரும்
 

 Source: http://ethirkkural.blogspot.com/ 
 

Thursday, September 2, 2010

யார் இந்த அஹ்மத் தீதாத்?


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...

உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...
 
அஹ்மத் தீதத் அவர்கள், 

  • ஒரு முஸ்லிம் எப்படி வாழ வேண்டும் என்பதற்கான உதாரணம்
  • ஒரு முஸ்லிமின் மன உறுதிக்கு எடுத்துக்காட்டு
  • எண்ணற்றவர்களை தாவாஹ்  பணிக்கு அழைத்து வந்தவர்
  • எண்ணற்றவர்களை இஸ்லாத்தின்பால் அழைத்து வந்தவர் 
  • கிருத்துவ மிசனரிகளை எப்படி எதிர்க்கொள்வது என்று கற்றுத் தந்தவர்களில் ஒருவர்.
  • தென் ஆப்பிரிக்காவில் ஒரு வலிமையான, நேர்த்தியான இஸ்லாமிய சமூகத்தை உருவாக்கியவர்களில் ஒருவர்.

அஹ்மத் தீதத் (Ahmed Deedat, 1918-2005) அவர்கள் இந்தியாவில் பிறந்தவர், தென் ஆப்ரிக்காவில் வளர்ந்தவர். IPCI (Islamic Propagation Centre International, Durban, South Africa) யை நிறுவியவர். 

1980-1996 இடையேயான காலக்கட்டம் இவரது தாவாஹ் பணியில் முக்கியமானது. இந்த காலக்கட்டத்தில் தான் தீதத் அவர்கள் உலகின் பல்வேறு நாடுகளுக்கும் பயணம் செய்து பல பிரபல கிருத்துவ மிசனரிகளுடன் பல்வேறு தலைப்புகளில் விவாதம் மேற்கொண்டு அவர்களை திணறடித்தார். ஒவ்வொரு விவாதமும் நம் அறிவுக்கு உணவு, ஒவ்வொரு கேள்வியும் கூர்மை.          

இன்றளவும் இவரது நூல்கள் மற்றும் விவாத வீடியோக்கள் உலகளாவிய முஸ்லிம்களுக்கு கிருத்துவ மிசனரிகளை எதிர்க்கொள்ள உதவுகிறது. இன்றளவும் இவரது நூல்களை படித்து பைபிளை பற்றி அறிந்துகொண்டு, இஸ்லாமை படிக்கத் துவங்கியவர்கள் பலர்.


இன்றளவும் இஸ்லாத்திற்கு வரும் கிருத்துவர்களில் பலர், தாங்கள் அஹ்மத் தீதத் அவர்களின் நூல்களை/வீடியோக்களை படித்ததாலேயே/பார்த்ததாலேயே பைபிளின் மற்றொரு பக்கத்தை பற்றி அறிந்து கொண்டோம் என்றும், இஸ்லாத்தை பற்றி அறிந்து கொள்ள ஆர்வப்பட்டோம் என்றும்  கூறுவதை பார்க்கலாம்.          

இங்கு அவரது சில விவாதங்களில் இருந்து சில தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவிருக்கிறேன்...இன்ஷா அல்லாஹ்...    


1. Ahmed Deedat and Tele-Evangelist Jimmy Swaggard, at University of Louisiana USA, November 1986.
Debate Title: Is the Bible God's Word?

அமெரிக்காவின் லூசியானா பல்கலைகழகத்தில் ஜிம்மி ஸ்வாகர்ட் (Jimmy Swagard) அவர்களுடன் அஹ்மத் தீதத் அவர்கள் கலந்து கொண்ட விவாதம் சுவாரசியமானது. ஜிம்மி ஸ்வாகர்ட், அன்றைய காலத்தில் அமெரிக்காவில் மிகப்  பிரபலமானவர். தொலைக்காட்சியில் தோன்றி கிருத்துவத்தை போதித்து வந்தவர் (Tele Evangelist).  

விவாதத்தின் நடுவே ஜிம்மி ஸ்வாகார்ட் அவர்கள் பின்வருமாறு கூறினார்,

"நான் இந்த விவாதம் ஆரம்பிக்கும் முன் அஹ்மத் தீதத் அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தேன், அப்போது அவரிடம் கூறினேன், மிஸ்டர் தீதத் உங்கள் மதம் நிறைய பெண்களை மணமுடிக்க உங்களுக்கு அனுமதி அளித்திருக்கிறது என்று, அப்போது தீதத் அவர்கள் குறுக்கிட்டு நான்கு வரை மட்டுமே என்றார். 


நான் கூறினேன், பாருங்கள் தீதத் உங்கள் மதம் நான்கு பெண் வரை மணமுடிக்க உங்களுக்கு அனுமதி அளித்திருக்கிறது, ஆனால் எங்கள் மதம் எனக்கு ஒரு பெண்ணை(?) மட்டுமே மணமுடிக்க அனுமதி அளிக்கிறது, அதனால் நான் முதல் தடவையே சிறந்த பெண்ணை தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும்" 

இதை அவர் சொல்லி முடித்தவுடன் அரங்கத்தில் பலத்த கைதட்டல்கள். ஜிம்மி ஸ்வாகர்ட், வசீகரமாக பேசக்கூடியவர், அதனாலேயே அவருக்கு ரசிகர் கூட்டம் அதிகமிருந்தது. 

இந்த விவாதம் நடந்த முடிந்த சில மாதத்தில் ஜிம்மி ஸ்வாகர்ட் ஒரு விபச்சார வழக்கில் சிக்கினார். வாரம் ஒருமுறை விலைமாதரிடம் சென்று வந்திருக்கிறார் அவர். அமெரிக்காவில் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கிய சம்பவம் அது. ஒரே நாளில் அவரது செல்வாக்கு சரிந்து விட்டது. 

இந்த சம்பவத்தை பிறிதொரு விவாதத்தில் குறிப்பிட்ட தீதத் அவர்கள் 

"அன்று ஜிம்மி ஸ்வாகர்ட் என்னிடம்.....(இங்கு மேலே ஸ்வாகர்ட் பேசியதை போட்டுக்கொள்ளவும்)....என்று கூறினார். இப்போதுதான் தெரிகிறது, அவர் முதல் தடவையே தேர்ந்தெடுத்த பெண் அவருக்கு சிறந்தவளாக இல்லையென்று" 

இப்படி சொன்னதுதான் தாமதம். அரங்கம் முழுவதும் சிரிப்பொலி ... 

ஜிம்மி ஸ்வாகர்ட் அவர்களுடனான அதே விவாதத்தில் மற்றுமொரு சுவையான சம்பவம். அஹ்மத் தீதத் அவர்கள் ஒரு வலிமையான வாதத்தை முன்வைத்தார். அது, பைபிளின் சில பகுதிகள் ஆபாசம் நிறைந்ததாக இருக்கிறது என்றும், அந்த பகுதிகளை ஒரு ஆண் தன் மனைவி முன்போ, சகோதரி முன்போ, மகள் முன்போ படிக்க முடியாது என்றும்

"இதோ என்னிடம் பைபிளின் அந்த பகுதிகள் (Ezekiel 23) இருக்கிறன, ஜிம்மி ஸ்வாகர்ட் இந்த மக்கள் கூட்டத்தின் முன் அதனை படித்து காட்டட்டும். நிச்சயமாக அவரால் முடியாது. யாராலும் முடியாது. ஏனென்றால் அவை அந்த அளவிற்கு மோசமானவை. அப்படி ஸ்வாகர்ட் படித்துவிட்டால் நூறு டாலர்கள் அவருக்கு" 

என்று தன்னிடம் இருந்த அந்த பகுதிகளின் நகல்களை ஸ்வாகர்ட் முன் நீட்டினார். ஸ்வாகர்ட், தீதத் அவர்களின் சவாலுக்கு விவாதத்தில் பதிலளிக்கவில்லை.

பின்னர் கேள்வி நேரத்தில் ஒரு நபர் அதே கேள்வியை முன்வைக்க, ஸ்வாகர்ட் அவர்களுக்கு தர்மசங்கடமாய் போயிற்று. சிறிது நேரம் அமைதி காத்தவர், பின்னர் எழுந்து வந்து அந்த பகுதிகளை படிக்க தயாரானார். ஆனால் அஹ்மத் தீதத் அவர்கள் கொடுத்த நகலை படிக்கவில்லை, சிறிது நேரம் அஹ்மத் தீதத் அவர்கள் கொடுத்த நகலை உற்று நோக்கியவர், பின்னர் என்ன நினைத்தாரோ தன்னுடைய பைபிளில் இருந்து படிக்க ஆரம்பித்தார்.

இங்கு ஒன்றை கவனிக்க வேண்டும், தீதத் அவர்கள் கொடுத்தது சமீபத்தைய பைபிள் பதிப்பிலிருந்து (New International Version) எடுத்தது. அதனுடைய ஆங்கிலம் எளிமையாக இருக்கும், யாருக்கும் சட்டென புரிந்துவிடும்.

ஆனால் ஸ்வாகர்ட் அவர்கள் படித்ததோ பழைய ஆங்கிலம் கொண்ட கிங் ஜேம்ஸ் பதிப்பு (King James Version) அதனுடைய ஆங்கிலம் சட்டென புரியாது. தீதத் அவர்களும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை, எதையாவது படிக்கட்டும், உண்மை மக்களுக்கு (சிறிதளவாவது) தெரிந்தால் போதும் என்று இருந்து விட்டார் போலும்.

இங்கு மற்றொன்றையும் கவனிக்க வேண்டும். எப்போதும் ஒரு வித வசீகரத்துடன் நிறுத்தி நிதானமாய் பைபிளை வாசிக்கும் ஸ்வாகர்ட் அவர்கள், அந்த பகுதியை வேகமாய் படித்தார், ஒருவித பதற்றத்திலேயே அந்த நேரத்தை கையாண்டார். படித்து முடித்தவுடன் நூறு டாலர்களை பெற்றுக்கொண்டு அதை அந்த அரங்கத்திற்கு வாடகை கட்ட தன்னாலான தொகை என்று கொடுத்துவிட்டார்.



அஹ்மத் தீதத் அவர்களுக்கும் மகிழ்ச்சி. பின்ன இருக்காதா என்ன, இது தானே அவர் எதிர்பார்த்தது... கிருத்துவ மக்கள் அதிக அளவில் குழுமி இருந்த அரங்கத்தில் அவர்களது ஆளை வைத்தே தன் காரியத்தை சாதித்து கொண்டாரே...                              


2. Ahmed Deedat and Pastor Stanley Sjoberg, at Stockholm Sweden, Oct 1991.
Debate Title: Is the Bible the true word of God? 

ஸ்வீடன் தலைநகரான ஸ்டாக்ஹோமில் (Stockholm), பாஸ்டர் ஸ்டான்லி சொபர்க் (Paster Stanley Sjoberg) அவர்களுடன் தீதத் அவர்கள் அடுத்தடுத்து இரண்டு நாட்களில் இரண்டு விவாதங்களில் கலந்து கொண்டார். விவாதங்களில் தீதத் அவர்கள் பாஸ்டரை மிகுந்த தர்ம சங்கடத்தில் ஆழ்த்தினார், அல்லது ஒருவழி பண்ணிவிட்டார் என்றே கூறலாம். பாஸ்டர் அவர்கள் தீதத் அவர்களின் வாதத்தால் மிகுந்த உணர்ச்சிவச  பட்டுவிட்டார்.

சர்ச்சில் நடந்த முதல் விவாதத்தில், ஆரம்பத்திலேயே தீதத் அவர்கள் பாஸ்டரிடம் பல பைபிள்களை காட்டி (Catholic Bible, Scofield Bible, Revised standard version (RSV) bible 1952 version, RSV bible 1971 version)

"தாங்கள் இதில் எது உண்மையான கடவுளின் வார்த்தை என்று சொல்லுகிறீர்களோ அதனை வைத்தே நான் விவாதத்தை தொடங்க விரும்புகிறேன்" என்று கூற,

பாஸ்டர் அவர்களோ இதற்கு தன் நேரத்தில் பதில் கூறுவதாக சொன்னார். ஆனால் அவருடைய நேரத்தில் பதில் கூறவே இல்லை. தீதத் அவர்கள் அந்த கேள்வியை கேட்டதற்கு காரணம், அவர் காட்டிய அனைத்து பைபிள்களும் ஒன்றோடு ஒன்று முரண்பட்டவை.

பின்பு, தீதத் அவர்கள் அவருடைய நேரத்தில்,

"பாஸ்டர் அவர்களை இப்போதே ஒரு சோதனைக்கு அழைக்கிறேன். இதோ என்னிடம் இரண்டு பைபிள்கள் உள்ளன, இரண்டும் RSV பைபிள்கள்தான். ஒன்று 1952 ஆம் ஆண்டு பதிப்பு, மற்றொன்று 1971 ஆம் ஆண்டு பதிப்பு. பாருங்கள் இரண்டையும்....இரண்டும் ஒன்றாக இருப்பது போல் தானே இருக்கிறது...ஆனால் இரண்டும் ஒன்றல்ல...



பாஸ்டர் அவர்களிடம் நான் இதில் ஒரு பைபிளை கொடுக்கிறேன்...

பாஸ்டர், நீங்கள் அந்த பைபிளில் Book of Isiah 37 யை பாருங்கள். என்னிடம் உள்ள மற்றொன்றிலிருந்து நான் படிக்கிறேன். நான் படிப்பது உங்களிடத்தில் உள்ள பைபிளில் அப்படியே இருக்கிறதா என்று பார்த்து சொல்லுங்கள் "



என்று ஆரம்பிக்க விவாதம் படு சுவாரசிய கட்டத்தை எட்டியது...

தீதத் அவர்கள் ஒரு RSV பதிப்பில் இருந்து படிக்க ஆரம்பிக்க, பாஸ்டர் ஸ்டான்லியும் அவரிடம் உள்ள பைபிளில் அதனை சரிப்பார்த்துக்கொண்டே வந்தார். எல்லாம் ஒரே மாதிரி தான் இருந்தன.

"எல்லாம் ஒரே மாதிரிதானே இருக்கின்றன?...நீங்கள் படிக்கின்ற Book of Isiah 37 அப்படியே தானே இருக்கிறது" என்று பாஸ்டர் கூற...

அஹ்மத் தீதத் அவர்கள் போட்டார் பாருங்கள் ஒரு போடு....

"ஆனால் மிஸ்டர் பாஸ்டர், நான் இவ்வளவு நேரம் தாங்கள் நினைத்து கொண்டிருப்பது போல் Book of Isiah 37 யை படிக்கவில்லை, நான் படித்து கொண்டிருந்தது Book of Kings "



என்று சொல்லி பாஸ்டரிடம் அதை காட்டினாரே  பார்க்கணும் , பாஸ்டர் அவர்கள் என்ன சொல்லுவது என்று தடுமாற, அரங்கமோ கைதட்டல்களால் அதிர்ந்தது.  
                         
அதே விவாதத்தின் கேள்வி நேரத்தில், ஒரு சகோதரர் பாஸ்டர் ஸ்டான்லியிடம், பைபிளில், ஏசுவிடம் உண்மையான நம்பிக்கை வைத்திருக்கும் ஒரு கிருத்துவன் விஷம் குடித்தாலும் அவனுக்கு ஒன்றும் ஆகாது என்று இருப்பதாகவும் (Mark 16:18), தான் கையோடு விஷம் கொண்டு வந்திருப்பதாகவும், அதை பாஸ்டர் ஸ்டான்லி குடித்து ஏசுவின் மீதான தன் நம்பிக்கையை நிரூபித்து காட்டவேண்டும் என்று விஷம்(?) நிறைந்த ஒரு பாட்டிலை பாஸ்டர் முன் நீட்டினார்.  



அதை வாங்கிய ஸ்டான்லி அவர்கள்,  ஒரு டம்ளரில் அந்த திரவத்தை ஊற்றி,



"இதை ஊற்றும்போது உடம்பு சிறிது நடுங்குகிறது. ஆனால் நான் இதை குடிக்கப்போவதில்லை. இது நிச்சயமாக சாத்தானின் செயல், இந்த கேள்வியை கேட்ட மனிதரின் ரூபத்தில் நான் சாத்தானை காண்கிறேன். அதனால் நான் சாத்தானுக்கு கட்டுப்பட போவதில்லை"

என்று கூறி அந்த திரவத்தை குடிக்க மறுத்து விட்டார். இந்த சவாலின் போது மிகுந்த பதற்றத்துடன் காணப்பட்டார் அவர். பார்வையாளர்கள் என்ன நினைத்திருப்பார்கள் என்று நாம் எண்ணி பார்த்துக் கொள்ள வேண்டியதுதான்.    


3. Ahmed Deedat and Dr.Anis Shorrosh, at Royal Albert Hall London, December 1985.
Debate Title: Is Jesus God?

பாலஸ்தீனத்தில் பிறந்து அமெரிக்க குடியுரிமை பெற்ற கிருத்துவ மிசனரியான அனீஸ் ஷரோஷ் (Anis Shorrosh) அவர்கள் ஒருமுறை அஹ்மத் தீதத் அவர்களை விவாதத்திற்கு அழைத்தார். லண்டனின் பிரசித்தி பெற்ற ராயல் ஆல்பர்ட் ஹாலில் நடந்த இந்த விவாதம் பிரபலமானது.

ராயல் ஆல்பர்ட் ஹால் மிகப்  பெரியது. இருந்தும் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. சுமார் ஆயிரம் முதல் இரண்டாயிரம் பேர் வரை இடம் கிடைக்காததால் திரும்பி சென்றதாக விவாதம் துவங்கும் முன் அறிவிக்கப்பட்டது.

விவாதத்தின் தலைப்பு இதுதான் "ஏசு கிறிஸ்து கடவுளா?"

விவாதத்தின் நடுவில் அஹ்மத் தீதத் அவர்கள் மக்கள் கூட்டத்தை பார்த்து கேட்டார்,

"ஏசு, பைபிளில், நான் தான் கடவுள் என்னை வணங்குங்கள் என்று எப்போதாவது கூறி இருக்கிறாரா? அல்லது நானும் இறைவனும் ஒன்றுதான் என்றாவது கூறி இருக்கிறாரா?, இதற்கு இந்த கூட்டத்தில் உள்ள கிருத்துவர் யாராவது பைபிளில் இருந்து ஆதாரம் காட்ட முடியுமா" என்று கேட்க

கூட்டத்தில் இருந்து ஒரு குரல் "ஆம் இருக்கிறது, John 14 சொல்லுகிறது, I and My father are one"



இதை கேட்டவுடன் தீதத் அவர்களின் பக்கத்தில் அமர்ந்திருந்த ஒரு கிருத்துவ போதகர் "சரியாக சொல்லப்போனால் அது John 14:6" என்று கூற,

தீதத் அவர்கள் தன் பைபிள் அறிவை இங்கு காட்டினார் பாருங்கள்....

"நீங்கள் இருவருமே தவறு. அது John 14:6 அல்ல, அது John 10:30"

என்று கூறியது தான் தாமதம், பலத்த கைதட்டல்கள். பிறகு அந்த வசனத்திற்கு அற்புதமாக விளக்கமளித்தார். அவர் யாராவது இந்த கேள்வியை கேட்க வேண்டும் என்று தான் சவால் விட்டிருக்கிறார்.

அந்த விவாதம் முழுவதும் அனீஸ் ஷரோஷ் அவர்களால் தீதத் அவர்களின் எந்த ஒரு கேள்விக்கும் சரிவர பதிலளிக்க முடியவில்லை.


4. Ahmed Deedat and Reverend Eric Bock, at Copenhagen Denmark, November 1991.
Debate Title: Is Jesus God?

டென்மார்க்கின் தலைநகரான கோபென்ஹேகனில் (Copenhagen), அஹ்மத் தீதத் அவர்களுக்கும் ரெவரண்ட் எரிக் போக் (Reverend Eric Bock) அவர்களுக்கும் இடையே விவாதம் நடைப்பெற்றது.

ஆனால் எரிக் அவர்கள் ஏசு கடவுள் என்பதை தன்னால் நிரூபிக்க முடியாது என்று கண்ணியமாக சொல்லிவிட்டார். தீதத் அவர்களும் எரிக் அவர்களது நேர்மையை பாராட்டுவதாகவும், எரிக் ஒரு உண்மையான கிருத்துவர் என்றும் புகழாரம் சூட்டினார்.

கேள்வி நேரத்தில் ஒரு வயதானவர் எரிக் அவர்களிடம்,பைபிளின் எந்த இடத்திலாவது, ஏசு, தான் கடவுளின் மகன் என்று கூறி இருக்கிறாரா என்று கேட்க, அதற்கு எரிக் அவர்கள் தன்னால் இந்த கேள்விக்கு பதிலளிக்க இயலவில்லை என்றும், இதற்கு பதிலளிக்க பார்வையாளர் கூட்டத்தில் இருந்த தன் நண்பரான ஒரு பாஸ்டரை உதவிக்கு அழைப்பதாகவும் கூறினார்.



அந்த பாஸ்டரும் பைபிளில் எந்த ஒரு இடத்திலும் ஏசு அப்படி கூறவில்லை என்று ஒப்புக்கொண்டார். பின்னர் எரிக் அவர்களும் பாஸ்டரும் சேர்ந்தே கேள்விகளுக்கு பதிலளித்தனர்.    

அஹ்மத் தீதத் அவர்களின் கேள்விகள் கூர்மையானவை, அவரால் நன்கு ஆராயப்பட்டவை. அதனால் அவரது எந்த ஒரு கேள்விக்கும் பதிலளிப்பது என்பது கிருத்துவ மிசனரிகளுக்கு எளிதானதல்ல. நான் இதுவரை கண்ட அவரது விவாதங்களில் கிருத்துவ மிசனரிகள் அவரது கேள்விகளுக்கு திருப்திகரமாக பதிலளித்ததாக எனக்கு நினைவில்லை.

அஹ்மத் தீதத் அவர்களின் கடைசி ஒன்பது ஆண்டுகள் சோதனையானவை. 1996 ஆம் ஆண்டு பக்கவாதத்தால் பாதிக்க பட்டார்.கண்களையும் தலையையும் தவிர வேறெதையும் அசைக்க முடியாத நிலை. பேசக்கூட முடியாது. இறைவனின் அவருக்கான கடைசி கட்ட சோதனை.

இங்குதான் அவர் தன் மன உறுதியை நமக்கு பாடமாக அளித்தார். அந்த ஒரு மன உறுதியை இறைவன் நமக்கும் அளிப்பானாக...ஆமின்.

ஆம்... அந்த ஒரு நிலையிலும் தன் தாவாஹ் பணியை தொடர்ந்தார். ரியாத்தில் கண்கள் மூலம் கருத்தை தெரிவிக்கும் கலையை கற்றார். அதன் மூலம் எண்ணற்றவர்களை தாவாஹ் பணியை மேற்க்கொள்ள உற்சாகப்படுத்தினார். அவரது துணைவியார்தான்  அவரை கவனித்துக்கொண்டார். தீதத் அவர்கள் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட அந்த காலங்களில் எந்த ஒரு வலியையோ வேதனையையோ உணரவில்லை என்று அவரது துணைவியார் தெரிவித்திருக்கிறார்கள்.எப்போதும் போல் உற்சாகமாகவே இருந்திருக்கிறார். அல்ஹம்துலில்லாஹ்....

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்த எண்ணிய கிருத்துவ மிசனரிகள் தீதத் அவர்களை கிருத்துவத்திற்கு மாற்ற எடுத்த எந்த ஒரு முயற்சியும் பலனளிக்க வில்லை. ஒருமுறை ரெவரண்ட் நைடூ (Reverend Naidoo) அவர்கள் தீதத் அவர்களது வீட்டிற்கு சென்று, தன்னை பைபிளில் இருந்து ஒரு வாசகத்தை படிக்க அனுமதிக்க வேண்டும் என்றும், ஏசுவின் நாமத்தால் தான் அவரை குணமாக்குவதாகவும் கூறினார். ஆனால் தீதத் அவர்களோ, அவரிடம் (கண்கள் மூலமாக தகவலை தெரிவிக்கும் யுக்தியை கொண்டு) பைபிளின் ஒரு பகுதியை மேற்க்கோள் காட்டி, அதனை விளக்க முடியுமா? என்று கேட்க நைடூ அவர்கள் தீதத் அவர்களின் ஈமானைப் பார்த்து அதிர்ந்து விட்டார். பதிலேதும் சொல்லாமல் திரும்பி விட்டார்.

இப்படியாக படுக்கையிலும் அதே உற்சாகத்தை காட்டினார். இன்றளவும் அவர் துவங்கிய IPCI, தீதத் அவர்கள் விட்டுச் சென்ற பணியை சிறப்புற செய்து வருகிறது. சுபானல்லாஹ்...


அஹ்மத் தீதத் அவர்களை பற்றி பேசக்கூடிய பலரும் அவர் பின்னல் இருந்த இரு முக்கிய நல்லடியார்களை மறந்து விடுகிறார்கள். அவர்கள், அஹ்மத் தீதத் அவர்களின் இன்பத்திலும் துன்பத்திலும் கூடவே இருந்தவர்கள். தீதத் அவர்களின் நெருங்கிய தோழர்களான குலாம் உசேன் வாங்கர் மற்றும் தாகிர் ரசூல் தான் அவர்கள்.

இறைவன் நமக்கு என்ன சோதனை அளித்தாலும், அஹ்மத் தீதத் அவர்களுக்கும், அவரது தோழர்களுக்கும் கொடுத்தது போன்ற மன உறுதியையும் சேர்த்தே கொடுப்பானாக...ஆமின்..

அஹ்மத் தீதத் போன்று கிருத்துவ மிசனரிகளை வெற்றிகரமாக எதிர்க்கொண்டவர்களில் என்னைக் கவர்ந்த மற்றொருவர், கனடாவைச் சேர்ந்த டாக்டர். ஜமால் பதாவி (Dr.Jamal Badawi) அவர்கள். இன்ஷா அல்லாஹ், இறைவன் நல்ல உடல்நலத்தை கொடுத்தால் அவரைப்பற்றி மற்றுமொரு சந்தர்ப்பத்தில் எழுதுகிறேன்...      

இறைவன் நம் எல்லோருக்கும் என்றென்றும் இஸ்லாத்தில் நிலைத்திருக்க கூடிய பாக்கியத்தை தந்தருள்வானாக..ஆமின்...

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்...

Official Website of IPCI:
1. Ahmed-deedatdotcodotza

Ahmed Deedat's Debate Videos and Other Lecture Videos can be Downloaded at: 
1.Truthwaydottv

My Sincere thanks to:
1. IPCI, Durban, South Africa.
2. Truth Way Broadcasters.

References: 

1. Ahmed Deedat's debate with Tele Evagelist Jimmy Swaggard on the topic "Is the Bible the word of God?" at University of Louisiana, November 1986.
2. Ahmed Deedat's debate with Pastor Stanley Sjoberg on the topic "Is the Bible true word of God?" at stockholm Sweden, Oct, 1991.
3. Ahmed Deedat's debate with Dr.Anis Shorrosh on the topic "Is Jesus God?" at Royal Albert Hall London, December 1985.
4. Ahmed Deedat's debate with Pastor Eric Bock on the topic "Is Jesus God?" at Copenhagen Denmark, November 1991.
5. Ahmed Deedat - Wikipedia.


 Source: http://ethirkkural.blogspot.com/ 

Wednesday, September 1, 2010

நாத்திகத்திலிருந்து இஸ்லாத்திற்கு...


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...

உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தினர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...
டாக்டர் ஜெப்ரி லேங் (Dr.Jeffrey Lang), அமெரிக்காவின் கன்சாஸ் பல்கலைகழகத்தில் (University of Kansas) கணிதத்துறை பேராசிரியராய் இருப்பவர். 1980 களின் முற்பகுதியில், தன் 28 ஆவது வயதில் இஸ்லாத்தை தழுவியவர். தன் பதினாறு வயதிலிருந்து இஸ்லாத்தை ஏற்கும்வரை நாத்திகராக இருந்தவர்.        

நேர்த்தியாக பேசக்கூடியவர். அவருடைய கருத்துகளாகட்டும், அதை அவர் சொல்லக்கூடிய விதமாகட்டும், கேட்பவர்களை சிறிதாவது யோசிக்க வைத்துவிடும். 



தான் நாத்திகத்திலிருந்து இஸ்லாத்திற்கு வந்த விதம் பற்றி அவர் கூறிய கருத்துக்கள் இந்த விதத்தை சார்ந்தவை தான். இன்ஷா அல்லாஹ், இந்த பதிவில், அவர் இஸ்லாத்திற்கு வந்த விதம் பற்றி கூறியதை பகிர்ந்து கொள்ளவிருக்கிறேன்.       

இந்த பதிவு, நடுநிலையோடு சிந்திக்கும் நாத்திக சகோதரர்களுக்கு தங்கள் வளையத்தை தாண்டி வர உதவலாம்...இன்ஷா அல்லாஹ்.   


"நான் கத்தோலிக்க குடும்பத்தில் பிறந்தவன் (1954). என் தாய் கடவுள் நம்பிக்கை மிக அதிகமுடையவர், மிக இனிமையானவர். என் தந்தையும் கடவுள் நம்பிக்கை உடையவர்தான், ஆனால் துரதிஷ்டவசமாக குடிப்பழக்கத்திற்கு ஆளாகி விட்டார். அவருடைய வன்முறைக்கு அதிகம் இலக்கானது என் தாய்தான். 

என் தந்தையால் என் தாய்க்கு ஏற்ப்பட்ட கஷ்டங்கள் மிக மோசமானவை (லேங் அவர்களின் தாய் தன் கணவரின் வன்முறையால் மனநிலை பாதிக்கப்பட்டவர்). எனக்கு இன்றும் நினைவில் இருக்கிறது, என் ஏழு, எட்டு வயதில் கடவுளிடம் வேண்டிக்கொள்வேன், கடவுளே தன் தந்தையை எங்களிடமிருந்து அழைத்து சென்று விடு என்று.      

இந்த சூழ்நிலைகள் தான் என்னை நாத்திகனாக வைத்தன. 

  • என் தாய் கடவுளையே தன் துணையாக கொண்டவர். அப்படிப்பட்ட நல்லவருக்கு, தன்னையே நாடியவருக்கு ஏன் இந்த கடவுள் இவ்வளவு கஷ்டங்களை கொடுக்க வேண்டும்? 
  • ஏன் ஒருவன் மற்றொருவனை அடக்கியாள வேண்டும்? (Why should strong oppress the poor), அதனை ஏன் இறைவன் பார்த்துக்கொண்டு இருக்க வேண்டும்? 
  • உலகில் எங்கு பார்த்தாலும் ஊழல்கள், வன்முறைகள், அநியாயங்கள்...இதையெல்லாம் அடக்காமல் இறைவன் என்ன செய்து கொண்டிருக்கிறான்? 
  • இறைவன் பூரணமானவன் (perfect) என்றால், அவன் உருவாக்கிய இந்த உலகமும் பூரணமாகத்தானே இருக்க வேண்டும்?
  • நல்லதெல்லாம் இறைவனிடமிருந்து வந்ததென்றால், தீமையும் அவனிடமிருந்து தானே வந்திருக்க வேண்டும்?   

இப்படி என்னுள் பல கேள்விகள், முடிவில் கடவுளே இல்லையென்று என் பதினாறாம் வயதில் முடிவெடுத்து விட்டேன்.          

நன்றாக படித்தேன், நல்ல வேலையிலும் சேர்ந்தேன். நான் சான் பிரான்சிஸ்கோ பல்கலைகழகத்திற்கு வந்த போதுதான் இஸ்லாம் எனக்கு அறிமுகமானது. ஒரு அருமையான இஸ்லாமிய குடும்பத்தை சந்தித்தேன். நிறைய முறை அவர்களுடைய வீட்டிற்கு சென்றிருக்கிறேன். 

கடவுள் பற்றிய என்னுடைய கேள்விகளை அவர்களிடம் கேட்பேன். என்னுடைய கேள்விகள் அவர்களை பெரும் தர்ம சங்கடத்தில் ஆழ்த்தின. பதிலளிக்க மிகவும் கஷ்டப்பட்டார்கள்.      

பிறகு ஒருமுறை, அப்துல்லா யூசுப் அலியால் மொழிபெயர்க்கப்பட்ட ஆங்கில குரானை எனக்கு பரிசளித்தார்கள். "தங்களால் தான் அவர் கேட்கக்கூடிய கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியவில்லை,குரானைப் படிப்பதால் அவருக்கு  பதில்கள் கிடைக்கலாம்" என்று அவர்கள் நினைத்திருக்கலாம்.   

அந்த குரானை படிக்கவேண்டும் என்று அப்போதைக்கு நான் விரும்பவில்லை. குரானை என் வீட்டிலிருந்த புத்தக மேசையில் வைத்து விட்டு அப்படியே விட்டுவிட்டேன். பல  நாட்கள் அந்த குரான் அங்கேயே இருந்தது. 

ஒருநாள் ஓய்வு நேரம். என்னிடம் இருந்த அனைத்து புத்தகங்களையும் படித்தாகி விட்டது, புதிதாக படிப்பதற்கு ஒன்றுமில்லை. அப்போது, மேசையில் இருந்த குரான் கண்ணில் பட்டது. 

வீட்டில் போரடிக்கும் போது, ஒரு வார இதழை எடுத்து நாலு பக்கங்களை புரட்டி பின்னர் வைத்துவிடுவோமே, அதுபோல நினைத்துதான் குரானைத் திறந்தேன். 

குர்ஆனில் குறை கண்டுபிடிக்க வேண்டுமென்ற எண்ணமெல்லாம் இல்லை. என்னைப் பொறுத்தவரை கடவுள் இல்லை, அவ்வளவுதான். இது மற்றுமொரு புத்தகம், அவ்வளவே...      

முதல் அத்தியாயத்தை பார்த்தேன், அல் பாத்திஹா என்றிருந்தது. அதில் ஏழு வசனங்கள். நல்ல அழகான, கோர்வையான வசனங்கள். முஸ்லிம்கள் குரானை இறைவேதமென்று சொன்னாலும், என்னைப் பொறுத்தவரை அது மனிதரால் எழுத்தப்பட்டது. அதனால், இந்த புத்தகத்தை எழுதியவர் நல்ல இலக்கியவாதி என்று பாராட்டினேன். நல்ல புத்திசாலி என்றும் நினைத்தேன், படிப்பவர்களை துவக்கத்திலேயே நன்றாக கட்டிப்போடுகிறாரே...

அதில் ஒரு வசனம், 

தீர்ப்பு நாளின் அதிபதி --- Qur'an 1:3  

என்ன தீர்ப்பு நாளா?, இவரே மக்களுக்கு கஷ்டத்தை கொடுப்பாராம், இவரே தீர்ப்பு சொல்லுவாராம் என்று கோபப்பட்டேன்...

முதல் சூரா என்னை மேற்கொண்டு படிக்க தூண்டியது. அடுத்த அத்தியாயம், சூரத்துல் பகரா...

அதன் இரண்டாது வசனம், 

இது திரு வேதமாகும்; இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை. பயபக்தியுடையோருக்கு நேர்வழி காட்டியாகும். --- Qur'an 2:2

என்ன ஒரு அதிகார தோரணை என்று வியந்தேன். நிச்சயமாக இந்த புத்தகத்தை எழுதியவர் அறிவாளிதான். அதுமட்டுமல்லாமல் ஒரு அறிவுசார்ந்த விவாதத்திற்கு தயார்படுத்தின அந்த வசனங்கள்.   

படித்துக்கொண்டே வந்தேன். அந்த சூராவின் முப்பதாவது (30) வசனம் ஒரு கனம் என்னை திக்குமுக்காட செய்தது. ஏனென்றால் என் மனதில் நீண்ட நாட்களாக இருந்த கேள்வி அங்கு கேட்கப்பட்டிருந்தது. 

ஏன் கடவுள் அநியாயக்கார மனிதனை படைக்க வேண்டும்? என்ற கேள்விதான் அது...   

என்னுடைய கேள்வியை இங்கே வானவர்கள் கேட்கின்றனர்.     

இன்னும், உம் இறைவன் வானவர்களை நோக்கி "நிச்சயமாக நான் பூமியில் ஒரு பிரதிநிதியை அமைக்கப் போகிறேன்" என்று கூறியபோது, அவர்கள் "நீ அதில் குழப்பத்தை உண்டாக்கி ரத்தம் சிந்துவோரையா அமைக்கப்போகிறாய்? இன்னும் நாங்களோ உன் புகழ் ஓதியவர்களாக உன்னை துதித்து, உன் பரிசுத்தத்தைப் போற்றியவர்களாக இருக்கின்றோம்" என்று கூறினார்கள்.          --- Qur'an 2:30            

இந்த ஒரு வசனம் என் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்ப்படுத்தியது.


நான் நாத்திகனாக மாறியதில் இந்த ஒரு கேள்விக்கு நிச்சயம் முக்கிய பங்குண்டு. 

வானவர்கள் கேட்பது நியாயம்தானே?. அவர்களோ தவறு செய்யாதவர்கள், இறைவனுக்கு கட்டுப்பட்டவர்கள், அவர்களையே பூமியில் வாழ வைத்திருக்கலாமே? ஏன் இந்த அநியாயக்கார மனிதனை படைக்க வேண்டும்? வானவர்களின் கேள்வி மிக நியானமானது...இதற்கு என்ன பதில் என்று ஆர்வமுடன் மேற்கொண்டு படித்தேன். 

அதே வசனத்தின் இறுதியில், 

அவன் " நீங்கள் அறியாதவற்றையெல்லாம் நிச்சயமாக நான் அறிவேன்" எனக் கூறினான் --- Qur'an 2:30. 

என்ன நீ அறிவாயா? ஏன் பாவம் செய்யக்கூடிய மனிதர்களை படைத்தாய் என்று கேட்டால், அதற்கு அனைத்தையும் நீ அறிவாய் என்பதுதான் பதிலா? 

இப்போது குரானுடன் நான் வாக்குவாதம் செய்ய ஆரம்பித்துவிட்டேன் (சிரிக்கிறார்), இந்த குரானை முழுமையாக படித்து என் மற்ற கேள்விகளுக்கும் என்ன பதிலளிக்கிறது என்று பார்த்து விட வேண்டியதுதான் என்று முடிவெடுத்துக் கொண்டேன்.   

நாலு பக்கங்கள் மட்டுமே திருப்பலாம் என்றிருந்தவனை இந்த குரான் மெம்மேலும் படிக்க தூண்டிக்கொண்டே இருந்தது, என்னுடைய கேள்விகள் ஒவ்வொன்றாய் பதிலளிக்கப்பட்டு கொண்டே வந்தன.          



என் அனுபவங்களை முழுமையாக சொல்ல இந்த நேர்க்காணல் நேரம் போதாது. ஆனால் நான் சொல்ல விரும்புவதெல்லாம், குரானை முழுமையாக படித்த பிறகு, தனி பட்டமுறையில் என் கேள்விகளுக்கு விடை கிடைத்தன. 

குரானின் வசனங்கள் ஆணித்தரமானவை, ஆழ்ந்த கருத்துக்களை கொண்டவை. 

பிறகு, என் இருபத்தி எட்டாவது வயதில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டேன். 

ஒருமுறை என் மகள் கேட்டாள், 

"சரி dad, குரான் உங்கள் கேள்விகளுக்கு பதிலளித்து விட்டது. ஆனால், உங்கள் கேள்விகளுக்கெல்லாம் ஒரு புத்தகம் பதிலளித்து விட்டால் மட்டும் இறைவன் இருக்கிறானென்று ஆகிவிடுமா, அல்லது அந்த புத்தகம் இறைவனிடமிருந்து வந்துவிட்டதாக தான் நீங்கள் நினைத்துவிட முடியுமா?" 

இது என்னிடம் பலரும் கேட்க நினைக்கக்கூடிய அர்த்தமுள்ள கேள்வி.  

நான் குரானை மென்மேலும் படிக்க படிக்க, என் கேள்விகளுக்கு பதில்கள் கிடைக்க துவங்கின.பதில்கள் கிடைக்க கிடைக்க,நாத்திகத்தை கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டேன்.    

நான் எந்த அளவு குரானை மேற்கொண்டு படித்தேனோ அந்த அளவு நாத்திகத்தை கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டேன். 

நான் கடவுள் இல்லை என்பதில் மிக உறுதியாய் இருந்தவன், யார் எப்படி விளக்கினாலும் கடவுள் இல்லை என்பதில் நின்றவன்.


ஆனால் குரான், அதனைப்பற்றி நிறைய கேள்விகளை எழுப்பிவிட்டது.
    
அதுமட்டுமல்லாமல், குரானைப் படித்து முடித்ததும் என் மனதில் ஏற்ப்பட்ட அமைதி இருக்கிறதே, இதுநாள் வரை என் வாழ்வில் அனுபவிக்காதது. இறைவனின் அன்பு என்பது இதுதானோ? சில நேரங்களில் அந்த உணர்வு பத்து, பதினைந்து நிமிடங்கள் கூட நிலைத்திருக்கும். என் மனம் அமைதியடைந்தது, ஒரு அற்புதமான உணர்ச்சி அது.  

என் வாழ்நாளில் கஷ்டங்களை அதிகம் பார்த்தவன், அந்த அற்புத மன அமைதி எனக்கு பதிலளித்துவிட்டது, இறைவன் இருக்கிறானென்று, இது இறைவேதமென்று. 

குரானை ஓதும்போது பலமுறை கண்கலங்கியிருக்கிறேன், அன்பு என்றால் என்னவென்று புரியவைத்தது குரான் தான்.

பலரும் என்னிடம் கேட்பார்கள், "இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதால் உங்கள் வாழ்வில் என்ன திருப்பம் வந்துவிட்டது" என்று.

நான் இப்போது சக மனிதர்களை அதிகம் நேசிக்க ஆரம்பித்திருக்கிறேன். இதுதான் இஸ்லாம் எனக்கு கற்றுகொடுத்த முதல் பாடம்.

தற்போது மனைவி, மூன்று குழந்தைகள் என்று ஒரு நிறைவான வாழ்வை இறைவன் எனக்கு அளித்திருக்கிறான்.  

இஸ்லாத்தை ஏற்ற புதிதில், விடியற்காலை தொழுகைக்கும், மாலை நேர தொழுகைகளுக்கும் பள்ளியில் சென்று தொழுது வருவேன். குரான் ஓதப்படுவதை கேட்பது ஒரு மிக அழகான உணர்வு.  

ஒருமுறை ஒருவர் என்னிடம் கேட்டார், "டாக்டர் லேங், உங்களுக்கு அரபி புரிகிறதா?" என்று,

நான் சொன்னேன், "ஒரு குழந்தை தன் தாயை எதிர்க் கொள்கிறதே, அதுபோல் தான்" என்று...

வாழ்வின் அர்த்தங்களை தேடி கொண்டிருப்போருக்கு நான் சொல்லிக்கொள்ள விரும்புவதெல்லாம் ஒன்று தான். நீங்கள் தேடுவதை தொடருங்கள், ஆனால் நேர்மையாய், திறந்த மனதுடன் தேடுங்கள். 

உங்களை என் மார்க்கத்தை ஏற்க சொல்லி கட்டாயப்படுத்தி நான் என் மார்க்கத்தை விற்க விரும்பவில்லை. முஹம்மது (ஸல்) அவர்களுக்கே அந்த உரிமையை இறைவன் வழங்கவில்லை. எடுத்து சொல்வது மட்டும்தான் எங்கள் கடமை, உங்களை நேர்வழியில் செலுத்துவதெல்லாம் இறைவனின் நாட்டம். 

அதனால் தேடுவதை தொடருங்கள்...."


இது தானே குரானின் பலம். ஒருவர் மிகத் தீவிரமாய் இருக்கக்கூடிய ஒரு கொள்கையை உடைத்தெறிய வைப்பதென்பது அவ்வளவு எளிதல்ல. ஆனால், குரான் அதை எளிதாக, நேர்த்தியாக செய்து முடித்துவிட்டது....அல்ஹம்துலில்லாஹ்.  

இன்னும் இதுபோன்று எத்தனை உதாரணங்களை பார்க்கப்போகிறோம்....

இறைவனே அறிவான்.

நாத்திகர்களுக்கு முஸ்லிம்களாகிய நாங்கள் விடுப்பதேல்லாம் ஒரே ஒரு வேண்டுகோள்தான். நன்கு சிந்திக்கக்கூடியவர்களாய் இருக்கிறோம், அதனால் தயவு கூர்ந்து சிந்தியுங்கள், உங்கள் வட்டங்களை விட்டு வெளியே வந்து சிந்தியுங்கள். ஒரு நேர்க்கோட்டை வரையும்போது, அதை அருகில் இருந்து பார்க்கும் போது நேராகத்தான் தெரியும், தூரத்தில் இருந்து பார்த்தால் தான் உண்மை புரியும்.

அதுபோல நீங்கள் உங்கள் வட்டங்களை விட்டு வெளியே வந்து சிந்தியுங்கள். சொல்வதை சொல்லிவிட்டோம், ஏற்ப்பதும் ஏற்காததும் உங்கள் இஷ்டம்...

டாக்டர் ஜெப்ரி லேங் அவர்களை முதன் முதலில் நான் (வீடியோக்களில்) பார்த்தது, டாக்டர் ஜமால் பதாவி அவர்களுக்கும் கிறித்துவ மிசனரியான அனீஸ் ஷோறோஷ் அவர்களுக்கும் இடையே நடந்த விவாதத்தில் தான். அப்போது கேள்வி நேரத்தில் தன் கேள்வியை அனீஸ் ஷோறோஷ் அவர்களிடம் முன்வைத்தார் அவர். 

பிறகு டாக்டர் ஜமால் பதாவி அவர்களுடன் சேர்ந்து விவாதங்களில் பங்கேற்றிருக்கிறார் டாக்டர் லேங். தற்போது பல இஸ்லாமிய கருத்தரங்குகளில் பங்கேற்று தன் கருத்துக்களை பகிர்ந்து கொண்டு வருகிறார். 

இவர் எழுதி வெளிவந்து பலருக்கும் உதவியாய் இருந்த/இருக்கும் நூல்கள் 
  • "Losing my religion, A call for Help", 
  • "Struggling to Surrender" மற்றும் 
  • "Even Angels Ask:: A Journey to Islam in America" 

இவர் இஸ்லாத்திற்கு வந்தது பற்றியான முழுமையான விளக்கம் இவருடைய "Losing my Religion, A call for help" புத்தகத்தின் முதல் அத்தியாயத்திலும், இவருடைய மற்றொரு புத்தகமான "Even Angels Ask" என்பதிலும் இடம் பெற்றுள்ளது.   



நான் முன்பே கூறியது போன்று, தன் கருத்துக்களை மிக அழகாக, ஆழமாக வெளிப்படுத்துவதில் வல்லவர் டாக்டர் லேங். அல்ஹம்துலில்லாஹ். 

இவருடைய இந்த புத்தகங்களை படிப்பவர்கள் நிச்சயம் இதை உணர்வார்கள். 

அதிலும் இவருடைய "Even Angels Ask" என்ற புத்தகம், அமெரிக்காவில் இருக்கும் இளைய தலைமுறை முஸ்லிம்களை இலக்காக கொண்டு எழுதப்பட்டது. பலருடைய பாராட்டுதல்களையும் பெற்ற இந்த புத்தகத்தில் இஸ்லாமின் பல்வேறு அங்கங்களை தெளிவாக, ஆழமாக விளக்குகிறார் லேங். 

டாக்டர் லேங்கை போல, நாத்திகத்திலிருந்து இஸ்லாத்திற்கு வந்த மற்றுமொரு பிரபலமான நபர் சகோதரர் நூமன் அலி கான் (Nouman Ali Khan) அவர்கள். அமெரிக்காவின் பய்யினாஹ் கல்வி நிறுவனத்தின் (Bayyinah Institute) தலைவராய் இருக்கிறார். இவருடைய கதையும் சிந்திக்கும் நாத்திகர்களுக்கு அழகிய பாடம். 

For the believers, there is always a bright spot at the end of the tunnel.....

இறைவன் இவர்களுக்கு மெம்மேலும் உடல்நலத்தையும், மனபலத்தையும் தந்தருள்வானாக...ஆமின்.              

இறைவன் நமக்கு இஸ்லாத்தை எடுத்துச் செல்கின்ற பாக்கியத்தை என்றென்றும் தந்தருள்வானாக....ஆமின்.

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்...


Dr.Jeffrey Lang's Books can be bought at:
1. Amazondotdom
2. Or by requesting any popular book shop with their ISBN numbers which follows.
        a) Losing My Religion, A call for Help.  ISBN: 978-1590080276
        b) Struggling to surrender. ISBN: 978-0915957262
        c) Even Angels Ask. ISBN: 978-0915957675 


My Sincere Thanks to:
1. Br. Eddie
2. Dr.Jeffrey Lang, Associate Professor, University of Kansas, USA. 
3. Amazondotcom

References:
1. Dr.Lang's Interview with Br.Eddie for The Deen Show. thedeenshowdotcom. 

 Source: http://ethirkkural.blogspot.com/