Sunday, August 8, 2010

சர்வதேசப்பிறை ஓர் அறிமுகம்

முஹம்மட் அர்ஷாத் அல் அதரி
arshathalathary@gmail.com

அருள்மறைக் குர்ஆன் இறங்கிய சங்கைமிகு மாதமான ரமழான் மாதம் வந்துவிட்டால் முஸ்லிம்களிடம் பல்வேறு கருத்து வேறுபாடுகள் தோன்றிவிடுகின்றன. அதில் முதன்மையானது ரமழானை தீர்மானிக்க கூடிய பிறையாகும். முஸ்லிம் சமுதாயத்தின் வணக்க வழிபாடுகளான நோன்பு மற்றும் பெருநாள் வணக்க வழிபாடுகள் போன்றவற்றை தீர்மானிப்பதில் பிறை ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றது.

பிறையினை அடிப்படையாகக் கொண்டே இவ்வாறான வணக்க வழிபாடுகளை நிறைவேற்றுமாறு அருள்மறைக் குர்ஆனும், அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பொன்மொழிகளும் நமக்கு உணர்த்தி நிற்கின்றன. ஆனால், இப்பிறையினை தீர்மானிப்பதில் முஸ்லிம் சமுதாயத்தில் பல்வேறு கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன.

1.    ஒட்டுமொத்த உலகிற்கும் ஒரே பிறை (சர்வதேசப் பிறை)
2.    நாட்டுக்கொரு பிறை
3.    ஊருக்கொரு பிறை
4.    கணிப்பின் அடிப்படையில் பிறையைத் தீர்மானித்தல்

ஆகிய பிரதான அடிப்படைகளில் முஸ்லிம்களுக்கு மத்தியில் பல்வேறு கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன. ஒரே ஊரில் ஒரு சாரார் நோன்பு நோற்றிருக்க, மற்றுமொரு சாரார் உண்டு கழிக்கின்றனர். இத்தகைய கருத்து வேறுபாடுகளுள் எது சரியானது? என்பதனை இறைவன் மீதான அச்சத்தை மாத்திரம் முன்னிறுத்தி சுய விருப்பு, வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு அருள்மறைக் குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான  பொன்மொழிகளின் அடிப்படையில் நோக்குவோம்.

காலக் கணக்கினை அறிந்து கொள்ளவே சூரியனும், சந்திரனும் படைக்கப்பட்டுள்ளன. 

‘சூரியனையும் சந்திரனையும் காலம் காட்டியாகவும் அமைத்தான்.’ (அல்குர்ஆன் 06:96)
‘ஆண்டுகளின் எண்ணிக்கையையும், (காலக்) கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காக அவனே சூரியனை வெளிச்சமாகவும், சந்திரனை ஒளியாகவும் அமைத்தான். சந்திரனுக்குப் பல நிலைகளை ஏற்படுத்தினான். தக்க காரணத்துடன் அழ்ழாஹ் இதைப் படைத்துள்ளான். அறிகின்ற சமுதாயத்திற்கு வசனங்களை அவன் தெளிவாக்குகிறான்.’ (அல்குர்ஆன் 10:05)
‘பிறைகளைப் பற்றி (முஹம்மதே!) உம்மிடம் கேட்கின்றனர். ‘அவை மக்களுக்கும், (குறிப்பாக) ஹஜ்ஜுக்கும் காலம் காட்டிகள்’ எனக் கூறுவீராக!’ (அல்குர்ஆன் 02:189)
‘இரவையும், பகலையும் இரண்டு சான்றுகளாக்கினோம். உங்கள் இறைவனிடமிருந்து அருளைத் தேடவும், ஆண்டுகளின் எண்ணிக்கையையும், காலக் கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காகவும் இரவின் சான்றை ஒளியிழக்கச் செய்து பகலின் சான்றை வெளிச்சமாக்கினோம். ஒவ்வொரு பொருளையும் நன்கு தெளிவுபடுத்தினோம்.’ (அல்குர்ஆன் 17:12)
இது போன்ற அருள்மறை வசனங்கள் காலக் கணக்கினை அறிந்து கொள்வதற்காகவே சூரியனும், சந்திரனும் படைக்கப்பட்டுள்ளதாக எடுத்தியம்புகின்றன.

மாதநாட்களின் எண்ணிக்கை எத்தனை? 

‘மாதம் என்பது இப்படியும் அப்படியும் இருக்கும். அதாவது சிலவேளை இருபத்தொன்பது நாட்களாகவும், சில வேளை முப்பது நாட்களாகவும் இருக்கும் என்று அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.’ (அறிவிப்பவர்: இப்னு உமர் (ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-1913)

மேற்படி அடிப்படைகளை மனதில் நிலைநிறுத்தியவர்களாக, பிறை தொடர்பான ஆய்வுக்குள் நுழைவோம்.

அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தலைப்பிறையை தீர்மானிப்பதற்கு மூன்று வழிமுறைகளை நமக்கு கற்றுத் தந்துள்ளார்கள். அவையாவன:
01.29ம் நாளை நிறைவு செய்த பின்னர், பிறையைக் கண்டு நோன்பு நோற்பது, பிறையைக் கண்டு நோன்பை விடுவது:
‘அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பிறையைப் பார்த்து நோன்பு வையுங்கள் பிறையைப் பார்த்து நோன்பு விடுங்கள்! உங்களுக்கு மேக மூட்டம் தென்பட்டால் ஷஅபான் மாதத்தை முப்பது நாட்களாக முழுமைப்படுத்துஙகள்! (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),  நூல்: ஸஹீஹுல் புஹாரி-1909)
02.பிறை கண்ட சாட்சியத்தின் அடிப்படையில், தகவலின் அடிப்படையில் நோன்பைத் தீர்மானிப்பது:
‘இரு சாட்சிகள் (பிறை கண்டதாக) சாட்சி சொன்னால் நோன்பு வையுங்கள். நோன்பை விடுங்கள்’ (அறிவிப்பவர்: அப்துர் ரஹ்மான் (நபித்தோழர்களிடமிருந்து), நூல்: நஸயி-2116)
03. மாதத்தினை முப்பதாக பூர்த்தி செய்வது:
நமது பகுதியில் பிறை தென்படாதிருந்து, வெளியிலிருந்தும் பிறை காணப்பட்ட தகவல் வராத பட்சத்தில் மாத நாட்களின் எண்ணிக்கையை முப்பதாகப் பூர்த்தி செய்ய வேண்டும்.
‘அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பிறையைப் பார்த்து நோன்பு வையுங்கள் பிறையைப் பார்த்து நோன்பு விடுங்கள்! உங்களுக்கு மேக மூட்டம் தென்பட்டால் ஷஅபான் மாதத்தை முப்பது நாட்களாக முழுமைப்படுத்துங்கள்! (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-1909)

அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஆதாரபூர்வமான நபிமொழிகளில் பிறையைத் தீர்மானிப்பதற்கு இம்மூன்று வழிமுறைகளுமே கற்றுத் தரப்பட்டுள்ளன. நாம் பிறை தொடர்பான எத்தகைய முடிவினை எடுப்பதாக இருந்தாலும் நமது சுய விருப்பு, வெறுப்புகளுக்காக இவற்றில் ஒன்றை எடுத்து, மற்றொன்றை நிராகரிக்க முடியாது. மாறாக, இம் மூன்று வழிமுறைகளையும் உள்ளடக்கியதாகவே நமது முடிவு இருக்க வேண்டும்.

சர்வதேசப் பிறை என்றால் என்ன? 

இருபத்து ஒன்பதாவது நாளை நிறைவு செய்த பின்னர் நாம் பிறை பார்க்க வேண்டும். பிறை தென்பட்டால் அடுத்த மாதம் பிறந்து விட்டது என முடிவு செய்ய வேண்டும். மாறாக, அவ்வாறு பிறை தென்படாத பட்சத்தில் உலகின் எப்பாகத்தில் இருந்தேனும், இரண்டு நீதமான, நம்பகமான முஸ்லிம்கள் பிறை கண்டதாக சாட்சியமளித்தால், அதனை உலகளாவிய முஸ்லிம்கள் அனைவரும் ஏற்று செயற்பட வேண்டுமென்பதுவே சர்வதேச பிறையாகும்.
மேலும், அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தலைப்பிறையைத் தீர்மானிப்பதற்கு கற்றுத் தந்த மூன்று வழிமுறைகளில் ஒன்றை எடுத்து, மற்றொன்றை நிராகரிக்காது இருக்க வேண்டுமாயின் ஒருவர் சர்வதேசப் பிறையையே சரி காணவேண்டும். மாறாக, சில சகோதரர்கள் கூறுவது போன்று சர்வதேசப் பிறை என்பது சவூதிப் பிறையோ, மக்காப் பிறையோ கிடையாது என்பதனை கவனத்திற் கொள்ள வேண்டும்.

சர்வதேசப் பிறையை நாம் ஏன் சரி காண்கின்றோம்?

01.அருள்மறைக் குர்ஆனிலும், ஆதாரபூர்வமான நபிமொழிகளிலும் சர்வதேசப் பிறைக்கே வலுவான ஆதாரங்கள் கிடைக்கின்றன.

பிறை தொடர்பான, மாறுபட்ட கருத்துக்களில் சர்வதேசப் பிறையை வலியுறுத்தக் கூடிய வகையிலேயே நபிமொழிகளில் ஏராளமான, வலுவான ஆதாரங்கள் காண கிடைக்கின்றன. அவற்றில் சிலவற்றை நோக்குவோம்.

‘இரு சாட்சிகள் (பிறை கண்டதாக) சாட்சி சொன்னால் நோன்பு வையுங்கள்.நோன்பை விடுங்கள்.’ (அறிவிப்பவர்: அப்துர் ரஹ்மான் (நபித்தோழர்களிடமிருந்து), நூல்: நஸயி-2116)

‘மக்கள் எல்லோரும் பிறை பார்க்க முயன்றார்கள். நான் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ‘நான் பிறையை’ பார்த்தேன் என்று கூறினேன். அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தானும் நோன்பு நோற்றதுடன் மக்களையும் நோன்பு நோற்கக் கட்டளையிட்டார்கள்.’ (அறிவிப்பவர்: இப்னு உமர் (ரழி), நூல்: அபூதாவூத்-2342, தாரமி-1691, இப்னு ஹிப்பான்-3447, ஹாகிம்-1541, பைஹகி-2593)

‘ரமழானின் கடைசி நாள் பற்றி மக்கள் முடிவெடுக்க குழம்பினார்கள். (பிறை தென்படாததால் நோன்பும் நோற்றனர்) இரண்டு கிராமவாசிகள் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து நேற்று இரவு நாங்கள் பிறை பார்த்தோம் என்று சாட்சி கூறினார்கள். உடனே, அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களை நோன்பை விட்டு விடுமாறு கட்டளையிட்டார்கள். பெருநாள் தொழுகைக்காக மறுநாள் தொழுமிடம் வருமாறு கட்டளையிட்டார்கள்.’ (அறிவிப்பவர்: ரிப்யீ பின் கிராஷ், நூல்: அபூதாவூத்-2339, அஹ்மத்-18844)

‘அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரமழான் மாதம் முப்பதாம் நாள் சுபஹ் வேளையை அடைந்தார்கள். அப்போது இரு கிராமவாசிகள் வந்து வணக்கத்திற்குரியவன் அழ்ழாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்று உறுதி கூறி நேற்று நாங்கள் பிறை பார்த்தோம் என்று அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சாட்சி கூறினார்கள். உடனே, அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோன்பை விடுமாறு மக்களுக்குக் கட்டளையிட்டார்கள்.’ (அறிவிப்பவர்: ரிப்யீ பின் கிராஷ், நூல்: தாரகுத்னி-04)

‘மேக மூட்டம் காரணமாக ஷவ்வால் பிறை எங்களுக்குத் தென்படவில்லை. எனவே, நோன்பு நோற்றவர்களாக நாங்கள் காலைப் பொழுதை அடைந்தோம். பகலின் கடைசி நேரத்தில் ஒரு வாகனக் கூட்டத்தினர் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து நேற்று நாங்கள் பிறை பார்த்தோம் என்று சாட்சி கூறினார்கள். அப்போது அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவர்களது நோன்பை விட்டுவிடுமாறும் விடிந்ததும் அவர்களது பெருநாள் திடலுக்குச் செல்லுமாறும் அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள். (அறிவிப்பவர்: அபூ உமைர், நூல்: அபூதாவூத்-1159, நஸயீ-1557, பைஹகீ-7987, தாரகுத்னி-14, அஹ்மத்-20579)

நாம் இதுவரை பார்த்த அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பொன்மொழிகள் பிறை கண்டதாக சாட்சியம் கிடைத்தால் தூர, பிரதேச, கால எல்லைகளைப் பொருட்படுத்தாது ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றன. மேலும், 06:96, 10:05, 02:189,17:12 போன்ற அருள்மறை  வசனங்கள் பிறையைப் பற்றிக் குறிப்பிடுகையில் ‘மக்களுக்கு காலங்காட்டிகள்’ என்று குறிப்பிடுவதன் மூலம் உலகின் எப்பாகத்திலேனும் பிறை காணப்பட்டுவிட்டால் அது முழு உலகிற்குமே உரிய பிறையாகும் என்பதனை உறுதி செய்கின்றன.

எனவே, உலகில் எப்பிரதேசத்திலேனும் பிறை காணப்பட்டதாக இரண்டு நீதமான, நம்பகமான முஸ்லிம்கள் சாட்சியமளித்தால் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்கின்ற சர்வதேசப் பிறைக்கே அருள்மறைக் குர்ஆனிலும், அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் உயரிய வழிகாட்டலிலும் வலுவான ஆதாரம் கிடைக்கின்றது என்பதனை அறிந்து கொள்ளலாம்.

02.சர்வதேசப் பிறையே நடைமுறைச் சாத்தியமானது: 

சத்திய இஸ்லாமிய மார்க்கத்தைப் பொறுத்த வரையில் இன்றைய நவீன பிரச்சினைகள், இன்னும் சில நூற்றாண்டுகளுக்கு பின்னர் ஏற்படக் கூடிய பிரச்சினைகளுக்கு மாத்திரமன்றி இவ் உலகம் அழிக்கப்படுகின்ற நிலையில் வாழ்கின்ற கடைசி மனிதனுக்கும் வழிகாட்டக் கூடிய ஓர் உன்னதமான வாழ்வியல் வழிகாட்டியாகும்.

அந்த வகையில் நடைமுறைச் சாத்தியமற்ற விடயங்களை இஸ்லாம் ஒரு போதும் போதிக்காது  என்கின்ற விடயத்தை உள்ளத்தில் இருத்தியவர்களாக இப்பிரச்சினையை நோக்குவோம்.

நாடுகளின் எல்லைகளைப் பொறுத்தவரை நிர்வாக வசதிக்காக மனிதர்களாக ஏற்படுத்திக் கொண்டதாகும். யுத்தம் மற்றும் அரசியற் காரணிகளால் இணைந்திருந்த ஒரு நாடு பல நாடுகளாக பிரிவதையும், பிரிந்திருந்த  நாடுகள் இணைந்து ஒரு நாடாக மாறுவதையும் காண்கின்றோம். மனிதக் காரணிகளால் ஏற்படுகின்ற இம்மாற்றமானது அழ்ழாஹ்வின் மார்க்த்தை மாற்றியமைக்குமா?  என்பதனை நாட்டுக்கு நாடு ஓர் பிறை, ஊருக்கு ஊர் பிறை பார்க்க வேண்டும் என்று கூறுகின்ற மார்க்க அறிஞர்கள் சிந்திக்கத் தவறிவிடுகின்றனர். அந்த வகையில் நடைமுறை ரீதியான சில பிரச்சினைகளை நோக்குவோம்.

01.நாட்டுக்கு நாடு பிறை பார்க்க வேண்டும் என்கின்ற வாதத்தின் அடிப்படையில் சவூதி அரேபியாவிற்கும், இலங்கைக்குமிடையில் பிறையைத் தீர்மானிப்பதில் ஒரு நாள் அல்லது இருநாள் வித்தியாசம் ஏற்படுகின்றது. இப்போது ஒருவர் சவூதியில் வைத்து தலைப்பிறையினை தமது கண்களால் கண்டு நோன்பு நோற்கின்றார். பின்னர், ரமழானின் நடுப்பகுதியில் நாடு திரும்புகின்றார். குறித்த மாதம் சவூதிக்கும், இலங்கைக்கும் இடையில் இரண்டு நாள் வித்தியாசம் ஏற்படுகின்றது என வைத்துக் கொள்வோம். இப்போது இலங்கையில் இருப்பவர்கள் 28 வது நோன்பை பூர்த்தி செய்கையில், சவூதியிலிருந்து வருகை தந்தவருக்கு 30 வது நோன்பு பூர்த்தியாகிவிடும். இவருக்குரிய மார்க்கத் தீர்ப்பு என்ன? இவர் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் மாதம் என்பது 29 நாட்கள் அல்லது 30 நாட்கள் என்கின்ற கட்டளையினை மீறி 31 வது நோன்பையும் நோற்க வேண்டுமா? அல்லது தனித்துப் பெருநாள் கொண்டாட வேண்டுமா? தனித்துப் பெருநாள் கொண்டாட வேண்டுமென்றால் அதற்குரிய ஆதாரம் என்ன?

02.இன்று உலகளாவிய ரீதியல் துரித விமான சேவை இடம்பெற்று வருகின்றது. தற்போது வர்த்தக நோக்கிற்காக பாகிஸ்த்தானுக்கு சென்ற சில சகோதரர்கள் பாகிஸ்த்தானில் வைத்து தலைப்பிறையைப் பார்த்து விட்டு சில மணி நேரங்களில் நாடு திரும்புகின்றனர். ஆனால், இலங்கையில்  பிறை தென்படவில்லை. இவர்களுக்குரிய மார்க்கத் தீர்ப்பு என்ன? இவர்கள் பாகிஸ்த்தானில் கண்ணால் கண்ட பிறையின் அடிப்படையில் நோன்பு நோற்பதா? அல்லது இலங்கையில் பிறை காணப்படவில்லை என்பதற்காக நோன்பு நோற்காதிருப்பதா?

03.உள்நாட்டுப் பிறையின் அடிப்படையில் நோன்பு நோற்ற இலங்கையர் ஒருவர் கட்டார் நாட்டிற்கு வேலைவாய்ப்பு பெற்றுச் செல்கின்றார். குறித்த சகோதரர் 27 நோன்பை பூர்த்தி செய்துள்ள நிலையில் கட்டாரில் பிறையைக் காண்கிறார். குறித்த மாதம் கட்டாரிற்கும், இலங்கைக்கும் இடையில் இரண்டு நாள் வித்தியாசம் ஏற்படுகின்றது என வைத்துக் கொள்வோம். இவருக்குரிய மார்க்கத் தீர்ப்பு என்ன? அழ்ழாஹ்வின் தூதரின் பிறை கண்டால் நோன்பை விட்டு விடுங்கள் என்கின்ற நபிமொழியை மீறுவதா? அல்லது மாதம் என்பது 29 நாட்கள் அல்லது 30 நாட்கள் என்கின்ற நபிமொழியை மீறுவதா?

04.இன்றைய இந்தியா, பாகிஸ்த்தான் மற்றும் பங்களாதேஷ் போன்ற நாடுகள் இணைந்து ஆரம்பத்தில் பாரத நாடு (ஹிந்துஸ்த்தான்) என்கின்ற ஒரு நாடாகவே காணப்பட்டது. நாட்டுக்கு நாடு பிறை பார்க்க வேண்டும் என்பதன் அடிப்படையில் ஒட்டு மொத்த பாரத முஸ்லிம்களும் ஒரே பிறையின் அடிப்படையிலேயே நோன்பு மற்றும் பெருநாள் வணக்கங்களை அனுஷ்டித்திருப்பார்கள்.

ஆனால், பின்னர் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தினால் பாரத நாடு இந்தியா, பாகிஸ்த்தான் என்கின்ற இருநாடுகளாகப் பிரிவடைந்து, பின்னர்  பாகிஸ்த்தானில் இருந்து பங்களாதேஷ் பிரிவடைந்து இன்று வௌ;வேறு மூன்று நாடுகளாகக் காணப்படுகின்றன. நாட்டுக்கு நாடு பிறை பார்க்க வேண்டும் என்கின்ற வாதத்தின் அடிப்படையில் ஒரே பிறையில் வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டு வந்த மக்கள் இன்று மூன்று பிறைகளின் அடிப்படையில் வணக்க வழிபாடுகளில் ஈடுபட வேண்டும். நாட்டுக்கு நாடு பிறை பார்க்க வேண்டும் என்கின்ற நிலைப்பாட்டை வலியுறுத்தக் கூடிய மார்க்க அறிஞர்களே! அரசியற் காரணிகளால் ஏற்படுகின்ற மாற்றம் அழ்ழாஹ்வின் மார்க்கத்தை மாற்றியமைக்குமா?

05.உலகில் இஸ்லாமிய ஆட்சி ஏற்பட்டு விட்டது என்று வைத்துக் கொள்வோம். (இன்ஷா அழ்ழாஹ் நிச்சயம் ஏற்படும்) தற்போது பலஸ்த்தீன், ஆப்கான், ஈராக் போன்ற நாடுகளில் வாழ்கின்ற எமது ஈமானிய உறவுகள் மீது கோரத்தாக்குதல்களை மேற்கொள்கின்ற யூத, கிறிஸ்த்தவ, சியோனிஸ்டுகள் மீது போர் தொடுப்பது இஸ்லாமிய அரசின் கட்டாயக் கடமையாகின்றது. இப்போரில் அருளாளன் அழ்ழாஹ்வின் பேருதவியால் இஸ்லாமிய அரசுக்கு வெற்றி கிடைக்கின்றது. இதனை வரலாற்றில் பதிவு செய்வதாயின் எந்தப் பிறையின் அடிப்படையில் பதிவு செய்வது? அமெரிக்கப் பிறையின் அடிப்படையிலா?  பலஸ்த்தீன் பிறையின் அடிப்படையிலா?

06.அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரபியுல் அவ்வல் பிறை 12ல் மரணமடைந்தார்கள் என்று ஆதாரபூர்வமான நபிமொழகள் எடுத்தியம்புகின்றன. அவ்வாறாயின், அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்தப் பகுதியின் பிறை 12ல் மரணமடைந்தார்கள். மக்காப் பிறையின் அடிப்படையிலா? மதீனாப் பிறையின் அடிப்படையிலா?

07. ஆரம்பத்தில் ஒரு நாடாகக் காணப்பட்ட கொரியா இன்று வடகொரியா, தென்கொரியா என்கின்ற இரு நாடுகளாகக் காணப்படுகின்றது. கொரிய நாட்டு மக்கள் ஒரு பிறையின் அடிப்படையில் வணக்க வழிபாடுகளை அமைத்துக் கொள்ள வேண்டும் என்பது இறைசட்டமா? அல்லது இரு வேறுபட்ட பிறைகளின் அடிப்படையில் வணக்க வழிபாடுகளை அமைத்துக் கொள்ள வேண்டும் என்பது இறைசட்டமா?

08. இந்தியாவின் கீழக்கரை என்கின்ற பிரதேசத்திற்கும் இலங்கையின் தலை மன்னாரிற்கும் இடைப்பட்ட தூரம்வெறும் 50 கி.மீ இற்கும் குறைவான தூரமேயாகும். ஆனால் இலங்கை நாட்டின் யாழ்ப்பாணத்திற்கும், காலிக்கும் இடையிலான தூரம் 600 கி.மீ இற்கும் அதிகமான தூரமாகும்.

இந்தியாவின் கீழக்கரையில் கண்ட பிறை தலை மன்னாருக்கு செல்லுபடியாகாது என்று கூறுவது எந்த வகையில் நியாயம்?  அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரண்டு நீதமான முஸ்லிம்கள் பிறை கண்டதாக சாட்சி சொன்னால் ஏற்றுக் கொள்ளுங்கள் என பொதுவாகத்தானே கட்டளையிட்டுள்ளார்கள். ஏன் இந்த முரண்பாடு? இஸ்லாம் அறிவுபூர்வமான மார்க்கம் என்று நாம் உரைகளில் உரக்கச் சொல்வது அர்த்தமற்றுப் போய்விடுமே?

09.இன்றைய ஜேர்மன் நாடு ஆரம்பத்தில் கிழக்கு ஜேர்மன், மேற்கு ஜேர்மன் என்கின்ற இரு நாடுகளாக காணப்பட்டது. நாட்டுக்கு நாடு பிறை பார்க்க வேண்டும் என்கின்ற வாதத்தின் அடிப்படையில்  ஆரம்பத்தில்  கிழக்கு ஜேர்மன் மக்கள் ஒரு பிறையின் அடிப்படையிலும், மேற்கு ஜேர்மன்  மக்கள் ஒரு பிறையின் அடிப்படையிலும் தமது வணக்க வழிபாடுகளை நிறைவேற்றி வந்திருப்பார்கள். ஆரம்பத்தில் இரு வேறுபட்ட பிறைகளின் அடிப்படையில் வணக்க வழிபாடுகளை நிறைவேற்றி வந்தவர்கள் அரசியல் மாற்றத்தின் காரணமாக ஒரு பிறையின் அடிப்படையில் அடிப்படையில் வணக்க வழிபாடுகளை அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்கு என்ன ஆதாரம்? அரசியல் மாற்றம் அழ்ழாஹ்வின் மார்க்கத்தை மாற்றியமைக்குமா?

இவ்வாறான நடைமுறை சார்ந்த பிரச்சினைகள் ஏராளமாக காணப்படுகின்றன. இத்தகைய நடைமுறைச் சிக்கல்கள் அனைத்திற்கும் சர்வதேசப் பிறை ஒன்றே தீர்வு சொல்லக் கூடியது. மேலும், நாடுகளின், மாகாணங்களின், பிரதேங்களின் எல்லைகள் அழ்ழாஹ்வாலோ, அவனது தூதர் (ஸல்) அவர்களாலோ வகுத்து தரப்பட்டது கிடையாது. மாறாக, நிர்வாக வசதிக்காக நாம் வகுத்துக் கொண்டதாகும். எனவே, நிர்வாக எல்லைகளைக் காரணம் காட்டி பிறைத் தகவலை நிராகரிக்க முடியாது.

இற்றைக்கு சுமார் 100 வருடங்களுக்கு  முன்னர் ஒருவர் ஹஜ்ஜுக்குச் சென்று,  இறந்துவிட்டால் சென்றவர்கள் திரும்பி வந்து சொன்ன பின்புதான் இறந்தவருடைய மனைவி இத்தா இருக்கும் நிலை காணப்பட்டது. அதே போன்று தகவற் தொழிநுட்ப வளர்ச்சி குன்றியிருந்த காலத்தில் காத்தான்குடியில் காணப்பட்ட பிறைத் தகவல் கொழும்புக்கோ, திருகோணமலைக்கோ தெரிய வாய்ப்பிருக்கவில்லை. எனவே, காத்தான்குடியில் ஒரு தினத்திலும், திருகோணமலையில் வேறொரு தினத்திலும், கொழும்பில் மற்றொரு தினத்திலம் நோன்பு நோற்கும் நிலையே காணப்பட்டது. பின்பு ஏற்பட்ட தகவல் தொழிநுட்ப வளர்ச்சியின் காரணமாக முழு இலங்கையிலும் ஒரே தினத்தில் நோன்பு நோற்க கூடிய நிலை காணப்பட்டது. (அதிலும் அடிக்கடி பாரிய தவறுகள் இடம்பெறாமலில்லை. குறிப்பாக, நாட்டுக்கு நாடு பிறை பார்க்க வேண்டும் எனக் கூறுபவர்கள் கடந்த 2005 ல் மூன்று நாட்கள் வித்தியாசத்தில் நோன்பு நோற்றமை குறிப்பிடத்தக்கது.)

ஹஜ்ஜுக்காக சென்ற கணவன் இறந்த தகவல் இன்றைய நவீன தொடர்பு சாதனங்களினூடாக இறந்தவருடைய மனைவிக்கு தெரியப்படுத்தப்படுகையில் இறந்தவருடைய மனைவி ஆரம்பகால நடைமுறையை காரணம் காட்டி தகவலை நிராகரிப்பது எவ்வளவு தவறோ, அதே போன்றுதான் ஆரம்பகால நிலமையை காரணம் காட்டி கொழும்புத் தகவலை காத்தான்குடியிலோ ஏனைய ஊர்களிலோ உள்ள மக்கள் நிராகரிப்பது தவறாகும்?

அதே போன்று தவறான மற்றொரு வாதம்தான் இன்று தகவல்; தொழிநுட்பத்தில் ஏற்பட்டுள்ள அபரிதமான வளர்ச்சியை நிராகரித்துவிட்டு, ‘அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரண்டு முஸ்லிம்கள் பிறை கண்டதாக சாட்சியமளித்தால் ஏற்றுக் கொள்ளுங்கள்’ என எவ்வித வரையறைகளுமின்றி பொதுவாக கட்டளையிட்டிருக்க, அவ்விரு சாட்சிகளும் எங்கள் நாட்டிற்குள் இருந்தால்தான் ஏற்றுக் கொள்வோம் எனவும், நீதமான, நம்பகமான முஸ்லிம்களாக இருந்தாலும் எங்கள் நாட்டிற்கு வெளியில் இருந்தால் ஏற்றுக் கொள்ளமாட்டோம் என வாதிடுவது ஆகும்.

உலகின் எப்பாகத்தில் இருந்தேனும் பிறை தென்பட்டால் அதுவே குறித்த மாதத்திற்கான தலைப்பிறையாகும். இப்பூகோள அமைப்பில் நேரங்கள் மாத்திரம்தான் வித்தியாசப்படுமே தவிர, ஒரு போதும் நாள் வித்தியாசப்படாது. எனவே, உலகின் எப்பகுதியில் இருந்து தகவல் கிடைத்தாலும் அதனை ஏற்று செயற்படுத்த வேண்டிய கடமைப்பாடு எமக்கு இருக்கின்றது. மாறாக, மனோ இச்சையின் அடிப்படையில் புறக்கணிப்போமாயின் இறைவனிடத்தில் குற்றவாளியாக நேரிடும். இதனையே அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்.

‘நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இருநாட்களும் நோன்பு நோற்பதற்கு அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்.’ (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), நூல்: புஹாரி)

எனவே, இது வரை நாம் பார்த்த வலுவான ஆதாரங்களின் அடிப்படையிலும், நடைமுறை சார்ந்த பிரச்சினைகளின் அடிப்படையிலும் தலைப்பிறை என்பது உலகளாவிய மக்கள் அனைவருக்கும் ஒரே பிறைதான் என்பதனை மிகத் தெளிவாக அறிந்து கொண்டோம். பிறை கண்ட சாட்சியம் இரண்டு நீதமான, நம்பகமான முஸ்லிம்கள் மூலம் ஆதாரப்பூர்வமாக எமக்கு கிடைக்கையில், இஸ்லாம் தலைப்பிறையின் மூலம்; விரும்புகின்ற உலகளாவிய ஒற்றுமையை ஏற்படுத்த நாம் முன்வர வேண்டும்.

இறுதியாக, அழ்ழாஹ்வும், அவனது திருத்தூதர் (ஸல்) அவர்களும் காட்டிய வழிமுறையில் எமது வணக்க வழிபாடுகளை அமைத்துக் கொள்ள அருளாளன் அழ்ழாஹ் அருள்பாலிப்பானாக!

சர்வதேசப் பிறை பற்றிய விமர்சனங்களும் விளக்கங்களும்

சர்வதேசப் பிறை விடயத்தில், அல்குர்ஆன், ஆதாரபூர்வமான நபிமொழிகளை விடுத்து, பகுத்தறிவுக்கு முன்னுரிமை கொடுப்பவர்களான இஹ்வானிகளும், தனிமனிதர்களை கண்மூடிப் பின்பற்றும் தப்லீக்வாதிகளும், மார்க்கத்தை விட்டு வெளியேறிய கப்றுவணங்கிகளும் தவ்ஹீத்வாதிகளை மிகப்பெரும் பாவிகளாக சித்தரித்து வந்த காலம் சென்று, தவ்ஹீத்வாதிகள் என அறியப்படுகின்ற சில சகோதரர்கள் சர்வதேசப் பிறையை சரிகண்டவர்களை மிகத்தாறுமாறாக விமர்சிக்கின்ற நிலமைகள் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றன.

மத்ஹபுவாதிகளையும், மன்ஹஜே (சரியான கொள்கை) இல்லாதவர்களையும் பெரும்பான்மையாகக் கொண்ட சபைகளை நாங்கள் நிராகரித்து சர்வதேசப்பிறையை சரிகண்டமையால்  நாம் எதிர்நோக்கிய மிகப்பெரும் விமர்சனம் ‘ஹவாரிஜ்கள்’  (இஸ்லாத்தில் முதன் முதலில் கிளரச்சி செய்து வெளியேறியவர்கள்) என்பதாகும். மேலும், அறிவீனர்கள், மனோஇச்சைக்காரர்கள் போன்ற விமர்சனங்களையும் எதிர்நோக்கினோம்.

ஆனாலும், தாம் அடையப்போகும் (?) இஸ்லாமிய கிலாபத்திற்கு உகந்ததது சர்வதேசப்பிறைதான்  என யூசுப் கர்ழாவி போன்றோர் வலியுறுத்தியும், மத்ஹபு நூற்களில் சர்வதேசப்பிறைக்கு சாதகமான கருத்துக்கள் நிறைந்திருந்தும், தான் அடைய விரும்புவது கணிப்பு அடிப்படையிலான பிறை அல்லது பிராந்தியப் பிறை என்றிருந்தும் தங்களுக்குள் ஆயிரமாயிரம் முரண்பாடுகளை வைத்துக் கொண்டு ஸுன்னா வலியுறுத்துகின்ற சர்வதேசப் பிறையை மறுப்பதுதான் முழுமையான  மனோ இச்சையாகும்.

இவர்கள் தமக்குள் பாரிய கருத்து வேறுபாடுகளைக் கொண்டிருந்தும் தேசியப்பிறையென எவ்வித அடிப்படையுமற்ற பிறையையே முன்னிலைப்படுத்துகின்றனர். தனிப்பட்ட முறைகளில் கேட்டுப்பார்த்தால் அவர்களது உண்மைநிலை புலப்படும். இங்கு எம்மோடு உடன்பாடான, அல்குர்ஆனும் ஆதாரபூர்வமான நபிமொழிகளும் மாத்திரமே எமது கொள்கை என்ற நிலைப்பாட்டில் உள்ள சில சகோதரர்களும் சர்வதேசப்பிறையை விமர்சிக்கின்றனர். அவ்வாறு விமர்சிக்கும் போது ஒரு தடவை ஊருக்கு ஊர் பிறை என்றும், ஒரு தடவை மாநிலத்திற்கோர் பிறை என்றும், மற்றோர் தடவை நாட்டுக்கு ஓர் பிறை என்றும், தானும் குழம்பி மற்றவர்களையும் குழப்புகின்றனர்.  எனவே, மாற்றுக் கருத்துள்ள நமது சகோதரர்கள் முன்வைக்க கூடிய முக்கியமான சில விமர்சனங்களையும்  அவற்றுக்கான விளக்கங்களையும் நோக்குவோம்.

வெளியூரிலிருந்து வந்த தகவலை ஏற்காலாமா?

‘மேக மூட்டம் காரணமாக ஷவ்வால் பிறை எங்களுக்குத் தென்படவில்லை. எனவே, நோன்பு நோற்றவர்களாக நாங்கள் காலைப் பொழுதை அடைந்தோம். பகலின் கடைசி நேரத்தில் ஒரு வாகனக் கூட்டத்தினர் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து நேற்று நாங்கள் பிறை பார்த்தோம் என்று சாட்சி கூறினார்கள். அப்போது அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவர்களது நோன்பை விட்டுவிடுமாறும் விடிந்ததும் அவர்களது பெருநாள் திடலுக்குச் செல்லுமாறும் அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள்.
(அறிவிப்பவர்: அபூ உமைர், நூல்: அபூதாவூத்-1159, நஸயீ-1557, பைஹகீ-7987, தாரகுத்னி-14, அஹ்மத்-20579)

தூர, பிரதேச, கால எல்லைகளைக் கருத்திற் கொள்ளாது பிறைத் தகவலை ஏற்க வேண்டும் என்பதற்கு மேலுள்ள அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பொன்மொழியும் ஒரு ஆதாரமாகும். ஆனால், அண்மை காலத்தில் மேலுள்ள நபிமொழியிலிருந்து சில தவறான வாதங்கள் எடுத்து வைக்கப்பட்டு வருகின்றன. எனவே, அதன் உண்மை நிலை தொடர்பாக நோக்குவோம்.

விமர்சனம்: வாகனக் கூட்டத்தினர் தங்கள் ஊரில் பிறை பார்த்த பிறகும் பெருநாள் தொழுகையைத் தொழாமல், நோன்பையும் பிடித்துக் கொண்டு மார்க்கத் தீர்ப்பு பெறுவதற்காக வந்துள்ளனர். பிறை பார்த்த பின்பும் நோன்பு நோற்றதும், பெருநாள் தொழுகையை விட்டதும் சரியில்லை என்பதனால் அவர்களது நோன்பை முறிக்குமாறு அவர்களுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.

அவர்களது தொழும் திடலுக்கு மறுநாள் செல்லுமாறு அவர்களுக்கு கட்டளையிட்டார்கள் என்றால் கட்டளை யாருக்கு என்பது தெளிவாகவே விளங்குகின்றது. பிறை பார்த்தவர்களுக்குதான்  அந்த கட்டளையே தவிர பிறை பார்க்காமல் மேக மூட்டம் காரணமாக முப்பதாம் நோன்பு வைத்த ஊர் மக்களுக்கு அல்ல!

விளக்கம்: குறித்த நபிமொழியில் வாகனக் கூட்டத்தினர் நோன்பு நோற்றதாக கிடையவே கிடையாது. மேலும்,  நோன்பு நோற்றிருந்தவர்களையே நோன்பை விடுமாறு ஏவ வேண்டும். வாகனக் கூட்டத்தினர் நோன்பு நோற்றிருந்தார்கள் என்பது நமது யூகமே அன்றி வேறில்லை. வாகனக் கூட்டத்தினரிடம் அழ்ழாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்கள் நீங்கள் நோன்பு நோற்றுள்ளீர்களா? என வினவவுமில்லை. மாறாக, நாங்கள் நோன்பு நோற்றுள்ளோம் என வாகனக் கூட்டத்தினர் கூறவுமில்லை. இவ்வாறான நிலையில் நபிகளார் நோன்பை விடுமாறு கட்டளையிட்டது வாகனக் கூட்டத்தினருக்கே என வாதிடுவது தவறான வாதமாகும்.

அடுத்து, வாகனக் கூட்டத்தினர் மார்க்கத் தீர்ப்பு பெற வந்ததாக நபிமொழியில் இடம் பெறவில்லை. மாறாக, பிறை பார்த்ததாக சாட்சியமளிக்கவே வருகை தந்துள்ளதாக குறித்த நபிமொழி கூறுகின்றது. மேலும், ‘பிறையைப் பார்த்து நோன்பு வையுங்கள் பிறையைப் பார்த்து நோன்பு விடுங்கள்!’ (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: ஸஹீஹுல் புஹாரி 1909) என்கின்ற நபிமொழியின் முற்பகுதியை அறிந்தவர்கள், அதன்படி நோன்பு நோற்றவர்கள், அதன் பிற்பகுதியை அறியவில்லை எனவும், நோன்பு நோற்றுக் கொண்டு மார்க்கத் தீர்ப்பு பெறுவதற்காக வந்தனர் என்பதும் ஏற்புடைய வாதமல்ல.

மேலும், குறித்த நபிமொழியானது ‘நோன்பு நோற்றவர்களாக நாங்கள் காலைப் பொழுதை அடைந்தோம்’ என்று ‘தன்மை’ நிலையில் ஆரம்பிக்கின்றது. ‘நேற்று நாங்கள் பிறை பார்த்தோம்’ என்று வாகனக் கூட்டத்தினரும் ‘தன்மை’யில்  பதிலளிக்கின்றார்கள். அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்விரு சாராரையும் இணைத்து, அவர்களது பெருநாள் திடலுக்குச் செல்லுமாறு அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள் என பொதுவாக நபிமொழி குறிப்பிடுகின்றது.

இதனை இன்னும் சற்று விரிவாக நோக்குவோமாயின், ஒரு விடயத்தை ஆரம்பத்தில் தன்மையில் கூறிவிட்டு பின்னர், முன்னிலையிலோ, படர்க்கையிலோ கூறுகின்ற வழக்கம் பொதுவாக எல்லா மொழி நடைகளிலும் உண்டு. இதனை அருள் மறைக்குர்ஆனிலும் காண முடியும்.

‘கடலிலும், தரையிலும் அவனே உங்களைப் பயணம் செய்ய வைக்கிறான். நீங்கள் கப்பலில் இருக்கின்றீர்கள். நல்ல காற்று அவர்களை வழி நடத்துகிறது. அவர்கள் மகிழ்ச்சியடையும் போது புயல் காற்று அவர்களிடம் வருகிறது. ஒவ்வொரு இடத்திலிருந்தும் அவர்களிடம் அலையும் வருகிறது. தாம் சுற்றி வளைக்கப்பட்டு விட்டதாக அவர்கள் முடிவு செய்கின்றனர். வழிபாட்டை உளத்தூய்மையுடன் அவனுக்கே உரித்தாக்கி ‘இதிலிருந்து எங்களை நீ காப்பாற்றினால் நன்றியுள்ளோராக ஆவோம்’ என்று அழ்ழாஹ்விடம் பிரார்த்தனை செய்கின்றனர்.’ (அல்குர்ஆன் 10:22)

மேலுள்ள அருள்மறை வசனத்தில் ‘முன்னிலை’யில் குறிப்பிடப்பட்டுள்ள ‘நீங்கள்;’ என்பது யாரைக் குறிப்பிடுகின்றது? ‘அவர்களை’  என்று ‘படர்க்கை’யில் குறிப்பிடப்பட்டுள்ளது யாரைக் குறிப்பிடுகின்றது. இரண்டும் ஒரே சாராரையே குறிப்பிடுகின்றது.

அதனைப் போன்றே மேலுள்ள நபிமொழியில் அறிவிப்பாளர் அபூஉமைர் (ரஹ்) கூறுகையில், எனது சிறிய தந்நை எனக்கு சொன்னார் என்று ஆரம்பிக்கின்றார். அறிவிப்பாளர் அபூஉமைர் (ரஹ்), ‘மேக மூட்டம் காரணமாக ஷவ்வால் பிறை எங்களுக்குத் தென்படவில்லை. எனவே, நோன்பு நோற்றவர்களாக நாங்கள் காலைப் பொழுதை அடைந்தோம்.’ என்று இங்கு குறிப்பிடுவது நபித்தோழர்களை ஆகும். அதே போன்று அறிவிப்பாளர் ‘அவர்களது நோன்பை விட்டுவிடுமாறு கட்டளையிட்டார்கள்’ என்று குறிப்பிடுவது நோன்பு நோற்றிருந்தவர்கள் அனைவரையும் என்பதையும், ‘அவர்களது பெருநாள் திடலுக்குச் செல்லுமாறு அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள்’ என்பது அனைத்து மக்களையுமே குறிப்பிடுகின்றது என்பதனையும் மிகத் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.

மேலும், குறித்த நபிமொழியானது பிறைத் தகவல் உலகின் எப்பாகத்தில் இருந்து வந்தாலும் தூர, பிரதேச வேறுபாடுகளை கருத்திற் கொள்ளாது தகவலை எற்றுக் கொள்ள வேண்டும் என்பதை உணர்த்தி நிற்கின்றது. சாட்சியமளித்த வாகனக் கூட்டத்தினரிடம் நீங்கள் எங்கிருந்து வருகின்றீர்கள் என்று விசாரிக்காது அவர்களது சாட்சியத்தை ஏற்று நோன்பை விடுமாறும் மறுநாள் பெருநாள் திடலுக்குச் செல்லுமாறும் கட்டளையிடுகின்றார்கள். நேற்று மாலை பிறைபார்த்த வாகனக் கூட்டத்தினர் மறுநாள் பகலின் கடைசி நேரத்தில் அதாவது சுமார் 20 மணி நேரத்தின் பின்னர் வந்து சாட்சியமளிக்கின்றார்கள்.

நோன்பு திறக்க சில மணி நேரங்களே இருக்கையில் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோன்பை விடுமாறு கட்டளையிட்டுள்ளார்கள். எனவே, இந்நபிமொழியானது உலகின் எப்பாகத்திலிருந்து தகவல் கிடைத்தாலும் அதனை ஏற்று ஒட்டு மொத்த முஸ்லிம்களும் ஏற்று அமுல்படுத்த வேண்டும்; என்கின்ற சர்வதேசப் பிறைக்கே வலுவான ஆதாரமாக அமைகின்றது.

சிரியாவில் பிறை பார்ப்பது மதீனாவுக்குப் பொருந்தாதா?

‘உம்மு ஃபள்ல் பின்த் அல்ஹாரிஸ் (ரழி) அவர்கள் (ஒரு வேலை நிமித்தம்) என்னை ஷாம் (சிரியா) நாட்டிலிருந்த முஆவியா (ரழி) அவர்களிடம் அனுப்பினார்கள். நான் ஷாம் சென்று அவரது தேவையை நிறைவு செய்தேன். நான் ஷாமில் இருந்த போது ரமழான (முதல்) பிறை எனக்குத் தென்பட்டது. வெள்ளிக்கிழமை இரவில் நான் பிறையைக் கண்டேன்.

பிறகு அந்த (ரமழான்) மாதத்தின் இறுதியில் நான் மதீனா வந்து சேர்ந்தேன். அப்போது அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரழி) அவர்கள் (பயணம் குறித்து) என்னிடம் விசாரித்தார்கள். பின்னர் பிறை குறித்தும் பேசினார்கள். அப்போது ‘நீங்கள் (ஷாமில்) எப்போது பிறை பார்த்தீர்கள்?’ என்று கேட்டார்கள். நான், ‘நாங்கள்  வெள்ளியன்று பிறை கண்டோம்.’ என்று பதிலளித்தேன். அவர்கள், ‘நீயே அதைக் கண்டாயா?’  என்று கேட்டார்கள். நான், ‘ஆம் (நானும் கண்டேன்). மக்களும் அதைக் கண்டார்கள். மக்களும் நோன்பு நோற்றனர். முஆவியா (ரழி) அவர்களும் நோன்பு நோற்றார்கள்.’ என்ற கூறினேன். அதற்கு அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரழி) அவர்கள், ஆனால், நாங்கள் சனிக்கிழமை இரவுதான் (முதல்) பிறை கண்டோம். எனவே, நாங்கள் (ரமழான் மாதத்தின்) எண்ணிக்கையை  முப்பது நாட்களாக முழுமையாக்கும் வரை, அல்லது (ஷவ்வால் மாதத்தின் முதல்) பிறைiயைப் பார்க்கும் வரை நோன்பு நோற்றுக் கொண்டேயிருப்போம்’ என்று சொன்னார்கள். அதற்கு நான், ‘முஆவியா( ரழி) அவர்கள் (முதல் கண்டு), நோன்பு நோற்றது உங்களுக்குப் போதாதா?’ என்று கேட்டேன்.அதற்கு, ‘இல்லை. இப்படித்தான் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) எங்களுக்குக் கட்டளையிட்டார்கள்.’ என்று பதிலளித்தார்கள்.’ (அறிவிப்பவர்:  குறைப் பின் அபீ முஸ்லிம் (ரஹ்), நூல்: ஸஹீஹ் முஸ்லிம் 1983)

நாட்டுக்கு நாடு பிறை பார்க்க வேண்டும் என வாதிடுகின்ற மார்க்க அறிஞர்களும், ஊருக்கு ஊர் பிறை பார்க்க வேண்டும் என வாதிடுகின்ற  மார்க்க அறிஞர்களும் எடுத்து வைக்கின்ற பிரதான ஆதாரம் மேலுள்ள நபிமொழியேயாகும். இதன் உண்மை நிலை தொடர்பாக நோக்குவோம்.

விமர்சனம்: தானும் பிறை பார்த்து முஆவியாவும் பார்த்து மக்களும் பார்த்த விபரத்தை குரைப் (ரஹ்) கூறுகிறார். இதற்குப் பிறகும் இப்னு அப்பாஸ் (ரழி) ஏற்க மறுக்கிறார்கள். எங்கள் பகுதியில் பிறையை நாங்கள் காண வேண்டும். இல்லாவிட்டால் முப்பது நாட்கள் என்று முடிவு செய்து கொள்வோம் என்று விடையளிக்கிறார்கள்.

இவ்வளவு பேர் பார்த்திருக்கிறோமே அது போதாதா என்று கேட்டதற்கு போதாது என்று விடையளித்து விட்டு இப்படித்தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டனர் எனக் காரணத்தைக் கூறுகிறார்கள். எனவே, சிரியாவில் பார்த்த பிறை மதீனாவிற்குப் பொருந்தாது என வாதிடுகின்றனர்.

விளக்கம்: மேற்படி நபிமொழியை ஆதாரமாகக் காட்டக் கூடியவர்கள் ஒருபோதும் இதனை நாட்டுக்கு நாடு பிறை பார்க்க வேண்டுமென்பதற்கு ஆதாரமாகக் காட்ட முடியாது. ஏனெனில், குறித்த சம்பவம் இடம் பெற்ற காலப்பகுதியில் ஷாமும் (சிரியா), மதீனாவும்  ஒரே ஆட்சியின் கீழ், ஒரு நாட்டின் இரு மாகாணங்களாகவே காணப்பட்டன. எனவே, மேற்குறித்த நபிமொழியில் இருந்து சட்டம் எடுப்பதாக இருந்தால் கிழக்கு மாகாணத்திற்கு ஒரு பிறை, மேல் மாகாணத்திற்கு ஒரு பிறை, வட மாகாணத்திற்கு ஒரு பிறை என்றுதான் சட்டம் வகுக்க முடியும். மாறாக, நாட்டுக்கு நாடு பிறை பார்க்க வேண்டுமென்பதற்கு ஒரு போதும் மேலுள்ள நபிமொழி ஆதாரமாக அமைய முடியாது என்பதனை மனதில் இருத்தியவர்களாக குறித்த செய்தியின் விளக்கத்தினை நோக்குவோம்.

சத்திய இஸ்லாமிய மார்க்கத்தின் சட்ட மூலாதாரம் அருள்மறைக் குர்ஆனும், அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஆதாரப்பூர்வமான பொன்மொழிகளும் மாத்திரமே ஆகும். அதற்கு மாற்றமாக கண்ணியமிகு நபித்தோழர்களின் சுய ஆய்வுகளாக இருந்தாலும்  அது ஒரு போதும் இஸ்லாத்தின் சட்ட மூலாதாரமாக அமைய முடியாது. அழ்ழாஹ்விடமிருந்து இறக்கியருளப்பட்ட வஹியை மாத்திரமே முஸ்லிம்கள் பின்பற்ற வேண்டும். இதனையே அருள்மறைக் குர்ஆன் பின்வருமாறு கூறுகின்றது.

‘(முஹம்மதே!) உமது இறைவனிடமிருந்து உமக்கு அறிவிக்கப்படுவதை நீர் பின்பற்றுவீராக!’ (அல்குர்ஆன் 06:106)  மேலும் பார்க்க: (அல்குர்ஆன் 02:38,24:51, 24:54,03:31,08:46,06:153,04:59, 33:36, 05:030)

மேலும், அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது கூற்றுக்களுக்கு, அவர்களது செயற்பாடுகள் விளக்கமாக அமையும். 
 
உதாரணமாக, ‘ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம், அழ்ழாஹ்வின் தூதரே!  இரவு தொழுகை எவ்வாறு (தொழ வேண்டும்) என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் இரண்டிரண்டு ரக்அத்களாகத் தொழ வேண்டும் என்று கூறினார்கள்.’   (அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி),  நூல்: ஸஹீஹுல் புஹாரி 1137) 

மேலுள்ள நபிமொழியில்  இரண்டிரண்டாக தொழ வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது பதினொறு ரக்அத்களை இரண்டிரண்டாக தொழுவதையே என்பதற்கு  கீழுள்ள அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் செயற்பாடு  விளக்கமாக அமைகின்றது.

‘நான் (அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்)  அவர்களின் துணைவியார்) ஆயிஷா (ரழி) அவர்களிடம், ரமழான் மாதத்தி(ன் இரவுகளி)ல் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தொழுகை எவ்வாறு இருந்தது, என்று கேட்டேன். அதற்கு அவர்கள் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரமழானிலும் ரமழான் அல்லாத மற்ற காலங்களிலும் பதினொரு ரக்அத்களைவிட அதிகமாகத் தொழமாட்டார்கள். (முதலில்) நான்கு ரக்அத்கள் தொழுவார்கள். அதன் அழகையும் நீளத்தையும் பற்றி நீ கேட்காதே! பிறகு நான்கு ரக்அத்கள் தொழுவார்கள். அதன் அழகையும் நீளத்தையும் பற்றி நீ கேட்காதே! பின்னர் மூன்று ரக்அத்கள் தொழுவார்கள், என்று விடையளித்தார்கள்.’ (அறிவிப்பவர்: அபூசலமா பின் அப்திர்ரஹ்மான் (ரஹ்), நூல்: ஸஹீஹுல் புஹாரி-1147,2013,3569)

இது போன்றே ‘இரு சாட்சிகள் (பிறை கண்டதாக) சாட்சி சொன்னால் நோன்பு வையுங்கள். நோன்பை விடுங்கள்’ (அறிவிப்பவர்: அப்துர் ரஹ்மான் (நபித்தோழர்களிடமிருந்து), நூல்: நஸயி-2116)  என்று கூறிய அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் செயற்பாடுகள் தகவல் எங்கிருந்து வந்தாலும் தூர, பிரதேச வேறுபாடுகளை கருத்திற் கொள்ளாது ஏற்க வேண்டுமென தெளிவுபடுத்துகின்றன.

இப்போது குரைப் (றஹ்) அவர்களின் செய்தியை நோக்குவோம். ‘இல்லை. இப்படித்தான் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) எங்களுக்குக் கட்டளையிட்டார்கள்.’ என்று இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறுகின்றார்கள். ‘இப்படித்தான்’ என்கின்ற  சொல் எங்கு நோக்கி மீள்கின்றது என்று சற்று நுணுக்கமாக நோக்குவோமாயின், இப்படித்தான் என்கின்ற சொல் நபித்தோழர் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறிய, ‘நாங்கள் (ரமழான் மாதத்தின்) எண்ணிக்கையை  முப்பது நாட்களாக முழுமையாக்கும் வரை, அல்லது (ஷவ்வால் மாதத்தின் முதல்) பிறைiயைப் பார்க்கும் வரை நோன்பு நோற்றுக் கொண்டேயிருப்போம்’ என்கின்ற வசனத்தை நோக்கியே மீள்கின்றது என்பதனை அறிந்து கொள்ளலாம்.

அதாவது, ‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பிறையைப் பார்த்து நோன்பு வையுங்கள் பிறையைப் பார்த்து நோன்பு விடுங்கள்! உங்களுக்கு மேக மூட்டம் தென்பட்டால் ஷஅபான் மாதத்தை முப்பது நாட்களாக முழுமைப்படுத்துங்கள்! (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),    நூல்: ஸஹீஹுல் புஹாரி-1909)  என்கின்ற நபிமொழியை எடுத்துக்கூறி,

‘இரு சாட்சிகள் (பிறை கண்டதாக) சாட்சி சொன்னால் நோன்பு வையுங்கள். நோன்பை விடுங்கள்’ (அறிவிப்பவர்: அப்துர் ரஹ்மான் (நபித்தோழர்களிடமிருந்து), நூல்: நஸயி-2116) என்கின்ற நபிமொழியை தனது ஆய்வின் அடிப்படையில் மறுத்து விடுகிறார்கள்.

இப்போது அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கட்டளையான வஹியை ஏற்பதா? அல்லது கண்ணியமிகு நபித்தோழர் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களின் ஆய்வின் முடிவை எடுப்பதா? என்ற வினாவிற்கு வஹியை மாத்திரமே பின்பற்ற வேண்டும் என அருளாளன் அழ்ழாஹ் நமக்கு கட்டளையிடுகின்றான்.

மேலும், பிறைத் தகவல் ரமழானின் இறுதிப் பகுதியிலேயே கிடைக்கின்றது. நபித்தோழர் முஆவியா (ரழி) அவர்களும் ஷாம் வாசிகளும்  அடுத்த பிறையைப் பார்த்து மாத நாட்களின் எண்ணிக்கையை 29 ஆக பூர்த்தி செய்து விட்டு பெருநாள் கொண்டாடினால், ஒரு நாள் பிந்தி  பிறை பார்த்தவர்கள் 28 நாட்களில் மாதத்தை நிறைவு செய்ய வேண்டி ஏற்படும் என்பதனால் நபித்தோழர் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள், ‘பிறையைப் பார்த்து நோன்பு வையுங்கள் பிறையைப் பார்த்து நோன்பு விடுங்கள்! உங்களுக்கு மேக மூட்டம் தென்பட்டால் ஷஅபான் மாதத்தை முப்பது நாட்களாக முழுமைப்படுத்துங்கள்!’ (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: ஸஹீஹுல் புஹாரி 1909) என்ற நபிமொழியை அடிப்படையாகக் கொண்டு குரைப் (ரஹ்) அவர்களின் தகவலை நிராகரித்திருக்கலாம்.

அல்லது, குறித்த  ‘இரு சாட்சிகள் (பிறை கண்டதாக) சாட்சி சொன்னால் நோன்பு வையுங்கள். நோன்பை விடுங்கள்’ (அறிவிப்பவர்: அப்துர் ரஹ்மான் (நபித்தோழர்களிடமிருந்து), நூல்: நஸயி-2116) என்கின்ற நபிமொழி  நபித்தோழர் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களுக்கு கிடைக்காது இருந்திருக்கலாம். இதனையும் நாம் சுய யூகத்தின் அடிப்படையிலோ, கற்பனையிலோ கூறவில்லை. மாறாக, நபிமொழிகளை ஆய்வு செய்கையில் இத்தகைய முடிவுக்கே ஒருவர் வர முடியும். ஏனெனில், அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மரணிக்கும் போது இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களுக்கு 13 வயது ஆகும். உஹது யுத்தம் நடைபெற்ற போது இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் 05 வயது சிறுவர்களாயிருந்தார்கள். உஹது யுத்தத்தில் கலந்து கொள்ளாத நபித்தோழர் அவர்கள் உஹது யுத்தம் தொடர்பான பல செய்திகளை அறிவித்துள்ளார்கள். அதாவது குறித்த செய்திகளை உஹது யுத்தத்தில் கலந்து கொண்ட மூத்த நபித்தோழர்களிடமிருந்து அறிவித்துள்ளார்கள். மேலும், இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் நபித்தோழர்களிடமிருந்து கேட்ட நபிமொழிகளில் இருந்து ஆய்வு செய்வார்கள். எனவே, குறித்த செய்தி இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களுக்கு தெரியாதிருக்கலாம் அல்லது தமது ஆய்வின் அடிப்படையில் குரைப் (ரஹ்) அவர்களின் தகவலினை நிராகரித்திருக்கலாம்.
மேலும், மனிதர்கள் என்ற அடிப்படையில் நபித்தோழர்களுக்கு பல்வேறு செய்திகள் கிடைக்காதிருந்திருக்கின்றது என்பதனை பின்வரும் செய்திகள் உறுதிப்படுத்துகின்றது.

அனுமதி கோருதல்

‘உமர் (ரலி) அவர்கள் (கலீஃபாவாக இருந்த காலத்தில்) அபூமூசா (ரலி) அவர்கள் வந்து, உள்ளே வர அனுமதி கோரினார்கள் உமர் (ரலி) அவர்கள் அலுவலில் ஈடுபட்டிருந்ததால் அவர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. உடனே அபூமூசா (ரலி) அவர்கள் திரும்பிவிட்டார்கள். அலுவலை முடித்த உமர் (ரலி) அவர்கள், அபூமூசாவின் குரலை நான் கேட்டேனே! அவருக்கு அனுமதி அளியுங்கள்! என்றார்கள். அவர் திரும்பிச் சென்றுவிட்டார்! என்று கூறப்பட்டது. உடனே உமர் (ரலி) அவர்கள் அபூமூசா (ரலி) அவர்களை அழைத்து வரச் செய்தார்கள். (ஏன் திரும்பிச் சென்றுவிட்டீர் என்று உமர் (ரலி) அவர்கள் கேட்டபோது) அபூமூசா (ரலி) அவர்கள், இவ்வாறே நாங்கள் கட்டளையிடப்பட்டிருந்தோம்! எனக் கூறினார்கள். உமர் (ரலி) அவர்கள், இதற்குரிய சான்றை நீர் என்னிடம் கொண்டுவாரும்! எனக் கேட்டார்கள். உடனே அபூமூசா (ரலி) அவர்கள் அன்ஸாரிகளின் அவைக்குச் சென்று அவர்களிடம் கேட்டார்கள். அதற்கவர்கள், நம்மில் இளையவரான அபூசயீத் அல்குத்ரீயைத் தவிர வேறு யாரும் இந்த விஷயத்தில் உமக்கு சாட்சியம் சொல்ல மாட்டார்கள்! என்றனர். அபூமூசா (ரலி) அவர்கள் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களை உமர் (ரலி) அவர்களிடம் அழைத்துச் சென்றார்கள். (அபூசயீத் (ரலி) அபூமூசா (ரலி) அவர்கள் கூறியதை உறுதிப்படுத்தியதும்) உமர் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களின் இந்தக் கட்டளை எனக்குத் தெரியாமல் போய்விட்டதா நபி (ஸல்) அவர்களது காலத்தில் (வெளியே சென்று) கடைவீதிகளில் நான் வியாபாரம் செய்துகொண்டிருந்தது என் கவனத்தை திசைதிருப்பிவிட்டது போலும்! என்று கூறினார்கள்.(அறிவிப்பவர்: உபைத் பின் உமைர் (ரஹ்), நூல்: ஸஹீஹுல் புஹாரி 2062,6245) 
அனுமதி கோருதல் மூன்று தடவை என்கின்ற சட்டம் மனிதன் என்ற ரீதியில் கண்ணியமிகு நபித்தோழர் உமர் (ரலி) அவர்களுக்கு தெரியாதிருந்திருக்கின்றது. மேலும், ‘(வெளியே சென்று) கடைவீதிகளில் நான் வியாபாரம் செய்துகொண்டிருந்தது என் கவனத்தை திசைதிருப்பிவிட்டது போலும்!’ என்று அவர்களே தெளிவுபடுத்துகின்றார்கள்.

அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் மரணம் 

(நபி (ஸல்) அவர்களின் உடலைப் பார்த்துவிட்டு) அபூபக்ர் (ரழி) அவர்கள் வெளியில் வந்தார்கள். அப்போது உமர் (ரழி) அவர்கள் மக்களிடம் (கோபமாகப்) பேசிக்கொண்டிருந்ததைக் கண்டதும் உமரை உட்காருமாறு கூறினார்கள். உமர் (ரழி) அவர்கள் உட்கார மறுத்ததும் மீண்டும் உட்காருமாறு கூறினார்கள். உமர் (ரழி) மீண்டும் மறுக்கவே அபூபக்ர் (ரலி) அவர்கள் இறைவனைப் போற்றிப் புகழ்ந்து உரை நிகழ்த்தினார்கள். உடனே மக்கள் உமர் (ரழி) பக்கமிருந்து அபூபக்ர் (ரழி) பக்கம் திரும்பிவிட்டனர். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள், உங்களில் யார் முஹம்மத் (ஸல்) அவர்களை வணங்கிக்கொண்டிருந்தார்களோ அவர்கள் அறிந்துகொள்ளட்டும்! நிச்சயமாக, முஹம்மத் இறந்து விட்டார்கள். யார் அழ்ழாஹ்வை வணங்கிக்கொண்டிருக்கிறார்களோ அவர்கள் அறிந்துகொள்ளட்டும்! நிச்சயமாக, அழ்ழாஹ் என்றென்றும் உயிரோடிருப்பவன், மரணிக்கவே மாட்டான். மேலும், அழ்ழாஹ் கூறுகிறான்: முஹம்மத், தூதர் தவிர வேறு இல்லை. அவருக்கு முன் தூதர்கள் சென்று விட்டனர்.அவர் இறந்து விட்டால் அல்லது கொல்லப்பட்டு விட்டால் வந்த வழியில் திரும்பி விடுவீர்களா? வந்த வழியே திரும்புவோர் அழ்ழாஹ்வுக்கு எந்தக் கேடும் செய்யவே முடியாது. நன்றியுடன் நடப்போருக்கு அழ்ழாஹ் கூலி வழங்குவான்.(அல்குர்ஆன்-3:144) என்றார்கள். அழ்ழாஹ்வின் மீதாணையாக! அபூபக்ர் (ரலி) அவர்கள் இவ்வசனத்தை அங்கு ஓதிக்காட்டும் வரை அழ்ழாஹ் இவ்வசனத்தை அருளியிருந்ததையே மக்கள் அறிந்திருக்கவில்லை என்பதைப் போலவும் அபூபக்ர் (ரலி) அவர்கள் மூலமாகத்தான் இதையவர்கள் அறிந்துகொண்டதைப் போலவும் அஙகிருந்த ஒவ்வொருவரும் இதனை ஓதிக்கொண்டிருந்தனர். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-1242,,3670)

இது போன்று மனிதர்கள் என்கின்ற அடிப்படையில் மிகப்பெரும் நபித்தோழர்களுக்கு கூட பல்வேறு செய்திகள் கிடைக்காதிருந்திருக்கின்றன என்பதை நபிமொழிக் கிரந்தங்களில் காணக்கிடைக்கின்றன. மேலும், அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கட்டளையிடுகின்றார்கள்.

மக்களே! நான் உங்களிடம் இரண்டு விஷயங்களை விட்டுச் செல்கின்றேன். அதைப் பற்றிப் பிடிக்கும் காலமெல்லாம் ஒரு போதும் வழி தவற மாட்டீர்கள். 1.அழ்ழாஹ்வின் வேதம் 2. அவனது தூதர் (ஸல்) அவர்களது வழி முறை என்று அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறுதி ஹஜ்ஜில் ஆற்றிய பேருரையில் கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரழி),   நூல்:ஹாகிம் 318)

இப்போது பிறை தொடர்பான அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் உயரிய வழிகாட்டலை நோக்குகையில் ‘இரு சாட்சிகள் (பிறை கண்டதாக) சாட்சி சொன்னால் நோன்பு வையுங்கள்.நோன்பை விடுங்கள்.’  என்று கூறிய அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தூர, பிரதேச எல்லைகளை பொருட்படுத்தாது பிறைத் தகவலை ஏற்று அமுல்படுத்தியுள்ளயார்கள்.

‘மேக மூட்டம் காரணமாக ஷவ்வால் பிறை எங்களுக்குத் தென்படவில்லை. எனவே, நோன்பு நோற்றவர்களாக நாங்கள் காலைப் பொழுதை அடைந்தோம். பகலின் கடைசி நேரத்தில் ஒரு வாகனக் கூட்டத்தினர் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து நேற்று நாங்கள் பிறை பார்த்தோம் என்று சாட்சி கூறினார்கள். அப்போது அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவர்களது நோன்பை விட்டுவிடுமாறும் விடிந்ததும் அவர்களது பெருநாள் திடலுக்குச் செல்லுமாறும் அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள். (அறிவிப்பவர்: அபூ உமைர், நூல்: அபூதாவூத்-1159, நஸயீ-1557, பைஹகீ-7987, தாரகுத்னி-14, அஹ்மத்-20579)

ரமழானை அடைவது…


‘இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் தான் அருளப்பட்டது. (அது) மனிதர்களுக்கு நேர் வழி காட்டும். நேர் வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும். உங்களில் யார் அம்மாதத்தை   அடைகிறாரோ அவர் அதில் நோன்பு நோற்கட்டும். நோயாளியாகவோ பயணத்திலோ இருப்பவர் வேறு நாட்களில் கணக்கிட்டுக் கொள்ளலாம்.’ (அல்குர்ஆன் 02:185)

விமர்சனம்: உங்களில் யார் அம்மாதத்தை அடைகிறாரோ என்றால் உங்களில் அம்மாதத்தை அடையாதவர்களும் இருப்பார்கள் என்றுதான் பொருள் கொள்ள வேண்டும்.

விளக்கம்: மேற்படி அருள்மறை வசனத்தில் ‘ ஃபமன் ஷஹித’  ‘யார் அம்மாதத்தை அடைகிறாரோ’ என்று  இறைவன் கூறுவதனால் ரமழான் மாதத்தை அடையாதோரும் இருப்பார்கள் என வாதிடுகின்றனர். இதனை இலகுவாக ஒரு உதாரணத்தின் மூலம் விளங்கிக் கொள்ளலாம்.

உதாரணமாக, கட்டார் நாட்டில் மாலை 6.30 மணிக்கு தலைப்பிறை தென்படுமாயின், தலைப்பிறையை கண்ட கட்டார் முதலில் ரமழானை அடைகின்றது. தகவல் கிடைக்காத யாரும் உலகில் அப்போது ரமழானை அடையவில்லை. தகவல் கிடைக்கும் போது உலகில் யாரெல்லாம் ஷஃபானை 29 ஆக பூர்த்தி செய்துள்ளார்களோ அவர்கள் இப்போது ரமழானை  அடைவார்கள்.

கட்டாரில் மாலை 6.30 மணிக்கு தலைப்பிறை தென்படுகையில், இலங்கையர்களாகிய நாம் இரவு 9.00 மணியில் இருப்போம். இப்போது கட்டாரில் இருந்து  இரண்டு நீதமான, நம்பகமான முஸ்லிம்கள் பிறை கண்டதாக சாட்சியமளித்தால் நாம் ரமழானை அடைவோம். அதாவது: முதலில் கட்டார் மாதத்தை அடைகின்றது. தகவல் கிடைத்தன் பிற்பாடு நாம் மாதத்தை அடைகின்றோம்.

மேலும், பிறை கண்டு மாதத்தை அடைந்தவர்கள் உடனடியாக நோன்பை ஆரம்பிப்பதில்லை. மாலை 6.30 மணிக்கு பிறை தென்பட்டாலும் கிட்டத்தட்ட சுமார் 10 மணிநேரத்தின் பின்பே நோன்பை ஆரம்பிக்கின்றோம். அவ்வாறாயின் பிறை கண்ட நேரத்திற்கும் ஸஹரிற்கும் இடைப்பட்ட நீண்ட நேரத்தின் அர்த்தம் என்ன?

பிறைத் தகவலை ஏனையோரும் ஏற்று மாதத்தை ஆரம்பிப்பதற்காகவே இத்தகைய ஏற்பாட்டை இறைவன் செய்துள்ளான். என்பதனைப் புரிந்து கொள்ளலாம்.

சர்வதேசப் பிறை நடைமுறைச் சாத்தியமற்றதா?


விமர்சனம்:
சவூதியில் மாலை 7.00 மணியாக இருக்கும் போது அங்காரா (அமெரிக்கா) பிரதேசத்தார் காலை 7.00 மணியை அடைந்திருப்பார்கள். அதாவது, இவர்கள் ரமழானின் முதல் நாள் பகலை அடைந்து விட்டனர். இவர்கள் என்ன செய்வது? எனவே, சர்வதேசப் பிறை நடைமுறைச் சாத்தியமற்றதாகி விடுகின்றதே என ஒரு வாதத்தினை முன் வைக்கின்றனர். 
 
விளக்கம்: இப்பூமியின் சுழற்சியின் அடிப்படையில் இந்த நேர வித்தியாசம் உலகம் முழுவதும் இரவு 12 மணி நேரம், பகல் 12 மணி நேரம் ஆக மொத்தத்தில் 24 மணி நேரத்திற்கு மேல் அதாவது: ஒரு நாளிற்கு மேல் செல்லாது. எனவே, மாற்றுக் கருத்துள்ளவர்களின் வாதத்தின் அடிப்படையில் மிக கூடிய நேரமான 12 மணி நேரத்திற்கு பிறைத் தகவலை ஏற்று நடைமுறைப்படுத்துவதற்கு வஹியின் ஒளியில் தீர்வைக் கண்டுவிட்டால் 12 மணி நேரத்திற்கு குறைந்த நேரத்தில் தகவலை ஏற்று செயற்படுத்துவது மிக இலகுவான, நடைமுறைச் சாத்தியமான விடயமாகிவிடும்.

இதற்கும் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பொன்மொழியில் எமக்கு மிக அழகிய வழிகாட்டல் கிடைக்கின்றது. ரமழான் நோன்பு கடமையான நோன்பாக பிரகடனப்படுத்தப்படுவதற்கு முன்னர், ஆரம்பத்தில் ஆஷுரா நோன்பானது கடமையான நோன்பாகக் காணப்பட்டது.  ரமழான் நோன்பு கடமையாக்கப்பட்ட பின்னர் ஆஷுரா நோன்பை விரும்பியவர் நோற்கவும், விரும்பியவர் நோற்காதிருக்கவும் செய்யலாம் என்கின்ற இறைகட்டளை விதிக்கப்படுகின்றது.

‘ரமழான் நோன்பு கடமையாக்கப்படுவதற்கு முன்பு (ஆஷுரா நாள்) அன்று நோன்பு நோற்குமாறு அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டு வந்தார்கள். ரழமான் நோன்பு கடமையாக்கப்பட்டதும் நாடியவர் ஆஷுரா நாளன்று நோன்பு நோற்றனர். நாடியவர் (அதை) விட்டு விட்டனர்.’ (அறிவிப்பவர்: ஆயிஷா (ரழி), நூல்:ஸஹீஹ் முஸ்லிம்-2070)

‘அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனா வந்த போது, யூதர்கள் முஹர்ரம் பத்தாவது நாளில் (ஆஷுரா) நோன்பு நோற்றிருப்பதைக் கண்டார்கள். ‘நீங்கள் நோன்பு நோற்றிருக்கும் இது என்ன நாள்?’ என்று கேட்டார்கள். அதற்கு யூதர்கள், ‘இது ஒரு மகத்தான நாள். இந்த நாளில்தான் மூஸாவையும் அவருடைய சமுதாயத்தாரையும் இறைவன் காப்பாற்றி, ஃபிர்அவ்னையும் அவனுடைய சமுதாயத்தாரையும் (செங்கடலில்) மூழ்கடித்தான். எனவே, மூஸா(அலை) அவர்கள் (இறைவனுக்கு) நன்றி தெரிவிக்கும் முகமாக (இந்நாளில்) நோன்பு நோற்றார்கள். ஆகவே, நாங்களும் இந்நாளில் நோன்பு நோற்கிறோம்.’ என்று கூறினர். அப்போது அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘உங்களை விட நாங்களே மூஸா (அலை) அவர்களுக்கு மிகவும் உரியவர்களும் நெருக்கமானவர்களும் ஆவோம்.’ என்று கூறினார்கள். பின்னர், அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அந்நாளில்) தாமும் நோன்பு நோற்று, நோன்பு நோற்குமாறு (மக்களுக்குக்) கட்டளையுமிட்டார்கள்.’ (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: ஸஹீஹ் முஸ்லிம்-2083)

‘அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆஷுரா நாளன்று ‘அஸ்லம்’  குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதரை அனுப்பி, ‘(இன்று) நோன்பு நோற்காமலிருப்பவர், நோன்பு நோற்கட்டும். சாப்பிட்டு விட்டவர், இரவு வரை தமது நோன்பை நிறைவு செய்யட்டும்’ என்று மக்களிடையே அறிவிக்குமாறு உத்தரவிட்டார்கள்.’ (அறிவிப்பவர்: ஸலமா பின்த் அல்அக்வஉ (ரலி), நூல்:ஸஹீஹ் முஸ்லிம்-2090)

‘அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆஷுரா (முஹர்ரம் பத்தாவது) நாளன்று காலையில் மதீனா புறநகரிலுள்ள அன்சாரிகளின் கிராமங்களுக்கு ஆளனுப்பி, ‘(இன்று) காலையில் நோன்பாளியாக இருப்பவர், தமது நோன்பைத் தொடரட்டும். நோன்பு நோற்காமல் காலைப் பொழுதை அடைந்தவர் இன்றைய தினத்தின் எஞ்சிய பொழுதை (நோன்பிருந்து) நிறைவு செய்யட்டும்’ என்று அறிவிக்கச் செய்தார்கள்.   நாங்கள் அதன் பின்னர் அந்நாளில் நோன்பு நோற்கலானோம். எங்கள் சிறுவர்களையும்- அழ்ழாஹ் நாடினால்- நோன்பு நோற்கச் செய்வோம். நாங்கள் பள்ளிவாசலுக்குச் செல்லும் போது, கம்பளியிலான விளையாட்டுப் பொருட்களை அவர்களுக்காகச் செய்து, அவர்களில் ஒருவன்  (பசியால்) உணவு கேட்டு அழும்போது  நோன்பு துறக்கும் வரை  (அவன் பசியை மறந்திருப்பதற்காக) அவனிடம் அந்த விiளாட்டுப் பொருளைக் கொடுப்போம்.’ (அறிவிப்பவர்: ருவய்யிஉ பின்த் முஅவ்வித் பின் அஃப்ரா (ரழி), நூல்:ஸஹீஹ் முஸ்லிம்-2091)

மேலுள்ள நபிமொழிகளிலிருந்து ரமழான் நோன்பு கடமையாக்கப்படுவதற்கு முன்னர் ஆஷுரா நோன்பு கடமையான நோன்பாக இருந்தது. ஆஷுரா நோன்பு நோற்குமாறு கட்டளையிடுகையில் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘(இன்று) காலையில் நோன்பாளியாக இருப்பவர், தமது நோன்பைத் தொடரட்டும். நோன்பு நோற்காமல் காலைப் பொழுதை அடைந்தவர் இன்றைய தினத்தின் எஞ்சிய பொழுதை (நோன்பிருந்து) நிறைவு செய்யட்டும்’ என்று கட்டளையிடுகின்றார்கள்.

பின்னர், ஆஷுரா நோன்பு கடமையான நோன்பு என்பதிலிருந்து, விரும்பியவர் நோன்பு நோற்கலாம். நாடியவர் (அதை) விட்டு விடலாம் என கட்டளை விதிக்கப்பட்டு,  ரமழான் நோன்பு கடமையான நோன்பாக்கப்படுகின்றது.

எனவே, மேலுள்ள நபிமொழிகளிலிருந்து, இருபத்தொன்பதாம் நோன்பை நிறைவு செய்திருப்பவர்களுக்கு, மறுநாள் பகல் வேளையில் தகவல் கிடைக்கும் பட்சத்தில் எஞ்சிய பகுதியை நோன்பாக பூர்த்தி செய்ய வேண்டும் என்பதனை அறிந்து கொள்ளலாம். எனவே, அந்த வகையிலும் சர்வதேசப் பிறைய நடைமுறைச் சாத்தியமானது என்பது தெளிவாகின்றது.
கிராமத் தகவலும் நகரத் தகவலும்
‘
ரமழானின் கடைசி நாள் பற்றி மக்கள் முடிவெடுக்க குழம்பினார்கள். (பிறை தென்படாததால் நோன்பும் நோற்றனர்) இரண்டு கிராமவாசிகள் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து நேற்று இரவு நாங்கள் பிறை பார்த்தோம் என்று சாட்சி கூறினார்கள். உடனே, அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களை நோன்பை விட்டு விடுமாறு கட்டளையிட்டார்கள். பெருநாள் தொழுகைக்காக மறுநாள் தொழுமிடம் வருமாறு கட்டளையிட்டார்கள்.’ (அறிவிப்பவர்: ரிப்யீ பின் கிராஷ், நூல்: அபூதாவூத்-2339, அஹ்மத்-18844)

‘அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரமழான் மாதம் முப்பதாம் நாள் சுபஹ் வேளையை அடைந்தார்கள். அப்போது இரு கிராமவாசிகள் வந்து வணக்கத்திற்குரியவன் அழ்ழாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்று உறுதி கூறி நேற்று நாங்கள் பிறை பார்த்தோம் என்று அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சாட்சி கூறினார்கள். உடனே, அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோன்பை விடுமாறு மக்களுக்குக் கட்டளையிட்டார்கள்.’ அறிவிப்பவர்: ரிப்யீ பின் கிராஷ், நூல்: தாரகுத்னி-04)

விமர்சனம்: குக்கிராமத்து  பிறை என்பதினால்தான் ‘கிராமப்புறத்து அரபிகள்’ என்று நபிமொழியில் வந்துள்ளது. உண்மையில் அல்குர்ஆன், ஆதாரபூர்வமான நபிமொழிகளை ஏற்பவர்கள் என்றால் எப்படி இவ்வார்த்தையை உங்களுக்கு ஏற்றவாறு திருப்புவீர்கள் என வாதிடுகின்றனர்.

விளக்கம்: சர்வதேசப் பிறையை மறுக்கின்ற பலர் இவ்வாதத்தையே முன்வைக்கின்றனர். இவ்வாதத்தை சர்வதேசப் பிறைக்கு எதிராக முன்வைக்க கூடிய சகோதரர்கள் இவ்வாதம் உள்நாட்டுப் பிறைக்கும் எதிரானது என்பதை முதலில் விளங்கிக் கொள்ள வேண்டும். கிராமவாசிகள் வந்து தகவல் சொன்னதால் நகரங்களை அண்டியுள்ள கிராமப்புறங்களையே குறிக்கும் என வாதிடுகின்றனர். குறித்த நபிமொழிகளில்; ‘கிராமங்களிலிருந்து’ வரும் தகவலை மாத்திரம்தான் ஏற்க வேண்டும் என கட்டளையிடப்படவில்லை. மாறாக, ‘வரும் பிறைத் தகவலை ஏற்கலாம்’ என்கின்ற செய்தியே குறிப்பிடப்படுகின்றது. மேலும் செய்தியைக் கொண்டு வந்தவர்களை அடையாளங்காட்டுவதற்காகத்தான் ‘கிராமவாசிகள்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஏனெனில் செய்தியைக் கொண்டு வந்தவர்கள் கிராமவாசிகள்.  மேலும், அபூதாவுத், அஹ்மத், தாரகுத்னி போன்ற நபிமொழிக் கிரந்தங்களில் ‘கிராமப்புறத்தவர்களின் தகவல்’ என்று இடம் பெறும் அறிவிப்புக்களை பின்வரும் நபிமொழி தெளிவாக விளக்குகின்றது.
‘
பிறையைப் பார்த்து நோன்பு வையுஙகள். பிறையைப் பார்த்து நோன்பு விடுங்கள்! உங்களுக்கு மேக மூட்டம் தென்பட்டால் ஷஅபான் மாதத்தை முப்பது நாட்களாக முழுமைப்படுத்துஙகள்! இரு சாட்சிகள் (பிறை கண்டதாக) சாட்சி சொன்னால் நோன்பு வையுங்கள். நோன்பை விடுங்கள்.’ (அறிவிப்பவர்: அப்துர் ரஹ்மான் (ரழி), நூல்: நஸயி-2116)

எனவே, சில நபிமொழிகளில் اعرابي கிராமப்புறத்து மனிதர்கள் என இடம்பெற்றிருப்பது தகவல் கொண்டு வந்தவர்களை அடையாளம் காண்பிப்பதற்காகவே இடம்பெற்றுள்ளது. இதனைய
ما خرج مخرج الغالب فلا مفهوم له என்கின்ற ‘ஆதாரத்திலே கூறப்பட்ட விடயங்களோடு, கூறப்படாத விடயங்கள் இணைக்கப்படமாட்டாது’ என்ற விதியும் உறுதி செய்கின்றது. இதனை அல்குர்ஆன் 4:23 வசனம் மூலம் இலகுவாக விளங்கிக் கொள்ளலாம். மேற்படி வசனத்தில் திருமணம் முடிக்க தடைசெய்யப்பட்டவர்களைப் பற்றிக் கூறிக்கொண்டு வருகின்ற இறைவன்,  ‘நீங்கள் தாம்பத்தியம் நடத்திய மனைவிக்குப் பிறந்த உங்கள் பொறுப்பில் உள்ள மனைவியின் புதல்விகள்’ என்று குறிப்பிடுகின்றான். முன்னர் செய்த திருமணத்தின் மூலம் பெறப்பட்ட பெண் குழந்தைகள் தமது பொறுப்பில் இல்லாவிட்டால் கூட அவர்களை திருமணம் செய்யக்கூடாது என்பதுவே இஸ்லாமிய சட்டமாகும். அதே போன்றுதான் நபிமொழியில் இடம்பெற்றுள்ள ‘கிராமப்புறத்து மனிதர்’ என்கின்ற வாசகத்தையும் புரிந்து கொள்ள வேண்டும். 

மேலும்,  4 சதுரகிலோமீற்றர் அல்லது 5 சதுரகிலோமீற்றர் பரப்பளவினைக் கொண்ட கிராமத்தகவல் 100 சதுர கிலோமீற்றர்  பரப்பளவினைக் கொண்ட நகரத்தவர்களைக் கட்டுப்படுத்தும் என்றால், 100 சதுர கிலோமீற்றர் நகரத்தின் தகவல் ஒரு நாட்டை கட்டுப்படுத்தாதா? ஒரு நாட்டின் தகவல் முழு உலகையும் கட்டுப்படுத்தாதா? ஏனெனில் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘இரு சாட்சிகள் (பிறை கண்டதாக) சாட்சி சொன்னால் நோன்பு வையுங்கள். நோன்பை விடுங்கள்’ (அறிவிப்பவர்: அப்துர் ரஹ்மான் (நபித்தோழர்களிடமிருந்து), நூல்: நஸயி-2116) என்று பொதுவாகத்தானே கட்டளையிட்டுள்ளார்கள்.

மேலும், நாம் ஏலவே, ஒரு முடிவினை எடுத்துக் கொண்டு நபிமொழிகளை அணுகுவதாலேயே இவ்வாறான விபரீதமான நிலைப்பாடுகளை எடுக்க நேரிடுகின்றது. அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஏனைய பொன்மொழிகளையும் இணைத்து நோக்குகையில் கிராமத் தகவல், நகரத் தகவல் என பாகுபடுத்தாது தகவல் எங்கிருந்து வந்தாலும் அதனை உலகளாவிய முஸ்லிம்கள் அனைவரும் ஏற்று அமுல்படுத்த வேண்டும் என்பதனை அறிந்து கொள்ளலாம்.

விமர்சனம்: அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எவ்வித வெளித்தகவலையும் பெற முயற்சிக்கவில்லை என்று கூறக்கூடிய சகோதரர்கள், நீங்கள் தொழிநுட்பத்தில் ஏற்பட்ட வளர்ச்சியின் பின்னர்தானே இவ்வாறு செயற்படுகின்றீர்கள். அவ்வாறெனில், முன்னொரு காலத்தில் சாத்தியமில்லாமல் இருந்த பிறையையா இப்போது நடைமுறைப்படுத்துகின்றீர்கள்? தொலைபேசி மற்றும் ஏனைய தொழிநுட்ப வசதி இல்லாவிட்டால் என்ன செய்வீர்கள் என வாதிடுகின்றனர்.

விளக்கம்: அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) எவ்வித வெளித் தகவல்களையும் பெற முயற்சிக்கவில்லை எனக் கூறினால் பிறை கண்டவர்கள் தகவல் சொல்வது என்பது வீணாகிப் போகின்றது. அவ்வாறு வீணான விடயத்தை அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஏவமாட்டார்கள். வெளிநாட்டுத் தகவலைப் பெற முயற்சிக்க கூடாது எனக்கூறுவோரே உண்மையில் அம்முயற்சியை எடுக்கின்றனர். இரவு 08.30 மணிவரை ‘கௌன்டர்’ திறந்திருக்கும். எம்மாவட்டத்திலாவது பிறை கண்டால் குறித்த இலக்கத்திற்கு தகவல் சொல்லுங்கள் என்று கூறுவோர் நாங்களா? நீங்களா? என்பதை சிந்திக்க வேண்டும். சிறிய நாடுகளுக்கு நிகரான ஒரு மாநிலத்திற்கு ஒரு பிறையைப் பிரகடனம் செய்து கொண்டு பல நூறு கி.மீ.களுக்கு அப்பால் தகவல் பெறுவது மட்டும் எந்தவகையில் நியாயம்? கருத்தில் உறுதியானவர்கள் என்றால்  நீங்கள் அந்தந்த ஊர்களோடு நிறுத்திக் கொண்டிருக்க வேண்டாமா?

விமர்சனம்: ‘உங்களுக்கு மேக மூட்டம் தென்பட்டால் ஷஅபான் மாதத்தை முப்பது நாட்களாக முழுமைப்படுத்துஙகள்!’ என்று அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியுள்ள போது, சர்வதேச ரீதியில் தகவலை அறிய முற்பட்டால் இந்நபிமொழிக்கு வேலையில்லாமல் போய்விடுகின்றது என வாதிடுகின்றனர்.

விளக்கம்: இந்த நபிமொழியைத் தவறாக விளங்கிக் கொண்டதன் விளைவாகவே இவ்வினா எழுகிறது. மேலும், தலைப்பிறை தென்படும்  நேரம்,  தோன்றும் பிரதேசம், வெற்றுக்கண்களுக்கு தென்படும் நேரம் போன்ற விடயங்களை முன்கூட்டியே கணித்து அதன் அடிப்படையில் செயற்படுபவர்கள் இவ்வாதத்தினை முன்வைப்பதானது ஆச்சரியமானது.  அடுத்து, ‘அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பிறையைப் பார்த்து நோன்பு வையுஙகள். பிறையைப் பார்த்து நோன்பு விடுங்கள்! உங்களுக்கு மேக மூட்டம் தென்பட்டால் ஷஅபான் மாதத்தை முப்பது நாட்களாக முழுமைப்படுத்துஙகள்! (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-1909)  என்ற நபிமொழியானது பிறை தென்படும் இடமெல்லாம் மேகமூட்டம் காணப்படும் என்பதைக் குறிப்பிடவில்லை. மாறாக, முதன் முதலில் எங்கு பிறை தென்பட வேண்டுமென இறைவன் நாடியுள்ளானோ அங்கு மேகமூட்டமாய் இருந்தால் மாதத்தை முப்பதாக பூர்த்தி செய்வதையே குறிக்கின்றது.

விமர்சனம்: இன்று சர்வதேச ரீதியாக தகவல் மூலம் நீங்கள் பெற முயற்சிக்கும் பிறையானது நாளையோ, அல்லது மறுதினமோ உங்கள் பகுதிக்கு தெரியுமல்லவா? இவ்வாறிருக்கையில் முந்திக் கொண்டு நீங்கள் பிறைத் தகவலைப் பெறுவது உங்களை நோக்கி நாளை வரும் பேரூந்தை நேற்றோ, இன்றோ துரத்திச் சென்று பிடிப்பது போன்றல்லவா உள்ளது என வாதிடுகின்றனர்.

விளக்கம்: இவ்வாதத்தினை முன்வைக்க கூடிய சகோதரர்கள் முதலில் தமது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்க வேண்டும். (உங்களது வாதத்தின் அடிப்படையில்) இலங்கையின் வடமாகாணத்தில் இன்று தென்படுகின்ற பிறை மறுநாள் கிழக்கு மாகாணத்தில் அல்லது தென்மாகாணத்தில் தோன்றும் வரை காத்திருக்கலாமே. அவ்வாறு தென்படாத பட்சத்தில் மாதத்தை 30 ஆகப் பூர்த்தி செய்து விட்டு நோன்பு நோற்கலாம் அல்லது பெருநாள் கொண்டாடலாம். நூறு அல்லது நூற்றி ஐம்பது கி.மீற்றர்களுக்கு நாம் ஏன் முந்திக் கொண்டு அவசரப்பட வேண்டும். நாளை தோன்றினால் அப்பகுதி மக்கள் நோன்பு நோற்பார்கள்தானே! அல்லது நீங்கள் நபிமொழியை பின்பற்றுவதாக இருந்தால் நாட்டுக்கு நாடு, ஊருக்கு ஊர் என வரையறைகளை விதிக்காது, நபிமொழிகளின் அடிப்படையில் நிரூபணமான  சர்வதேசப் பிறையை பின்பற்றுங்கள். மாறாக, தகவல் பெறுவதற்கு வரையறைகளை விதித்து நீங்களும் குழம்பி மற்றவர்களையும் குழப்பாதீர்கள்.

விமர்சனம்: தலைப்பிறையானது பிறந்து ஒரு சில நிமிடங்கள்தான் பார்வைக்குத் தோன்றும். எனவே, எப்பகுதியில் முதலில் தெரிந்ததோ அவர்களுக்குத்தான் அது பொருந்தும். நள்ளிரவுக்கு அப்பாலும் தகவலை ஏற்க முடியாது என வாதிடுகின்றனர்.

விளக்கம்: உங்கள் வாதத்தின் அடிப்படையில் இரவு 08.30 மணிக்குள் தகவல் வந்தால் மாத்திரம்  ஏற்போம் என வாதிடுவது சரியா? உங்கள் விதிப்படி புத்தளத்தில் பிறைகண்டு அங்குள்ள பொறுப்புவாய்ந்தவர்களுக்கு வந்து சொல்லி, அவரை அழைத்துக் கொண்டு காட்டுவதற்கு அவகாசம் இருக்குமா?  இல்லை அவர் நம்பகமான முஸ்லிம் என்பதை மட்டும் வைத்து அறிவிப்பீர்களா? வயலுக்கு காவலுக்கு சென்ற விவசாயியோ, கடலில் மீன்பிடிக்க சென்ற மீனவர்களோ பிறை கண்டதாக தாமதித்து வந்து சொன்னால் தகவலை ஏற்பீர்களா? அல்லது ‘கௌன்டர் குளோஸ்ட்’ என்று கூறி மறுப்பீர்களா? தகவலை ஏற்க முடியுமென்றால் நாம் ஏற்பது மாத்திரம் எவ்வகையில் தவறாகும்? எனவே, நள்ளிரவல்ல சுபஹுக்கு தகவல் வந்தாலும் அல்லது ஸுபஹுக்கு பின்னர் பிறை தகவல் வந்தாலும் அதனை ஏற்க வேண்டும் என்பதே நபிமொழியாகும்.

விமர்சனம்: 29ம் நோன்பு முற்றுப் பெற்று பிறையைத் தேடியும் கிடைக்காமல் 30ம் நோன்பு நோற்றிருக்க, உலகில் எங்கிருந்தோ வந்த தகவல் அடிப்படையில் காலையில் அல்லது பகல் நேரத்தில் நோன்பை விடச் சொன்னால் நியாயமாகுமா?

விளக்கம்: 29வது நோன்பை நிறைவு செய்த பின்னர் பிறை கண்ட தகவல் கிடைக்குமாக இருந்தால் நோன்பை விட்டுவிட வேண்டும் என்பதுவே நபிமொழியில் நிரூபணமான விடயமாகும். நாம் வெளிநாட்டுத்தகவலின் அடிப்படையில் நோன்பை விடுவதா? இது என்ன புதிய விடயம் என வியக்கின்றனர். அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காலத்தில் நோன்பு நோற்றிருக்கையில் பிறை கண்ட தகவல் கிடைத்ததும் நோன்பை விட்டு விட்டு தொழுகைக்குச் செல்லுமாறு ஏவியுள்ளார்கள். எமது நாட்டிலும் தொலைபேசி மற்றும் தொழிநுட்ப வசதிகள் ஏற்பட முன்னர் இவ்வாறுதான் செயற்பட்டுள்ளார்கள். நோன்பு நோற்பதற்கு முன்னரே, அதாவது: இரவு 8.30 ற்குப் பிறகு வந்த செய்தியை ‘கௌன்டர் குளோஸ்ட்’ என்று கூறி ஏற்காமலிருப்பது பாவமான காரியமாகும். நேரம் சென்று அறிவித்தால் மக்கள் பெருநாள் ஏற்பாடுகள் செய்வது சிரமமாகிவிடும் என்பது காரணமா? அல்லது மனோ இச்சையா? பிடித்த நோன்பை பிறை கண்ட தகவல் கிடைத்தால் விடவேண்டுமென்பதுவே ஸுன்னாவாகும்.

விமர்சனம்: ‘ நோன்பு நீங்கள் நோற்கும் நாளில்தான். நோன்பை விடுவதும் நீங்கள் விடும் நாளில்தான். உழ்ஹிய்யா (ஹஜ்ஜுப் பெருநாள்) நீங்கள் கொடுக்கும் தினத்தில்தான் என அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), நூல்: திர்மிதி) என தெட்டத் தெளிவாக அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) கூறியிருக்க மக்களை விட்டும் தனித்துப் பெருநாள் கொண்டாடுவது ஹதீஸுக்கு முரணானதல்லவா?

விளக்கம்: மேலுள்ள நபிமொழியிலிருந்து சில சகோதரர்கள் தமது மனோ இச்சைக்கு ஏற்றவாறு பல்வேறு வாதங்களை முன்வைக்கின்றனர். ஊருக்கு ஊர் பிறை, நாட்டுக்கொரு பிறை, கணிப்பின் அடிப்படையில் பிறையைத் தீர்மானித்தல் போன்றன அல்குர்ஆன், ஆதாரபூவர்வமான நபிமொழிகளின் அடிப்படையில் தவாறனவைகளாகும். மேலும், தமக்கு ஏற்றவாறு நாடுகளை ஊர்களாக கருதிக் கொள்வதும் தவறானதாகும். ஊருக்கு ஊர் பிறை பார்க்க வேண்டும் என்று கூறிக் கொண்டிருந்தவர்கள் இலங்கை முழுவதற்கும் ஒரே பிறையை அமுல்படுத்த முடியும் என கூறுகின்றனர். இவர்கள் கூறுவது போன்று முழு இலங்கையையும் ஒரு ஊராகக் கருத முடியுமா?

இன்று பிறையை வெற்றுக்கண்ணால் பார்க்காது கணிப்பின் அடிப்படையில் தீர்மானிக்க முடியும் என சிலர் வாதிடுகின்றனர். வேறு சிலரோ வலயத்திற்கு ஒரு பிறை என வாதிடுகின்றனர். எனவே, மக்கள் இவற்றை சரிகண்டால் இதனை அமுல்படுத்த முடியுமா? எனவே, மக்கள் எப்படி நோன்பை, பெருநாளை ஆரம்பிக்க வேண்டுமென அல்குர்ஆனிலும், ஆதாரபூர்வமான நபிமொழிகளிலும் கூறப்பட்டிருக்கின்றதோ அவ்வாறே அவற்றை அமுல்படுத்த வேண்டும். மக்கள் நோன்பு நோற்கும் நாள் என்று கூறி நாம் நினைத்தவாறு வியாக்கியானம் கொடுக்காது,  இஸ்லாம் காட்டிய வழிமுறையிலேயே மக்கள் ஒன்று சேர வேண்டுமென்பதையே மேலுள்ள நபிமொழி விளக்கி நிற்கின்றது.

இரவுத் தொழுகை பதினொரு ரக்அத்கள்தானா?

முஹம்மட் அர்ஷாத் அல் அதரி
arshathalathary@gmail.com
 
‘எவர் நம்பிக்கை கொண்டவராகவும், நன்மையை எதிர்பார்த்தவராகவும் ரமழான் மாதத்தில் நின்று வணங்குகிறாரோ அவரது முந்தைய பாவங்கள் மன்னிக்கப் பட்டுவிடும் என்று அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.’ (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-37)

சத்திய இஸ்லாமிய மார்க்கத்தைப் பொறுத்த வரை ஒரு வணக்கத்தைச் செய்வதாக இருந்தால் அருள்மறைக் குர்ஆனிலோ, அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது ஆதாரபூர்வமான நபிமொழிகளிலோ இடம்பெற்றிருக்க வேண்டும். அவ்வாறு இடம்பெறாத பட்சத்தில் அது ஒரு போதும் அழ்ழாஹ்வால் வணக்கமாக ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என்கின்ற அடிப்படையை மனதில் இருத்தியவர்களாக இரவுத் தொழுகை தொடர்பான ஆய்வுக்குள் நுழைவோம்.

தராவீஹ் என்றால் என்ன?

‘தர்வீஹதுன்’ என்றால் ஓய்வு என்று பொருள்படும். ‘தர்வீஹதுன்’ என்பதன் பன்மையே தராவீஹ் ஆகும். தராவீஹ் தொழுகை என்றால் ‘ஓய்வுத் தொழுகைகள்’ எனப் பொருள்படும். ஆனால், தராவீஹ் என்ற சொற்பிரயோகம் அல்குர்ஆனிலோ, அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது ஆதாரபூர்வமான நபிமொழிகளோ பயன்படுத்தப்படவில்லை.

எனவே, இதிலிருந்து தராவீஹ் என்ற பெயர் பிற்பட்ட காலத்தவர்களாலேயே உருவாக்கப்பட்டது என்பதை அறிந்து கொள்ளலாம். இரவுத் தொழுகை தொடர்பாக அல்குர்ஆன், ஆதாரபூர்வமான நபிமொழிகளில்

1.கியாமுல் லைல் (இரவில் நிற்றல்)
2.ஸலாத்துல் லைல் (இரவுத் தொழுகை)
3. வித்ர் (ஒற்றபை;படை)
4.தஹஜ்ஜத் (விழித்தெழுந்து தொழும் தொழுகை) என ஒரே தொழுகைக்கு பல்வேறு பெயர்கள் பயன்படுத்தப் பட்டுள்ளதனால் இந்த தொழுகைகளை வெவ்வேறு தொழுகைகள் என சில மார்க்க அறிஞர்கள் தவறாக விளங்கியுள்ளனர்.

ரமழானுக்கு என்று விஷேட தொழுகைகள் உண்டா?

நபிமொழிகளை ஆய்வு செய்கையில் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரழமான் அல்லாத காலங்களில் தொழுது வந்த 11 ரக்அத்களையே ரமழானிலும் தொழுதுள்ளார்கள். மாறாக, ரமழானுக்கு என்று எந்த விஷேட தொழுகைகளையும் கற்றுத் தரவில்லை என்பது தெளிவாகின்றது. ஆனால், ஏனைய மாதங்களை விட ரமழானில் தொழுவதற்கு அதிகமதிகம் ஆரவமூட்டியுள்ளார்கள்.

‘எவர் நம்பிக்கை கொண்டவராகவும், நன்மையை எதிர்பார்த்தவராகவும் ரமழான் மாதத்தில் நின்று வணங்குகிறாரோ அவரது முந்தைய பாவங்கள் மன்னிக்கப் பட்டுவிடும் என்று அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.’ (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-37)

தஹஜ்ஜத்தும் தராவீஹும்

சில மார்க்க அறிஞர்கள் தஹஜ்ஜத் தொழுகை வேறு, தராவீஹ் தொழுகை வேறு என வாதிடுகின்றனர். ஆனால், அவர்களின் வாதம் தவறானது என பின்வரும் நபிமொழி தெளிவுபடுத்துகின்றன.

‘ரமழான் மாதத்தின் இருபத்து மூன்றாவது இரவில் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இரவில் மூன்றில் ஒரு பகுதி வரை நாங்கள் தொழுதோம். பின்னர் இருபத்தி ஐந்தாம் இரவில் பாதிவரை தொழுதோம். பின்னர் இருபத்தி ஏழாம் இரவில் சஹர் உணவு தவறிவிடும் என்று நினைக்கும் அளவிற்குத் தொழுதோம்’ (அறிவிப்பவர்: நுஃமான் பின் பஷிர் (ரழி), நூல்: நஸயீ-1606, அஹ்மத்-18402)

அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் 11 ரக்அத்களை, இரவில் வெவ்வேறு நேரங்களில் தொழுதுள்ளார்கள் என்பதை மேலுள்ள நபிமொழி தெளிவுபடுத்துகின்றது.

இரவுத் தொழுகையும், வித்ரும்

சில மார்க்க அறிஞர்கள் வித்ர் தொழுகை வேறு, இரவுத் தொழுகை வேறு என வாதிடுகின்றனர். இந்த வாதமும் தவறானதாகும்.

‘உங்களின் கடைசித் தொழுகையாக வித்ரை ஆக்கிக் கொள்ளுங்கள்.’  (அறிவிப்பவர்: இப்னு உமர் (ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-472,998)

மேலுள்ள நபிமொழியில் வித்ர் என்கின்ற வார்த்தையை மொழிபெயர்க்காமல் விட்டுவிடுவத னாலேயே ‘வித்ர்’ என்பது தனியானதொரு தொழுகை போன்று தோற்றமளிக்கின்றது.

‘வித்ர்’ என்ற வார்த்தைக்கு ‘ஒற்றைப்படை’ என்று பெருளாகும். எனவே, குறித்த நபிமொழியை ‘இரவுத் தொழுகையில் கடைசியை ஒற்றைப்படையாக்கி கொள்ளுங்கள்’ என முழுமையாக மொழிபெயர்க்கும் போது இரண்டும் தனித்தனி தொழுகை என்கின்ற வாதம் தவறானது என்பது தெளிவாகின்றது.

இரவுத் தொழுகையின் ரக்அத்கள் எத்தனை? 

‘நான் (அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் துணைவியார்) ஆயிஷா (ரழி) அவர்களிடம், ரமழான் மாதத்தி(ன் இரவுகளி)ல் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தொழுகை எவ்வாறு இருந்தது, என்று கேட்டேன். அதற்கு அவர்கள், அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரமழானிலும் ரமழான் அல்லாத மற்ற காலங்களிலும் பதினொரு ரக்அத்களைவிட அதிகமாகத் தொழமாட்டார்கள். (முதலில்) நான்கு ரக்அத்கள் தொழுவார்கள். அதன் அழகையும் நீளத்தையும் பற்றி நீ கேட்காதே! பிறகு நான்கு ரக்அத்கள் தொழுவார்கள். அதன் அழகையும் நீளத்தையும் பற்றி நீ கேட்காதே! பின்னர் மூன்று ரக்அத்கள் தொழுவார்கள், என்று விடையளித்தார்கள்.’ (அறிவிப்பவர்: அபூசலமா பின் அப்திர்ரஹ்மான் (ரஹ்), நூல்: ஸஹீஹுல் புஹாரி-1147,2013,3569)

மேலுள்ள நபிமொழியை நாம் நடுநிலையோடு ஆய்வுக்குட்படுத்துகையில் நமக்கு ஒரு விடயம் நன்கு தெளிவாகின்றது. அன்னை ஆயிஷா (ரழி) அவர்களிடம் ‘ரமழான் மாதத்தில் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தொழுகை எவ்வாறு இருந்தது?’ என்றே கேட்கப்படுகின்றது.

ஆனால், அன்னையவர்கள் ‘ரமழானிலும் ரமழான் அல்லாத மற்ற காலங்களிலும் பதினொரு ரக்அத்களைவிட அதிகமாகத் தொழமாட்டார்கள்.’ என்று  மிக அழுத்தமாக ரமழான் அல்லாத காலங்களையும் குறிப்பிட்டு பதிலளிக்கின் றார்கள். மேலுள்ள நபிமொழியில் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரமழான் கால இரவுத் தொழுகையின் ரக்அத்களை அதிகப்படுத்தாது, வழமையாக இரவுத்தொழுகை எத்தனை ரக்அத்கள் தொழுது வந்தார்களோ அதே பதினொரு ரக்அத்களையே ரமழானிலும் தொழுது வந்தார்கள் என அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் தெளிவுபடுத்துகின்றார்கள்.

தறாவீஹ் தொழுகை இருபது ரக்அத்துகள் என்று வாதிடக்கூடியவர்கள் எடுத்து வைக்கின்ற தவறான வாதங்களும் தக்க பதில்களும்

தவறான வாதம்: ‘உமர் (ரழி) அவர்களது காலத்தில் நாங்கள் இருபது ரக்அத்துக்கள் தொழுது வந்தோம்.’ (அறிவிப்பவர்:ஸாயிப் பின் யஸீத், நூல்: பைஹகீ-833)

தக்க பதில்:
1.குறித்த செய்தியில் நபித்தோழர் உமர் (ரழி) அவர்கள் சம்பந்தப்படவில்லை. மாறாக, உமர் (ரழி) அவர்கள் காலத்தில் நடந்ததாகவே குறித்த செய்தி குறிப்பிடுகின்றது.

2.குறித்த செய்தியில் ‘அம்ரு பின் அப்துழ்ழாஹ்’ எனும் இயற்பெயருடைய ‘அபூஉஸ்மான் அல்பஸரி’ எனும் ‘யாரென்று அறியப்படாதவர்’ இடம்பெறுவதால் இச்செய்தி ஆதாரபூர்மற்றதாகும். மேலும் ‘ஸாயிப்  பின் யஸீத்’ அவர்களே நபித்தோழர் உமர் (ரழி) அவர்கள் 11 ரக்அத்துகள் தொழுவிக்குமாறு கட்டளையிட்டார்கள்  என்று அறிவிக்கக் கூடிய செய்தி ஆதாரபூர்வமாக இடம்பெற்றுள்ளது. ‘மக்களுக்கு பதினொரு ரக்அத்கள் தொழுவிக்குமாறு உபை பின் கஅப், தமீமுத்தாரி  ஆகிய இருவருக்கும் உமர் (ரழி) அவர்கள் கட்ளையிட்டார்கள்.’ (அறிவிப்பவர்: ஸாயிப்  பின் யஸீத், நூல்: முஅத்தா-379)

தவறான வாதம்: ‘உமர் (ரழி) அவர்கள் காலத்தில் ரமழான் மாதத்தில் மக்கள் இருபத்து மூன்று ரக்அத்கள் தொழுது வந்தனர்’ (அறிவிப்பவர்: யஸீத் பின் ரூமான், நூல்: பைஹகீ-4802, முஅத்தா-380)

தக்க பதில்: குறித்த செய்தியை அறிவிக்க கூடிய ‘யஸீத் பின் ரூமான்’ என்பவர் உமர் (ரழி) அவர்களது காலத்தில் பிறந்தவர் கிடையாது. எனவே, இச் செய்தி ஆதாரபூர்வமற்றது.

தவறான வாதம்:
‘அழ்ழாஹ்வின் துதர் (ஸல்) அவர்கள் ரமழான் காலத்தில் ஜமாஅத்தாக இல்லாது இருபது ரக்அத்களும் வித்ரும் தொழுதார்கள்.’ (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரழி), நூற்கள்: பைஹகீ- அஸ்ஸுனனுல் குப்ரா-4799, தப்ரானி-அல்முஃஜமுல் கபீர்-10ஃ86, தப்ரானி-அல்முஃஜமுல் அவ்ஸத்-2ஃ309, 12ஃ176, முஸன்னப் இப்னு அபீஷைபா-2ஃ164, முஸ்னத் அப்து பின் ஹமீத்-1ஃ218)

தக்க பதில்: குறித்த செய்தி ஆதாரபூர்வமற்றது. மேற்குறித்த செய்தியை பதிவு செய்துள்ள இமாம் பைஹகீ (ரஹ்) அவர்களே, இச்செய்தியில் இடம்பெறும் அபூஷைபா எனப்படும் இப்றாஹிம் பின் உஸ்மான் என்பவர் இச்செய்தியை தனித்து அறிவிக்கின்றார். இவர் பலவீனமாவர் என்று குறிப்பிடுகின்றார்கள்.

மேலும், குறித்த செய்தியில் நபித்தோழர் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களுக்கு அடுத்து இடம்பெறக்கூடிய  அறிவிப்பாளர் மிக்ஸம் என்பவராவார். மிக்ஸம் அவர்களுக்கு அடுத்து இடம்பெறும் அறிவிப்பாளர் ஹகம் என்பராவார். ஹகம் அவர்களுக்கு அடுத்து இடம்பெறும் அறிவிப்பாளர் அபூஷைபா எனப்படும் உஸ்மானின் மகன் இப்றாஹீம் என்பவராவார். இவரைப்பற்றி அறிஞர்கள் செய்த விமர்சனத்தைப் பற்றி, ஷாபி மத்ஹபின் மிகப்பிரபல்ய மான இமாமான அல்ஹாபிழ் இப்னு ஹஜர் அஸ்கலானி (ரஹ்) அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்கள்.

‘இமாம் அஹ்மத் பின் ஹன்பல், யஹ்யா பின் மயீன், அபூதாவுத் போன்றோர் இவர் பலவீனமானவர் என்று கூறியுள்ளனர். இவர் நம்பகமானவர் கிடையாது எனவும் இமாம் யஹ்யா பின் மயீன் கூறியுள்ளார். இவரைப் பற்றி யாரும் பேசுவது கிடையாது என்று இமாம் புஹாரி கூறியுள்ளார். இவர் நிராகரிக்கப்படும் செய்திகளை அறிவிப்பவர் என்று திர்மிதி கூறுகிறார்.

இவர் பொய்யர் என சந்தேகிக்கப்பட்டுள்ளதால் இவரை விட்டுவிட வேண்டுமென நஸாயி, தவ்லாபி போன்றோர் கூறுகின்றனர். இவர் பலவீனமானவர். யாரும் இவர் குறித்து பேசுவதில்லை. இவரது செய்திகளை விட்டுவிட்டனர் என அபூஹாத்தம் கூறியுள்ளார். இவர் மதிக்கத்தக்கவரல்ல என ஜவ்ஸஜானி கூறியுள்ளார்.

இவரது செய்திகளை பதிவு செய்யக் கூடாதெனவும், இவர் ஹகம் என்பவர் வழியாக நிராகரிக்கத்தக்க பல்வேறு செய்திகளை அறிவித்துள்ளார் எனவும் ஸாலிஹ் ஜஸ்ரா கூறியுள்ளார். இவர் பலவீனமானவர் என அபூஅலீ நைஸாபூரி கூறியுள்ளார். இவர் ஷுஹ்பா அவர்களின் பலவீனமான ஆசிரியர்களில் ஒருவர் என அல்அஹ்வஸ் கூறியுள்ளார். (நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்: பாகம்-01, பக்கம்-125) எனவே, இது ஆதாரபூர்மற்ற செய்தியாகும்.

மக்காவில் உள்ள மஸ்ஜிதுல் ஹரமில் 23 ரக்அத்கள் தொழுவிக்கப்படுகின்றதே?

நாம் மார்க்க விடயத்தில் முன்மாதிரியாக கொள்ள வேண்டியது அருள்மறைக் குர்ஆனையும், அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது ஆதாரபூர்வமான பொன்மொழிகளையும் மாத்திரமே. மாறாக, அழ்ழாஹ்வோ, அவனது தூதர் (ஸல்) அவர்களோ மக்காவை முன்மாதிரியாகக் கொள்ளுமாறு கட்டளையிட்டது கிடையாது. இதனையே அருள்மறைக் குர்ஆன் பின்வருமாறு குறிப்பிடுகின்றது.

‘உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அருளப்பட்டதையே பின்பற்றுங்கள்! அவனை விடுத்து  (மற்றவர்களை) பொறுப்பாளர்களாக்கிப் பின்பற்றாதீர்கள்! குறைவாகவே படிப்பினை பெறுகிறீர்கள்!’(அல்குர்ஆன் 07:03) இதில் ஆச்சரியம் என்னவென்றால், மக்காவில் கப்ரு வணக்கம், மௌலூத், ஸஹீஹுல் புஹாரி மற்றும் ஸஹீஹ் முஸ்லிம் பாராயண நிகழ்வு, கத்தம், பாத்திஹா, தகடு, தாயத்து, தரீக்கா போன்ற வழிகேடுகள் கிடையாது.

மேலும், தப்லீக் ஜமாஅத் பகிரங்கமாக செயற்பட அனுமதி கூட கிடையாது.  இவற்றிலெல்லாம் மக்காவை முன்மாதிரியாகக் கொள்ளாத இவர்கள் இரவுத் தொழுகை விடயத்தில் மாத்திரம் மக்காவை முன்னுதாரணமாகக் காட்டுவது இவர்களின் இரட்டை நிலையை தெளிவாகப் படம்பிடித்துக்காட்டுகின்றது.

இரவுத் தொழுகையும் புதுவழியும்

தராவீஹ் என்ற பெயரில் 20 ரக்அத்களும், வித்ர் என்ற பெயரில் 3 ரக்அத்களும், கியாமுல்லைல் என்ற பெயரில் 11 ரக்அத்களுமாக, 11 ரக்அத்களை மாத்திரம் கொண்ட ஒரே தொழுகையை 34 ரக்அத்களாக தொழுதுவருகின்றனர். இவ்வாறு தொழுவதன் மூலம் இரவுத் தொழுகையை அதிகப்படுத்திய குற்றத்திற்குள்ளாவதுடன்,

‘இரவுத் தொழுகையில் கடைசியை ஒற்றைப்படையாக்கி கொள்ளுங்கள்.’ (அறிவிப்பவர்: இப்னு உமர் (ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-472,998) என்கின்ற நபிமொழியையும் மீறுகின்றனர். அழ்ழாஹ்வும், அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் இரவுத் தொழுகை பதினொரு ரக்அத்கள் எனத் தீர்மானித்ததன் பின்னர் இரவுத் தொழுகையின் ரக்அத்களை அதிகப்படுத்துவது தொடர்பாக பின்வரும் நபிமொழிகள் மிகக் கடுமையாக எச்சரிக்கின்றன.

‘நம்முடைய இந்த (மார்க்க) விவகாரத்தில் அதில் இல்லாததைப் புதிதாக எவன் உண்டாக்குகின்றானோ அவனுடைய அந்தப் புதுமை நிராகரிக்கப்பட்டதாகும் என்று அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.’ (அறிவிப்பவர்: ஆயிஷா(ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-2697)

‘செய்திகளில் மிகவும் உண்மையானது அழ்ழாஹ்வுடைய வேதமாகும். நடைமுறையில் மிகவும் சிறந்தது அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய நடை முறையாகும். காரியங்களில் தீயது (மார்க்கம் என்ற பெயரில்) புதிதாக உருவானவையாகும். புதிதாக உருவாகக் கூடியவைகள் அனைத்தும் பித்அத்கள் ஆகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும். ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில்  கொண்டு சேர்க்கும்.’ (அறிவிப்பவர்: ஜாபிர் (ரழி), நூல்: நஸயீ-1560)

மேலுள்ள நபிமொழிகள் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்ததற்கு மாற்றமாக மார்க்கத்தில் புதுமைகளை ஏற்படுத்துவது எம்மை நரகத்திற்கு அழைத்துச் செல்லும் என எச்சரிக்கின்றது. இன்னும், நாம் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரவுத்தொழுகையின் ரக்அத்கள் தொடர்பாக தெளிவுபடுத்தியதன் பின்னர் நன்மை என்ற பெயரில் அதிகப்படுத்துவது மார்க்கத்தின் சொந்தக்காரனான அழ்ழாஹ்வுக்கே பாடம் கற்பிக்க முனைவதாகும். இதனையே திருமறை இவ்வாறு எடுத்தியம்புகின்றது.

‘உங்கள் மார்க்கத்தை அழ்ழாஹ்வுக்குக் கற்றுக் கொடுக்கிறீர்களா?’ (அல்குர்ஆன் 49:16)

எனவே, அழ்ழாஹ்வும், அவனது திருத்தூதர் (ஸல்) அவர்களும் கற்றுத் தந்த முறையில் இரவுத் தொழுகை உட்பட அனைத்து வணக்கங்களையும் நிறைவேற்றுவதற்கு வல்லோன் அழ்ழாஹ் அருள் புரிவானாக!

மக்களால் மாசுறும் மகிமைமிகு ரஜப் மாதம் – 02

முஹம்மட் அர்ஷாத் அல் அதரி
arshathalathary@gmail.com
‘மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து, சுற்றுப்புறத்தைப் பாக்கியம் மிக்கதாக நாம் ஆக்கிய மஸ்ஜிதுல் அக்ஸா வரை தனது சான்றுகளைக் காட்டுவதற்காக ஓர் இரவில் தனது அடியாரை (முஹம்மதை) அழைத்துச் சென்றவன் தூயவன். அவன் செவியுறுபவன்; பார்ப்பவன்.’ (அல்குர்ஆன் 17:01)
சென்ற இதழின் தொடர்ச்சி…

கடந்த இதழில் ரஜப் மாதத்தின் பெயரால் அரங்கேற்றப்படுகின்ற பல்வேறு அநாச்சாரங்களையும், அதிசய யாத்திரையான விண்ணுலகப் பயணம் அல்இஸ்ரா, மிஃராஜ் என்கின்ற இருநிலைகளைக் கொண்டதெனவும் அவற்றில் அல்இஸ்ரா பற்றியும் நோக்கினோம்.

இவ்விதழில் மிஃராஜ் பற்றி சற்று விரிவாக நோக்குவோம்.

மிஃராஜ்: அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முஸ்லிம்களின் முதல் கிப்லா மஸ்ஜிதுல் அக்ஸாவிலிருந்து விண்ணுலகம் அழைத்துச் செல்லப்பட்டமையே மிஃராஜ் எனப்படுகின்றது. மிஃராஜ் தொடர்பாக பின்வரும் செய்தி மிகத் தெளிவாக எடுத்தியம்புகின்றது.

‘நான் இறையில்லம் கஅபாவில் இரு மனிதர்களுக் கிடையே (பாதி) தூக்கமாகவும் (பாதி) விழிப்பாகவும் இருந்தபோது நுண்ணறிவாலும் இறை நம்பிக்கையாலும் நிரப்பப்பட்ட தங்கத் தட்டு ஒன்று என்னிடம் கொண்டு வரப்பட்டது. எனது நெஞ்சம் காறையெலும்பிலிருந்து அடிவயிறு வரை பிளக்கப்பட்டது. பிறகு ஸம்ஸம் நீரினால் என் வயிறு கழுவப்பட்டது. பிறகு, (என் இதயம்) நுண்ணறிவாலும் இறை நம்பிக்கையாலும் நிரப்பப்பட்டது.

மேலும், கோவேறுக் கழுதையை விடச் சிறியதும் கழுதையை விடப் பெரியதுமான புராக் என்னும் (மின்னல் வேக) வாகனம் ஒன்றும் என்னிடம் கொண்டு வரப்பட்டது. நான் (அதில் ஏறி) ஜிப்ரீல் (அலை) அவர்களுடன் சென்றேன். நாங்கள் முதல் வானத்தை அடைந்தோம். ‘யார் அது?’ என்று கேட்கப்பட்டது. ஜிப்ரீல் (அலை), ‘ஜிப்ரீல்’ என்று பதிலளித்தார். ‘உங்களுடன் (வந்திருப்பவர்) யார்?’ என்று கேட்கப்பட்டது. அவர் ‘முஹம்மது’ என்று பதிலளித்தார். ‘அவரை அழைத்து வரச் சொல்லி ஆள் அனுப்பப்பட்டிருந்ததா?’ என்று கேட்கப்பட்டது. அவர், ‘ஆம்’ என்றார். ‘அவரது வரவு நல்வரவாகட்டும்! அவரது வருகை மிக நல்ல வருகை’ என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது.

பிறகு நான் ஆதம் (அலை) அவர்களிடம் சென்றேன். அவர்களுக்கு சலாம் சொன்னேன். அவர்கள், ‘(என்) மகனும் இறைத் தூதருமான உங்கள் வரவு நல்வரவாகுக!’ என்று சொன்னார்கள். பிறகு இரண்டாவது வானத்திற்கு நாங்கள் சென்றோம். ‘யார்அது?’ என்று வினவப்பட்டது அவர், ‘ஜிப்ரீல்’ என்று பதிலளிக்க, ‘உங்களுடன் இருப்பவர் யார்?’ என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், ‘முஹம்மது’ என்று பதிலளித்தார். ‘(அவரை அழைத்து வரும்படி) அவரிடம் ஆளனுப்பப்பட்டதா?’ என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், ‘ஆம்’ என்று பதிலளித்தார். ‘அவரது வரவு நல்வரவாகட்டும். அவரது வருகை மிக நல்ல வருகை’ என்று (வாழ்த்து)) சொல்லப்பட்டது.

பிறகு நான், ஈஸா (அலை) அவர்களிடமும், யஹ்யா (அலை) அவர்களிடமும் சென்றேன். அவ்விருவரும், ‘சகோதரரும் நபியுமாகிய உங்களின் வரவு நல்வரவாகட்டும்’ என்று சொன்னார்கள். பிறகு, நாங்கள் மூன்றாவது வானத்திற்குச் சென்றோம். ‘யார்அது?’ என்று கேட்கப்பட்டது. ‘ஜிப்ரீல்’ என்று பதிலளிக்கப்பட்டது. ‘உங்களுடன் இருப்பவர் யார்?’ என்று கேட்கப்பட்டது. ‘முஹம்மத்’ என்று பதிலளித்தார். ‘(அவரை அழைத்து வரச் சொல்லி) அவருக்கு ஆளனுப்பப்பட்டதா?’ என்று கேட்கப்பட்டது. ‘ஆம்’ என்று பதிலளித்தார். ‘அவரது வரவு நல்வரவாகட்டும்! அவரது வருகை மிக நல்ல வருகை’ என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது.

பிறகு, நான் யூசுஃப் (அலை) அவர்களிடம் அழைத்துச் செல்லப்பட்டேன். அவர்களுக்கு சலாம் உரைத்தேன். அவர்கள், ‘சகோதரரும் நபியுமான உங்கள் வரவு நல்வரவாகட்டும்’ என்று (வாழ்த்து) சொன்னார்கள். பிறகு, நாங்கள் நான்காவது வானத்திற்குச் சென்றோம். ‘யார் அது?’ என்று கேட்கப்பட்டது. ‘ஜிப்ரீல்’ என்று பதிலளித்தார். ‘உங்களுடன் இருப்பவர் யார்?’ என்று கேட்கப்பட்டது. ‘முஹம்மத்’ என்று பதிலளிக்கப் பட்டது. ‘(அவரை அழைத்து வரச் சொல்லி) அவருக்கு ஆளனுப்பப்பட்டதா?’ என்று கேட்கப்பட்டது. ‘ஆம்’ என்று பதிலளித்தார். ‘அவரது வரவு நல்வரவாகட்டும்! அவரது வருகை மிக நல்ல வருகை’ என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது. நான் இத்ரீஸ் (அலை) அவர்களிடம் சென்றேன். அவர்களுக்கு சலாம் உரைத்தேன். அவர்கள், ‘சகோதரரும் நபியுமான உங்கள் வரவு நல்வரவாகட்டும்’ என்று (வாழ்த்து) சொன்னார்கள்.

பிறகு, நாங்கள் ஐந்தாவது வானத்திற்குச் சென்றோம். ‘யார் அது?’ என்று கேட்கப்பட்டது. ‘ஜிப்ரீல்’ என்று பதிலளிக்கப்பட்டது. ‘உங்களுடன் இருப்பவர் யார்?’ என்று கேட்கப்பட்டது. ‘முஹம்மத்’ என்று பதிலளிக்கப் பட்டது. ‘(அவரை அழைத்து வரச் சொல்லி) அவருக்கு ஆளனுப்பப்பட்டதா?’ என்று கேட்கப்பட்டது. ‘ஆம்’ என்று (ஜிப்ரீல்) பதிலளித்தார். ‘அவரது வரவு நல்வரவாகட்டும்! அவரது வருகை மிக நல்ல வருகை’ என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது. பிறகு நாங்கள் ஹாரூன் (அலை) அவர்களிடம் சென்றோம்.

நான் அவர்களுக்கு சலாம் உரைத்தேன். அவர்கள், ‘சகோதரரும் நபியுமான உங்கள் வரவு நல்வரவாகட்டும்’ என்று (வாழ்த்து) சொன்னார். பிறகு நாங்கள் ஆறாவது வானத்திற்குச் சென்றோம். ‘யார் அது?’ என்று கேட்கப்பட்டது. ‘ஜிப்ரீல்’ என்று பதிலளிக்கப்பட்டது. ‘உங்களுடன் இருப்பவர் யார்?’ என்று கேட்கப்பட்டது. ‘முஹம்மத்’ என்று பதிலளிக்கப் பட்டது. ‘(அவரை அழைத்து வரச் சொல்லி)’ அவருக்கு ஆளனுப்பப்பட்டதா? என்று கேட்கப்பட்டது. ‘ஆம்’ என்று பதிலளிக்கப்பட்டது. ‘அவரது வரவு நல்வரவாகட்டும்! அவரது வருகை மிக நல்ல வருகை’ என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது.

நான் மூசா (அலை) அவர்களிடம் சென்று (அவர்களுக்கு) சலாம் உரைத்தேன். அவர்கள், ‘சகோதரரும் நபியுமான உங்கள் வரவு நல்வரவாகட்டும்’ என்று வாழ்த்தினார்கள். நான் அவர்களைக் கடந்து சென்ற போது அவர்கள் அழுதார்கள். ‘நீங்கள் ஏன் அழுகிறீர்கள்?’ என்று அவர்களிடம் கேட்கப்பட்டது. அவர், ‘இறைவா! என் சமுதாயத்தினரில் சொர்க்கம் புகுபவர்களை விட அதிகமானவர்கள் எனக்குப் பிறகு அனுப்பப்பட்ட இந்த இளைஞரின் சமுதாயத்தினரிலி ருந்து சொர்க்கம் புகுவார்கள்’ என்று பதிலளித்தார்கள். பிறகு நாங்கள் ஏழாவது வானத்திற்குச் சென்றோம். ‘யார் அது?’ என்று வினவப்பட்டது. ‘ஜிப்ரீல்’ என்று பதிலளிக்கப்பட்டது. ‘உங்களுடன் இருப்பவர் யார்?’ என்று கேட்கப்பட்டது. ‘முஹம்மத்’ என்று பதிலளிக்கப் பட்டது. ‘(அவரை அழைத்து வரச்சொல்லி) அவருக்கு ஆளனுப்பப்பட்டதா?’ என்று கேட்கப்பட்டது. ‘அவரது வரவு நல்வரவாகட்டும்! அவரது வருகை மிக நல்ல வருகை’ என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது.

நான் இப்ராஹீம் (அலை) அவர்களிடம் சென்று (அவர்களுக்கு) சலாம் உரைத்தேன். அவர்கள், ‘மகனும் நபியுமான உங்கள் வரவு நல்வரவாகட்டும்’ என்று சொன்னார்கள். பிறகு, ‘அல்பைத்துல் மஃமூர்’ எனும் ‘வளமான இறையில்லம்’ எனக்கு (அருகே கொண்டு வந்து) காட்டப்பட்டது. நான் அதைக் குறித்து ஜிப்ரீலிடம் கேட்டேன். அவர், ‘இதுதான் ‘அல் பைத்துல் மஃமூர்’ ஆகும். இதில் ஒவ்வொரு நாளும் எழுபதாயிரம் வானவர்கள் தொழுகின்றார்கள். அவர்கள் இதிலிருந்து வெளியே சென்றால் திரும்ப இதனிடம் வரமாட்டார்கள். அதுவே அவர்கள் கடைசியாக நுழைந்ததாகி விடும்’ என்று சொன்னார்.

பிறகு, (வான எல்லையிலுள்ள இலந்தை மரமான) ‘சித்ரத்துல் முன்தஹா’ எனக்கு (அருகே கொண்டு வந்து) காட்டப்பட்டது. அதன் பழங்கள் (யமனில் உள்ள) ‘ஹஜ்;ர்’ எனுமிடத்தின் (உற்பத்திப் பொருளான மண்) கூஜாக்கள் போல் இருந்தன. அதன் இலைகள் யானைகளின் காதுகளைப் போல் இருந்தன. அதன் வேர்ப் பகுதியில் நான்கு ஆறுகள் இருந்தன. (ஸல்ஸபீல், கவ்ஸர் ஆகிய) இரண்டு ஆறுகள் உள்ளே இருந்தன. மற்றும் (யூப்ரடீஸ், நைல் ஆகிய) இரண்டு ஆறுகள் வெளியே இருந்தன. நான் ஜிப்ரீல் (அலை) அவர்களிடம் அவற்றைக் குறித்துக் கேட்டேன். அவர்கள், உள்ளேயிருப்பவை இரண்டும் சொர்க்கத்தில் உள்ளவையாகும். வெளியே இருப்பவை இரண்டும் நைல் நதியும், யூப்ரடீஸ் நதியும் ஆகும் என்று பதிலளித்தார்கள்.

பிறகு என் மீது ஐம்பது (நேரத்) தொழுகைகள் கடமையாக்கப்பட்டன. நான் முன்னேறிச் சென்று இறுதியில் மூஸா (அலை) அவர்களை அடைந்தேன். அவர்கள், ‘என்ன செய்தாய்?’ என்று கேட்டார்கள். நான், ‘என் மீது ஐம்பது தொழுகைகள் கடமையாக்கப்பட்டுள்ளன’ என்று பதிலளித்தேன். அதற்கு அவர்கள், ‘எனக்கு மக்களைப் பற்றி உங்களைவிட அதிகமாகத் தெரியும். நான் பனூ இஸ்ராயீல்களுடன் பழகி நன்கு அனுபவப்பட்டுள்ளேன். உங்கள் சமுதாயத்தினர் (இதைத்) தாங்கமாட்டார்கள். ஆகவே, உங்கள் இறைவனிடம் திரும்பிச் சென்று அவனிடம் (தொழுகைகளின் எண்ணிக்கையைக்) குறைத்துத் தரும்படி கேளுங்கள்’ என்று சொன்னார்கள்.
நான் திரும்பச் சென்று இறைவனிடம் (அவ்வாறே) கேட்டேன். அதை அவன் நாற்பதாக ஆக்கினான். பிறகும் முதலில் சொன்னவாறே நடந்தது. மீண்டும் (சென்று நான் கேட்க, இறைவன் அதை) முப்பதாக ஆக்கினான். மீண்டும் அதைப் போலவே நடக்க (அதை) இறைவன் இருபதாக ஆக்கினான்.

நான் மூசா (அலை) அவர்களிடம் சென்ற போது அவர்கள் முன்பு போலவே சொல்ல ( நான் இறைவனிடம் மீண்டும் குறைத்துக் கேட்க) அவன் அதை ஐந்தாக ஆக்கினான். பிறகு நான் மூசா (அலை) அவர்களிடம் சென்றேன். அவர்கள், ‘என்ன செய்தாய்?’ என்று கேட்க, ‘அதை இறைவன் ஐந்தாக ஆக்கிவிட்டான்’ என்றேன். அதற்கு அவர்கள், ‘முன்பு சொன்னதைப் போலவே (இன்னும் குறைத்துக் கேட்கும்படி) சொன்னார்கள். அதற்கு, நான் (இந்த எண்ணிக்கைக்கு) ஒப்புக் கொண்டு விட்டேன் என்று பதிலளித்தேன். அப்போது (அழ்ழாஹ்வின் தரப்பிலிருந்து அசரீரியாக), நான் என் (ஐந்து வேளைத் தொழுகை எனும்) விதியை அமுல்படுத்தி விட்டேன். என் அடியார்களுக்கு (ஐம்பது வேளைகளிலிருந்து ஐந்து வேளையாகக் குறைத்து கடமையை) இலேசாக்கி விட்டேன். ஒரு நற்செயலுக்குப் பத்து நன்மைகளை நான் வழங்குவேன் என்று அறிவிக்கப்பட்டது என அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.’ (நூல்: ஸஹீஹுல் புஹாரி- 3207)

மிஃராஜின் போது அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அழ்ழாஹ்வைப் பார்த்தார்களா? 

அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மிஃராஜின் போது அழ்ழாஹ்வைப் பார்த்ததாகவே இஸ்லாமிய சமுதாய மக்களில் பலர் நம்பியுள்ளனர். இதன் உண்மை நிலை தொடர்பாக அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் பின்வருமாறு தெளிவுபடுத்துகின்றார்கள்.

‘நான் (அன்னை) ஆயிஷா (ரழி) அவர்களிடம் சாய்ந்து அமர்ந்திருந்தேன். அப்போது அவர்கள் (என்னிடம்) அபூ ஆயிஷா, ‘மூன்று விஷயங்கள் உள்ளன. அவற்றில் எந்த ஒன்றை யார் கூறினாலும் அவர் அழ்ழாஹ்வின் மீது மிகப் பெரும் பொய்யை இட்டுக்கட்டியவர் ஆவார்’ என்று கூறினார்கள். நான், ‘அவை எவை? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘யார் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் இறைவனை (நேரில்) பார்த்தார்கள் என்று கூறுகின்றாரோ அவர் அழ்ழாஹ்வின் மீது மிகப்பெரும் பொய்யை இட்டுக்கட்டி விட்டார்’ என்று சொன்னார்கள்.

உடனே சாய்ந்து அமர்ந்து (ஓய்வு எடுத்துக்) கொண்டிருந்த நான் எழுந்து (நேராக) அமர்ந்து, ‘இறை நம்பிக்கையாளர்களின் அன்னையே! நிதானித்துக் கூறுங்கள்! அவசரப்படாதீர்கள். வலிவும் மாண்புமிக்க அழ்ழாஹ், ‘அவரை தெளிவான அடிவானத்தில் பார்த்தார்’ (அல்குர்ஆன் 81:23) என்றும், ‘ஸித்ரதுல் முன்தஹாவுக்கு அருகில் மற்றொரு தடவையும் அவரை இறங்கக் கண்டார்’ (அல்குர்ஆன் 53:13) என்றும் கூறவில்லையா?’ என்று கேட்டேன்.

அதற்கு ஆயிஷா (ரழி) அவர்கள் பின்வருமாறு விளக்கமளித்தார்கள். இந்த சமுதாயத்தாரில் இது தொடர்பாக அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேள்வி கேட்ட முதல் ஆள் நான்தான். அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) ‘அது, (வானவர்) ஜிப்ரீலை (நான் பார்த்ததை)யே குறிக்கிறது. நான் ஜிப்ரீலை, அவர் படைக்கப் பெற்றுள்ள (நிஜத்) தோற்றத்தில் இந்த இரு தடவைகள் தவிர வேறெப்போதும் பார்த்ததில்லை. அவர் வானிலிருந்து (பூமிக்கு) இறங்கிக் கொண்டிருந்ததை நான் பார்த்தேன். அப்போது அவருடைய பிரமாண்டமான தோற்றம் வானம் பூமிக்கிடையேயுள்ள இடைவெளியை அடைத்துக்கொண்டிருந்தது. என்று கூறினார்கள்.

மேலும், ஆயிஷா (ரழி) அவர்கள் (தமது கருத்துக்குச் சான்றாக) அழ்ழாஹ் (பின்வருமாறு) கூறுவதை நீங்கள் செவியுறவில்லையா? என்று கேட்டார்கள். ‘அவனைக் கண்கள் பார்க்காது. அவனோ கண்களைப் பார்க்கிறான். அவன் நுட்பமானவன்;. நன்கறிந்தவன்.’ (அல்குர்ஆன் 6:103)

அல்லது (பின்வருமாறு) அழ்ழாஹ் கூறுவதை நீங்கள் செவியுறவில்லையா? ‘எந்த மனிதருடனும் அழ்ழாஹ் நேருக்கு நேர் பேசுவதில்லை. ஆயினும், வஹீயின் மூலமோ, திரைக்கப்பால் இருந்தோ அல்லது ஒரு தூதரை அனுப்பி தனது விருப்பப்படி தான் நாடியதை அறிவிப்பதன் மூலமோ தவிர (வேறு வழிகளில்) எந்த மனிதரிடமும் அழ்ழாஹ் பேசுவதில்லை. அவன் உயர்ந்தவன்; ஞானமிக்கவன்.’ (அல்குர்ஆன் 42:51) (தொடர்ந்து) ஆயிஷா (ரழி) அவர்கள் மீதமுள்ள இரண்டு விஷயங்களையும் கூறினார்கள்.’ (அறிவிப்பவர்: மஸ்ரூக் பின் அஜ்தஉ (ரஹ்), நூல்: ஸஹீஹ் முஸ்லிம்-287)

‘நான் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், ‘நீங்கள் உங்கள் இறைவனைப் பார்த்தீர்களா?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள் ‘அவன் ஒளியாயிற்றே நான் எப்படி பார்க்க முடியும்?’ என்று கேட்டார்கள்.’ (அறிவிப்பவர்:அபூதர்(ரழி), நூல்:ஸஹீஹ் முஸ்லிம்-291)

மேலுள்ள நபிமொழிகள் மூலம் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எச்சந்தர்ப்பத்திலும் அழ்ழாஹ்வைப் பார்க்கவில்லை. மாறாக, இவ்வுலகில் பார்க்கவும் முடியாது என்பதை தெளிவுபடுத்துகின்றது.

மிஃராஜும் முஸ்லிம்களும்

அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் விண்ணுலகப் பயணமான மிஃராஜ் நிகழ்வு நபிகளாரின் தூதுத்துவத்தை உண்மைப்படுத்துகின்ற ஒரு நிகழ்வாகும். விண்ணுலகப் பயணத்தினை உறுதி செய்யும் வகையில் அருள்மறைக் குர்ஆனிலும், ஆதாரப்பூர்வமான நபிமொழிகளிலும் ஏராளமான சான்றுகள் நிறைந்து காணப்படுகின்றன. ஆனால், விண்ணுலகப் பயணம் மேற்கொண்ட இரவு தொடர்பான வலுவான ஆதாரங்கள் எதுவுமில்லை.

இது தொடர்பில் ஹதீஸ் கலை வல்லுனர்கள் மற்றும் வரலாற்றாசிரியர்கள் மத்தியில் மிகப் பாரியளவில் கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. இவ்வாறாக, கருத்து வேறுபாடுகள் தோன்றுவதற்கு காரணம் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் விண்ணுலகப் பயணம் சென்ற நாளை நோன்பு நோற்றோ, அல்லது விஷேட இபாதத்துக்கள் மூலமோ கண்ணியப்படுத்தவில்லை.

மேலும், நபிகளார் (ஸல்) அவர்கள் விண்ணுலகப் பயணம் மேற்கொண்ட நாளில் செய்வதற்கென விஷேடமான எந்தவொரு வணக்க வழிபாடுகளையும் கற்றுக் கொடுக்கவில்லை. அவ்வாறு கற்றுக் கொடுத் திருப்பார்களாயின் குறித்த அமலை நிறைவேற்றுவதற் காகவேனும், நபித்தோழர்கள் மிஃராஜ் இரவை நினைவில் வைத்திருப்பார்கள். தற்போது போன்று பல்வேறு மாற்று அபிப்பிராயங்கள் தோன்றுவதற்கு வாய்ப்பிருந்திருக்காது.

ஆஷுரா நாளில் நோன்பு நோற்க வேண்டும் என்ற கட்டளையினை நினைவில் வைத்திருந்த உத்தம நபித்தோழர்கள் ஆஷுரா நாள் முஹர்ரம் பத்திலேதான் என்பதனை ஒருமித்து அறிவித்தார்கள். எனவே,      மிஃராஜ் நடந்த இரவுக்கென்று எந்தவொரு சிறப்பும் இல்லை. மாறாக, மிஃராஜ் நடந்ததை நம்புவதுதான் ஒரு இறைவிசுவாசியின் கடமையாகும்.

இறுதியாக, மிஃராஜ் நோன்பு மற்றும் மிஃராஜ் இரவில் விஷேட வணக்கவழிபாடுகளில் ஈடுபடுவோர் பின்வரும் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பொன்மொழிகளை சிந்திக்க கடமைப்பட்டுள்ளார்கள்.

அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘நம்முடைய இந்த (மார்க்க) விவகாரத்தில் அதில் இல்லாததைப் புதிதாக எவன் உண்டாக்குகின்றானோ அவனுடைய அந்தப் புதுமை நிராகரிக்கப்பட்டதாகும்.’ (அறிவிப்பவர்: ஆயிஷா (ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-2697)

‘செய்திகளில் மிகவும் உண்மையானது அழ்ழாஹ்வுடைய வேதமாகும். நடைமுறையில் மிகவும் சிறந்தது அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய நடைமுறையாகும். காரியங்களில்  தீயது (மார்க்கம் என்ற பெயரில்) புதிதாக உருவானவையாகும். புதிதாக உருவாகக் கூடியவைகள் அனைத்தும் பித்அத்கள் ஆகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும். ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் கொண்டு சேர்க்கும்.’ (அறிவிப்பவர்: ஜாபிர் (ரழி), நூல்: நஸயீ-1560)

மேலுள்ள நபிமொழி மிஃராஜ் நோன்பு மற்றும் மிஃராஜின் பெயரால் உருவாக்கப்பட்ட வணக்க வழிபாடுகள் எம்மை நரகத்திற்கு அழைத்துச் செல்லும் என எச்சரிக்கின்றது. எனவே, புதுவழிகளை விடுத்து நபிவழிகளை அருள்மறைக் குர்ஆன், அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது ஆதாரபூர்வமான நபிமொழிகள்; மூலம் அறிந்து பின்பற்றுவதற்கு அருளாளன் அழ்ழாஹ் அருள்புரிவானாக!

மக்களால் மாசுறும் மகிமைமிகு ரஜப் மாதம்- 01

‘வானங்களையும் பூமியையும் படைத்த நாள் முதல் அழ்ழாஹ்வின் பதிவேட்டில் உள்ளபடி மாதங்களின் எண்ணிக்கை அழ்ழாஹ்விடம் பன்னிரண்டாகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை.’ (அல்குர்ஆன் 09:36)

ரஜப் புனிதமிக்க மாதம்

ரஜப் என்பது இஸ்லாமிய வருடக் கணிப்பீட்டின் ஏழாவது மாதம் ஆகும். அம்மாதத்தினைப் பற்றி அருள்மறைக்குர்ஆன் குறிப்பிடும் போது ‘வானங்களையும் பூமியையும் படைத்த நாள் முதல் அழ்ழாஹ்வின் பதிவேட்டில் உள்ளபடி மாதங்களின் எண்ணிக்கை அழ்ழாஹ்விடம் பன்னிரண்டாகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை. இதுவே நேரான வழி. (புனிதமான) அம்மாதங்களில் உங்களுக்கு நீங்கள் தீங்கு இழைத்து விடாதீர்கள்! இணை கற்பிப்போர் ஒன்று திரண்டு உங்களுடன் போரிடுவது போல் நீங்களும் ஒன்று திரண்டு அவர்களுடன் போரிடுங்கள்! அழ்ழாஹ் (தன்னை) அஞ்சுவோருடன் இருக்கிறான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்!’ (அல்குர்ஆன் 09:36)

அருள்மறைக் குர்ஆன் குறிப்பிடுகின்ற புனிதமான அந்த நான்கு மாதங்கள் துல்கஃதா துல்ஹஜ் முஹர்ரம் ரஜப் என அழ்ழாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்கள் நமக்குத் தெளிவுபடுத்துகின்றார்கள்.

‘வானங்களும் பூமியும் படைக்கப்பட்ட நாளில் இருந்த (பழைய) நிலைக்குக் காலம் திரும்பி விட்டது. வருடம் என்பது பன்னிரண்டு மாதங்களாகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை. (அவற்றில்) மூன்று மாதங்கள் தொடர்ந்து வரக் கூடியவை. அவை – துல்கஅதா துல்ஹஜ் மற்றும் முஹர்ரம் ஆகியனவாகும். (மற்றொன்று) ஜுமாதஸ் ஸானிக்கும் ஷஅபான் மாதத்திற்கும் இடையிலுள்ள ரஜப் மாதமாகும் என்று அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.’ (அறிவிப்பவர்: அபூபக்ரா (ரழி)இ நூல்: ஸஹீஹுல் புஹாரி- 3197)

இவ்வாறாக அருள்மறைக் குர்ஆனும் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் சிறப்பித்துக் கூறுகின்ற ரஜப் மாதத்திற்கென ஏதேனும் விஷேட   வணக்க வழிபாடுகள் நமக்கு கற்றுத் தரப்பட்டிருக்கின்றதா? என நோக்குவோமாயின்இ திருமறைக் குர்ஆனிலோ ஆதாரபூர்வமான நபி மொழிகளிலோ ரஜப் மாதத்திற்கென பிரத்தியேக வணக்க வழிபாடுகள் எதுவும் கற்றுத் தரப்படவில்லை என்பதனை அறிந்து கொள்ளலாம்.

ரஜப் மாதமும் அரங்கேற்றப்படும் அநாச்சாரங்களும்

எமது இஸ்லாமிய சமுதாய மக்களால்; ரஜப் மாதத்தின் பெயரால் பல்வேறு அநாச்சாரங்கள் அரங்கேற்றப்படுகின்றன. மேலும் கண்ணியமிகு மார்க்க அறிஞர்களால் ரஜப் மாதத்தின் பெயரால் மிம்பர் மேடைகளிலும் சொற்பொழிவுகளிலும் பல்வேறு ஆதாரபூர்வமற்ற செய்திகள் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பெயரால் கூறப்படுகின்றன. அவ்வாறான ஆதாரபூர்வமற்ற இட்டுக்கட்டப்பட்ட செய்திகள் சிலவற்றை நோக்குவோம்.

‘நிச்சயமாக சுவனத்தில் ஓர் ஆறு உண்டு. அதற்கு ரஜப் என்று சொல்லப்படும். அதன் நீர் பாலை விடக் கடும் வெண்மையானதும்இ தேனைவிட சுவையானது மாகும். எவரொருவர் ரஜப் மாதத்தில் ஒரு நாள் நோன்பு நோற்கின்றாரோ அவருக்கு அழ்ழாஹ் அவ்வாற்றிலிருந்து நீர் புகட்டுவான்.’

இச் செய்தியில் ‘மூஸா மன்ஸுர் பின் யதீத்’ என்கின்ற யாரென்று அறியப்படாத இரண்டு நபர்கள் இடம்பெறுவதால் இது ஆதாரபூர்வமற்ற செய்தியாகும்.

‘ரஜப் மாதம் வந்து விட்டால் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பின்வருமாறு பிரார்த்திப்பார்கள். அழ்ழாஹ்வே ரஜப் மாதத்திலும் ஷஃபான் மாதத்திலும் எங்களுக்கு பரக்கத் செய்வாயாக! மேலும் வெள்ளிக்கிழமை இரவு வெண்மையானதும் அதன் பகல் பசுமையானதும் எனக் கூறுவார்கள்.’

இச் செய்தியில் ‘ஸாயிதா பின் அபிர்ருக்காத்’ என்கின்ற ஹதீஸ்கலை அறிஞர்களால் நிராகரிக்கப்பட்ட ஒரு அறிவிப்பாளர் இடம்பெறுவதால் இது ஆதாரபூர்வமற்ற செய்தியாகும்.

‘ரஜப் மாதம் அழ்ழாஹ்வின் மாதமாகும். ஷஃபான் எனது மாதமாகும். ரமழான் எனது சமூகத்தினரின் மாதமாகும் என அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.’

இச் செய்தியில் இடம்பெறும் ‘அல்கமா’ என்பவர் நபித்தோழர் அபூஸயீத் அல்குத்ரி (ரழி) அவர்களி டமி ருந்து எதனையும் செவியுறவில்லை. மேலும் இச் செய்தியில் இடம்பெறும் ‘ஹிசாயி’ என்பவர் யாரென அறியப்படாதவர். எனவே இது ஆதாரபூர்வமற்ற செய்தியாகும்.

‘ஏனைய மாதங்களோடு ஒப்பிடுகையில் ரஜப் மாதத்தின் சிறப்பு ஏனைய திக்ருகளை விட குர்ஆனுக்கு இருக்கின்ற சிறப்பை போன்றதாகும்.’ 

மேலுள்ள செய்தியில் நபிமொழிகளை இட்டுக்கட்டி கூறுபவர் என இமாம்களுக்கு மத்தியில் பிரபல்யமான ‘ஹிபத்துழ்ழாஹ் இப்னுல் முபாரக் அஸ்ஸக்தி’ என்பவர் இடம்பெறுவதால் இது ஆதாரப்பூர்வமற்ற செய்தியாகும்.

‘நிச்சயமாக அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரமழான் மாதத்திற்குப் பின் ரஜபிலும் ஷஃபானிலும் நோன்பு நோற்பார்கள்.’

இச் செய்தியில் ‘யூசுப் பின் அதிய்யா’ என்கின்ற ஹதீஸ் கலை அறிஞர்களால் நிராகரிக்கப்பட்ட அறிவிப்பாளர் இடம்பெறுவதால் இது ஆதாரபூர்வமற்ற செய்தியாகும்.

‘ரஜப் மாதம் அழ்ழாஹ்வின் மாதமாகும். யார் ரஜப் மாதத்தின் ஒரு தினத்தில் ஈமானோடும்இ  நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கின்றாரோ அவருக்கு மிகப்பெரும் இறைதிருப்தி கிடைப்பது கடமையாகி விடும்.’

மேலுள்ள செய்தியின் அறிவிப்பாளர் வரிசையில் இடம்பெறும் ‘அபூஹாரூன்’ எனும் ‘மத்ரூக்’  ‘கைவிடப்பட்டவர்’ என ஹதீஸ்கலை அறிஞர்களால் ஓரங்கட்டப்பட்ட ஒருவர் இடம்பெறுவதால் இது ஆதாரபூர்வமற்ற செய்தியாகும்.

‘யார் ரஜப் மாதத்தின்  முதலாவது இரவில் மஃரிப் தொழுகையைத் தொழுது பின்னர் 20 ரக்அத்துகளைத் தொழுதுஇ ஒவ்வொரு ரக்அத்திலும் சூறா பாத்திஹாவையும் இஹ்லாஸ் அத்தியாயத்தை ஒரு தடவையும் ஓதி ஒவ்வொரு ரக்அத்திலும் பத்து முறை ஸலவாத்துச் சொன்னால் அவருக்கு கிடைக்கும் வெகுமதிகளை நீங்கள் அறிவீர்களா? என வினவிய அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரையும் அவரது குடும்பத்தினரையும் அவரது பொருளாதாரத்தையும் அவரது குழந்தைகளையும் பாதுகாப்பதோடு கப்ரின் வேதனையை விட்டும் அழ்ழாஹ் அவரைப் பாதுகாக்கின்றான். மேலும் அவர்  எவ்வித வேதனையோ கேள்வி கணக்கோ இன்றி மின்னல் வேகத்தில் ‘ஸிராத்’ எனும் பாலத்தைக் கடந்து செல்வார் எனக் கூறினார்கள்.’

இச் செய்தியின் அறிவிப்பாளர் வரிசையில் இடம்பெறும் அதிகமான அறிவிப்பாளர்கள் யாரென அறியப்படாதவர்கள் என்றும் இது இட்டுக்கட்டப்பட்ட செய்தி என்றும் ஷாபி மத்ஹபின் மிகப்பிரபல்யமான இமாமான அல்ஹாபிழ் இப்னு ஹஜர் அஸ்கலானி (ரஹ்) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள். எனவே இது ஆதாரபூர்வமற்ற செய்தியாகும்.

‘எவரொருவர் ரஜப் மாதத்தின் மூன்று நாட்கள் நோன்பு நோற்கிறாரோ அவருக்கு ஒரு மாதம் நோன்பு நோற்ற நன்மையை அழ்ழாஹ் எழுதி விடுகின்றான். ஒருவர் ஏழு தினங்கள் நோன்பு நோற்றால் அவரை விட்டும் நரகத்தின் ஏழு வாயில்களையும் மூடிவிடுகின்றான்.’

இச்செய்தியின் அறிவிப்பாளர் வரிசையில் இடம்பெறும் ‘அம்ருப்னு அஸ்ஹர்’ பொய்யரென இமாம் ‘யஹ்யா இப்னு மயீன்’ மற்றுமுள்ள ஹதீஸ் கலை அறிஞர்களும் குற்றம் சாட்டியுள்ளதால் இச் செய்தி ஆதாரபூர்வமற்ற செய்தியாகும்.

‘நிச்சயமாக ரஜப் மாதம் மகத்தான மாதமாகும். யார்; அதில் ஒரு நாள் நோன்பு நோற்கிறாரோ அவருக்கு ஆயிரம் வருடங்கள் நோற்பு நோற்ற நன்மையை அழ்ழாஹ் எழுதுகின்றான்.’ 

மேலுள்ள செய்தியின் அறிவிப்பாளர் வரிசையில் இடம்பெறும் ‘இஸ்ஹாக் பின் இப்றாஹிம் அல்குத்தலி’ என்பவர் ஹதீஸ்கலை அறிஞர்களின் ஒருமித்த கருத்துப்படி பலவீனமானவர் ஆகையால் இச் செய்தி ஆதாரபூர்வமற்ற செய்தியாகும்.

‘எவரொருவர் ரஜப் மாதம் நோன்பு நோற்று அதில் நான்கு ரக்அத்துகள் தொழுதால் சுவனத்தில் அவரது தங்குமிடத்தைக் காணும் வரை அல்லது அவருக்கு காண்பிக்கப்படும் வரை மரணிக்கமாட்டார்.’

இச் செய்தியின் அறிவிப்பாளர் வரிசையில் இடம்பெறும் அதிகமான அறிவிப்பாளர்கள் யாரென அறியப்படாதவர்கள் என்றும் இது இட்டுக்கட்டப்பட்ட செய்தி என்றும் ஷாபி மத்ஹபின் மிகப்பிரபல்யமான இமாமான அல்ஹாபிழ் இப்னு ஹஜர் அஸ்கலானி (ரஹ்) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள். மேலும் இச்செய்தியில் இடம்பெறும் உஸ்மான் பின் அதாஃ என்பவர் ஹதீஸ் கலை அறிஞர்களால் கைவிடப்பட்டவர். ஆகையால் இச்செய்தி ஆதாரபூர்வமற்ற செய்தியாகும்.

ரஜப் மாதமும் விஷேட உம்ராக்களும்

ரஜப் மாதம் வந்துவிட்டால் முஸ்லிம்கள் விஷேட உம்ரா பயணம் மேற்கொள்கின்றனர். உம்ரா பயணம் அனுமதிக்கப்பட்ட ஒரு காரியமே. ஆனால் அதனை ரஜப் மாதத்தில் நிறைவேற்றுவது சிறப்புக்குரியது எனக் கருதுவது நபிகளாரின் வழிமுறைக்கு மாற்றமான செயலாகும்.
மேலும் அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்க கூடிய நபிமொழி ரஜப் மாதத்தை தெரிவு செய்து அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விஷேட உம்ராக்கள் எதனையும் நிறைவேற்றவில்லை என்பதனை தெளிவுபடுத்துகின்றது.

‘ ஆயிஷா (ரழி) அவர்களிடம் நான் (நபிகளாரின்; உம்ரா பற்றிக்) கேட்டேன். அதற்கு அவர்கள் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரஜப் மாதத்தில் உம்ரா செய்யவில்லை! என்றார்கள்.’ (அறிவிப்பவர்: உர்வா பின் ஸுபைர் (ரஹ்)இ நூல்: ஸஹீஹுல் புஹாரி-1777)

இஸ்ராவும் மிஃராஜும்

அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மேற்கொண்ட விண்ணுலக யாத்திரையான மிஃராஜ் பயணம் ஓர் அற்புத நிகழ்வாக அமைந்திருக்கின்றது. அதிசய யாத்திரையான மிஃராஜ் பல்வேறு உண்மைகளை உணர்த்துவதோடு பலதரப்பட்ட படிப்பினைகளையும் யதார்த்தங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. மேலும் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது விண்ணுலக யாத்திரை அல்இஸ்ரா மிஃராஜ் என்கின்ற இருநிலைகளைக் கொண்டதாக காணப்பட்டது.

1.அல்இஸ்ரா:

அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அல் மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து பலஸ்தீன் பூமியில் அமைந்துள்ள அல் மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு மேற்கொண்ட பயணமே இஸ்ரா என அழைக்கப் படுகின்றது. இஸ்ரா பற்றி அருள்மறைக் குர்ஆன் குறிப்பிடுகையில் ‘மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து சுற்றுப்புறத்தைப் பாக்கியம் மிக்கதாக நாம் ஆக்கிய மஸ்ஜிதுல் அக்ஸா வரை தனது சான்றுகளைக் காட்டுவதற்காக ஓர் இரவில் தனது அடியாரை (முஹம்மதை) அழைத்துச் சென்றவன் தூயவன். அவன் செவியுறுபவன்; பார்ப்பவன்.’ (அல்குர்ஆன் 17:01)

2.மிஃராஜ்: 

அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முஸ்லிம்களின் முதல் கிப்லா மஸ்ஜிதுல் அக்ஸாவிலிருந்து விண்ணுலகம் அழைத்துச் செல்லப்பட்டமையே மிஃராஜ் எனப்படுகின்றது. மிஃராஜ் பற்றி இன்ஷா அழ்ழாஹ் அடுத்த இதழில் நோக்குவோம்.