முஹம்மட் அர்ஷாத் அல் அதரி
arshathalathary@gmail.com
arshathalathary@gmail.com
‘மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து, சுற்றுப்புறத்தைப் பாக்கியம் மிக்கதாக நாம் ஆக்கிய மஸ்ஜிதுல் அக்ஸா வரை தனது சான்றுகளைக் காட்டுவதற்காக ஓர் இரவில் தனது அடியாரை (முஹம்மதை) அழைத்துச் சென்றவன் தூயவன். அவன் செவியுறுபவன்; பார்ப்பவன்.’ (அல்குர்ஆன் 17:01)
சென்ற இதழின் தொடர்ச்சி…
கடந்த இதழில் ரஜப் மாதத்தின் பெயரால் அரங்கேற்றப்படுகின்ற பல்வேறு அநாச்சாரங்களையும், அதிசய யாத்திரையான விண்ணுலகப் பயணம் அல்இஸ்ரா, மிஃராஜ் என்கின்ற இருநிலைகளைக் கொண்டதெனவும் அவற்றில் அல்இஸ்ரா பற்றியும் நோக்கினோம்.
இவ்விதழில் மிஃராஜ் பற்றி சற்று விரிவாக நோக்குவோம்.
மிஃராஜ்: அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முஸ்லிம்களின் முதல் கிப்லா மஸ்ஜிதுல் அக்ஸாவிலிருந்து விண்ணுலகம் அழைத்துச் செல்லப்பட்டமையே மிஃராஜ் எனப்படுகின்றது. மிஃராஜ் தொடர்பாக பின்வரும் செய்தி மிகத் தெளிவாக எடுத்தியம்புகின்றது.
‘நான் இறையில்லம் கஅபாவில் இரு மனிதர்களுக் கிடையே (பாதி) தூக்கமாகவும் (பாதி) விழிப்பாகவும் இருந்தபோது நுண்ணறிவாலும் இறை நம்பிக்கையாலும் நிரப்பப்பட்ட தங்கத் தட்டு ஒன்று என்னிடம் கொண்டு வரப்பட்டது. எனது நெஞ்சம் காறையெலும்பிலிருந்து அடிவயிறு வரை பிளக்கப்பட்டது. பிறகு ஸம்ஸம் நீரினால் என் வயிறு கழுவப்பட்டது. பிறகு, (என் இதயம்) நுண்ணறிவாலும் இறை நம்பிக்கையாலும் நிரப்பப்பட்டது.
மேலும், கோவேறுக் கழுதையை விடச் சிறியதும் கழுதையை விடப் பெரியதுமான புராக் என்னும் (மின்னல் வேக) வாகனம் ஒன்றும் என்னிடம் கொண்டு வரப்பட்டது. நான் (அதில் ஏறி) ஜிப்ரீல் (அலை) அவர்களுடன் சென்றேன். நாங்கள் முதல் வானத்தை அடைந்தோம். ‘யார் அது?’ என்று கேட்கப்பட்டது. ஜிப்ரீல் (அலை), ‘ஜிப்ரீல்’ என்று பதிலளித்தார். ‘உங்களுடன் (வந்திருப்பவர்) யார்?’ என்று கேட்கப்பட்டது. அவர் ‘முஹம்மது’ என்று பதிலளித்தார். ‘அவரை அழைத்து வரச் சொல்லி ஆள் அனுப்பப்பட்டிருந்ததா?’ என்று கேட்கப்பட்டது. அவர், ‘ஆம்’ என்றார். ‘அவரது வரவு நல்வரவாகட்டும்! அவரது வருகை மிக நல்ல வருகை’ என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது.
பிறகு நான் ஆதம் (அலை) அவர்களிடம் சென்றேன். அவர்களுக்கு சலாம் சொன்னேன். அவர்கள், ‘(என்) மகனும் இறைத் தூதருமான உங்கள் வரவு நல்வரவாகுக!’ என்று சொன்னார்கள். பிறகு இரண்டாவது வானத்திற்கு நாங்கள் சென்றோம். ‘யார்அது?’ என்று வினவப்பட்டது அவர், ‘ஜிப்ரீல்’ என்று பதிலளிக்க, ‘உங்களுடன் இருப்பவர் யார்?’ என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், ‘முஹம்மது’ என்று பதிலளித்தார். ‘(அவரை அழைத்து வரும்படி) அவரிடம் ஆளனுப்பப்பட்டதா?’ என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், ‘ஆம்’ என்று பதிலளித்தார். ‘அவரது வரவு நல்வரவாகட்டும். அவரது வருகை மிக நல்ல வருகை’ என்று (வாழ்த்து)) சொல்லப்பட்டது.
பிறகு நான், ஈஸா (அலை) அவர்களிடமும், யஹ்யா (அலை) அவர்களிடமும் சென்றேன். அவ்விருவரும், ‘சகோதரரும் நபியுமாகிய உங்களின் வரவு நல்வரவாகட்டும்’ என்று சொன்னார்கள். பிறகு, நாங்கள் மூன்றாவது வானத்திற்குச் சென்றோம். ‘யார்அது?’ என்று கேட்கப்பட்டது. ‘ஜிப்ரீல்’ என்று பதிலளிக்கப்பட்டது. ‘உங்களுடன் இருப்பவர் யார்?’ என்று கேட்கப்பட்டது. ‘முஹம்மத்’ என்று பதிலளித்தார். ‘(அவரை அழைத்து வரச் சொல்லி) அவருக்கு ஆளனுப்பப்பட்டதா?’ என்று கேட்கப்பட்டது. ‘ஆம்’ என்று பதிலளித்தார். ‘அவரது வரவு நல்வரவாகட்டும்! அவரது வருகை மிக நல்ல வருகை’ என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது.
பிறகு, நான் யூசுஃப் (அலை) அவர்களிடம் அழைத்துச் செல்லப்பட்டேன். அவர்களுக்கு சலாம் உரைத்தேன். அவர்கள், ‘சகோதரரும் நபியுமான உங்கள் வரவு நல்வரவாகட்டும்’ என்று (வாழ்த்து) சொன்னார்கள். பிறகு, நாங்கள் நான்காவது வானத்திற்குச் சென்றோம். ‘யார் அது?’ என்று கேட்கப்பட்டது. ‘ஜிப்ரீல்’ என்று பதிலளித்தார். ‘உங்களுடன் இருப்பவர் யார்?’ என்று கேட்கப்பட்டது. ‘முஹம்மத்’ என்று பதிலளிக்கப் பட்டது. ‘(அவரை அழைத்து வரச் சொல்லி) அவருக்கு ஆளனுப்பப்பட்டதா?’ என்று கேட்கப்பட்டது. ‘ஆம்’ என்று பதிலளித்தார். ‘அவரது வரவு நல்வரவாகட்டும்! அவரது வருகை மிக நல்ல வருகை’ என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது. நான் இத்ரீஸ் (அலை) அவர்களிடம் சென்றேன். அவர்களுக்கு சலாம் உரைத்தேன். அவர்கள், ‘சகோதரரும் நபியுமான உங்கள் வரவு நல்வரவாகட்டும்’ என்று (வாழ்த்து) சொன்னார்கள்.
பிறகு, நாங்கள் ஐந்தாவது வானத்திற்குச் சென்றோம். ‘யார் அது?’ என்று கேட்கப்பட்டது. ‘ஜிப்ரீல்’ என்று பதிலளிக்கப்பட்டது. ‘உங்களுடன் இருப்பவர் யார்?’ என்று கேட்கப்பட்டது. ‘முஹம்மத்’ என்று பதிலளிக்கப் பட்டது. ‘(அவரை அழைத்து வரச் சொல்லி) அவருக்கு ஆளனுப்பப்பட்டதா?’ என்று கேட்கப்பட்டது. ‘ஆம்’ என்று (ஜிப்ரீல்) பதிலளித்தார். ‘அவரது வரவு நல்வரவாகட்டும்! அவரது வருகை மிக நல்ல வருகை’ என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது. பிறகு நாங்கள் ஹாரூன் (அலை) அவர்களிடம் சென்றோம்.
நான் அவர்களுக்கு சலாம் உரைத்தேன். அவர்கள், ‘சகோதரரும் நபியுமான உங்கள் வரவு நல்வரவாகட்டும்’ என்று (வாழ்த்து) சொன்னார். பிறகு நாங்கள் ஆறாவது வானத்திற்குச் சென்றோம். ‘யார் அது?’ என்று கேட்கப்பட்டது. ‘ஜிப்ரீல்’ என்று பதிலளிக்கப்பட்டது. ‘உங்களுடன் இருப்பவர் யார்?’ என்று கேட்கப்பட்டது. ‘முஹம்மத்’ என்று பதிலளிக்கப் பட்டது. ‘(அவரை அழைத்து வரச் சொல்லி)’ அவருக்கு ஆளனுப்பப்பட்டதா? என்று கேட்கப்பட்டது. ‘ஆம்’ என்று பதிலளிக்கப்பட்டது. ‘அவரது வரவு நல்வரவாகட்டும்! அவரது வருகை மிக நல்ல வருகை’ என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது.
நான் மூசா (அலை) அவர்களிடம் சென்று (அவர்களுக்கு) சலாம் உரைத்தேன். அவர்கள், ‘சகோதரரும் நபியுமான உங்கள் வரவு நல்வரவாகட்டும்’ என்று வாழ்த்தினார்கள். நான் அவர்களைக் கடந்து சென்ற போது அவர்கள் அழுதார்கள். ‘நீங்கள் ஏன் அழுகிறீர்கள்?’ என்று அவர்களிடம் கேட்கப்பட்டது. அவர், ‘இறைவா! என் சமுதாயத்தினரில் சொர்க்கம் புகுபவர்களை விட அதிகமானவர்கள் எனக்குப் பிறகு அனுப்பப்பட்ட இந்த இளைஞரின் சமுதாயத்தினரிலி ருந்து சொர்க்கம் புகுவார்கள்’ என்று பதிலளித்தார்கள். பிறகு நாங்கள் ஏழாவது வானத்திற்குச் சென்றோம். ‘யார் அது?’ என்று வினவப்பட்டது. ‘ஜிப்ரீல்’ என்று பதிலளிக்கப்பட்டது. ‘உங்களுடன் இருப்பவர் யார்?’ என்று கேட்கப்பட்டது. ‘முஹம்மத்’ என்று பதிலளிக்கப் பட்டது. ‘(அவரை அழைத்து வரச்சொல்லி) அவருக்கு ஆளனுப்பப்பட்டதா?’ என்று கேட்கப்பட்டது. ‘அவரது வரவு நல்வரவாகட்டும்! அவரது வருகை மிக நல்ல வருகை’ என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது.
நான் இப்ராஹீம் (அலை) அவர்களிடம் சென்று (அவர்களுக்கு) சலாம் உரைத்தேன். அவர்கள், ‘மகனும் நபியுமான உங்கள் வரவு நல்வரவாகட்டும்’ என்று சொன்னார்கள். பிறகு, ‘அல்பைத்துல் மஃமூர்’ எனும் ‘வளமான இறையில்லம்’ எனக்கு (அருகே கொண்டு வந்து) காட்டப்பட்டது. நான் அதைக் குறித்து ஜிப்ரீலிடம் கேட்டேன். அவர், ‘இதுதான் ‘அல் பைத்துல் மஃமூர்’ ஆகும். இதில் ஒவ்வொரு நாளும் எழுபதாயிரம் வானவர்கள் தொழுகின்றார்கள். அவர்கள் இதிலிருந்து வெளியே சென்றால் திரும்ப இதனிடம் வரமாட்டார்கள். அதுவே அவர்கள் கடைசியாக நுழைந்ததாகி விடும்’ என்று சொன்னார்.
பிறகு, (வான எல்லையிலுள்ள இலந்தை மரமான) ‘சித்ரத்துல் முன்தஹா’ எனக்கு (அருகே கொண்டு வந்து) காட்டப்பட்டது. அதன் பழங்கள் (யமனில் உள்ள) ‘ஹஜ்;ர்’ எனுமிடத்தின் (உற்பத்திப் பொருளான மண்) கூஜாக்கள் போல் இருந்தன. அதன் இலைகள் யானைகளின் காதுகளைப் போல் இருந்தன. அதன் வேர்ப் பகுதியில் நான்கு ஆறுகள் இருந்தன. (ஸல்ஸபீல், கவ்ஸர் ஆகிய) இரண்டு ஆறுகள் உள்ளே இருந்தன. மற்றும் (யூப்ரடீஸ், நைல் ஆகிய) இரண்டு ஆறுகள் வெளியே இருந்தன. நான் ஜிப்ரீல் (அலை) அவர்களிடம் அவற்றைக் குறித்துக் கேட்டேன். அவர்கள், உள்ளேயிருப்பவை இரண்டும் சொர்க்கத்தில் உள்ளவையாகும். வெளியே இருப்பவை இரண்டும் நைல் நதியும், யூப்ரடீஸ் நதியும் ஆகும் என்று பதிலளித்தார்கள்.
பிறகு என் மீது ஐம்பது (நேரத்) தொழுகைகள் கடமையாக்கப்பட்டன. நான் முன்னேறிச் சென்று இறுதியில் மூஸா (அலை) அவர்களை அடைந்தேன். அவர்கள், ‘என்ன செய்தாய்?’ என்று கேட்டார்கள். நான், ‘என் மீது ஐம்பது தொழுகைகள் கடமையாக்கப்பட்டுள்ளன’ என்று பதிலளித்தேன். அதற்கு அவர்கள், ‘எனக்கு மக்களைப் பற்றி உங்களைவிட அதிகமாகத் தெரியும். நான் பனூ இஸ்ராயீல்களுடன் பழகி நன்கு அனுபவப்பட்டுள்ளேன். உங்கள் சமுதாயத்தினர் (இதைத்) தாங்கமாட்டார்கள். ஆகவே, உங்கள் இறைவனிடம் திரும்பிச் சென்று அவனிடம் (தொழுகைகளின் எண்ணிக்கையைக்) குறைத்துத் தரும்படி கேளுங்கள்’ என்று சொன்னார்கள்.
நான் திரும்பச் சென்று இறைவனிடம் (அவ்வாறே) கேட்டேன். அதை அவன் நாற்பதாக ஆக்கினான். பிறகும் முதலில் சொன்னவாறே நடந்தது. மீண்டும் (சென்று நான் கேட்க, இறைவன் அதை) முப்பதாக ஆக்கினான். மீண்டும் அதைப் போலவே நடக்க (அதை) இறைவன் இருபதாக ஆக்கினான்.
நான் மூசா (அலை) அவர்களிடம் சென்ற போது அவர்கள் முன்பு போலவே சொல்ல ( நான் இறைவனிடம் மீண்டும் குறைத்துக் கேட்க) அவன் அதை ஐந்தாக ஆக்கினான். பிறகு நான் மூசா (அலை) அவர்களிடம் சென்றேன். அவர்கள், ‘என்ன செய்தாய்?’ என்று கேட்க, ‘அதை இறைவன் ஐந்தாக ஆக்கிவிட்டான்’ என்றேன். அதற்கு அவர்கள், ‘முன்பு சொன்னதைப் போலவே (இன்னும் குறைத்துக் கேட்கும்படி) சொன்னார்கள். அதற்கு, நான் (இந்த எண்ணிக்கைக்கு) ஒப்புக் கொண்டு விட்டேன் என்று பதிலளித்தேன். அப்போது (அழ்ழாஹ்வின் தரப்பிலிருந்து அசரீரியாக), நான் என் (ஐந்து வேளைத் தொழுகை எனும்) விதியை அமுல்படுத்தி விட்டேன். என் அடியார்களுக்கு (ஐம்பது வேளைகளிலிருந்து ஐந்து வேளையாகக் குறைத்து கடமையை) இலேசாக்கி விட்டேன். ஒரு நற்செயலுக்குப் பத்து நன்மைகளை நான் வழங்குவேன் என்று அறிவிக்கப்பட்டது என அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.’ (நூல்: ஸஹீஹுல் புஹாரி- 3207)
மிஃராஜின் போது அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அழ்ழாஹ்வைப் பார்த்தார்களா?
அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மிஃராஜின் போது அழ்ழாஹ்வைப் பார்த்ததாகவே இஸ்லாமிய சமுதாய மக்களில் பலர் நம்பியுள்ளனர். இதன் உண்மை நிலை தொடர்பாக அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் பின்வருமாறு தெளிவுபடுத்துகின்றார்கள்.
‘நான் (அன்னை) ஆயிஷா (ரழி) அவர்களிடம் சாய்ந்து அமர்ந்திருந்தேன். அப்போது அவர்கள் (என்னிடம்) அபூ ஆயிஷா, ‘மூன்று விஷயங்கள் உள்ளன. அவற்றில் எந்த ஒன்றை யார் கூறினாலும் அவர் அழ்ழாஹ்வின் மீது மிகப் பெரும் பொய்யை இட்டுக்கட்டியவர் ஆவார்’ என்று கூறினார்கள். நான், ‘அவை எவை? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘யார் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் இறைவனை (நேரில்) பார்த்தார்கள் என்று கூறுகின்றாரோ அவர் அழ்ழாஹ்வின் மீது மிகப்பெரும் பொய்யை இட்டுக்கட்டி விட்டார்’ என்று சொன்னார்கள்.
உடனே சாய்ந்து அமர்ந்து (ஓய்வு எடுத்துக்) கொண்டிருந்த நான் எழுந்து (நேராக) அமர்ந்து, ‘இறை நம்பிக்கையாளர்களின் அன்னையே! நிதானித்துக் கூறுங்கள்! அவசரப்படாதீர்கள். வலிவும் மாண்புமிக்க அழ்ழாஹ், ‘அவரை தெளிவான அடிவானத்தில் பார்த்தார்’ (அல்குர்ஆன் 81:23) என்றும், ‘ஸித்ரதுல் முன்தஹாவுக்கு அருகில் மற்றொரு தடவையும் அவரை இறங்கக் கண்டார்’ (அல்குர்ஆன் 53:13) என்றும் கூறவில்லையா?’ என்று கேட்டேன்.
அதற்கு ஆயிஷா (ரழி) அவர்கள் பின்வருமாறு விளக்கமளித்தார்கள். இந்த சமுதாயத்தாரில் இது தொடர்பாக அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேள்வி கேட்ட முதல் ஆள் நான்தான். அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) ‘அது, (வானவர்) ஜிப்ரீலை (நான் பார்த்ததை)யே குறிக்கிறது. நான் ஜிப்ரீலை, அவர் படைக்கப் பெற்றுள்ள (நிஜத்) தோற்றத்தில் இந்த இரு தடவைகள் தவிர வேறெப்போதும் பார்த்ததில்லை. அவர் வானிலிருந்து (பூமிக்கு) இறங்கிக் கொண்டிருந்ததை நான் பார்த்தேன். அப்போது அவருடைய பிரமாண்டமான தோற்றம் வானம் பூமிக்கிடையேயுள்ள இடைவெளியை அடைத்துக்கொண்டிருந்தது. என்று கூறினார்கள்.
மேலும், ஆயிஷா (ரழி) அவர்கள் (தமது கருத்துக்குச் சான்றாக) அழ்ழாஹ் (பின்வருமாறு) கூறுவதை நீங்கள் செவியுறவில்லையா? என்று கேட்டார்கள். ‘அவனைக் கண்கள் பார்க்காது. அவனோ கண்களைப் பார்க்கிறான். அவன் நுட்பமானவன்;. நன்கறிந்தவன்.’ (அல்குர்ஆன் 6:103)
அல்லது (பின்வருமாறு) அழ்ழாஹ் கூறுவதை நீங்கள் செவியுறவில்லையா? ‘எந்த மனிதருடனும் அழ்ழாஹ் நேருக்கு நேர் பேசுவதில்லை. ஆயினும், வஹீயின் மூலமோ, திரைக்கப்பால் இருந்தோ அல்லது ஒரு தூதரை அனுப்பி தனது விருப்பப்படி தான் நாடியதை அறிவிப்பதன் மூலமோ தவிர (வேறு வழிகளில்) எந்த மனிதரிடமும் அழ்ழாஹ் பேசுவதில்லை. அவன் உயர்ந்தவன்; ஞானமிக்கவன்.’ (அல்குர்ஆன் 42:51) (தொடர்ந்து) ஆயிஷா (ரழி) அவர்கள் மீதமுள்ள இரண்டு விஷயங்களையும் கூறினார்கள்.’ (அறிவிப்பவர்: மஸ்ரூக் பின் அஜ்தஉ (ரஹ்), நூல்: ஸஹீஹ் முஸ்லிம்-287)
‘நான் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், ‘நீங்கள் உங்கள் இறைவனைப் பார்த்தீர்களா?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள் ‘அவன் ஒளியாயிற்றே நான் எப்படி பார்க்க முடியும்?’ என்று கேட்டார்கள்.’ (அறிவிப்பவர்:அபூதர்(ரழி), நூல்:ஸஹீஹ் முஸ்லிம்-291)
மேலுள்ள நபிமொழிகள் மூலம் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எச்சந்தர்ப்பத்திலும் அழ்ழாஹ்வைப் பார்க்கவில்லை. மாறாக, இவ்வுலகில் பார்க்கவும் முடியாது என்பதை தெளிவுபடுத்துகின்றது.
மிஃராஜும் முஸ்லிம்களும்
அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் விண்ணுலகப் பயணமான மிஃராஜ் நிகழ்வு நபிகளாரின் தூதுத்துவத்தை உண்மைப்படுத்துகின்ற ஒரு நிகழ்வாகும். விண்ணுலகப் பயணத்தினை உறுதி செய்யும் வகையில் அருள்மறைக் குர்ஆனிலும், ஆதாரப்பூர்வமான நபிமொழிகளிலும் ஏராளமான சான்றுகள் நிறைந்து காணப்படுகின்றன. ஆனால், விண்ணுலகப் பயணம் மேற்கொண்ட இரவு தொடர்பான வலுவான ஆதாரங்கள் எதுவுமில்லை.
இது தொடர்பில் ஹதீஸ் கலை வல்லுனர்கள் மற்றும் வரலாற்றாசிரியர்கள் மத்தியில் மிகப் பாரியளவில் கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. இவ்வாறாக, கருத்து வேறுபாடுகள் தோன்றுவதற்கு காரணம் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் விண்ணுலகப் பயணம் சென்ற நாளை நோன்பு நோற்றோ, அல்லது விஷேட இபாதத்துக்கள் மூலமோ கண்ணியப்படுத்தவில்லை.
மேலும், நபிகளார் (ஸல்) அவர்கள் விண்ணுலகப் பயணம் மேற்கொண்ட நாளில் செய்வதற்கென விஷேடமான எந்தவொரு வணக்க வழிபாடுகளையும் கற்றுக் கொடுக்கவில்லை. அவ்வாறு கற்றுக் கொடுத் திருப்பார்களாயின் குறித்த அமலை நிறைவேற்றுவதற் காகவேனும், நபித்தோழர்கள் மிஃராஜ் இரவை நினைவில் வைத்திருப்பார்கள். தற்போது போன்று பல்வேறு மாற்று அபிப்பிராயங்கள் தோன்றுவதற்கு வாய்ப்பிருந்திருக்காது.
ஆஷுரா நாளில் நோன்பு நோற்க வேண்டும் என்ற கட்டளையினை நினைவில் வைத்திருந்த உத்தம நபித்தோழர்கள் ஆஷுரா நாள் முஹர்ரம் பத்திலேதான் என்பதனை ஒருமித்து அறிவித்தார்கள். எனவே, மிஃராஜ் நடந்த இரவுக்கென்று எந்தவொரு சிறப்பும் இல்லை. மாறாக, மிஃராஜ் நடந்ததை நம்புவதுதான் ஒரு இறைவிசுவாசியின் கடமையாகும்.
இறுதியாக, மிஃராஜ் நோன்பு மற்றும் மிஃராஜ் இரவில் விஷேட வணக்கவழிபாடுகளில் ஈடுபடுவோர் பின்வரும் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பொன்மொழிகளை சிந்திக்க கடமைப்பட்டுள்ளார்கள்.
அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘நம்முடைய இந்த (மார்க்க) விவகாரத்தில் அதில் இல்லாததைப் புதிதாக எவன் உண்டாக்குகின்றானோ அவனுடைய அந்தப் புதுமை நிராகரிக்கப்பட்டதாகும்.’ (அறிவிப்பவர்: ஆயிஷா (ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-2697)
‘செய்திகளில் மிகவும் உண்மையானது அழ்ழாஹ்வுடைய வேதமாகும். நடைமுறையில் மிகவும் சிறந்தது அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய நடைமுறையாகும். காரியங்களில் தீயது (மார்க்கம் என்ற பெயரில்) புதிதாக உருவானவையாகும். புதிதாக உருவாகக் கூடியவைகள் அனைத்தும் பித்அத்கள் ஆகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும். ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் கொண்டு சேர்க்கும்.’ (அறிவிப்பவர்: ஜாபிர் (ரழி), நூல்: நஸயீ-1560)
மேலுள்ள நபிமொழி மிஃராஜ் நோன்பு மற்றும் மிஃராஜின் பெயரால் உருவாக்கப்பட்ட வணக்க வழிபாடுகள் எம்மை நரகத்திற்கு அழைத்துச் செல்லும் என எச்சரிக்கின்றது. எனவே, புதுவழிகளை விடுத்து நபிவழிகளை அருள்மறைக் குர்ஆன், அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது ஆதாரபூர்வமான நபிமொழிகள்; மூலம் அறிந்து பின்பற்றுவதற்கு அருளாளன் அழ்ழாஹ் அருள்புரிவானாக!
0 comments:
Post a Comment