Monday, August 23, 2010

‘ஸுன்னாஹ்’ பற்றிய சொல் விளக்கம்

மௌலவி SLM. நஷ்மல் (பலாஹி)
nashmelslm@yahoo.com

‘அல்லாஹ்வையும்,  இறுதி  நாளையும்  நம்பி, அல்லாஹ்வை அதிகம்  நினைக்கும்  உங்களுக்கு அல்லாஹ்வின் தூதரிடம் அழகிய முன்மாதிரி இருக்கிறது.’ (அல்குர்ஆன் 33:21)

‘ஸுன்னா’ பற்றிய முக்கியத்துவம், இஸ்லாமிய சட்டவாக்கத்தில் அது கொண்டுள்ள அளப்பரிய பங்கு போன்றவற்றை சமுதாயம் சரிவரப் புரிந்து கொள்ளாததன் காரணத்தினால்தான் மக்களிடம் பித்அத்கள் செய்யாதீர்கள் எனக் கூறும்போது சமுதாய மக்கள் சில நேரங்களில் அது பற்றி கரிசனை கொள்வதில்லை.
பித்அத்தின் பாரதூரம் புரியாததால் ‘ஸுன்னா’ வினை நமது சமுதாயம் அலட்சியம் செய்கின்றது. எனவே, இது தொடர்பாக கவனம் செலுத்த முன்பு ‘ஸுன்னா’ என்றால் என்ன? அதன் வகையீடுகள் யாவை? என்பன குறித்து நோக்குவோம்.
பொதுவாக மொழி வழக்கில் ‘ஸுன்னா’  என்பது ஏதாவது ஒரு வழிமுறை அல்லது நடைமுறை என்ற கருத்தில் பயன்படுத்தப்படுகிறது. பின்வரும் நபிமொழியின் மூலம் ‘ஸுன்னா’ என்கின்ற பதத்தின் பொருளினை அறிந்து கொள்ளலாம்.

‘நபிகளார்(ஸல்) அவர்கள் கூறினார்கள். யார் இஸ்லாத்தில் ஒரு அழகிய வழிமுறையை செய்கிறாரோ அவருக்குப் பின் அவ்வாறு செய்பவர்களுடைய கூலிகளும் அவரைச் சென்றடைகின்றது.  இவர்களது கூலிகளில் இருந்து எதுவும் குறைக்கப்படாது. யார் இஸ்லாத்தில் ஓர் தீய நடைமுறையைச் செய்கிறாரோ பின்னர் அதுபோல் செய்பவர்களுடைய கூலிகளும் அவரைச் சென்றடை கின்றது. இவர்களது பாவங்களிலிருந்து எதுவும் குறைக்கப்படாது.’ (இப்னுமாஜா)

இஸ்லாமிய ஷ‌ரீஆவில் ‘ஸுன்னா’வானது நபிகளார்(ஸல்) அவர்கள் ஏவிய, தடுத்த செயற்பாடுகள், அவர்களது வார்த்தைகள், அனுமதித்த விடயங்கள், நபியவர்கள் பற்றிய விபரங்கள் என்கின்ற பரந்த கருத்தில் அமைந்துள்ளது. இதனையே அண்ணலார் (ஸல்) அவர்கள்  எனது ஸுன்னாவைப் பற்றிக் கொள்ளுங்கள் எனக் கூறினார்கள்.’ (அஹ்மத்)

இங்கு ஸுன்னாவை புரிய முற்படும்போது நபிகளார்(ஸல்) அவர்கள் காட்டித்தராத  அல்லது அவர்களது வழிமுறைக்கு எதிரான ‘பித்அத்’ எனும் நூதன அனுஷ்டானங்களுக்கு புறம்பானது என்றும் விளங்கிக் கொள்ளலாம். அதாவது குறித்த ஒரு மார்க்க விவகாரம் நபிகளார்(ஸல்) அவர்களின் முன்மாதிரி யுடன் நடைபெறும்போது ‘ஸுன்னா’ என்றும், நபிகளார்(ஸல்) அவர்களின் வழிமுறைக்கு முரணாகககாணப்படும் போது ‘பித்ஆ’ என்றும் அழைக்கப்படும். மேலும், கட்டாயம் செய்ய வேண்டியவிடயங்கள் தவிர, செய்தால் நன்மைகள் கிடைக்கப் பெறுகின்ற ‘நப்ல்’ என்றழைக்கப்படும் குறுகிய கருத்திலும் ‘ஸுன்னா’ என்ற பதம் பயன்படுத்தப்படுகின்றது.
கண்ணியமிகு அறிஞர்கள் அந்தந்த வட்டத்தில் ‘ஸுன்னா’  எனும் பதத்தை தத்தமது துறைகளை அடிப் படையாகக் கொண்டு விளக்கிச் சென்றனர். அந்த வகையில் ஹதீஸ்கலை அறிஞர்கள் அழ்ழாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களின் வாழ்வு, பழக்கவழக்கங்கள், நடைமுறைகள், செய்திகள், வார்த்தைகள் மற்றும் செயற்பாடுகள் போன்ற அனைத்து துறைகளையும் கவனத்திற் கொண்டு முன்மாதிரி என்ற வகையிலும் கடைப்பிடிக்க வேண்டியவைகள் என்ற வகையிலும் அறிமுகம் செய்தனர்.

‘அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி, அல்லாஹ்வை அதிகம் நினைக்கும் உங்களுக்கு அல்லாஹ்வின் தூதரிடம் அழகிய முன்மாதிரி இருக்கிறது.’ (அல்குர்ஆன் 33:21)

ஸுன்னா ஒரு சட்டமூலாதாரம் என்ற வகையில் முஜ்தஹிதுகள் ‘ஷரீஆ சட்டங்களை தொகுப்பதற்காகவும், மஸாயில்களை ஆய்வு செய்யும் நோக்கத்தோடும் விதிகளை வகுத்த அறிஞர்கள் சட்டவாக்கம் செய்ய ஏதுவாக காணப்பட்ட நபிகளார்(ஸல்) அவர்களது சொல், செயல், அங்கீகாரம் என்பவற்றை ஸுன்னா என வரைவிலக் கணம் செய்தனர். சட்டக்கலை அறிஞர்கள் மாத்திரம் மக்களின் செயற்பாடுகளில் அல்லது வணக்க வழிபாடு களில் கட்டாயமானதா? இயலுமானதா? அல்லது தடை செய்யப்பட்டதா? என்ற அம்சங்களை கூற வரும்போது ‘வாஜிப்’ அல்லது ‘பர்ழ்’  போன்ற பதங்களுக்கு எதிர்ப் பதமாக ஸுன்னாவை அறிமுகம் செய்தனர்.

எது எவ்வாறாயினும் ஏனைய இரு சாராருடைய பார்வையினை விட ஹதீஸ் கலை அறிஞர்களது அவதானமும், நோக்கிய விதமும் பரந்துபட்டது.
‘என் ஸுன்னாவை யார் கைவிடுகின்றாரோ அவர் என்னைச் சார்ந்தவர் அல்லர் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்   சொன்னார்கள்.’ ஸஹீஹுல் புஹாரி-5063, ஸஹீஹ் முஸ்லிம்-2714

அகீதா (இறைக்கொள்கை) அறிஞர்கள் ஸுன்னாவைப் பின்வருமாறு விளக்கியுள்ளார்கள்.

அல்குர்ஆன், ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் கூறும் இறைக்கொள்கையினை ஆரம்பகாலத்தில் மக்கள் எவ்வித சிரமமுமின்றி விசுவாசித்து வந்தனர். நபி(ஸல்) அவர்கள் காலத்திலும், நபித்தோழர்கள் காலத்திலும் அகீதா, ஈமான் தொடர்பான அம்சங்களில் எந்தவித மாற்றுக் கலாசார கொள்கைகளும் ஊடுருவவில்லை.

அழ்ழாஹ் அர்ஷில் உள்ளான் என்றால் அப்படியே நம்பினார்கள். நபித்தோழர் முஆவியா பின் அல்கம்(ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
‘எனது ஒரு அடிமையை நான் தாக்கிவிட்டேன். அது எனக்கு சிரமமாக இருந்தது. நபி(ஸல்) அவர்கள் அதை அறிந்து அப்பெண்ணை என்னிடம் அழைத்து வாருங்கள் எனக் கூறி, அவளிடம் அழ்ழாஹ் எங்கே? எனக் கேட்டார்கள். அப்பெண் அழ்ழாஹ் வானத்தில் என்றாள். நான் யார் என்று கேட்க நீங்கள் அழ்ழாஹ்வின் தூதர் எனப் பதிலளித்தாள். இதனைக் கேட்ட நபி(ஸல்) அவர்கள்  ‘அவள் விசுவாசி அவளை விடுதலை செய்’ எனக் கூறினார்கள்.’ (நூல்: முஸ்லிம்-935, அபூதாவூத்-795, அஹ்மத்-7565)

பிற்பட்ட காலங்களில் தர்க்கவியல், தத்துவவியல் போன்ற கலைகள் முஸ்லிம் சமுதாயத்திற்குள் புகுந்ததன் பின்பு, அகீதா தொடர்பான பல அம்சங்களை மறுத்தும், விமர்சித்தும் பல குழுக்கள் தோற்றம் பெற்றன. இவற்றிற்கு உதாரணமாக, கதரிய்யா, முஃதஸிலா, அஷ்அரிய்யா போன்றவைகளை குறிப்பிடலாம். இவ்வாறு பிழையான அகீதாவினை உடையவர்கள் ‘அஹ்லுல் பித்ஆ’ என்றும், சரியான அகீதாவினை உடையவர்களினை ‘அஹ்லுல் ஸுன்னா’ என்றும் அழைக்கப்படலாயினர்.இக்கோணத்தில் தான் தலாக்கில் கூட ‘தலாக் பிதஈ’ என்றும் ‘தலாக் ஸுன்னி’ என்றும் அழைக்கப்படுகிறது.

நபி(ஸல்) அவர்கள் ஸுன்னா என்ற பதத்தை பயன்படுத்திய விதம்:
‘நபி(ஸல்) அவர்களுடைய துணைவியரின் வீடுகளுக்கு மூன்று பேர் கொண்ட குழுவினர் வந்து நபி(ஸல்) அவர்களின் வணக்க வழிபாடுகள் குறித்து வினாத் தொடுத்தனர். அதுபற்றி அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்ட போது, அவர்கள் நபி(ஸல்) அவர்களின் வணக்க வழிபாடுகளைக் குறைத்து மதிப்பிட்டது போல் தெரிந்தது. பிறகு (அவர்களே அதற்குச் சமாதானமும் கூறிக்கொண்டு) முன்பின் தவறுகள் மன்னிக்கப்பட்டுவிட்ட நபி(ஸல்) அவர்கள் எங்கே? நாம் எங்கே? என்று சொல்லிக்கொண்டனர்.

அவர்களில் ஒருவர்(இனிமேல்) நான் என்ன செய்யப் போகிறேன் என்றால் எப்போதும் இரவில் தொழுதுகொண்டே இருக்கப்போகிறேன் என்றார். இன்னொருவர், நான் ஒருநாள் கூட விடாமல் காலமெல்லாம் நோன்பு நோற்கப் போகிறேன் என்று கூறினார். மூன்றாம் நபர் நான் பெண்களைவிட்டும் ஒதுங்கியிருக்கப்போகிறேன். ஒருபோதும் மணமுடித்துக் கொள்ளமாட்டேன் என்று கூறினார்.

அப்போது அழ்ழாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள், (அந்தத் தோழர்களிடம்) வந்து, இப்படி இப்படியெல்லாம் பேசிக்கொண்டது நீஙகள்தாமே! அறிந்துகொள்ளுங்கள்- அழ்ழாஹ்வின் மீதாணையாக! உங்களைவிட அதிகமாக நான் அழ்ழாஹ்வை அஞ்சுபவன் ஆவேன். அழ்ழாஹ்வைப் பயந்து நடப்பவன் ஆவேன். ஆயினும், நான் நோன்பு நோற்கவும் செய்கிறேன். விட்டுவிடவும் செய்கிறேன். தொழவும் செய்கிறேன். உறங்கவும் செய்கிறேன். மேலும், நான் பெண்களை மணமுடித்தும் உள்ளேன். ஆகவே, என் ‘ஸுன்னாவை’ யார் கைவிடுகின்றாரோ அவர் என்னைச் சார்ந்தவர் அல்லர் என்று சொன்னார்கள்.’ (அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக்(ரலி), நூற்கள்: புஹாரி-5063, முஸ்லிம்-2714)

‘அழ்ழாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களிடம் மக்கள் நன்மையைப் பற்றிக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். நான் நபியவர்களிடம் தீமையைப் பற்றிக் கேட்டுக் கொண்டிருந் தேன். அது என்னைத் தீண்டிவிடுமோ என்று அஞ்சியதே காரணம். நான், அழ்ழாஹ்வின் தூதரே! நாங்கள் அறியாமைக் கால மாச்சரியத்திலும் தீமையிலும் மூழ்கிக் கிடந்தோம். அப்போது அழ்ழாஹ் (இஸ்லாம் எனும்) இந்த நன்மையை எங்களிடம் கொண்டுவந்தான்.

இந்த நன்மைக்குப் பிறகு ஒரு தீமை(குழப்பம்) இருக்கின்றதா என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், ஆம் (இருக்கின்றது) என்று பதிலளித்தார்கள். நான், அந்தத் தீமைக்குப் பிறகு நன்மை ஏதும் இருக்கின்றதா என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள் ஆம். ஆனால், அதில் சற்று கலங்கலான நிலை(குழப்பம்) இருக்கும் என்று பதிலளிக்க நான் அந்தக் கலங்கலான நிலை என்ன என்று கேட்டேன்.
அதற்கு அவர்கள், ஒரு கூட்டத்தார் எனது ‘ஸுன்னா அல்லாத’ ஒன்றைக் கொண்டு பிறருக்கு வழி காட்டுவார்கள். அவர்களில் நன்மையையும் நீ காண்பாய், தீமையையும் நீ காண்பாய் என்று பதிலளித்தார்கள். நான், அந்த நன்மைக்குப் பிறகு ஒரு தீமை உண்டா என்று கேட்டேன். அதற்கு அவர்கள் ஆம் நரகத்தின் வாசல்களுக்கு(வருமாறு) அழைப்பவர்கள் சிலர் தோன்றுவார்கள். அவர்களின் அழைப்பை ஏற்பவனை நரகத்தில் அவர்கள் எறிந்துவிடுவார்கள் என்று பதிலளித்தார்கள்.

நான், அழ்ழாஹ்வின் தூதரே! அவர்க(ளுடைய அடையாளங்க)ளை எங்களுக்குத் தெரிவியுங்கள் என்று கேட்க, நபி(ஸல்) அவர்கள், அவர்கள் நம் இனத்தைச் சேர்ந்தவர்களாகவேயிருப்பார்கள். நம் மொழிகளையே பேசுவார்கள் என்று பதிலளித்தார்கள். நான் இந்த(மனிதர்களைச் சந்திக்கும்) நிலையை அடைந்தால் என்ன(செய்ய வேண்டுமென்று) எனக்குக் கட்டளையிடுகின்றீர்கள் என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் நீ முஸ்லிம்களின் ஜமாஅத்தை(கூட்டமைப்பை)யும் அவர்களுடைய தலைவரையும்(இறுகப்) பற்றிக்கொள் என்று பதிலளித்தார்கள்.

அதற்கு நான் அவர்களுக்கு ஒரு கூட்டமைப்போ ஒரு தலைவரோ இல்லை(பல பிரிவுகளாகப் பிரிந்து கிடக்கிறார்கள்) என்றால்(என்ன செய்வது) என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள் அந்தப் பிரிவுகள் அனைத்தையும் விட்டு(விலகி) ஒதுங்கிவிடு ஒரு மரத்தின் வேர் பாகத்தை பற்களால் நீ கவ்விப் பிடித்திருக்க நேர்ந்து அதே நிலையில் மரணம் உன்னைத் தழுவிக்கொண்டாலும் சரி(எந்தப் பிரிவினரோடும் சேர்ந்துவிடாதே) என்று பதிலளித்தார்கள்.’ (அறிவிப்பவர்: ஹுதைஃபா பின் அல்யமான்(ரலி) நூல்: புஹாரி-7084)

நபித்தோழர்களின் வார்த்தைகளில் ‘ஸுன்னா’:

‘தமது(தொழுகையில்) ருகூஉவையும், சஜ்தாவையும் முழுமையாகச் செய்யாத ஒருவரைக் கண்ட ஹுதைஃபா(பின் அல்யமான்(ரலி)) அவர்கள், அவர் தொழுது முடித்தபோது, நீர்(உரியமுறையில்) தொழவில்லை, என்று கூறினார்கள். மேலும் அவர்கள்,(இதே நிலையில்) நீர் இறந்து விட்டால் முஹம்மது(ஸல்) அவர்களுடைய ‘ஸுன்னாவுக்கு’  மாற்றம் செய்தவராகவே இறக்கின்றீர் என்று சொன்னதாகவும் நான் எண்ணுகிறேன்.’ (அறிவிப்பவர்: அபூவாயில் ஷகீக் பின் சலமா-ரஹ்)  நூல்:புஹாரி-389)

‘நான் உஸ்மான்(ரலி) அவர்களுடனும், அலீ(ரலி) அவர்களுடனும் ஹஜ் செய்துள்ளேன். உஸ்மான்(ரலி) அவர்கள் ஹஜ், உம்ரா இரண்டையும் சேர்த்து(கிரான்)செய்வதையும் உம்ரா முடித்து ஹஜ்(தமத்துஉ) செய்வதையும் தடுத்தார்கள். இதைக் கண்ட அலீ(ரலி) அவர்கள் ஹஜ், உம்ரா இரண்டிற்கும் இஹ்ராம் கட்டி ‘லப்பைக்க பி உம்ரத்தின் வஹஜ்ஜத்தின்’ என்று கூறிவிட்டு நபி(ஸல்) அவர்களின் ‘ஸுன்னாவை’ யாருடைய சொல்லிற்காகவும் நான் விட்டுவிடமாட்டேன் எனக் கூறினார்கள். (அறிவிப்பவர்: மர்வான் பின் ஹகம், நூல்: புஹாரி-1563)

இவ்வாறாக நபிமொழிகளிலும், நபித்தோழர்களின் கூற்றுக்களிலும் ஸுன்னா என்ற பதம் பயன்படுத்தப் பட்டுள்ளதைக் காணலாம்.

0 comments:

Post a Comment