Monday, August 23, 2010

நபிகளாரின் செயற்பாடுகளைப் புரிந்து கொள்வது எப்படி?

மௌலவி SLM. நஷ்மல் (பலாஹி)
nashmelslm@yahoo.com

‘அழ்ழாஹ் என்னைக் கடினமான போக்கு உள்ளவனாகவோ எவரையும் வழிதவறச் செய்பவனாகவோ அனுப்பவில்லை. மாறாக (இறைநெறியை) எளிதாக்கிச் சொல்லும் ஆசானாகவே என்னை அனுப்பியுள்ளான் என்று அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.’ (அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்திழ்ழாஹ் (ரழி)இ நூல்: ஸஹீஹ் முஸ்லிம்-2946)

அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தல் கற்பித்தல் மற்றும் தஸ்கிய்யா (தூய்மைப்படுத்தல்) போன்ற பணிகளைக் கொண்டு அழ்ழாஹ்வால் பணிக்கப்பட்டிருந்தார்கள். இதனை அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குறிப்பிடுகையில்  ‘அழ்ழாஹ் என்னைக் கடினமான போக்கு உள்ளவனாகவோ எவரையும் வழிதவறச் செய்பவனாகவோ அனுப்பவில்லை. மாறாக (இறைநெறியை) எளிதாக்கிச் சொல்லும் ஆசானாகவே என்னை அனுப்பியுள்ளான்.’ (அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்திழ்ழாஹ் (ரழி)இ நூல்: ஸஹீஹ் முஸ்லிம்-2946)

அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்த அமானத்தை ஏற்று தனது பணியை முழுமையாக நிறைவு செய்தார்கள். ‘(நான் வாழ்ந்த இதுகாலம் வரை உங்களிடம் இறைச் செய்திகள் அனைத்தையும்) தெரிவித்துவிட்டேனா எனக் கேட்டார்கள். நாங்கள் ஆம் (தெரிவித்துவிட்டீர்கள்) என்று பதிலளித்தோம். பிறகு நபி (ஸல்) அவர்கள் இறைவா! நீயே சாட்சி என்று சொன்னார்கள்.’ (அறிவிப்பவர் : அபூபக்ரா (ரழி) நூல்: ஸஹீஹுல் புஹாரி-7078) மேலும் தனக்கு அருளப்பட்ட இறைசெய்தியை எற்றிவைக்க தன்னாலான முழு வழிவகைகளையும் பயன்படுத்தி சொல்லால் சமூகத்திற்கு நேர்வழிகாட்டியது போன்று செயலாலும் நேர்வழிகாட்டி பின்பற்றப்படக்கூடியவர் என்று அழ்ழாஹ்வால் அழைக்கப்பட்டார்கள்.

எனவே இமாம் எனும் பதமானது அவரது செயற்பாடுகள் மற்றவர்களால் பின்பற்றப்படக்கூடியது என்பதைக் குறித்து நிற்கின்றது. இதனை அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பின்வரும் பொன்மொழி தெளிவுபடுத்துகின்றது.

‘பின்பற்றப்படுவதற்காகவே இமாம் நியமிக்கப்பட்டுள்ளார். ஆகவே அவர் தக்பீர் சொன்னால் நீங்களும் தக்பீர் சொல்லுங்கள் அவர் குனிந்தால் நீங்களும் குனி(ந்து ருகூவு செய்)யுங்கள் அவர் ‘சமி அழ்ழாஹு லிமன் ஹமிதஹ்’ என்று சொன்னால் நீங்கள் ‘ரப்பனா வல(க்)கல் ஹம்து’ எனச் சொல்லுங்கள். அவர் சஜ்தா (சிரவணக்கம்) செய்தால் நீங்களும் சஜ்தா செய்யுங்கள். அவர் உட்கார்ந்து தொழும்போது நீங்கள் அனைவரும் உட்கார்ந்தே தொழுங்கள் என்று  அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.’ (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி)இ நூல்: ஸஹீஹுல் புஹாரி-734)

அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது செயற்பாடுகள் மற்றவர்களால் அவதானிக்கப்படக் கூடியவை என்பதனால் நடந்து கொண்ட விதம்:

1. அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சந்தேகம் வருகின்ற இடங்களை தவிர்ந்து கொள்வார்கள். யதார்த்தத்தில் ஆகுமான ஒன்றைக் கூட அது வெறுக்கப்படுமானால் வெளிப்படையாகச் செய்யமாட்டார்கள்.
‘அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பள்ளிவாசலில் தங்கி) இஃதிகாஃப் இருந்தார்கள். ஓர் இரவில் அவர்களை சந்திப்பதற்காக அவர்களிடம் நான் சென்றேன். நான் அவர்களிடம் (சிறிது நேரம்) பேசிவிட்டு திரும்பிச்செல்ல எழுந்தேன்.

அப்போது அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் என்னைத் திருப்பியனுப்புவதற்காக என்னுடன் வந்தார்கள். உஸாமா பின் ஸைத் (ரழி) அவர்களின் வீடே அவர்களின் இருப்பிடமாக இருந்தது. (என அறிவிப்பாளர் கூறுகிறார்) அப்போது அன்சாரிகளின் இருவர் அந்த வழியாகச் சென்றார்கள். அவர்கள் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை கண்டவுடன் விரைந்து நடக்கலானார்கள். உடனே அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நிதானமாகச் செல்லுங்கள் இவர் (என் மனைவி) ஸஃபிய்யா பின்த்து ஹுயை தான் என்று சொன்னார்கள்.

இதைக் கேட்ட அவ்விருவரும் அழ்ழாஹ் தூயவன். அழ்ழாஹ்வின் தூதரே! (தங்களையா நாங்கள் சந்தேகிப்போம்) என்று சொன்னார்கள். அழ்ழாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் ஷைத்தான் மனிதரின் இரத்த நாளங்களில் (கூட) ஓடுகிறான். உங்கள் உள்ளங்களில் அவன் தீய எண்ணம் எதையேனும் போட்டு விடுவான். அல்லது உங்கள் உள்ளங்களில் (சந்தேகம்) எதையாவது அவன் போட்டு விடுவான். என்று நான் அஞ்சினேன் என்று சொன்னார்கள்.’ (அறிவிப்பவர்: ஸஃபிய்யா பின்த்து ஹுயை (ரழி) நூல்: ஸஹீஹுல் புஹாரி-3281)

2. வெளிப்படையான செயற்பாடுகளில் தன்னால் மற்றவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தாது கவனத்திற் கொள்வதற்கு ஆசைப்படுவார்கள்.

‘உங்களிடம் உங்களைச் சேர்ந்த தூதர் (முஹம்மத்) வந்து விட்டார். நீங்கள் சிரமப்படுவது அவருக்குப் பாரமாக இருக்கும். உங்கள் மீது அதிக அக்கறை உள்ளவர். நம்பிக்கை கொண்டோரிடம் பேரன்பும்இ இரக்கமும் உடையவர்.’(அல்குர்ஆன் 09:128)
‘அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒருநாள் நள்ளிரவில் (வீட்டிலிருந்து) புறப்பட்டுச் சென்று பள்ளியில் தொழுதார்கள். அப்போது சிலர் அவர்களைப் பின்பற்றித் தொழலாயினர். காலையில் மக்கள் இது பற்றிப் பேசலானார்கள். (மறு நாள்) முந்திய நாளைவிட அதிக மக்கள் திரண்டு நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் நின்று தொழுதனர். (மூன்றாம் நாள்) காலையிலும் இது பற்றிப் பேசிக்கொண்டனர்.

அந்த மூன்றாம்நாள் இரவிலும் பள்ளிவாசலுக்கு வந்தவர்களின் கூட்டம் இன்னும் அதிகமானது. அன்றும் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புறப்பட்டு வந்தபோது அவர்களைப் பின்பற்றித் தொழுதனர். நான்காம் நாள் இரவு வந்தபோது மக்கள் அதிகரித்ததால் பள்ளி இடம் கொள்ளவில்லை. (அன்று இரவு நபி (ஸல்) அவர்கள் பள்ளிக்கு வரவில்லை.) சுப்ஹுத் தொழுகைக்குத்தான் அவர்கள் வந்தார்கள். ஃபஜ்ர் தொழுகையை முடித்ததும் மக்களை முன்னோக்கி ஏகத்துவ உறுதிமொழி கூறியபின்இ ‘அம்மா பஃது’ (இறைவாழ்த்துக்குப் பின்) எனக் கூறிவிட்டுஇ நீங்கள் வந்திருந்தது எனக்குத் தெரியாமல் இல்லை. எனினும்இ (இது) உங்கள் மீது கடமையாக்கப்பட்டு அதை உங்களால் நிறைவேற்ற இயலாமல் போய்விடுமோ என்று நான் அஞ்சினேன் (ஆகவேதான் நேற்றிரவு நான் இரவுத் தொழுகைக்காக பள்ளிக்கு வரவில்லை) என்று கூறினார்கள்.’ (அறிவிப்பவர்: ஆயிஷா (ரழி)இ நூல்: ஸஹீஹுல் புஹாரி-924)

3.தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படுகின்ற செயற்பாடுகளில் பெரும்பாலும் முழுமையாகவும் பூர்த்தியாகவும் செய்பவர்களாக இருந்தார்கள். ‘ஒருவர் நிரந்தரமாக(த் தொடர்ந்து) செய்யும் நற்செயலே அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு மிகவும் விருப்பமான செயலாக இருந்தது.’ (அறிவிப்பவர்: ஆயிஷா (ரழி)இ நூல்: ஸஹீஹுல் புஹாரி-6462)

அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மிகக்குறைந்த அளவிலேயே ஒரு தடவை மற்றும் இரு தடவைகள் உளூ உறுப்புக்களை கழுவுவதன் மூலம் உளூச் செய்துள்ளார்கள். மாறாக அதிகமான தடவைகள் உளூவின் உறுப்புக்களை மூன்று தடவை கழுவுவதன் மூலமே உளூச் செய்துள்ளார்கள்.
ஒரு தடவை கழுவி உளூச் செய்தல்

‘அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒவ்வொரு உறுப்பையும்)தலா ஒரு முறைக் கழுவி உளூ செய்தார்கள்.’ (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரழி) நூல்: ஸஹீஹுல் புஹாரி-157)

இரு தடவைகள் கழுவி உளூச் செய்தல்

‘அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தலையைத் தவிர மற்ற உறுப்புக்களை)தலா இரண்டு முறை கழுவி உளூ செய்தார்கள்.’ (அறிவிப்பவர்: அப்துழ்ழாஹ் பின் ஸைத் (ரழி)இ நூல்: ஸஹீஹுல் புஹாரி-158)

மூன்று தடவைகள் கழுவி உளூச் செய்தல்

‘உஸ்மான் பின் அஃப்பான் (ரழி) அவர்கள் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொண்டு வரச் சொல்லி (உளூச் செய்தார்கள். ஆரம்பமாக) தமது இரு முன் கைகளில் மூன்று முறை (தண்ணீர்) ஊற்றிக் கழுவினார்கள். பிறகு தம் வலக்கரத்தைப் பாத்திரத்திற்குள் செலுத்தி (தண்ணீர் அள்ளி) வாய்க் கொப்பளித்து (மூக்கிற்கு நீர் செலுத்தி) மூக்குச் சிந்தினார்கள். பிறகு தமது முகத்தை மூன்று முறை கழுவினார்கள்.

(பிறகு) தமது இரு கைகளையும் மூட்டுவரை மூன்று முறை கழுவினார்கள். பிறகு தலையை ஈரக் கையால் தடவினார்கள். பின்னர் தமது இரு கால்களையும் கணுக்கால் வரை மூன்று முறை கழுவினார்கள். பின்னர் யார் எனது (இந்த) உளூவைப் போன்று உளூச்செய்துஇ வேறு எந்த எண்ணங்களுக்கும் இடம் தராமல் இரண்டு ரக்அத்கள் தொழுகின்றாரோ அவருக்கு அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படும் என அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக உஸ்மான் (ரழி) அவர்கள் கூறினார்கள்.’ (அறிவிப்பவர்: ஹும்ரான் (ரழி)இ நூல்: ஸஹீஹுல் புஹாரி-159)

4. அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தனது செயற்பாடுகளிலிருந்து தவறான விளக்கம் எடுக்கப்படாத அளவிற்கு விபரமாக விளக்குவார்கள்.
ஜனாஸாவிற்காக அழ வேண்டாமென தடுத்த அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதன் வரையறை தொடர்பாக பின்வருமாறு தெளிவுபடுத்து கின்றார்கள். ‘சஅத் பின் உபாதா (ரழி) அவர்கள் நோயுற்ற போது அவர்களை உடல் நலம் விசாரிப்பதற்காக அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் சஅத் பின் அபீவக்காஸ் அப்துழ்ழாஹ் பின் மஸ்ஊத் (ரழி) ஆகியோருடன் சென்றார்கள்.

வீட்டுக்குள் நுழைந்த போது (சஅத் பின் உபாதா அவர்களின் குடும்பத்தார் அவரைச்) சூழ்ந்திருப்பதைக் கண்டதும் என்ன ‘இறந்து விட்டாரா?’ என்று கேட்டார்கள். அவர்கள் இல்லை அழ்ழாஹ்வின் தூதரே!’ என்றனர்.

அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அழலானார்கள். அவர்களின் அழுகையைக் கண்ட மக்களும் அழத் தொடங்கினர். அப்போது அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘(மக்களே!) நீங்கள் (செவிசாய்த்துக்) கேட்கமாட்டீர்களா? நிச்சயமாக கண்கள் அழுவதாலும் உள்ளம் கவலை கொள்வதாலும் அழ்ழாஹ் தண்டிப்பதில்லை. மாறாக இதோ இதன் காரணமாகவே தண்டிக்கின்றான் அல்லது தயவு காட்டுகிறான்’ என்று கூறி தமது நாவைக் காட்டினார்கள்.’ (அறிவிப்பவர்: அப்துழ்ழாஹ்; பின் உமர் (ரழி) நூல்: ஸஹீஹ் முஸ்லிம்-1683)
‘(ஒரு முறை) அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீதிருந்தபடி ஹிஷாம் பின் அல்முஃகீரா கோத்திரத்தார் தங்கள் (உறவினரான அபூஜஹ்லுடைய) மகளை அலீ பின் அபீதாலிப் அவர்களுக்கு மணமுடித்துவைக்க (என்னிடம்) அனுமதி கோரினர். அவர்களுக்கு நான் அனுமதியளிக்கமாட்டேன். மீண்டும் அவர்களுக்கு நான் அனுமதியளிக்கமாட்டேன். மீண்டும் அவர்களுக்கு நான் அனுமதியளிக்கமாட்டேன். (எத்தனை முறை கேட்டாலும் அனுமதியளிக்கமாட்டேன்)

அலீ பின் அபீதாலிப் அவர்கள் என் மகளை  (பாத்திமாவை) மணவிலக்குச் செய்து விட்டு அவர்களுடைய மகளை மணமுடித்துக் கொள்ள விரும்பினாலே தவிர (அவர்களுக்குநான் அனுமதி வழங்கமாட்டேன்).

என் மகள் (பாத்திமா) என்னில் ஒரு பகுதியாவார். அவரை வெறுப்படையச் செய்வது என்னை வெறுப்படையச் செய்வதாகும். அவரை மனவேதனைப்படுத்துவது என்னை மனவேதனைப் படுத்துவதாகும் என்று சொன்னார்கள்.’  (அறிவிப்பவர்: மிஸ்வர் பின் மக்ரமா (ரழி)இ நூல்: ஸஹீஹ் முஸ்லிம்-4839)

5. மற்றவர்கள் தனதுசெயற்பாடுகளைப் புரிந்து கொண்டு பின்பற்றவேண்டுமென்பதற்காக செய்தவைகள்.

‘அரஃபா நாளில் நபி (ஸல்) அவர்கள் நோன்பு வைத்திருக்கின்றார்களோ என்ற சந்தேகம் மக்களுக்கு ஏற்பட்டது. எனவே நான் நபி (ஸல்) அவர்களுக்குப் பானம் அனுப்பிவைத்தேன். அதையவர்கள் குடித்தார்கள்.’ (அறிவிப்பவர்: உம்முல் ஃபள்ல் (ரழி) நூல்: ஸஹீஹுல் புஹாரி-1658)

‘அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதன் மீது (மிம்பர்) நின்று தொழு(வித்)ததையும் அதன் மீது நின்று தக்பீர் கூறியதையும் அதன் மீது ருகூஉ செய்ததையும். பிறகு (முதுகைத் திருப்பாமல்) பின்வாட்டில் நகர்ந்து வந்து அந்த சொற்பொழிவுமேடையின் அடிப்பாகத்திற்கு இறங்கி அதில் சஜ்தா செய்ததையும் பிறகு பழையபடி மேடைக்கே சென்றதையும் நான் பார்த்தேன். தொழுது முடித்ததும் மக்களை முன்னோக்கி ‘மக்களே! நீங்கள் என்னைப் பின்பற்ற வேண்டும் என்பதற்காகவும் எனது தொழுகையை நீங்கள் அறிந்துகொள்ளுவதற்காகவுமே நான் இவ்வாறு செய்தேன்’ என்று குறிப்பிட்டார்கள்.’ (நபிமொழியின் சுருக்கம்) (அறிவிப்பவர்: அபூ ஹாஸிம் பின் தீனார் (ரஹ்) நூல்: ஸஹீஹுல் புஹாரி-917)

‘அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘விடைபெறும்’ ஹஜ்ஜின் போது தமது ஒட்டகத்தின் மீதமர்ந்து கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வந்தார்கள். அப்போது (கைத்தடியால்) ஹஜருல் அஸ்வதைத் தொட்டு முத்திமிட்)டார்கள். (கூட்ட நெரிசலில்) தம்மைவிட்டு மக்கள் விரட்டியடிக்கப்படுவதை அவர்கள் வெறுத்ததே அ(வர்கள் வாகனத்தில் அமர்ந்திருந்த)தற்குக் காரணமாகும்.’ (அறிவிப்பவர்: ஆயிஷா (ரழி) நூல்: ஸஹீஹ் முஸ்லிம்-2443)

6. இது தவிர ஒருவரின் கேள்விக்கு பதிலாக ஒருவரின் செயற்பாட்டைக் கண்டிக்கும் விதத்தில் ஒருவரின் செயற்பாட்டை புகழும் விதத்தில் மற்றும் அங்கீகரிக்கும் வகையில் கூறியவைகள்:

‘நான் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இருந்தேன். அப்போது அவர்கள் தம்முடனிருந்த ஒரு மனிதரிடம் நான் சாய்ந்துகொண்டு சாப்பிடமாட்டேன் என்று சொன்னார்கள்.’ (அறிவிப்பவர்: அபூஜுஹைபா (ரழி)இ நூல்: ஸஹீஹுல் புஹாரி-5399)

‘ஒருவர் தம் துணைவியுடன் தாம்பத்திய உறவு கொண்டார். விந்தை வெளியாக்காமல் எழுந்து விட்டார். இந்நிலையில் அவர்கள் இருவர் மீதும் குளியல் கடமையாகுமா? என்று ஒரு மனிதர் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டார். அப்போது நானும் அங்கு அமர்ந்திருந்தேன். அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘இதோ இவளும் நானும் அவ்வாறு செய்வோம். பின்னர் நாங்கள் குளிப்போம்’ என்றார்கள்.’ (அறிவிப்பவர்: ஆயிஷா (ரழி) நூல்: ஸஹீஹ் முஸ்லிம்-580)

‘அழ்ழாஹ்வின் மீதாணையாக! உங்களைவிட அதிகமாக நான் அழ்ழாஹ்வை அஞ்சுபவன் ஆவேன். அழ்ழாஹ் வைப் பயந்து நடப்பவன் ஆவேன். ஆயினும் நான் நோன்பு நோற்கவும் செய்கிறேன். விட்டுவிடவும் செய்கிறேன். தொழவும் செய்கிறேன். உறங்கவும் செய்கிறேன். மேலும் நான் பெண்களை மணமுடித்தும் உள்ளேன். ஆகவே என் வழிமுறையை யார் கைவிடு கின்றாரோ அவர் என்னைச் சார்ந்தவர் அல்லர் என்று சொன்னார்கள்.’ (அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரழி) நூல்: ஸஹீஹுல் புஹாரி-5063)

பின்பற்றும் நோக்கில் நபிகளாரின் செயற்பாடுகளை நபித்தோழர்கள் அவதானித்தல்:

‘நான் என் சிறிய தாயார் மைமூனா (ரழி) அவர்களிடம் (அவர்களது இல்லத்தில்) ஓர் இரவில் தங்கியிருந்தேன். அந்த இரவில் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எழுந்து இயற்கைக் கடனை நிறைவேற்றச் சென்றார்கள். பிறகு (வந்து) தம் முகத்தையும் கைகளையும் கழுவினார்கள். பிறகு உறங்கினார்கள். பின்னர் எழுந்து தண்ணீர் பையை நோக்கிச் சென்று அதன் (சுருக்குக்) கயிற்றை அவிழ்த்தார்கள். பின்னர் (ஒன்றுக்கும்) அதிகமான முறைகள் உறுப்புக்களைக் கழுவாமல் நடுநிலையாக அங்கத் தூய்மை (உளூ) செய்தார்கள். அதை நிறைவாகச் செய்தார்கள். பிறகு நின்று தொழுதார்கள். நானும் (மெல்ல) எழுந்தேன்.

நான் அவர்களை நோட்டமிடுவதற்காக விழித்துக் கொண்டிருப்பதை அவர்கள் காண்பது எனக்கு விருப்பில்லாததால் மெதுவாக எழுந்து அங்கத் தூய்மை செய்தேன். அப்போது அவர்கள் நின்று தொழ நான் அவர்களின் இடப்பக்கத்தில் நின்றேன். உடனே அவர்கள் என்கையைப் பிடித்துச் சுற்றி என்னைத் தமது வலப்பக்கத்திற்கு கொண்டு வந்தார்கள். பிறகு அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது இரவுத் தொழுகையைப் பதின்மூன்று ரக்அத்களுடன் முடித்துக் கொண்டார்கள். பின்னர் ஒருக்களித்துப் படுத்துக் குறட்டை விட்டபடி உறங்கினார்கள். உறங்கும் போது குறட்டை விடுவது அவர்களது வழக்கமாகும். பின்னர் பிலால் (ரழி) அவர்கள் வந்து அவர்களை (ஃபஜ்ர்) தொழுகைக்காக அழைத்தார்கள். அவர்கள் எழுந்து (புதிதாக) அங்கத் தூய்மை செய்யாமலேயே தொழுதார்கள். அப்போது அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது பிரரார்த்தனையில் (பின்வருமாறு) கூறிக்கொண்டிருந்தார்கள்.
அழ்ழாஹும்மஜ்அல் ஃபீ கல்பி நூரன். வஃபீ பஸரீ நூரன். வஃபீ சம்ஈ நூரன். வஅன் யமீனீ நூரன். வ அன் யசாரீ நூரன். வ ஃபவ்கீ நூரன். வ தஹ்தீ நூரன். வ அமாமீ நூரன். வ கல்ஃபீ நூரன். வ அழ்ழீம் லீ நூரா.

(பொருள்: இறைவா! என் இதயத்தில் ஒளியை ஏற்படுத்துவாயாக! என் பார்வையிலும் ஒளியை ஏற்படுத்துவாயாக! என் செவியிலும் ஒளியை ஏற்படுத்துவாயாக! என் வலப்பக்கத்திலும் ஒளியை ஏற்படுத்துவாயாக! என் இடப்பக்கத்திலும் ஒளியை ஏற்படுத்துவாயாக! எனக்கு மேலேயும் ஒளியை ஏற்படுத்துவாயாக! எனக்கு கீழேயும் ஒளியை ஏற்படுத்துவாயாக! எனக்கு முன்னாலும் ஒளியை ஏற்படுத்துவாயாக! எனக்கு பின்னாலும் ஒளியை ஏற்படுத்துவாயாக! எனக்கு (எல்லாத்திசைகளிலும்) ஒளியை வலிமையாக்குவாயாக!’ (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரழி), நூல்: ஸஹீஹ் முஸ்லிம்-1399)

‘நான் ஒரு நாள் இரவு அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தொழுகையை (கண்விழித்து) கவனிக்கப்போகிறேன் எனச் சொல்லிக் கொண்டேன். அப்போது அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்(முதலில்) சுருக்கமாக இரண்டு ரக்அத்கள் (உளூவின் காணிக்கையாகத்) தொழுதார்கள்(210).

பிறகு மிக மிக மிக நீளமாக இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகு இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள்.   அவ்விரு ரக்அத்களும் அதற்கு முந்திய இரு ரக்அத்களையும் விடச் சுருக்கமாக இருந்தன. பிறகு இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். அவ்விரு ரக்அத்களும் அதற்கு முந்திய இரு ரக்அத்களையும் விடச் சுருக்கமாகவே  இருந்தன. பிறகு இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள் .

அவ்விரு ரக்அத்களும் அதற்கு முந்திய இரு ரக்அத்களையும் விடச் சுருக்கமாகவே  இருந்தன. பிறகு இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள்(210). அவ்விரு ரக்அத்களும் அதற்கு முந்திய இரு ரக்அத்களையும் விடச் சுருக்கமாகவே  இருந்தன. பிறகு (ஒரு ரக்அத்) வித்ர் தொழுதார்கள்(110).  இவை பதின்மூன்று ரக்அத்கள் ஆகும்(13).’ (அறிவிப்பவர்: ஸைத் பின் காலித் அல்ஜுஹைனி (ரழி) நூல்: ஸஹீஹ் முஸ்லிம்-1413)

‘அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் உசாமா பின் ஸைத் (ரழி) பிலால் (ரழி) உஸ்மான் பின் தல்ஹா (ரழி) ஆகியோரும் கஅபாவினுள் சென்று கதவை மூடிக்கொண்டார்கள். அவர்கள் கதவைத் திறந்தபோது நானே முதல் முதலில் உள்ளே நுழைந்தேன். பிலால் (ரழி) அவர்களிடம் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (கஅபாவினுள்) தொழுதார்களா என்று கேட்டேன். பிலால் (ரழி) அவர்கள் ஆம்! வலப் புறத்து இரு தூண்களுக்கு மத்தியில் எனப் பதிலளித்தார்கள்.’ (அறிவிப்பவர்: அப்துழ்ழாஹ் பின் உமர் (ரழி) நூல்: ஸஹீஹுல் புஹாரி-1598)

‘ஒரு நாள் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்)  அவர்கள் மக்கா வீதியில் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். அவர்களுடன் இப்னு உமர் (ரழி) அவர்களும் இருந்தார்கள். அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் மறைவிற்குப் பின் இப்னு உமர் (ரழி) அவர்கள் அவ்வீதியால் செல்ல நேரிட்டால் இரண்டு ரக்அத்கள் தொழாமல் செல்லமாட்டார்கள்.

இது தொடர்பாக அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கும் போத இப்னு உமரை விட அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய நடவடிக்கைகளை பின்பற்றும் எவரையும் நான் கண்டதில்லை என்று கூறினார்கள்.’ (அறிவிப்பவர்: நாபிஉ (ரஹ்) நூல்: ஸியரு அஃலா மின்நுபலா (இப்னு உமர் (ரழி) அவர்கள் பற்றிய பாடம்)

அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் செயற் பாடுகளில் வணக்கம் என்ற வகையில் பின்பற்றப்படுவதற்கு அப்பாலும் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் செயற்பாடுகளை இப்னு உமர் (ரழி) அவர்கள் பின்பற்றுபவர்களாக இருந்தார்கள்.  ஆனால் அவை அனைத்தும் வணக்கம் என்பதற்குள் உள்ளடங்காது என்பதனை இன்ஷா அழ்ழாஹ் எதிர்வரும் தொடர்களில் நோக்குவோம்.

0 comments:

Post a Comment