Monday, August 23, 2010

ஸுன்னா ஓர் அறிமுகம்

மௌலவி SLM. நஷ்மல் (பலாஹி)
nashmelslm@yahoo.com

(முஹம்மத்) அவர் மனோ இச்சைப்படி பேசுவதில்லை. அ(வர் பேசுவ)து அறிவிக்கப்படும் செய்தியைத் தவிர வேறில்லை (53:3-4)

இஸ்லாமிய மார்க்கத்தின் இரண்டாவது சட்ட மூலாதாரம் ‘ஸுன்னா’ஆகும். இஸ்லாமிய உலகிலும், தமிழ் பேசும் மக்கள் மத்தியிலும் இஸ்லாமிய எழுச்சியும், மார்க்கம் பற்றிய விழிப்புணர்வும் ஏற்பட்டுவருகின்ற இக்காலகட்டத்தில், தவ்ஹீத் பிரச்சாரத்தின் அடிப்படைகளில் ஒன்றான, ‘ஸுன்னா’ வின்பால் மக்களை அழைக்க வேண்டிய அவசிய நிலை காணப்படுகின்றது.

நபிகளாரின் ‘அல்ஹதீஸ்’ எனப்படும் ‘ஸுன்னா’ விடயத்தில் நாம் அதீத கவனம் செலுத்தக் காரணம் என்னவெனில், இஸ்லாமிய மார்க்கத்தில்‘ஸுன்னா’வுக்கு வழங்கப்பட்டுள்ள அளப்பரிய மகத்துவமும், அந்தஸ்த்து மேயாகும்.

‘ஸுன்னா’ என்பது திருமறை குர்ஆனுக்கான விளக்கவுரையாகும். ஏனெனில், திருமறை வசனங்களை விளக்கும் விதமாகவும், அதன் அந்தரங்கங்களை வெளிக் கொணர்வதாகவும், வரையறைகளை தெளிவு படுத்துவதாகவும் அல்குர்ஆனுக்கு செயல் வடிவம் கொடுக்கின்றதாகவும்‘ஸுன்னா’ அமைந்துள்ளது.

‘ஸுன்னா’வினை விடுத்து அல்குர்ஆனோடு மாத்திரம் சுருங்கிக் கொள்ள முடியாத இஸ்லாமிய மார்க்கத்தில் தூதரைப் பின்பற்றுவது பற்றி திருமறை என்ன கூறுகின்றது என்பதனையும், இறைத்தூதரின் பணிகள் தொடர்பாக ஆராய்வதன் மூலம் ஸுன்னாவின் முக்கியத் துவத்தினை உணர்ந்து கொள்ளலாம்.

01. திருக்குர்ஆனைப் போன்று ‘ஸுன்னா’வும் அல்லாஹ்வின் வஹியாகும்.

‘அவர் மனோ இச்சைப்படி பேசுவதில்லை. அவர் பேசுவது, அறிவிக்கப்படும் செய்தியைத் தவிர வேறில்லை’ (53:3,4).

02. திருமறை குர்ஆனை மக்களுக்கு விளக்கும் பணி இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மீதே பொறுப்பாக்கப்பட்டதாகும்.

‘மக்களுக்கு அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு விளக்க வேண்டும் என்பதற்காகவும், அவர்கள் சிந்திக்க வேண்டும் என்பதற்காகவும் இந்தப்போதனையை உமக்கு அருளினோம்’ (16:44).

‘எந்த தூதரையும், அவர் தமது சமுதாயத்திற்கு விளக்கி கூறுவதற்காக அச்சமுதாயத்தின் மொழியிலேயே அனுப்பினோம். தான் நாடியோரை அல்லாஹ் வழிகேட்டில் விட்டுவிடுகிறான். தான் நாடியோருக்கு நேர்வழி காட்டுகின்றான். அவன் மிகைத்தவன், ஞானமிக்கவன்’ (14:4).

03. இறைவனுக்கு வழிப்பட்டவராக வேண்டுமென்றால் தூதருக்கும் வழிப்பட்டேயாக வேண்டும்.

‘இத்தூதருக்கு (முஹம்மதுக்கு) கட்டுப்பட்டவர் அல்லாஹ்வுக்கு கட்டுப் பட்டவராவார். யாரேனும் புறக்கணித்தால் உம்மை அவர்களின் காப்பாளராக நாம் அனுப்பவில்லை’ (4:80).

04. பிறப்பு முதல் இறப்பு வரை எமது தனிப்பட்ட, சமூக, அரசியல் விவகாரங்கள், வணக்கவழிபாடுகள் அனைத்திலும் சர்ச்சை, தெளிவின்மை ஏற்படும் போது அல்குர்ஆன், அஸ்ஸுன்னாவினை நோக்கியே பயணிக்க வேண்டும்.

இறை விசுவாசத்தின் அடிப்படையும் அதுவேதான்.

‘நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி இருந்தால் அல்லாஹ்வுக்கு கட்டுப்படுங்கள்! இத்தூதருக்கும் (முஹம்மதுக்கும்),   உங்களில் அதிகாரம் உடையோருக்கும் கட்டுப்படுங்கள்! ஏதேனும் ஒரு வி’யத்தில் நீங்கள் முரண்பட்டால் அதை அல்லாஹ்விடமும், இத்தூதரிடமும் கொண்டு செல்லுங்கள்! இதுவே சிறந்ததும், மிக அழகிய விளக்கமுமாகும்’ (4:59).

05. தூதரின் ஏவல், விலக்கல்களை கவனத்திற் கொள்ளாது விட்டால் அல்லாஹ்வின் கடுமையான தண்டனைக்கு உட்பட நேரிடும்.

‘இத்தூதர் உங்களுக்கு எதைக்கொடுத்தாரோ அதை வாங்கிக்கொள்ளுங்கள்! எதை விட்டும் உங்களை தடுத்தாரோ(அதிலிருந்து) விலகிக்கொள்ளுங்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் கடுமையாக தண்டிப்பவன்’ (59:07).

06. தூதருக்கு மாறு செய்தால் குழப்பம் ஏற்படுவதுடன், கடினமான வேதனைக்கும் இலக்காகவேண்டி வரும்.

‘உங்களில் ஒருவர் மற்றவரை அழைப்பதைப் போல் இத்தூதரை அழைக்காதீர்கள்! உங்களில் மறைந்து நழுவி விடுவோரை அல்லாஹ் நன்கறிவான். அவருடைய கட்டளைக்கு மாறு செய்வோர் தமக்கு துன்பம் ஏற்படுவதையோ, துன்புறுத்தும் வேதனை ஏற்படுவதையோ அஞ்சிக் கொள்ளவும்’ (24:63).

07. அல்லாஹ்வினதும் அவனது தூதரினதும் தீர்ப்பை உளமாற ஏற்கவேண்டும். அல்லாஹ்வும் அவனது தூதரும் ஒரு விடயத்தில் தீர்ப்புச் செய்தால் மனோ இச்சை, பெரியார்கள், மத்ஹபுகள் போன்றவற்றிற்கு அடிமையாகாது. அப்படியே கட்டுப்படுவதுதான் நம்பிக்கை கொண்ட ஆண்களினதும், பெண்களினதும் கடமையாகும்.

‘அல்லாஹ்வும், அவனது தூதரும் ஒரு காரியத்தை முடிவு செய்யும்போது நம்பிக்கை கொண்ட ஆணுக்கும், பெண்ணுக்கும் தமது அக்காரியத்தில் சுய விருப்பம் கொள்ளுதல் இல்லை. அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறு செய்பவர் தெளிவாக வழிகெட்டு விட்டார்’ (33:36).

நாம் மேற்கண்ட வசனங்களிலிருந்து ‘ஸுன்னா’வின் முக்கியத்துவத்தினையும் இஸ்லாமிய மார்க்கத்தில் அது பெற்றிருக்கின்ற மிக உயர்ந்த அந்தஸ்த்தினையும் அறிந்து கொள்ளும் அதே வேளை, சமுதாயத்தில் ‘ஸுன்னா’வின் யதார்த்தமும், அது பற்றிய விழிப்புணர்வும் இல்லாத போதுதான் தனிமனிதர்களுக்குப் பின்னால் சென்று ‘பித்அத்’களை உயிர்ப்பித்து தமது அமல்களின் பரக்கத்துக்களை இழப்பதனைப் பார்க்கின்றோம்.

எனவேதான் எமது பிரச்சாரத்தில், மக்களை ‘ஸுன்னா’வின்பால் அழைக்கின்ற பெரும் பணியைச் செய்து வருவதனை மக்களாகிய நீங்கள் நன்கறிவீர்கள். அல்லாஹ்வின் தூதருடைய ‘ஸுன்னா’வின் மீது முஸ்லிம்கள் தமது முழுக் கவணத்தையும் செலுத்தும் போதுதான் இச்சமூகம் அல்லாஹ்வின் திருப்தியைப் பெற்றுக்கொள்ளும்.

இன்ஷா அல்லாஹ் இத்தொடரில் ஸுன்னாவின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்கின்ற அதேவேளை ஸுன்னாவிற்கெதிரான அம்சங்கள், மக்கள் மத்தியில் ஸுன்னா சென்றடையத் தடையாகவுள்ள அம்சங்கள் போன்றவற்றை சற்று விரிவாக நோக்குவோம்

0 comments:

Post a Comment