Sunday, August 8, 2010

நிரந்தர நரகத்தினைப் பெற்றுத் தரும் தற்கொலை

முஹம்மட் அர்ஷாத் அல் அதரி
arshathalathary@gmail.com

“ யார் தமது கழுத்தை நெறித்துத் தற்கொலை செய்து கொள்கின்றாரோ, அவர் நரகத்திலும் தமது கழுத்தை நெறித்துக்கொண்டிருப்பார். யார் தம்மைத் தாம் (ஆயுதத்தால்) தாக்கித் தற்கொலை செய்துகொள்கின்றாரோ அவர் நரகத்திலும் தம்மை ஆயுதத்தால் தாக்கிக்கொண்டிருப்பார் என்று அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.” (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-1365)

இன்றைய பத்திரிகைகள் மற்றும் உள்ள வெகுஜன ஊடகங்களில்…
‘பல்கலைக்கழக மாணவி தீக்குளித்து தற்கொலை’
‘சீதனக் கொடுமையால் இளம் பெண் தற்கொலை’
‘பெற்ற கடனுக்கு வட்டி கட்ட முடியாத விவசாயி தற்கொலை’
போன்ற செய்திகளே அதிகளவில் காணப்படுகின்றன.
இன்பமும், துன்பமும் இணைந்ததுதான் மனித வாழ்க்கை. இவ்வாழ்க்கைப் பயணத்தில் ஒரு சிலரின் வாழ்வு வசந்தம் வீசுகின்ற இன்பப் பூஞ்சோலையாக இருக்கின்றது.

சிலரின் வாழ்வோ சோதனைகளும், வேதனைகளும் நிறைந்த வரண்ட பாலைவனமாகக் காணப்படுகின்றது. மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் சோதனைகளும், வேதனைகளும் உண்டு. ஏனெனில், துன்பங்களும், துயரங்களும் மனித வாழ்வோடு பிண்ணிப் பிணைந்தது. மாத்திரமன்றி அதுவே இறைவனின் நியதியுமாகும்.

இதனையே அருள்மறைக் குர்ஆன் பின்வருமாறு குறிப்பிடுகின்றது.

“ஓரளவு அச்சத்தாலும், பசியாலும் செல்வங்கள், உயிர்கள், மற்றும் பலன்களைச் சேதப்படுத்தியும் உங்களைச் சோதிப்போம். பொறுத்துக் கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக!” (அல்குர்ஆன் 2:155)

மேலுள்ள திருமறை வசனம் பயம், பஞ்சம், பசி, பட்டினி, உயிரிழப்புக்கள் மற்றும் சேதங்கள் போன்ற இன்னோரன்ன காரணிகளால் சோதனைகளை எதிர்நோக்கியே ஆகவேண்டும் எனவும், இவ்வாறான துன்பங்களும், துயரங்களும் நிறைந்த நேரத்தில் பொறுமையைக் கடைப்பிடிப்பவர்களுக்கு சுபசோபனமும் கூறுகின்றது.

இவ்வாறு சோதனைகளுக்கும், வேதனைகளுக்கும் உள்ளாவோரில் முஸ்லிம்கள், முஸ்லிமல்லாதவர் என்ற பாகுபாடின்றி அனைவரும் சமமாகவே உள்ளனர். விசுவாசங் கொண்ட முஸ்லிம்கள் என்பதற்காக அவர்களை சோதனைகளும், வேதனைகளும் வந்தடையாதிருப்பதில்லை.
இதனைத் திருமறைக்குர்ஆன் பின்வருமாறு குறிப்பிடுகின்றது.

“நம்பிக்கை கொண்டோம் என்று கூறியதன் காரணமாக சோதிக்கப்படாமல் விடப்படுவார்கள் என மனிதர்கள் நினைத்து விட்டார்களா?”  (அல்குர்ஆன் 29:02)

இவ்வாறு துன்பங்களும், துயரங்களும், கஷ்டங்களும், கடினங்களும் எம்மை வந்தடைகையில் பலர் நிரந்தர நரகத்தினைப் பெற்றுத் தரக்கூடிய தற்கொலையையே தீர்வாக நினைக்கின்றனர். தனது உயிரினை மாய்த்துக் கொள்வதனால் தனது துன்பங்களுக்கும்,  துயரங்களுக்கும் தீர்வு கிடைத்து விட்டதாக எண்ணுகின்றனர்.

தற்கொலையைத் தீர்வாக நினைக்க கூடியவர்கள், தான் மாத்திரமே உலகில் பிரச்சினைகளை எதிர்நோக்குவதாக கருதுகின்றனர். உலகில் யாருமே எதிர்நோக்காத பிரச்சினைகள் தனக்கு வந்துவிட்டதாக கருதியே நிரந்தர நரகவாதியாக்கும் தற்கொலைக் கலாசாரத்தினை கையில் எடுக்கின்றனர்.
ஏழைக்கு உண்பதற்கு உணவில்லை என்கின்ற பிரச்சினை என்றால் பணக்காரனுக்கு இருக்கின்ற உணவினை உண்ண முடியாத சூழ்நிலை. ஆக மொத்தத்தில் ஒவ்வொரு மனிதனும் வெவ்வேறு வடிவங்களில் தினந்தோறும் சோதனைகளையும், வேதனைகளையும் அனுபவித்துக் கொண்டேயிருக்கின்றான்.

இதனை அருள்மறை குர்ஆன் குறிப்பிடுகையில், “உங்களையே கொன்று விடாதீர்கள்! அழ்ழாஹ் உங்கள் மீது நிகரற்ற அன்புடையோனாக இருக்கிறான்.” (அல்குர்ஆன் 29:02)  என்று கூறுகின்றது.

உயிரை மாய்த்துக் கொள்வதன் மூலம் நமது கஷ்டங்களும், கடினங்களும் அகன்று விடும் என தற்கொலைக் கலாசாரத்தை கையிலெடுக்கக் கூடியவர்கள் நினைக்கின்றார்கள். ஆனால், மறுமையில் கிடைக்க கூடிய நிரந்தர நரகத்தினை மறந்து விடுகின்றார்கள்.

உலகில் வீர, தீரமாகப் பேசக் கூடிய சிலர் கூட தனது சொந்த வாழ்வு என வருகையில் தன்னுயிரை தானே மாய்த்துக் கொள்ளும் தடுக்கப்பட்ட செயலைச் செய்து விடுகின்றனர். இதற்குச் சிறந்த சான்றாக கொடுங்கோலன் ஹிட்லரின் வாழ்வு அமைந்துள்ளது. பல இலட்ச மனித உயிர்களை காவு கொண்ட கொடுங்கோலன் ஹிட்லர் தானியக் கிடங்கில் தூக்கிட்டு இறந்ததாக வரலாறு நமக்குச் சான்று பகர்கின்றது.

மேலும், அருள்மறைக் குர்ஆனையும், அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது உன்னதமான வழிகாட்டலினையும் அணுவணுவாகப் பின்பற்றக் கூடியவர்களானாலும் இவ்வுலகில் கஷ்டங்கள், சோதனைகளில் இருந்து விதிவிலக்களிக்கப்படமாட்டார்கள் என்பதனை திருமறைக் குர்ஆன் பின்வருமாறு கூறுகின்றது.

“இப்ராஹீமை அவரது இறைவன் பல கட்டளைகள் மூலம் சோதித்த போது அவற்றை அவர் முழுமையாக நிறைவேற்றினார்.” (அல்குர்ஆன் 02:124) 

இவ்வாறான நேரங்களில் ஒரு விசுவாசி எவ்வாறு நடந்து கொள்ள வேண்டுமென அல்குர்ஆன் கற்றுத் தருகின்றது.

“நம்பிக்கை கொண்ட எனது அடியார்களே! உங்கள் இறைவனை அஞ்சுங்கள்! இவ்வுலகில் நன்மை செய்தோருக்கு நன்மையே உள்ளது. அழ்ழாஹ்வின் பூமி விசாலமானது. பொறுமையாளர்களுக்குக் கணக்கின்றி கூலி வழங்கப்படும் என்று (இறைவன் கூறுவதைத்) தெரிவிப்பீராக!”  (அல்குர்ஆன் 39:10)

மேலும்,  எம்மை கஷ்டங்களும்,  சோதனைகளும் வந்தடைகையில் இறைவன் எம்மை இவ்வாறு சோதனைகளைத் தந்து சோதிக்கின்றான். இதன் மூலம் அவன் எம்மை நேசிக்கின்றான் என நாம் எண்ணுகையில் பிரச்சினைகள் மலையெனக் குவிந்த போதிலும் இறை நம்பிக்கைக்கு முன் பெரிதாகத் தோன்றாது.

இவ்வாறாக, எம்மை சோதிக்கின்ற இறைவன் இத்தகைய சோதனைகளுக்கு பகரமாக எம்மீது கொண்ட அளவிலா கருணையின் காரணமாக எமது பாவங்களையும் மன்னிக்கத் தவறுவதில்லை. 

“அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். யாருக்கு அழ்ழாஹ் நன்மையை நாடுகின்றானோ அவரை (சத்திய) சோதனைக்கு உள்ளாக்குகின்றான்.” (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), நூல்: புஹாரி-5645)

மேலும்,  “அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஒரு முஸ்லிமைத் தைக்கும் முள் உள்பட அவருக்கு நேரிடும் துன்பம், நோய், துக்கம், கவலை, தொல்லை, மனவேதனை ஆகிய எதுவாயினும் அதற்கு பதிலாக அவருடைய பாவங்களிலிருந்து சிலவற்றை அழ்ழாஹ் மன்னிக்காமல் இருப்பதில்லை.” (அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரி (ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-5641)

நாம் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகளுக்கு தற்கொலைதான் தீர்வு என்றால் இவ்வுலகினில் வீடுகளுக்கு பதிலாக மயான பூமிகளே மிகுதியாக காணப்படும். எமது உயிருக்கு சொந்தக்காரன் அழ்ழாஹ் மாத்திரமே. அதனை எடுக்கும் உரிமையும் அவனுக்கு மாத்திரமே உண்டு.

நாம் தற்கொலை மூலம் உயிரை மாய்த்துக் கொள்வது அழ்ழாஹ்வின் தனி அதிகாரத்தில் தலையிடுவதாகும். அதனால்தான் இறைவன் மிகப் பெரும் தண்டனையான நிரந்தர நரகத்தை இதற்கான தண்டனையாக நிர்ணயித்திருக்கின்றான்.

கொடிய நரகத்தினைப் பெற்றுத் தரும் இத்தற்கொலை கலாசாரமானது ஏனைய சமுதாயங்களுடன் ஒப்பிடுகையில் முஸ்லிம்களிடம் குறைவாயினும், அவ்வப்போது இவ்வாறான தற்கொலைச் சம்பவங்கள் எமது சமூகத்தில் இடம் பெறாமலுமில்லை.

தற்கொலையை தீர்வாக எடுப்பவர்களைப் பற்றி அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகையில்,

“யார் தமது கழுத்தை நெறித்துத் தற்கொலை செய்து கொள்கின்றாரோ, அவர் நரகத்திலும் தமது கழுத்தை நெறித்துக்கொண்டிருப்பார். யார் தம்மைத்தாம் (ஆயுதத்தால்) தாக்கித் தற்கொலை செய்து கொள்கின்றாரோ அவர் நரகத்திலும் தம்மை ஆயுதத்தால் தாக்கிக்கொண்டிருப்பார்.” (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி),  நூல்: ஸஹீஹுல் புஹாரி-1365)

“யார் மலையின் மீதிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொள்கிறாரோ அவர் நரக நெருப்பில் (தள்ளப்பட்டு மேலிருந்து கீழே) என்றைக்கும் நிரந்தரமாக குதித்துக்கொண்டேயிருப்பார்.

யார் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்கிறாரோ அவர் தமது விஷத்தைக் கையில் வைத்திருந்தபடி நரக நெருப்பில் என்றென்றும் நிரந்தரமாக குடித்துக்கொண்டேயிருப்பார்.

யார் ஒரு கூரிய ஆயுதத்தால் தற்கொலை செய்து கொள்கிறாரோ அவருடைய கூராயுதத்தை அவர் தமது கையில் வைத்துக்கொண்டு நரக நெருப்பில் தமது வயிற்றில் தாமே என்றென்றும் நிரந்தரமாக அதனால் குத்திக் கொண்டேயிருப்பார்.” (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-5778)

“ஜுன்துப் (ரழி) அவர்கள் இந்த (பஸ்ராவின்) பள்ளிவாசலில் வைத்து எங்களிடம் (ஒரு ஹதீஸைக்) கூறினார்கள். அதை நாங்கள் மறக்கவில்லை. மேலும் ஜுன்துப் (ரழி) அவர்கள்,  நபி (ஸல்) அவர்கள் விஷயத்தில் பொய்யைக் கூறியிருப்பார் என்று நாங்கள் அஞ்சவுமில்லை. அவர்கள் கூறியதாவது: ஒருவருக்கு ஒரு காயம் இருந்தது. (இதைத் தாங்க முடியாமல்) அவர் தற்கொலை செய்துகொண்டார். உடனே அழ்ழாஹ், என் அடியான் அவனது மரணத்தில் அவசரப்பட்டு என்னை முந்திவிட்டான்.  எனவே அவனுக்குச் சொர்க்கத்தை நான் ஹராமாக்கிவிட்டேன்  எனக் கூறினான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.’ (அறிவிப்பவர்: ஹஸன் அல்பஸரி (ரஹ்), நூல்: ஸஹீஹுல் புஹாரி-1364)

மேலுள்ள நபிமொழிகள் மூலம் தற்கொலைக் கலாசாரத்தை கையிலெடுப்பவர்கள் பெறக்கூடிய தண்டனையை அறிந்த முஸ்லிம்கள் நிரந்தர நரகத்தினைப் பெற்றுத் தரக்கூடிய இத் தற்கொலைக் கலாசாரத்தை கனவில் கூட நினைக்க மாட்டார்கள்.

ஜனாஸாத் தொழுகை கிடையாது.

நிரந்தர நரகத்தை ஈட்டித் தரக் கூடிய தற்கொலைக் கலாசாரத்தை கையிலெடுப்பவர்களுக்கு அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஜனாஸா தொழுகை நடாத்தவில்லை.

“ஒரு மனிதர் நோயுற்ற போது அவர் திடுக்கத்துக்குள்ளானார். அவருடைய அண்டை வீட்டுக்காரர் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து,
‘அவர் இறந்து விட்டார்’ என்று சொன்னார். அதற்கு அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்,  ‘அவர் இறந்தது உனக்குத் தெரியுமா?’  என்று கேட்டார்கள். ‘நான் அவரை (இறந்திருக்கக்) கண்டேன்’  என்று அம்மனிதர் கூறினார். அதற்கு அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘அவர் இறக்கவில்லை’ என்று சொன்னார்கள்.

பிறகு அம்மனிதர், (நோயாளியிடம்) வந்ததும் அவர் கூரான ஈட்டியால் தன்னை அறுத்துக் கொண்டதைக் கண்டார். உடனே, அம்மனிதர் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, ‘அவர் இறந்து விட்டார்’ என்று தெரிவித்தார். அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘அவர் இறந்தது உனக்கு எப்படித் தெரியும்?’ என்று கேட்டார்கள்.

அதற்கு அம்மனிதர், ‘அவர் தன்னிடமிருந்த கூரிய முனையுள்ள  ஈட்டியால் அறுத்துக் கொள்வதை நான் பார்த்தேன்.’  என்றார். ‘நீ  பார்த்தாயா?’ என்று அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்க, அவர் ஆம் என்றார்.

‘அப்படியானால் நான் அவருக்குத் தொழுவிக்கமாட்டேன்’ என்று சொன்னார்கள்.’  (அறிவிப்பவர்: ஜாபிர் பின் சமுரா (ரழி),  நூல்: ஸஹீஹ் முஸ்லிம்-1779,  அபூதாவூத்-3185)

“அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நாங்கள் கைபர் போரில் கலந்துகொண்டோம். அப்போரின்போது அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம்முடன் இருந்தவர்களில் தம்மை முஸ்லிம் என்று சொல்லிக்கொண்ட ஒருவரைப் பற்றி இவர் நரகவாசிகளில் ஒருவர் என்று கூறினார்கள்.

போரிடும் நேரம் வந்தபோது அந்த மனிதர் மிகக் கடுமையாகப் போரிட்டார். அப்போது அவருக்கு நிறைய காயங்கள் ஏற்பட்டு அவரை உட்காரவைத்து விட்டன. அப்போது நபித்தோழர்களில் ஒருவர் வந்து அழ்ழாஹ்வின் தூதரே! தாங்கள் எவரைக் குறித்து அவர் நரகவாசி என்று சொன்னீர்களோ அவர் இறைவழியில் கடுமையாகப் போரிட்டு அதிகமான காயங்கள் அடைந்துள்ளார் என்று கூறினார். அப்போதும் நபி (ஸல்) அவர்கள் அவர் நரகவாசிகளில் ஒருவர்தாம் என்றே கூறினார்கள்.

அப்போது முஸ்லிம்களில் சிலர் (நபி (ஸல்) அவர்களின் இச்சொல் குறித்து) சந்தேகப்படும் அளவுக்கு போய்விட்டார்கள். நிலைமை இவ்வாறு இருக்கும்போது, அந்த மனிதர் காயத்தின் வேதனையை உணரலானார். உடனே அவர் தமது கையை அம்புக்கூட்டுக்குள் நுழைத்து அதிலிருந்து ஓர் அம்பை உருவி அதன் மூலம் தற்கொலை செய்துகொண்டார். உடனே முஸ்லிம்களில் சிலர் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் விரைந்து வந்து அழ்ழாஹ்வின் தூதரே! தங்களின் அறிவிப்பை அழ்ழாஹ் உண்மையாக்கிவிட்டான். இன்ன மனிதர் தற்கொலை செய்து தம்மை மாய்த்துக் கொண்டார். (அதனால் அவர் நரகவாசிகளில் ஒருவராகிவிட்டார்) என்று கூறினர்.

அப்போது அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிலாலே! எழுந்து சென்று இறை நம்பிக்கையாளர் தவிர வேறெவரும் சொர்க்கத்தில் நுழைய முடியாது. மேலும், அழ்ழாஹ் இந்த மார்க்கத்திற்குப் பாவியான மனிதனின் மூலமாகவும் வலுவூட்டுகின்றான் என்று (மக்களிடையே) அறிவிப்புச் செய்யுங்கள் என்று கூறினார்கள்.” ( அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி),  நூல்: ஸஹீஹுல் புஹாரி-6606)

மேலுள்ள நபிமொழிகள் ஒருவர் இஸ்லாத்திற்காக அளப்பெரிய தியாகம் செய்தவராக இருந்தாலும், அவரின் இறுதி முடிவு தற்கொலையாக இருக்குமாயின் அவர் இஸ்லாத்தை விட்டு வெளியேறியவராகவே மரணிக்கின்றார் என்பதையும், அவருக்கு ஜனாஸா தொழுகை நடாத்த முடியாது என்பதனையும் அறிந்து கொள்ளலாம். மனிதன் என்கின்ற வகையில் எம்மை பல்வேறு சோதனைகளும், வேதனைகளும் வந்தடையலாம்.

ஒருவர் நீண்டகாலமாக தாங்கொணா நோயினால் சிரமப்படலாம். இன்னும் சிலருக்கு தொடர்ச்சியாக மிக நெருங்கியவர்களின் மரணங்கள் சம்பவிக்கலாம்.

மிகச் செல்வந்தனாக வாழ்ந்த ஒருவர் எதிர்பாராத முறையில் தனது சொத்து, சுகங்கள் அனைத்தையும் இழக்க நேரிடலாம். இவ்வாறாக, எம்மை நோக்கி அடுக்கடுக்காக சோதனைகள் தொடர்ந்தாலும் மறுமையை நம்பிய விசுவாசிகளான நாம் ஒரு போதும் இத்தற்கொலைக் கலாசாரத்தினை தீர்வாக நினைக்க கூடாது.

மாறாக, ஒரு முஸ்லிம் இது இறைவனின் ‘கழாகத்ர்’ (விதி) அடிப்படையில் நிகழ்ந்தது என்று இறைவன் மீது முழுப் பொறுப்புச் சாட்டுவதுடன்,  எமது உள்ளங்கள் அமைதி இழந்து காணப்படுகின்ற நேரங்களில் இறைவனை நிiனைவு கூர்ந்து உள்ளத்தினை அமைதிப்படுத்த வேண்டும். இதனையே அருள்மறைக் குர்ஆன் பின்வருமாறு குறிப்பிடுகின்றது.

“நம்பிக்கை கொண்டோரின் உள்ளங்கள் அழ்ழாஹ்வின் நினைவால் அமைதியுறுகின்றன. கவனத்தில் கொள்க! அழ்ழாஹ்வின் நினைவால்தான் உள்ளங்கள் அமைதியுறுகின்றன.” (அல்குர்ஆன் 13:28)

தற்கொலைக் கலாசாரத்தை கையிலெடுப்பவருக்கு நிரந்தர நரகம் என எச்சரிக்கின்ற இஸ்லாம் இவ்வாறான சோதனைகளையும், வேதனைகளையும் தாங்க முடியாது எனக் கருதுகின்றவர்களை நோக்கி இறுதியாக, பிரார்த்தனை ஒன்றைக் கற்றுத் தருகின்றது.

“அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். உங்களில் எவரும் தமக்கு நேர்ந்த ஒரு துன்பத்தின் காரணத்தினால் மரணத்தை விரும்ப வேண்டாம். அவ்வாறு மரணத்தை விரும்பித்தான் ஆக வேண்டும் என்றிருந்தால், ‘இறைவா! (நான்) உயிர்வாழ்வது எனக்கு நன்மையாக இருப்பின்,  என்னை உயிர் வாழச் செய்வாயாக! நான் இறந்துவிடுவதே எனக்கு நன்மையாக இருப்பின், எனக்கு இறப்பைத் தருவாயாக!’ என்று கேட்கட்டும்.” (அறிவிப்பவர்: அனஸ் (ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-6351)

இறுதியாக, எம்மை நோக்கி எவ்வாறான சோதனைகள், வேதனைகள் ஏற்பட்ட போதிலும் கொடிய நரகத்தினைப் பெற்றுத் தரும் இத்தற்கொலைக் கலாசாரத்திலிருந்து எம்மனைவரையும் அழ்ழாஹ் காத்தருள்வானாக!

0 comments:

Post a Comment