Monday, August 23, 2010

ஸுன்னாவுக்கும் அல்குர்ஆனுக்குமிடையிலான தொடர்பு

மௌலவி SLM. நஷ்மல் (பலாஹி)
nashmelslm@yahoo.com

‘மக்களுக்கு அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு விளக்க வேண்டும் என்பதற்காகவும், அவர்கள் சிந்திக்க வேண்டும் என்பதற்காகவும் இந்தப் போதனையை உமக்கு அருளினோம்’ (அல்குர்ஆன் 16:44)

நபிகளார்(ஸல்) அவர்களும் நபித்தோழர்களும் ‘ஸுன்னா’ என்ற பதத்தை பயன்படுத்திய விதம் பற்றி அறிந்து கொண்டோம்.

‘ஸுன்னா’ என்பது அல்குர்ஆனுக்கு செயல்வடிவம் கொடுக்கக்கூடியது என்ற வகையில் அல்குர்ஆனோடு இணைந்து இஸ்லாமிய மார்க்கத்தில் எத்தகைய பங்கை ஆற்றுகின்றது என்பதைப் பார்ப்போம்.  பின்வரும் மூன்று முறைகளில் ஸுன்னாவின் பயன்பாடு அமைந்து காணப்படும்.

01. திருமறைக்குர்ஆனில் இடம்பெறுகின்ற அம்சங்களை உறுதி செய்வதாக அமைந்திருத்தல்.

அதாவது அல்குர்ஆன் கூறுகின்ற குறித்ததொரு விடயத்தை ஸுன்னாவும் வேறு விதத்தில் எடுத்துச் சொல்வதாகும். அந்த வகையில் அல்குர்ஆன் ‘தொழுகையை நிலை நாட்டுங்கள்! ஸகாத்தையும் கொடுங்கள்’  (அல்குர்ஆன் 02:43),

‘நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற் காக உங்களுக்கு முன் சென்றோர் மீது கடமை யாக்கப்பட்டது போல் உங்களுக்கும் குறிப்பிட்ட நாட்களில் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது.’  (அல்குர்ஆன் 02:183)

மற்றும் ‘அந்த ஆலயத்தில் அழ்ழாஹ்வுக்காக ஹஜ் செய்வது, சென்று வர சக்தி பெற்ற மனிதர்களுக்குக் கடமை.’ (அல்குர்ஆன்  03:97) என்றெல்லாம் அல்குர்ஆன் குறிப்பிடுகின்ற விடயங்களை நபிமொழியும் பின்வருமாறு கூறுகின்றது. ‘அழ்ழாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள், இஸ்லாம் ஐந்து அம்சங்கள் மீது நிறுவப் பட்டுள்ளது.

1. அழ்ழாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என்றும், முஹம்மத் (ஸல்) அவர்கள் அழ்ழாஹ்வின் தூதர் என்றும் உறுதியாக நம்புவது.
2. தொழுகையை நிலைநிறுத்துவது.
3. (கடமையானோர்) ஸகாத் வழங்குவது.
4. (இயன்றோர் இறையில்லம் கஅபாவில்) ஹஜ் செய்வது.
5. ரமளானில் நோன்பு நோற்பது ஆகியவையாகும்.’ (அறிவிப்பவர்: இப்னு உமர் (ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-08)

அதே போன்று ‘நம்பிக்கை கொண்டோர் (அனைவரும்) சகோதரர்கள்தாம்.’ (அல்குர்ஆன்  49:10) என திருமறைக் குர்ஆன் குறிப்பிட, நபிமொழியும் ‘ஒரு முஸ்லிம் மற்ற முஸ்லிமுக்கு சகோதரர் ஆவார்’ (அறிவிப்பவர்:  அபூஹுரைரா (ரழி), நூல்: ஸஹீஹ் முஸ்லிம்-5010) எனக் கூறுகின்றது.

02. அல்குர்ஆன் குறிப்பிடுகின்ற அம்சங்களை விளக்கி வைக்கும் ஸுன்னா இவ் இரண்டாவது வகையில் அல்குர்ஆன் பொதுப்படையாகக் கூறுவதை ஸுன்னா விளக்குவதாகவும் அல்குர்ஆனின் பரந்துபட்ட பொருளை  ஸுன்னா குறிப்பாக்குவதாகவும், சிரமமான அம்சங்களை விபரிப்பதாகவும் அமைந்து காணப்படும். எனவே, இப்பகுதியினை பின்வரும் குறிப்புக்களினூடாக அவதானிக்கலாம்.

அ) மிகச்சுருக்கமாகவும், பொதுப்படையாகவும் அல்குர்ஆன் முன்வைக்கின்ற அம்சங்களை விளக்கி நிற்கும் பொறுப்பை ஸுன்னா ஏற்றுக்கொள்ளும். தொழுகை விடயத்தில் அல்குர்ஆனைப் பொறுத்த வரைக்கும் ‘தொழுகையை நிலை நாட்டுங்கள்!’ (அல்குர்ஆன் 02:43),
‘நம்பிக்கை கொண்டோர் மீது தொழுகை நேரம் குறிக்கப்பட்ட கடமையாக வுள்ளது.’ (அல்குர்ஆன்  04:103),

மற்றும் ‘நம்பிக்கை கொண்டோர் வெற்றி பெற்று விட்டனர். (அவர்கள்) தமது தொழுகையில் பணிவைப் பேணுவார்கள்.’ (அல்குர்ஆன் 23:1,2) போன்ற பொதுவான வசனங்களை அல்குர்ஆன் எடுத்துச் சொன்னாலும் தொழுகையின் நேரங்கள், ரக்அத்துக்களின் எண்ணிக்கைகள், செயன்முறை ஆகிய அனைத்து அம்சங்களையும் ஸுன்னாவே விபரிக்கின்றது.

இதனையே அழ்ழாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் ‘என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே நீங்களும் தொழுங்கள் எனக் கூறினார்கள்.’ (அறிவிப்பவர்: மாலிக் பின் ஹுவைரிஸ், நூல்: ஸஹீஹுல் புஹாரி-631) அதே போன்று ஸகாத் விடயத்தில் ஸகாத் விதியாகும் பொருட்கள், அளவுகள் போன்றவற்றையும் ஹஜ் முறைமைகள், நோன்பின் பரந்துபட்ட அம்சங்கள், சுத்தம், திருமணம், வியாபாரம், குற்றவியல் தண்டனை முறைகள் இவ்வாறு அனைத்து அம்சங்களையும் விபரிக்கின்ற பணி  ஸுன்னாவையே சாரும்.

ஆ) குறித்தவொரு சட்டத்தின் வரையறைகளை சுருக்கமாகக் கூறுதல். அல்குர்ஆனில் அந்நிஸா அத்தியாயத்தில் ‘இரண்டு பெண்களின் பாகம் போன்றது ஓர் ஆணுக்கு உண்டு என்று உங்கள் பிள்ளைகள் விடயத்தில் அழ்ழாஹ் வலியுறுத்துகிறான்.’ (அல்குர்ஆன் 04:11) என்று குறிப்பிடுகின்ற இச்சட்டம் நபிமார்களை உள்ளடக்காது என பின்வரும் நபிமொழி வரையறுக் கின்றது.

‘(நபிமார்களான) எங்கள் சொத்துகளுக்கு வாரிசாக யாரும் வரமுடியாது. நாங்கள் விட்டுச் செல்வதெல்லாம் தர்மம் தான் என்று அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்’ (அறிவிப்பவர் : ஆயிஷா(ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-3712)

மேலும், திருடுகின்ற ஆண்-பெண் இருபாலாரினதும் கைகளை வெட்டுமாறு குறிப்பிடும் அல்குர்ஆன் ‘திருடுபவன், திருடுபவள் ஆகிய இருவரின் கைகளை வெட்டி விடுங்கள்’ (அல்குர்ஆன் 05:38) எனக்கூறுகின்றது. எக்கையை, எதுவரை வெட்ட வேண்டும் என்ற கட்டுப்பாட்டை நபிமொழியே தெளிவுபடுத்துகின்றது.

இ) மேலெழுந்தவாரியாக அல்குர்ஆன் கூறும் அம்சங்களை ஸுன்னா குறிப்பாக்குகிறது. திருமறைக்குர்ஆன் வஸிய்யத் செய்தல் பற்றி ‘(இவையாவும்) அவர் செய்த மரண சாசனத்தையும் கடனையும் நிறைவேற்றிய பின்னரே’ (அல்குர்ஆன் 04:11) என்று குறிப்பிட, ஸுன்னாவானது அந்த வஸிய்யா மொத்தப் பொருளில் மூன்றிலொரு பகுதியாகவே இருக்க வேண்டும் (அறிவிப்பவர்: ஸஅத் பின் அபீவக்காஸ்(ரழி), நூல்: ஸஹீஹ் முஸ்லிம் 3349) என ஸுன்னா மட்டுப்படுத்துவதை ஹதீஸே குறிப்பிடு கின்றது.

ஈ) விளங்கச் சிரமமானதை விளக்கி வைத்தல். ‘நம்பிக்கை கொண்டு, தமது நம்பிக்கையுடன் அநீதியைக் கலந்து விடாமல் இருப்போர்க்கே அச்சமற்ற நிலை உள்ளது. அவர்களே நேர் வழி பெற்றோர். (06:82) எனும் இறை வசனம் அருளப்பட்ட போது, நாங்கள் அழ்ழாஹ்வின் தூதரே! எங்களில் தனக்கு அநீதியிழைத்துக் கொள்ளாதவர் எவர் தான் இருக்கிறார் என்று கேட்டோம். அதற்கு அவர்கள், (அதன் பொருள்) நீங்கள் சொல்வது போல் அல்ல. தங்கள் இறை நம்பிக்கையில் இணைவைப்பு எனும் அநீதியைக் கலந்து விடாதீர்கள் என்று தான் அதற்குப் பொருள். லுக்மான் தமது மகனுக்கு அறிவுரை கூறும் போது ‘என் அருமை மகனே! அழ்ழாஹ்வுக்கு இணை கற்பிக்காதே! இணை கற்பித்தல் மகத்தான அநீதியாகும்’ என்று குறிப்பிட்டதை நினைவூட்டு வீராக!’ (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்(ரலி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-3360)

மேலும், அல்பகறா வசனத்தில் இடம்பெறும் ‘வைகறை எனும் வெள்ளைக் கயிறு, கறுப்புக் கயிறிலிருந்து தெளிவாகும் வரை உண்ணுங்கள்’ (அல்குர்ஆன்  2:187) கறுப்புக் கயிற்றிலிருந்து வெள்ளைக் கயிறு என்கின்ற அம்சம் இரவையும், பகலையுமே குறிக்கின்றது என்பதை அல்ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது. ‘கறுப்புக் கயிற்றிலிருந்து வெள்ளைக் கயிறு தெளிவாகும் வரை, என்ற (2:187) இறைவசனம் அருளப்பெற்றபோதுஇ நான் ஒரு கறுப்புக் கயிற்றையும் வெள்ளைக் கயிற்றையும் எடுத்து என் தலையணையில் வைத்துக்கொண்டேன். இரவில் அதைப் பார்க்கலானேன். எனக்கு எதுவும் தெளிவாகவில்லை! விடிந்ததும் நபி (ஸல்) அவர்களிடம் சென்று இதுபற்றிக் கூறினேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், (கறுப்புக் கயிறு என்பதன் கருத்து) இரவின் கருமையும் (வெள்ளைக் கயிறு என்பதன் கருத்து) விடியலின் வெண்மையும்தான்! என்று பதிலளித்தார்கள்’ (அறிவிப்பவர்:  அதீ பின் ஹாத்திம் (ரலி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-1916)

அல்குர்ஆனில் நிரூபணமான சட்டங்களை ஸுன்னாவின் மூலம் மாற்றப்படுவதென்பது குறைந்தளவிலேயே இடம்பெறுவதால் பல அறிஞர்கள் இதனையொரு தனிப்பகுதியாகக் கருதுவதில்லை. இன்ஷா அழ்ழாஹ் எமது அடுத்த இதழில் அல்குர்ஆன் குறிப்பிடாத ஸுன்னாவினால் மாத்திரம் சட்டமாக்கப்படும் அம்சங்கள் பற்றி நோக்குவோம்.
அல்குர்ஆன் கூறுகின்ற அதே அம்சங்களை ஸுன்னாவும் உறுதி செய்வது, அல்குர்ஆன் கூறுகின்ற அம்சங்களை விட மேலதிக விளக்கங்களை ஸுன்னா தெளிவுபடுத்துவது ஆகிய இரு அம்சங்களையும் நாம் கடந்த இதழில் நோக்கினோம்.

இவ்விதழில் ஸுன்னாவானாது தனித்து நின்று எவ்வாறு சட்டங்களை ஆக்கும் என்பதைக் கவனிப்போம்.

அல்குர்ஆனைப் பொறுத்தவரைக்கும் கால சூழ்நிலைகளுக்கேற்ப அர்ஷில் உள்ள அழ்ழாஹ்வால் இறக்கியருளப்பட்ட வேதநூலாகும். மக்கா காலகட்டத்தில் இறக்கியருளப்பட்ட வசனங்களை நோக்கினால் இறைவனை மட்டும் வணங்குவது பற்றியும், ஓரிறைக் கொள்கையினை மனித நெஞ்சங்களில் ஆழப்பதிப்பதை நோக்காக கொண்டிருப்பதனையும் காணலாம். எனவேதான், அல்குர்ஆன் இரத்தினச்சுருக்கமாகவும், மேலோட்டமாகவும் பேசியவற்றையெல்லாம் ஸுன்னாவே மிகவிபரமாகத் தெளிவுபடுத்துகின்றது.
அவ்வாறே அல்குர்ஆன் குறிப்பிடாத பல்வேறு அம்சங்களை ஸுன்னாவே முதன்முதலில் அறிமுகம் செய்கின்றது. இதனை அறிஞர்கள் ‘ஸுன்னா முஷர்ரிஆ’ என்று அழைக்கின்றனர்.

ஹலால், ஹராம் என்பவற்றைத் தீர்மானிக்கின்ற விடயத்தில் திருமறைக்குர்ஆனுக்கு நிகராக ஸுன்னாவும் சட்டமியற்றும் என்பதே அல்குர்ஆன், ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் தீர்ப்புச் சொல்பவர்களின் நிலைப்பாடாகும்.

இது குறித்து பெருமானார் (ஸல்) அவர்கள் குறிப்பிடுகையில்,
‘அறிந்து கொள்ளுங்கள் நான் அல்குர்ஆனையும், அது போன்ற ஒன்றையும் கொடுக்கப்பட்டுள்ளேன்’என்று குறிப்பிட்டார்கள்.’(அறிவிப்பவர்: மிக்தாம் பின் மஃதி கரிப் (ரழி), நூல்: அஹ்மத் 16841)

அல்குர்ஆன் வசனங்களை விபரிக்கின்ற மற்றும் வரையறைகளை விதிக்கின்ற ஒரு பெரும்பணியை ஸுன்னாவால் மேற்கொள்ள முடியுமாக இருந்தால், அல்குர்ஆன் கூறாத சட்டங்களை கூட வஹியென்ற வகையில் ஸுன்னா கொண்டு வரும்.

இது விடயத்தில் ஹவாரிஜுகள், முனாபிக்குகள் மற்றும் ஸிந்தீக்குகள் மாற்றுக் கருத்தில் இருந்தார்கள். ஸுன்னா இரண்டாம் நிலை வஹியென்று கூறிய அவர்கள் ஒரு இட்டுக்கட்டப்பட்ட செய்தியையும் அறிமுகம் செய்தார்கள். ‘என்னைத் தொட்டு ஏதேனும் விடயம் உங்களிடம் வந்தால் அதனை அல்குர்ஆனோடு பொருத்திப்பாருங்கள்.

அல்குர்ஆனோடு உடன்பட்டால் அதனை நான் சொல்லியிருப்பேன். அல்குர்ஆனோடு முரண்பட்டால் அதனை நான் சொல்லவில்லை என்று எடுத்து கொள்ளுங்கள்’; என்பதே அவ் இட்டுக்கட்ப்பட செய்தியாகும். அல்குர்ஆன் மட்டும் போதும் என்கின்ற பயங்கர வழிகேட்டின் அடிப்படையும் இதுவேயாகும்.

இன்று அரபு நாட்டிலும், தமிழ் நாட்டிலும் அல்குர்ஆன் மட்டும் போதும் என்று கோஷமிடுகின்ற ஒரு சிந்தனைப்பிரிவினர் அல்குர்ஆனின் ஒரு சில வசனங்களை மாத்திரம் மேலோட்டமாக விளங்கிக் கொண்டு (உதாரணமாக: இவ்வேதத்தை ஒவ்வொரு பொருளுக்கும் விளக்கமாகவும், நேர் வழியாகவும், அருளாகவும், முஸ்லிம்களுக்கு நற்செய்தியாகவும் உமக்கு அருளினோம். அல்குர்ஆன் 16:89)  ஸுன்னா தேவையற்றது என்று கூறுகின்றனர். ஆனால் ஸுன்னாவில் மாத்திரம் குறிப்பிடப்பட்டுள்ள பல்வேறு அம்சங்களை அவர்களது வாழ்வில் நடைமுறைப்படுத்துகின்றனர். எடுத்துக்காட்டாக, செத்த பிராணிகள், இரத்தம் போன்றவற்றை உண்பதை அல்குர்ஆன் முற்றாக தடைசெய்கின்றது.

‘தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி, அழ்ழாஹ் அல்லாதோருக்காக அறுக்கப்பட்டவை உங்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளன.’(அல்குர்ஆன் 05:03)

ஆனால், இப்பொதுத் தடையிலிருந்து செத்த மீன்களும், கல்லீரல், மண்ணீரல்  என்பனவும் விலக்களிக்கப்பட்டுள்ளன  என ஸுன்னா பறைசாற்றுகின்றது. இந்தக் குர்ஆனிய்யீன்கள் தங்களது குற்றில் உண்மையாளர்களாக இருந்தால் உயிருள்ள மீனையே சாப்பிட வேண்டும். ஈரல் வகைகளை உண்ணக் கூடாது. இத்தகைய வழிகெட்ட சிந்தனையிலிருந்து அழ்ழாஹ் எம்மைக் காப்பாற்றுவானாக!

இவ்விடத்தில் வாசகர்கள் மற்றுமொரு விடயத்தையும் புரிந்து கொள்ள வேண்டும்.

அதாவது அல்குர்ஆன், ஹதீஸில் இல்லாத அம்சங்களை இஜ்மா, கியாஸ் மற்றுமுள்ள சட்ட மூலாதாரங்களால்தான் புரிந்து கொள்ள முடியும் எனக்கூறுகின்றவர்கள்  பெரும்பாலும் ஸுன்னாவை இரண்டாம் நிலை வஹியாகவே கருதுகின்றார்கள்.ஆனால்,

‘அவர் மனோ இச்சைப்படிப் பேசுவதில்லை. அ(வர் பேசுவ)து அறிவிக்கப்படும் செய்தியைத் தவிர வேறில்லை.’ (அல்குர்ஆன் 53:3,4) எனும் வசனமானது ஸுன்னாவும் அல்குர்ஆனுக்கு நிகரான வஹியே என்பதை உணர்த்துகின்றது.
ஸுன்னாவின் பணி பற்றிக்கருத்துக் கூறுகையில் அறிஞர் அவ்சாயி அவர்கள் ‘ஸுன்னா அல்குர்ஆனின் பால் தேவையாவதை விட அல்குர்ஆன் ஸுன்னாவின் பால் அதிகம் தேவையுடையது’ என்றும், யஹ்யா பின் கதீர் அவர்கள் ‘அல்குர்ஆன் தொடர்பாக தீர்ப்புக் கூறக்கூடியது ஸுன்னாவே’ எனக் கூறுகின்றார்கள்.

அந்த வகையில் ஸுன்னாவால் மாத்திரம் சட்டமாக்கப்பட்ட சில அம்சங்களை பின்வருமாறு நோக்கலாம்.

01.ஒரு பெண்ணையும் அவளது தாயின் சகோதரியையும், ஒரு பெண்ணோடு அவளது தந்தையின் சகோதரியையும் ஒரே நேரத்தில் திருமணம் செய்வது தடைசெய்யப்பட்டுள்ளது.

‘(ஒருவர்) ஒரு பெண்ணையும் அவளுடைய தந்தையின் சகோதரியையும், அல்லது தாயின் சகோதரியையும் (சேர்த்து) மணமுடிப்பதற்கு அழ்;ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்.’ (அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), நூல்:ஸஹீஹுல் புஹாரி 5108)

02.பறவைகளில் கோரைப் நகங்களால்; கிழித்தும், மிருகங்களில் கோரைப் பற்களால் குதறியும் சாப்பிடும் பிராணிகளை உண்ணுவது தடைசெய்யப்பட்டுள்ளது.

‘விலங்குகளில் கோரைப் பற்கள் உள்ள ஒவ்வொன்றையும், பறவைகளில் கோரை நகங்கள் உள்ள ஒவ்வொன்றையும் (உண்ணக் கூடானெத்) அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.’ (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரழி), நூல்: ஸஹீஹ் முஸ்லிம் 3914)

03.நாட்டுக் கழுதைகள் சாப்பிடுவது தடைசெய்யப்பட்டுள்ளது.

‘அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நாட்டுக் கழுதைகளின் இறைச்சியை உண்ணவேண்டாமெனத் தடை செய்தார்கள்’ (அறிவிப்பவர்:  அப்துல்லாஹ்பின் உமர் (ரலி), நூல்: ஸஹீஹுல் புஹாரி 5522)

04.திருமணம் முடித்த விபச்சாரியை கல்லெறிந்து கொல்ல வேண்டும்.

‘(விபசாரம் புரிந்துவிட்ட ஒரு பெண்ணுக்கு மக்கள் கூடும்) வெள்ளிக்கிழமை (ஜுமுஆ) அன்று கல்லெறி தண்டனையை நிறைவேற்றியபோது அலீ (ரலி) அவர்கள் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வழிமுறைப்படியே நான் இவளுக்குக் கல்லெறி தண்டனை வழங்கினேன் என்று சொன்னார்கள்’  (அறிவிப்பவர்:  ஆமிர் அஷ்ஷஅபீ (ரஹ்), நூல்: ஸஹீஹுல் புஹாரி 6812)

05.காலுறை அணிந்துள்ளவர் வுழுச் செய்யும் போது இறுதியாகக் காலைக் கழுவாமல் காலுறை மேல் தண்ணீரைத் தடவுதல்.

‘முஃகீரா (ரலி) அவர்கள் கூறியதாவது, நான் ஒரு பயணத்தில் நபி (ஸல்) அவர்ளுடன் இருந்தேன்.

அவர்கள் (உழூ செய்ய முற்பட்டபோது) அவர்களது இரு காலுறைகளையும் கழற்றுவதற்காக நான் என் கையை நீட்டினேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், அவற்றை விட்டுவிடுங்கள். கால்கள் சுத்தமாக இருக்கும்போதுதான் காலுறைகளை அணிந்தேன் என்று கூறிவிட்டு, (ஈரக்கையால்) அவ்விரு காலுறைகள் தடவி (மஸஹ் செய்யலா)னார்கள்.’ (அறிவிப்பவர்:  முகீரா (ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி 206)

06.சூரிய, சந்திர கிரகணத் தொழுகைகள் அறிமுகம் செய்யப்படல்

‘நாங்கள் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இருந்துகொண்டிருந்தோம். அப்போது சூரியகிரகணம் ஏற்பட்டது. உடனே நபி (ஸல்) அவர்கள் எழுந்து தமது மேலாடையை இழுத்துக்கொண்டே பள்ளிவாசலுக்குள் சென்றார்கள். நாங்களும் சென்றோம். (கிரகணம் விலகி) வெளிச்சம் வரும் வரை எஙகளுக்கு இரண்டு ரக்அத்கள் தொழுவித்தார்கள். பிறகு சூரியனும் சந்திரனும் அழ்ழாஹ்வின் சான்றுகளில் இரு சான்றுகளாகும். எவருடைய இறப்புக்காகவும் சூரிய சந்திர கிரகணஙகள் ஏற்படுவதில்லை. எனவே, அவற்றை நீஙகள் கண்டால் உங்களுக்கு ஏற்பட்ட (கிரகணமான)து அகற்றப்படும் வரை நீஙகள் தொழுங்கள், பிரார்த்தியுஙகள் என்று கூறினார்கள். (அறிவிப்பவர்:  அபூபக்ரா (ரழி) நூல்: ஸஹீஹுல் புஹாரி 1040)

07.பொருளாதார நடைமுறைகள், பங்குடமை, கூட்டு முறை மற்றும் பங்கிடலில் முன்னுரிமை பற்றிய ஹதீஸ்கள்

‘பங்காளிக்குத்தான் விற்க வேண்டும் என்பது, பிரிக்கப்படாத ஒவ்வொரு சொத்திலும் உள்ளது. எல்லைகள் வகுக்கப்பட்டுப் பாதைகள் (பிரித்துக்) குறிக்கப்பட்டுவிட்டால் பஙகாளிக்குத்தான் விற்க வேண்டும் என்ற நிலையில்லை, என்று அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) விதித்தார்கள்.’ (அறிவிப்பவர்:  ஜாபிர் (ரழி) நூல்: ஸஹீஹுல் புஹாரி 2257)

08. தவறிப் போன பொருட்கள், உயிரினங்கள் என்பவைகள் தொடர்பான சட்டங்கள்

‘நான் ஒரு பணப்பையைக் கண்டெடுத்தேன். அதில் நூறு தீனார்கள் இருந்தன. (அதை எடுத்துக் கொண்டு) நபி (ஸல்) அவர்களிடம் வந்தேன். அவர்கள், ஓராண்டுக் காலம் அதைப் பற்றி நீ (பொது) அறிவிப்புக் கொடு என்று கூறினார்கள்.

நானும் அதைப் பற்றி அறிவிப்புக் கொடுத்தேன். அதை அடையாளம் புரிந்து கொள்பவர் எவரையும் நான் காணவில்லை. பிறகு, மீண்டும் நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போதும், ஓராண்டுக் காலம் அதைப் பற்றி அறிவிப்புக் கொடு என்று கூறினார்கள். நானும் அதைப் பற்றி அறிவிப்புக் கொடுத்தேன். அதை அடையாளம் புரிந்து (பெற்றுக்) கொள்பவர் எவரையும் நான் காணவில்லை. பிறகு, மூன்றாவது முறையாக நபி (ஸல்) அவர்களிடம் வந்தேன். அப்போது அவர்கள், அதன் பையையும் அதன் எண்ணிக்கையையும் அதன் முடிச்சையும் பாதுகாத்து வைத்திரு.

அதன் உரிமையாளர் வந்தால் அவரிடம் ஒப்படைத்து விடு. இல்லையென்றால் நீயே அதைப் பயன்படுத்திக் கொள் என்று கூறினார்கள். ஆகவே, நானே அதைப் பயன்படுத்திக் கொண்டேன். அறிவிப்பாளர் ஷுஅபா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அதன் பிறகு, நான் மக்காவில் வைத்து (இதை எனக்கு அறிவித்த) சலமா (ரஹ்) அவர்களைச் சந்தித்தேன். அப்போது அவர்கள்,(நான் அறிவித்த ஹதீஸில்) நபி (ஸல்) அவர்கள், மூன்று ஆண்டுகள் அறிவிப்புச் செய்ய வேண்டும் என்று கூறினார்களா, அல்லது ஓராண்டுக் காலம் வரை மட்டும் அறிவிப்புச் செய்ய வேண்டும் என்று கூறினார்களா என்று நான் அறிய மாட்டேன் (அதாவது எனக்கு நினைவில்லை) என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: உபை பின் கஅப் (ரலி) நூல்: ஸஹீஹுல் புஹாரி 2426)

இவ்வாறாக, மேலுள்ள நபிமொழிகள் மூலம் ஸுன்னாவினது அளப்பரிய முக்கியத்துவத்தினை அறிந்த பின்பும் வஹியில் ஒன்றினை விட்டு ஒன்றினை எடுக்க கூடிய வழிகேட்டை என்னவென்று சொல்வது?

0 comments:

Post a Comment