Monday, August 23, 2010

நபிகளாரின் செயற்பாடுகளிலிருந்து கட்டாயமானது, ஸுன்னத், ஆகுமானது போன்றவற்றை புரிந்து கொள்வது எப்படி?

மௌலவி SLM. நஷ்மல் (பலாஹி)
nashmelslm@yahoo.com

இத்தூதர் உங்களுக்கு எதைக் கொடுத்தாரோ அதை வாங்கிக் கொள்ளுங்கள்! எதை விட்டும் உங்களைத் தடுத்தாரோ (அதிலிருந்து) விலகிக் கொள்ளுங்கள்! அழ்ழாஹ்வை அஞ்சுங்கள்! அழ்ழாஹ் கடுமையாகத் தண்டிப்பவன்.’ (அல்குர்ஆன் 59:07)

சென்ற இதழின் தொடர்ச்சி…

கடந்த இதழில் எமது ஸுன்னா தொடர் பகுதியில் நபிகளாரின் செயற்பாடுகளைப் புரிந்து கொள்வது எப்படி? எனும் தலைப்பில் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொடர்ச்சியாக மேற்கொள்கின்ற செயற்பாடுகளில் பெரும்பாலும் முழுமையாகவும், பூர்த்தியாகவும் செய்வார்கள் என்கின்ற குறிப்பில் மூன்று தடவைகள் கழுவி உளூச் செய்தல் பற்றிய நபிமொழியில் காதை மஸ்ஹுசெய்வது பற்றி குறிப்பிடப்படவில்லை என ஒரு வாசகர் கேட்டிருந்தார்.

எமது ஸுன்னா தொடரைப் பொறுத்தவரையில் முழுமையாக சட்டவிளக்கங்களுக்காக எழுதப்படுவதன்று. மாறாக, ஸுன்னாவின் முக்கியத்துவம் மற்றும் ஸுன்னா தொடர்பான மிக முக்கிய தெளிவுகளை வழங்கி, பித்அத்திலிருந்து முஸ்லிம் சமூகம் பாதுகாக்கப்பட வேண்டுமென்ற நோக்கிலேயே எழுதப்பட்டு வருகின்றது.

நாம் கூறுகின்ற விடயங் களுக்கு அவசியமான மிக முக்கிய உதாரணங்களை மாத்திரம் ஆங்காங்கே குறிப்பிடுகின்றோம். இருந்த போதிலும், தங்களது நியாயமான சந்தேகத்திற்கு பதிலளிக்க வேண்டிய கடமைப்பாடும் எமக்கு உண்டு என்ற வகையில் அதற்கான தெளிவை வழங்குகின்றோம்.
உளூவுடைய உறுப்புக்களை கழுவுவது சம்பந்தமாக வருகின்ற நபிமொழிகளைப் பொறுத்த வரையில் ஸஹீஹுல் புஹாரி, ஸஹீஹ் முஸ்லிம் போன்ற நபிமொழிக் கிரந்தங்களில் இடம் பெற்றுள்ள அறிவுப்புக்களில் காதை மஸ்ஹுசெய்வது தொடர்பாக குறிப்பிடப்படவில்லை. மாறாக, ஏனைய நபிமொழிக் கிரந்தங்களையும் ஆய்வு செய்துதான் குறித்த விடயத்தில் அமல் செய்ய முடியும். அந்த வகையில் காதை மஸ்ஹுசெய்வது தொடர்பாக இடம்பெற்றுள்ள நபிமொழி பின்வருமாறு:

‘அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உளூச் செய்த போது தலைக்கும், காதுகளுக்கும் தமது ஆட்காட்டி விரல்களைக் காதுகளின் உட்பகுதியிலும், கட்டை விரலை காதுகளின் வெளிப்பகுதியிலும் வைத்து மஸஹ் செய்தார்கள்.’ (அறிவிப்பவர்: அப்துழ்ழாஹ் பின் அம்ர் (ரழி), நூல்: நஸாயி-74)

அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது செயற்பாடுகளிலிருந்து கட்டாயமானது, ஸுன்னத், ஆகுமானது போன்றவற்றை பிரித்து விளங்கு வதற்கான வழிமுறைகள் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது செயற்பாடுகள் வாஜிபாக (கட்டாயமானது), ஸுன்னத்தானதாக (மன்தூப்), மற்றும் ஆகுமானவை (முபாஹ்)களாகவோ இருக்க முடியும். சில நேரங்களில் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமும் மறதியாக சில விடயங்கள் இடம்பெற்றுவிடும்.

‘(ஒரு நாள்) அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (லுஹர் அல்லது அஸர்த் தொழுகையை வழக்கத்திற்கு மாறாகக்) கூட்டியோ அல்லது குறைத்தோ தொழுவித்தார்கள். அவர்கள் சலாம் கொடுத்(துத் தொழுகையை முடித்)த போது அவர்களிடம்,

‘அழ்ழாஹ்வின் தூதரே! தொழுகையில் (மாற்றம்) ஏதும் ஏற்பட்டுவிட்டதா?’ என்று கேட்கப்பட்டது. அதற்கு அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘என்ன அது?’ என்று கேட்டார்கள். மக்கள் ‘நீங்கள் இப்படி இப்படித் தொழுவித்தீர்கள் (அதனால்தான் கேட்கிறோம்)’ என்று கூறினர். உடனே அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (தொழுகை இருப்பில் அமர்வதைப் போன்று) தம் கால்களை மடக்கி, கிப்லாவை முன்னோக்கி இரு சஜ்தாக்கள் செய்தார்கள். பிறகு சலாம் கொடுத்தார்கள்.

பின்னர், எங்களை நோக்கித் திரும்பி, ‘ஒரு விஷயம்! தொழுகையில் (எனக்கு) ஏதேனும் புதிய அறிவிப்பு வருமானால் கட்டாயம் அதை நான் உங்களுக்கு தெரிவித்துவிடுவேன். ஆயினும், நானும் மனிதன்தான். (சில நேரங்களில்) நீங்கள் மறந்து விடுவதைப் போன்று நானும் மறந்துவிடுகின்றேன். அவ்வாறு நானும் எதையேனும் மறந்துவிட்டால் எனக்கு (அதை) நினைவு படுத்துங்கள். உங்களில் ஒருவர் தொழுகையில் (எதையேனும் கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ செய்துவிட்டதாகச்) சந்தேகித்தால் யோசித்து முடிவுசெய்து அதற்கேற்ப தொழுகையைப் பூர்த்தி செய்யட்டும். பிறகு இரண்டு சஜ்தாக்கள் செய்து கொள்ளட்டும்’ என்று கூறினார்கள்.’ (அறிவிப்பவர்: அப்துழ்ழாஹ் பின் புஹைனா (ரழி), நூல்: ஸஹீஹ் முஸ்லிம்-991)

அந்த வகையில் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் செயற்பாடுகளில் ஒவ்வொரு விடயங்களையும் பிரத்தியேகமாக விளங்கிக் கொள்வதற்கான அளவுகோள்களை நோக்குவோம்.

நபிகளாரின் செயற்பாடுகளில் வாஜிப்

1. தான் மேற்கொண்ட செயற்பாடு வாஜிபானாது என அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே தெளிவாகக் கூறுதல்.

2. கட்டாயமானது என்று சொல்கின்ற அந்தஸ்த்தில் குறித்த செயல் இடம் பெறுதல். ‘தொழுகையை நிறைவேற்றுங்கள்’ என்ற அழ்ழாஹ்வின் வார்த்தைக் கமைவாக அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுது காட்டியது, கடமையான தொழுகையின் நேரங்கள் பற்றி வினவப்பட்ட போது, ‘அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் தொழுகையின் நேரம் குறித்துக் கேட்டார்.

அவரிடம் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நம்முடன் இவ்விரு நாட்கள் தொழுங்கள்! என்று கூறி தனது செயற்பாடுகளின் மூலம் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்  தொழுகையின் ஆரம்ப நேரத்தையும், இறுதி நேரத்தையும் விளக்கியமை’ (நபிமொழியின் சுருக்கம்) (அறிவிப்பவர்: புரைதா (ரழி), நூல்: ஸஹீஹ் முஸ்லிம்-1078)

3.முன்னர் வாஜிபான ஒரு விடயத்துடன் உவமைப்படுத்துதல்

4.கடமைகளுக்கு அடையாளமாக மார்க்கத்தில் காணப்படும் விடயங்கள்: அதான், இகாமத்துடன் தொழுகை நடாத்துதல்

5.நேரம் கடந்திருந்த போதிலும் ஏற்கனவே, என்ன முக்கியத்துவத்துடன் ஒரு செயலைச் செய்தார்களோ, அவ்வாறே நிறைவேற்றுதல்: ‘நாங்கள் (ஒரு நாள்) இரவில் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஓய்வெடுத்தோம். சூரியன் உதயமாகும் வரை நாங்கள் (யாரும்) விழிக்கவில்லை. பிறகு, அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (எழுந்து), ‘ஒவ்வொருவரும் தமது வாகனத்தின் தலையைப் பிடித்து(க் கொண்டு இந்த இடத்தை விட்டு நகர்ந்து) செல்லட்டும். ஏனெனில், இந்த இடத்தில் நம்மிடம் ஷைத்தான் வந்துவிட்டான்’ என்று கூறினார்கள். நாங்கள் அவ்வாறே (பயணம்) செய்தோம். பிறகு (சிறிது தூரம் சென்றதும்) தண்ணீர் கொண்டு வரச்சொல்லி அங்கத் தூய்மை (உளூ) செய்தார்கள். பிறகு இரண்டு ரக்அத்கள் (சுன்னத்) தொழுதார்கள். பிறகு தொழுகைக்காக  இகாமத் சொல்லப்பட, வைகறைத் தொழுகை (பஜ்ர்) தொழுவித்தார்கள்.’ (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), நூல்: ஸஹீஹ் முஸ்லிம்-1212)

நபிகளாரின் செயற்பாடுகளில் ஸுன்னத் என்கின்ற வரையறைக்குள் இடம்பெறும் விடயங்களை  பின்வரும் அடிப்படைகளின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

1. அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தனது கூற்றின் மூலமே ஸுன்னத் என விளக்குதல்: ‘திங்கள், வியாழன் ஆகிய தினங்களில் நோன்பு நோற்பது பற்றி அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வினவப்பட்ட போது, இவ்விரு தினங்களிலும் அமல்கள் எடுத்துக் காட்டப்படுகின்றன. நான் நோன்பாளியாக இருக்கும் நிலையில் எனது அமல்கள் எடுத்துக் காட்டப்பட வேண்டும் என நான் விரும்புகின்றேன் என்று அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.’ (அறிவிப்பவர்: உஸாமா பின் ஸைத் (ரழி), நூல்: நஸாயி-2330)

2.ஸுன்னத் என்று கூறுவதற்கு ஏற்றவாறு அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது செயற்பாடுகள் காணப்படுதல்

3.ஸுன்னத்தான ஒரு விடயத்தோடு அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) பிறிதொரு விடயத்தை ஒப்பிட்டுக் கூறுதல்.

4.ஸுன்னத்திற்கான அறிகுறியாக மார்க்கத்தில் காணப்படும் அம்சங்களோடு குறித்த செயல் இடம்பெறல்

5.நஸ்ஹ் (சட்டம் மாற்றப்படல்) அல்லது எந்த தடையும் இல்லாது ஒரு சில வேளைகளில் விட்டாலே தவிர ஒரு அமலைத் தொடராக மேற்கொள்ளல்: ‘அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஜும்ஆ நாளின் பஜ்ர் தொழுகையில் ‘அலிப் லாம் மீம் ஸஜ்தா’வையும் ‘ஹல்அதா அலல் இன்ஸான்’ என்ற அத்தியாயத்தையும் ஓதக்கூடியவர்களாக இருந்தனர்.’ (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), நூல்: ஸஹீஹ் முஸ்லிம்-891)

ஆகுமான விடயங்களை அறிந்து கொள்வதின் அளவுகோல்கள் 

1.அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே தனது செயற்பாடு ஆகுமானது என வெளிப்படையாகக் கூறுதல்: ‘நான் என் இறைவனிடம் என் தாயாருக்காகப் பாவமன்னிப்புக் கோர அனுமதி கேட்டேன். அவன் அனுமதி வழங்கவில்லை. அவரது அடக்கத்தலத்தைச் சந்திக்க அனுமதி கேட்டேன். எனக்கு அனுமதி வழங்கினான் என்று அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.’ (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), நூல்: ஸஹீஹ் முஸ்லிம்-1776)
2.ஆகுமானதென்பதை விளக்கும் வகையில் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது செயற்பாடு அமைந்திருத்தல்: ‘போர்க்களத்தில் எதிரிகளிடம் கைப்பற்றப்பட்ட, அனுமதிக்கப்பட்ட, தூய்மையானதை உண்ணுங்கள்! அழ்ழாஹ்வுக்கு அஞ்சுங்கள்! அழ்ழாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.(அல்குர்ஆன் 08:69) என்கின்ற அல்குர்ஆன் வசனத்திற்கு கட்டுப்பட்டு அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கனீமத்தில் இருந்து சாப்பிட்டமையும், ‘ஒட்டகங்களை உங்களுக் காக அழ்ழாஹ்வின் (மார்க்கச்) சின்னங்களில் ஒன்றாக ஆக்கியுள்ளோம். அவற்றில் உங்களுக்கு நன்மையுள்ளது.

நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் அதன் மீது அழ்ழாஹ்வின் பெயரைக் கூறுங்கள்! அது விலாப்புறமாக விழுந்ததும் அதை உண்ணுங்கள்! யாசிப்பவருக்கும், யாசிக்காதவருக்கும் உண்ணக் கொடுங்கள்! நீங்கள் நன்றி செலுத்திட இவ்வாறே அதை உங்களுக்குப் பயன்படச் செய்தான்.’ (அல்குர்ஆன் 22:36) என்கின்ற அல்குர்ஆன் வசனத்திற்கு கட்டுப்பட்டு குர்பானி இறைச்சியிலிருந்து சாப்பிட்டமையும்.

3.ஏற்கனவே, ஆகுமானதென அறியப்பட்ட விடயத்தையும் குறித்த அம்சத்தையும் இணைத்து உவமைப் படுத்துதல்: குறித்த அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் செயற்பாட்டில் கட்டாயமானதிற்கும், 

ஸுன்னத்திற்குமானதுமான ஆதாரங்கள் இல்லாதிருப்பது. அத்தகைய சந்தர்ப்பங்களில் வாஜிப், ஸுன்னத் ஆகியவைகளில் ஒன்று நிரூபணமாகாத நிலையில் ஆகுமானதென்ற நிலைக்கே செல்ல வேண்டும். அதுவே அடிப்படையுமாகும்.

மேற்படி இவ்விடயங்கள் மார்க்க அடிப்படைகளைப் புரிந்து கொள்வது தொடர்பிலாகும். இது தவிர, அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது ஏனைய செயற்பாடுகள் பற்றிய விபரத்தை இன்ஷா அழ்ழாஹ் எதிர்வரும் இதழ்களில் நோக்குவோம்.

இன்ஷா அழ்ழாஹ் வளரும்…

நன்றி: www.dharulathar.com

0 comments:

Post a Comment