Monday, March 15, 2010

இயற்கைத் தேர்வுக் கொள்கையின் வீழ்ச்சிப் பயணம்

மனிதர்களே! உங்களை ஒரே ஒருவரில் இருந்து படைத்த உங்கள் இறைவனை அஞ்சுங்கள்! அவரிலிருந்து அவரது துணையை படைத்தான். அவ்விருவரிலிருந்து ஏராளமான ஆண்களையும் பெண்களையும் பல்கிப் பெருகச் செய்தான்’ (04:01)

இயற்கைத் தேர்வுக் கொள்கை அல்லது பரிணாம வளர்ச்சித் தத்துவம் என்கின்ற, படைப்பாளனான இறைவனை மறுக்கின்ற நாத்திக சிந்தனையானது இன்று பாட நூற்களில் புகுத்தப்பட்டு எமது பிஞ்சு நெஞ்சங்களில் நஞ்சாக இக்கருத்து விதைக்கப்பட்டு வருவதனால் இப்போலி வாதம் தொடர்பான தெளிவுக்காக இவ் வாக்கம் வரையப்படுகின்றது.

தோற்றம்.

இயற்கைத் தேர்வுக் கொள்கை என்கின்ற போலி தத்துவமானது, ஆரம்பத்தில் கிரேக்க தேசங்களில் தோற்றம் பெற்றிருந்ததாயினும், இதனை உயிர்ப்பித்து முதன் முதலில் கோட்பாட்டு வடிவம் கொடுத்தவர் பிரெஞ்சு தேசத்து உயிரியல் ஆராய்ச்சியாளர் ‘ஜீன் பேட்டிஸ் லாமார்க்’ என்பவராவார். உயிரினங்கள் தாம் பெற்றுக் கொண்ட இயல்புகளை தங்களது சந்ததிகளுக்கு வழங்கிவிட்டுச் செல்கின்றன என்பது இவரது வாதமாகும். மேலும், ஒரு உடற் பாகத்தினை தொடர்ச்சியாக பயன்படுத்துகையில் அப்பாகம் வலிமை அடைய, பயன்படுத்தப்படாத பாகம் வலிமை குறைவடையும் என்று கூறுகின்ற ஜீன் பேட்டிஸ் லாமார்க் ஒட்டகச் சிவிங்கி உணவுக்காக தனது கழுத்தை தொடர்ச்சியாக நீட்டிக் கொண்டே சென்றதன் காரணமாக அதனது கழுத்து நீண்டது என்கிறார். ஆனால், அறிவியலின் அபரிதமான வளர்ச்சியின் காரணமாக ஜீன் பேட்டிஸ் லாமார்க்கின் இவ்வாதமானது தவிடு பொடியாக் கப்பட்டது.

‘வைஸ்மேன்’ என்கின்ற அறிவியல் அறிஞர், எலிகளின் வால்களைத் தொடர்ச்சியாக எண்பது தலைமுறைகளுக்கு அகற்றிய பிற்பாடும், பிறக்கின்ற எலிகளுக்கு தமது முன்னோர்களினைப் போன்று நன்கு செயற்பாடுடைய வால் இருந்ததை கண்டறிந்தார். ஜீன் பேட்டிஸ் லாமார்க்கின் வாதத்தின் அடிப்படையில் பிறக்க கூடிய எலிகளுக்கு வால் இல்லாமல் இருந்திருக்க வேண்டும். (ஒரு எலியின் சராசரியான ஆயுட்காலம் இரண்டு தொடக்கம் மூன்று வருடங்களாகையால், எண்பது தலைமுறை எலிகளை ஆய்வுக்கு உட்படுத்தமுடியும்)

இயற்கைத் தேர்வுக் கொள்கையின் தந்தை சார்ள்ஸ் டார்வின்!
ஜீன் பேட்டிஸ் லாமார்க்கிற்கு பின்னர், இயற்கைத் தேர்வுக் கொள்கையை நிலை நிறுத்துவதில் பெரும் பங்காற்றியவர் ‘சார்ள்ஸ் ரொபர்ட் டார்வின்’ (Charles Robet Darwin) என்கின்ற இயற்கையியல் அறிஞராவார். இவர் இங்கிலாந்தில் 1809ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 12ம் நாள் பிறந்தார். இயற்கை விஞ்ஞானியான இவர் H.M.S.Beagle என்கின்ற அரசு கப்பலில் 1832ம் ஆண்டு தொடக்கம் 1836ம் ஆண்டு வரை கடமையாற்றினார்.

கடல் வழியே இக்கப்பலில் உலகின் பல பாகங்களுக்கும் குறிப்பாக ‘காலாபாகசு’த் தீவுகளுக்கும் பயணித்து புதிய தாவரங்கள், விலங்கினங்கள் தொடர்பான தகவல்களினையும், புதைபொருள் தொடர்பான தகவல்களினையும் சேகரித்துக் கொண்டு இங்கிலாந்து திரும்பினார். சிறிது காலத்தின் பின்னர், தான் சேகரித்த தகவல்கள் பார்த்த காட்சிகளின் அடிப்படையிலும், இங்கிலாந்து நாட்டு இயற்கை விஞ்ஞானியான ‘அல்பிரட் ரசல் வொல்ஸ்’ (1823-1913) என்பவரால் சார்ள்ஸ் டார்வினுக்கு வரையப்பட்ட கடிதத்தை அடிப்படையாகக் கொண்டும், 1856ல் ‘இயற்கைத் தேர்வின் காரணமாய் ஏற்பட்ட உயிரினங்களின் தோற்றம்’ (The Origin of Species by Means of Natural Selection) எனும் நூலை வெளியிட்டு பெரும் பரபரப்பை தோற்றுவித்ததுடன் நன்கு பிரசித்தமானார்.

எனினும் விஞ்ஞான ரீதியில் நிரூபிக்கப்படாத எடுகோல்களின் அடிப்படையில் எழுதப்பட்ட தனது நூலில் குறிப்பிடப்பட்டுள்ள கருத்துக்களில் அவருக்கே பலத்த சந்தேகம் தோன்றியது என்பதை ‘தத்துவங்களில் உள்ள இடர்கள்’ என்கின்ற அத்தியாயத்தில் அவரே, பல வினாக்களுக்கு தன்னால் சரியான பதிலை அளிக்க முடியாது என தனது இயலாமையை ஒப்புக் கொள்கின்ற அதேவேளை விஞ்ஞானம் அபரிமிதமான வளர்ச்சியடையும் போது தன்னை நோக்கி வீசப்படும் கேள்விக் கணைகளுக்கு பதிலளிக்கப்படும் என சார்ள்ஸ் டார்வின் பெரிதும் நம்பினார். ஆனால் அவரது நம்பிக்கைக்கு மாற்றமாக விஞ்ஞானம் அவரது கருத்துக்களை தொடர்ச்சியாக புதைகுழிக்குள் அனுப்பிக் கொண்டே வருகின்றது.

சார்ள்ஸ் டார்வினின் இயற்கைத் தேர்வுக் கொள்கை
இவ்வுலகில் உயிர் வாழக் கூடிய அனைத்து உயிரினங்களும் ஒரே மாதிரியாகக் காணப்பட முடியாது. மாறாக தொடர்ச்சியாக ஏற்பட்டு வருகின்ற சூழல் மற்றும் கால மாற்றத்தில் தன்னை தக்க வைத்துக் கொள்ளக் கூடிய குணாதிசயங்களைத் தன்னகத்தே கொண்ட உயிரினங்கள் தொடர்ந்து உயிர் வாழவும், இம்மாற்றங்களுக்குத் தாக்குப் பிடிக்க முடியாத, வாழ்க்கைப் போராட்டத்தில் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முடியாத உயிரினங்கள் எல்லாம் அழிந்தும் விடுகின்றன. ஊர்ந்து செல்லக் கூடிய உயிரினங்களிலிருந்து குட்டி போட்டு பாலூட்டி வளர்க்கும் உயிரினங்களும் பறவைகளும் தோன்றின. மேலும் குட்டி போட்டு பாலூட்டும் இனத்திலிருந்து வாலில்லாக் குரங்குகளும் (Chimpanzees), வாலில்லாக் குரங்கிலிருந்து மனிதனும் தோன்றினான் என்பதுவே உயிரினங்களின் படைப்பு தொடர்பாக பரிணாம வாதிகள் தரும் விளக்கமாகும்.

உலக மனிதர்கள் ஒரு தாய், தந்தையிலிருந்து தோன்றியவர்களே!
சார்ள்ஸ் டார்வினின் இயற்கைத் தேர்வுக் கொள்கையை முற்றிலும் நிராகரிக்கின்றார் உயிரியல் துறை விஞ்ஞானியான ‘ஸ்பென்ஸர் வெல்ஸ்’ என்பவர். எந்த மனிதனின் மரபணுவை எடுத்து பரிசோதனைக்கு உட்படுத்துகின்ற போதிலும் அவனது ஆரம்பம் ஒரு ஆபிரிக்க தாய், தந்தையரிலேயே போய் முடிவடைகின்றது. எனவே, மனித குலத்தின் மூதாதையர் நிச்சயமாக ஆபிரிக்கப் பிரதேசத்திலேயே வாழ்ந்துள்ளனர். மேலும் சுமார் அறுபது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஆபிரிக்காவில் இடம் பெற்ற குடிபெயர்வொன்றே உலகளாவிய குடியேற்றத்திற்கு அடிப்படையாக அமைந்தது.

ஆரம்ப கால மனிதன் கற்கள் மற்றும் எலும்புகளால் செய்யப்பட்ட ஆயுதங்களை வேட்டையாடுவதற்காகப் பயன்படுத்தினான். ஆபிரிக்காவில் பனியுகத்தின் உருவாக்கத்தின் காரணமாகப் பாலைவனங்கள் பரவின. இதனால் ஆரம்ப கால மனிதனுக்கு உணவினைப் பெற்றுக் கொள்வது பாரிய பிரச்சினையாக உருவெடுக்க, உணவிற்காகக் கரையோரம் நோக்கி நகரத் தொடங்கிய மனிதன் தொடர்ந்து நகர்ந்து கொண்டே சென்றான். பூமியின் பெரும் பங்கு நீரானது மலைகளின் மீது உறைந்த நிலையில் காணப்பட்டதனால் கடல் மட்டம் தற்போது காணப்படுவதனை விட 100m ஆழம் குறைவாகக் காணப்பட்டது. ஆரம்பத்தில் சிங்கப்பூர், பர்மா, மலேசியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகள் ஒரே தொடர் பூமியாகக் காட்சிதந்தன.

இன்றைய இலங்கையானது ஆரம்பத்தில் இந்தியாவுடன் இணைந்திருந்தது. இந்தியாவின் மேற்குக்கரை தற்போது காணப்படுவதனை விட 200 km மேற்குப் பக்கமாக தூரத்தே காணப்பட்டது. மேலும், அவுஸ்திரேலியாவிலிருந்து ஆபிரிக்கா நோக்கி ஒரு கூட்டம் இடம்பெயர மற்றொரு கூட்டம் எகிப்து மேற்காசியாவின் ஊடாக மத்திய ஆசியா நோக்கிப்படை யெடுத்தனர். சிலர் சைபீரியா மற்றும் சீனா நோக்கி நகர்ந்து சென்றனர். இதுவே உலகளாவிய குடியேற்ற வரலாறு ஆகும் என தனது ஆய்வறிக்கையினை “The Journey Of Man – ‘மனிதனின் பயணம்’ எனும் நூலில் குறிப்பிடுவதன் ஊடாக சார்ள்ஸ் டார்வினின் வாலில்லா குரங்கிலிருந்து தோன்றியவனே மனிதன் என்கின்ற இயற்கைத்தேர்வுக் கொள்கையினைப் புதைகுழிக்குள் அனுப்புகிறார் உயிரியல் விஞ்ஞானி ஸ்பென்ஸர் வெல்ஸ்.

குறிப்பு: மனித குலத்தின் ஆரம்பம் ஆபிரிக்க மூதாதையர் என்பது அல்குர்ஆனிலோ, அண்ணலாரின் பொன் மொழியிலோ கூறப்பட்ட உண்மை அன்று. மாறாக, உயிரியல் விஞ்ஞானி ‘ஸ்பென்ஸர் வெல்ஸின் ‘ ஆய்வின் முடிவே என்பதை வாசகர்கள் கவனத்திற் கொள்ளவும்.

முதல் உயிரினத்தின் தோற்றம்
இயற்கைத் தேர்வு வாதத்தை முன்வைப்பவர்களின் விளக்கத்தின் அடிப்படையில் எந்த உயிரினத்திலிருந்தும் மற்றொரு புதிய உயிரினம் தோன்ற முடியும். மேலும் ஒரு உயிரினம் கால மாற்றத்தில் முற்று முழுவதுமாக மாறுபட்ட புதிய ஒரு உயிரினமாக மாற்றமுற முடியும். ஆனால் அந்தோ பரிதாபம்! இயற்கைத் தேர்வுக் கொள்கையை முன்வைப்ப வர்களின் வாதத்தை உறுதிப்படுத்தக் கூடிய விதத்தில் விஞ்ஞான ரீதியான எந்தவொரு ஆதாரமும் இதுவரை கிடைக்கவில்லை.

மேலும் முதல் உயிரினத்தின் தோற்றத்திற்கு அவர்கள் தருகின்ற விளக்கம், உயிரற்ற பொருட்களான மண், பாறைகள், வாயுக்கள் இவ்வுலகினில் காணப்படுகையில் காற்று, மழை மற்றும் மின்னலின் விளைவாக முதல் உயிரணு தோன்றியது என இயற்கைத் தேர்வுக் கொள்கை வாதிக்கின்றது. ஆனால் இது உயிரியலின் மிக அடிப்படையான விதிக்கு முற்றிலும் மாறுபட்ட வாதமாகும். இத்தத்துவம் முன்வைக்கப்பட்ட போது இறைச்சியிலிருந்து தானாக பூச்சி புழுக்களும், கோதுமை யிலிருந்து எலியும் தோன்றின என நம்பப்பட்டது.

புதைகுழிக்கு அனுப்பப்படும் இயற்கைத் தேர்வுக் கொள்கை
பிரான்ஸ் நாட்டின் உயிரியல் விஞ்ஞானியான ‘லூயிபாஸ்டர்’ என்கின்ற அறிஞர் தனது ஆய்வினைப் பற்றி குறிப்பிடுகையில், உயிருள்ளவைதான் புதிய உயிரினங்களைத் தோற்றுவிக்க முடியும் எனவும் தனது கண்டுபிடிப்பினூடாக, உயிரற்ற பொருட்களாலும் உயிரினங்களை உற்பத்தி செய்ய முடியும் என்கின்ற மூட நம்பிக்கை வரலாறு என்பது புதைகுழிக்கு அனுப்பப்பட்டுள்ளது எனவும் கூறுகின்றார்.

பரிணாமவாதிகளே! சிந்தியுங்கள்!
நீங்கள் தூக்கி நிலை நிறுத்துவதற்காகப் பெரும் பாடுபடுகின்ற இயற்கைத்தேர்வுக் கொள்கையில் உண்மை இருக்குமாக இருந்தால் மனிதக் குரங்குகளையும் (Gorillas), ஆபிரிக்காவில் வாழ்கின்ற வாலில்லாக் குரங்குகளையும் (Chimpanzees) இயற்கைத் தேர்வுக் கொள்கையினூடாக மனிதர்களாக மாறாது தடுத்தது எது? இயற்கைத் தேர்வுக் கொள்கையின் அடிப்படையில், மனிதனாக மாறுவதற்கு போதிய காலம் அவை இந்த பூமியில் வாழ்ந்துள்ளன.

பல இலட்ச ஆண்டுகள் அவை வாழ்ந்து விட்டனவே? பல இலட்ச வருடங் களுக்கு முன்னர் வாழ்ந்த வாலில்லாக் குரங்குகள் நமது வாழ்காலத்தில் ஏன் மனிதனாக மாற்றமடையவில்லை? எமது முன்னோர்களின் வாழ்காலத்திலாவது இவ்வாறு மாற்றம் அடைந்ததாக வரலாறு இல்லையே? பசுவின் நல்ல ரகம் வேண்டும் என விரும்புபவர்கள் ஒரு குறிப்பிட்ட வகை பசுவை இன்னுமொரு வகை பசுவோடு புணரச் செய்து நல்ல ரக பசுவைப் பெற்றுக் கொள்கிறார்கள். இதனை அவர்கள் பல வருடங் களாகவே செய்து வருகின்றார்கள். இவ்வாறு பிறக்கின்ற பசுக்கள் சில நேரங்களில் நிறத்திலும், தன்மையிலும் மாறுபடுகின்றன. ஆனாலும் அவை பசுக்களாகவே உள்ளன. அவை ஒருபோதும் பசு இனத்திலிருந்து மாறுபட்ட மற்றொரு புதிய வகை இனமாக மாறியதில்லை. கால மற்றும் சூழல் மாற்றத்தில் பசு இனம் ஆடுகளாகவோ மற்றொரு இனமாகவோ மாறியதில்லை. கழுதை காலங்கடந்ததால் குதிரையாகவோ, குதிரை நாள்கடந்ததால் ஒட்டகமாகவோ மாறியதாக வரலாறு இல்லை.

அருள்மறையின் ஒளியில்

இறுதியாக, உயிரியலின் அடிப்படை விதியின் அடிப்படையில், உயிருள்ளவைகளில் இருந்துதான் உயிரினங்கள் பிறக்கின்றன. இதனை இன்னும் தெளிவாகக் கூறுவதானால், உயிரினங்களை இறைவனான அல்லாஹ்வே படைத்தான். இதோ உலகப் பொது மறையாம் அருள் மறை எடுத்தியம்பு கின்றது.

அவன் ஒவ்வொரு பொருளின் படைப்பையும் அழகுபடுத் தினான். மனிதனின் படைப்பைக் களி மண்ணிலிருந்து துவக்கினான். பிறகு அவனது சந்ததிகளை அற்பமான நீரின் சத்திலிருந்து உருவாக்கினான். பின்னர் அவனைச் சீரமைத்து, தனது உயிரை அவனிடம் ஊதினான். உங்களுக்குச் செவியையும், பார்வைகளையும், உள்ளங்களையும் ஏற்படுத்தினான். நீங்கள் குறைவாகவே நன்றி செலுத்துகின்றீர்கள்.பூமிக்குள் மறைந்த பின் புதுப் படைப்பை நாங்கள் பெறுவோமா?’ என்று அவர்கள் கேட்கின்றனர். அவ்வாறில்லை! அவர்கள் தமது இறைவனின் சந்திப்பை மறுக்கின்றனா’ (உலகப் பொது மறை அல்குர்ஆன் 32:7-10).

அவனே, உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்தான். அவரிலிருந்து அவரது துணைவியை அவளிடம் அவர் மன அமைதி பெறுவதற்காகப் படைத்தான். அவர் அவளுடன் இணைந்த போது அவள் இலேசான சுமையைச் சுமந்தாள். அதனுடன் அவள் நடமாடினாள் அவள்(வயிறு) கணத்த போது (அங்கத்தில்) குறைகளற்றவனை நீ எங்களுக்கு வழங்கினால் நன்றி செலுத்துவோராவோம்’. என்று அவ்விருவரும் தமது இறைவனாகிய அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்;தனர். (உலகப் பொது மறை அல்குர்ஆன் 7:189)

* Reference:- OTTRUMAI

0 comments:

Post a Comment