Sunday, March 21, 2010

எழுந்து நின்று மரியாதை செய்தல்

முஹம்மட் அர்ஷாத் அல் அதரி
arshathalathary@gmail.com

அரசியல் தலைவர்களோ, பெற்றோரோ, ஆசிரியர்களோ வருகை தரும்போது எழுந்து நின்று மரியாதை செய்வது மாற்று மத கலாச்சாரமாகும். இப்பழக்கம் தற்போது முஸ்லிம்களிடமும் ஊடுருவி இருக்கிறது. இப்படி ஒருவரை மரியாதை செய்வதற்கு எழலாமா? நபி (ஸல்) அவர்கள் அனுமதி அளித்துள்ளார்களா? தடுத்துள்ளார்களா? எனும் வினாக்களுக்கு கீழ் காணும் ஹதீஸ் பதிலளிக்கின்றது.

நபித்தோழர்களுக்கு நபி(ஸல்) அவர்களை விட எந்த மனிதரும் விருப்பமுடையவராக இருந்ததில்லை (அப்படிப்பட்ட அன்னலாரை) நபித்தோழர்கள் பார்த்தால் எழமாட்டார்கள். ஏனெனில் இப்படி எழுந்து மரியாதை செய்வதை அவர்கள் வெறுப்பார்கள் என்பதை அறிந்திருந்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரழி)

ஆதாரம்: திர்மிதீ

மரியாதை செய்வதற்கு அதிகம் தகுதியுடையவர்கள் நபி (ஸல்) அவர்களை விட இவ்வுலகில் யாருமில்லை. அப்படிப்பட்ட நபி(ஸல்) அவர்களை உயிரிலும் மேலாக மதித்த நபித்தோழர்கள் எழுந்து மரியாதை செய்யவுமில்லை, அதை நபியவர்கள் விரும்பவுமில்லை.

இவ்வாறாக அன்னலார் வெறுத்த, நபித்தோழர்கள் செய்யாத ஒன்றை நாம் செய்யலாமா? எழுந்து நிற்பதை விரும்புவர்கள் நபி(ஸல்) அவர்களை விட தகுதியில் உயர்ந்துவிட்டார்களா?

முஆவியா (ரழி) அவர்கள் வந்த போது அவரைப்பார்த்த இரு தோழர்கள் எழுந்து நின்றார்கள். (அதற்கு முஆவியா (ரழி) நீங்கள் இருவரும் அமருங்கள். மனிதர்கள் எழுந்து நிற்பது எவருக்கு மகிழ்ச்சி அளிக்குமோ அவர் தனது தங்குமிடத்தை நரகமாக்கிக் கொள்ளட்டும் என நபி(ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியேற்றுள்ளேன் என கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ மிஜ்லஸ் (ரஹ்)

பாருங்கள் சகோதரர்களே!

எவ்வளவு பெரிய எச்சரிக்கை!

தண்டனைகளில் பெரிய தண்டனையான நரகம் கிடைக்கும் இச்செயலுக்கு நாம் ஆசைப்படலாமா? விரும்பலாமா? ஏனையோரை எழுந்து நிற்குமாறு நிர்ப்பந்திப் பவர்கள் இந்த எச்சரிக்கை பற்றி சிந்திப்பார்களா?

கீழ்க்காணும் ஹதீஸும் ஒருவருக்கு எழுந்து நிற்பது கூடாது என்பதை தெளிவு படுத்துகிறது.

ஜாபிர் (ரழி) அறிவிக்கின்றார்கள்:

அல்லாஹ்வின் தூதர் அவர்கள் நோய்வாய்ப்பட்டிருந்த போது நாங்கள் அவர்கலுக்கு பின்னல் நின்று தொழுது கொண்டிருந்தோம். அவர்கள் அமர்ந்தவாரே எங்களுக்கு தொழுவித்துக் கொண்டிருந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் தக்பீர் கூற அதை அபூபக்கர் (ரழி) அவர்கள் மக்களுக்கு கேற்கும் வண்ணம் (உரத்த குரலில்) கூறிக்கொண்டிருந்தார்கள். அல்லஹ்வின் தூதர் அவர்கள் எங்களை திரும்பி பார்த்து நாங்கள் நின்று கொண்டு தொழுதுகொண்டிருப்பதைக் கண்டு உட்கார்ந்து தொழுமாறு சைகை செய்தார்கள். உடனே நாங்கள் உட்கார்ந்தவாறே அவர்களை பின்பற்றி தொழுதோம். அவர்கள் ஸலாம் கொடுத்ததும்,

“நீங்கள் சிரிது நேரத்திற்கு முன் பாரசீகர்கள் மற்றும் ரோமர்களைப் போன்று நடந்து கொள்ளப் பார்த்தீர்கள். அவர்கள்தாம் தம்மன்னர் அமர்ந்து கொண்டிருக்கும் போது நின்று கொண்டிருப்பவர்கள். நீங்கள் அவ்வாறு செய்யாதீர்கள், உங்களுக்கு தலைமை தாங்கி தொழுவிப்பவர்களை பின்பற்றுங்கள். அவர் நின்று தொழுதால் நீங்களும் நின்று தொழுங்கள் அவர் அமர்ந்து தொழுதால் நீங்களும் அமர்ந்து தொழுங்கள்.”

ஆதாரம்: புஹாரி

மேற்படி ஹதீஸ் ஒருவருக்கு எழுந்து நின்று மரியாதை செய்வது கூடாது என்பதையும் அவ்வாறு செய்வது மாற்று மத கலாச்சாரம் என்பதையும் தெளிவுபடுத்துகிறது.

இவ்விடத்தில் கீழ்வரும் நபிமொழியையும் ஞாபகமூட்ட விரும்புகிறோம்.

” உங்களுக்கு முன்னிருந்த (யூதர்கள் மற்றும் கிறிஸ்த) வர்களின் வழிமுறைகளை நீங்கள் அங்குலம் அங்குலமாக, முழம் முழமாக பின்பற்றுவீர்கள். எந்த அளவுக்கென்றால், அவர்கள் ஓர் உடும்புப்பொந்துக்குள் புகுந்தாலும் கூட அதிலும் நீங்கள் புகுவீர்கள்”

அறிவித்தவர்: அபூ ஸயீத் அல் குத்ரீ

ஆதாரம் : புஹாரி, முஸ்லிம்

எனவே அல்குர்ஆன் அஸ்ஸுன்னாஹ் அடிப்படையில் எழுந்து நின்று மரியாதை செய்வது மார்க்கத்தில் தடைசெய்யப்பட்ட விடயம் என்பதை தெளிவாக புரிந்து கொள்ளவேண்டும்.

0 comments:

Post a Comment