முஹம்மட் அர்ஷாத் அல் அதரி
arshathalathary@gmail.com
ஏக இறைவனின் கட்டளைக்கு அடிபணிந்து நடக்கவேண்டிய இன்றைய இஸ்லாமிய சமுதாயம் அதிலும் குறிப்பாக எமது பெண்கள் தங்களுடைய வாழ்நாளை வீண்வேடிக்கைகளிலும் சினிமா, சீரியல்களிலும் கழித்துக் கொண்டிருக்கின்றார்கள்.arshathalathary@gmail.com
இறைவனை நினைத்து அழவேண்டிய கண்கள் கற்பனையான கதாபாத்திரங்களைப் பார்த்து கண்ணீர் வடிக்கின்றது. இறைதியானத்தில் உருக வேண்டிய உள்ளங்கள் சினிமா நடிகர், நடிகைகளைப் பார்த்து உருகுகின்றது.ஆனால் எமது முன்னோர்களான நபித்தோழியர் தங்களுடைய வாழ்நாளை முழுக்க முழுக்க இறைவன் விரும்பக்கூடிய வழியிலேயே கழித்தார்கள். மேலும், மார்க்கத்தைக் கற்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்களாக, கற்றதை செயல்முறைப்படுத்தக் கூடியவர்களாகத் திகழ்ந்தார்கள்.
நபித்தோழர் அபுஸயீதில் குத்ரி (ரழி) அவர்கள் கூறியதாவது, (நாங்கள் உங்களை அணுகி மார்க்க விடயங்களை கேட்க முடியாதவாறு) தங்களிடம் எப்போதும் ஆண்களே மிகைத்து நிற்கிறார்கள். எனவே தாங்களாகவே எங்களுக்கு ஒரு நாளை ஏற்பாடு செய்யுங்கள் என்று பெண்கள் நபி (ஸல்)அவர்களிடம் கேட்டுக் கொண்டார்கள். அவர்களும் அப்பெண்களுக்கு என ஒரு நாளை ஏற்பாடு செய்ய வாக்களித்து அந்நாளில் அவர்களைச் சந்தித்து அவர்களுக்கு அறிவுரை பகர்ந்தார்கள். (மார்க்க கட்டளைகளை) ஏவினார்கள்.நூல்:ஸஹீஹுல் புஹாரி 101
உம்மு ஸலமா (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் ஆண்கள் தொடர்பாகவே அல்குர்ஆன் வசனங்கள் இறங்குகின்றது. பெண்கள் தொடர்பாக எந்த வசனமும், இறங்கவில்லையே என்று கேட்ட போது, அல்லாஹூத்தஆலா, நிச்சயமாக முஸ்லிம்களான ஆண்களும், முஸ்லிம்களான பெண்களும், விசுவாசிகளான ஆண்களும், விசுவாசிகளான பெண்களும் (அல்லாஹ்விற்கு) வழிபாடு செய்பவர்களான ஆண்களும், வழிபாடு செய்பவர்களான பெண்களும், உண்மையாளர்களான ஆண்களும், உண்மையாளர்களான பெண்களும், பொறுமையாளர்களான ஆண்களும், பொறுமையாளர்களான பெண்களும், உள்ளச்சத்தோடு (அல்லாஹ்விற்குப்) பயந்து நடக்கும் ஆண்களும், உள்ளச்சத்தோடு (அல்லாஹ்விற்கு) பயந்து நடக்கும் பெண்களும், தானம் செய்பவர்களான ஆண்களும், தானம் செய்பவர்களான பெண்களும், நோன்பு நோற்பவர்களான ஆண்களும் நோன்பு நோற்பவர்களான பெண்களும் தங்கள் மர்மஸ்தானங்களைக் காத்துக்கொள்பவர்களான ஆண்களும், தங்கள் மர்மஸ்தானங்களைக் காத்துக்கொள்பவர்களான பெண்களும், அல்லாஹ்வை அதிகமாக நினைவு கூறுபவர்களான ஆண்களும் அல்லாஹ்வை அதிகமாக நினைவு கூறுபவர்களான பெண்களும், (ஆகிய) இவர்களுக்கு, அல்லாஹ் மன்னிப்பையும் மகத்தான (நற்) கூலியையும் தயார் செய்து வைத்திருக்கிறான்.
(அல்குர்ஆன் 33: 35)
என்கின்ற வசனத்தை அருளினான். இந்த வசனத்தில் அல்லாஹூத்தஆலா பெண்களுக்குரிய பல்வேறு பண்புகளை எடுத்துரைக்கின்றான். அந்தப் பண்புகளின் அடிப்படையில் நபித்தோழியர்கள் தங்களின் வாழ்நாளை அமைத்துக் கொண்டார்கள். ஆதலால்தான் இறைவனின் பாராட்டையும் வெற்றியையும் பெற்றவர்களானார்கள் மேற்கூறிய அருள்மறை வசனத்திற்கேற்ப தங்களது வாழ்வை அமைத்துக்கொண்ட நபித் தோழியரின் வாழ்வை கவனிப்போம்
.1அல்லாஹ்விற்குவழிபாடு செய்பவர்களான பெண்கள்
:நபிகளாரின் துணைவியார் ஆயிஷா (ரழி) கூறுகின்றார்கள்
விசுவாசிகளான பெண்கள் தங்களின் ஆடைகளால் போர்த்திக் கொண்டு நபி (ஸல்)அவர்களுடன் பஜ்ருத் தொழுகையில் பங்கெடுப்பவர்களாக இருந்தனர். தொழுகை முடிந்ததும் தங்களின் இல்லங்களுக்கு திரும்புவார்கள். இருளின் காரணமாக யாராலும் அவர்களை அறிந்து கொள்ள முடியாது.ஸஹீஹுல் புஹாரி : 578
தொழுகையானது முஸ்லிம்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் நிறைவேற்ற வேண்டிய கடமையாகும். இக்கடமையினை நம் பெண்களில் எத்தனை பேர் நிறைவேற்றுகின்றார்கள்? என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. பெண்களிடம் தொழுகையை விட்டதற்கு காரணம் கேட்டால் வீட்டு வேலைப்பளு, பிள்ளைப் பராமாரிப்பு போன்ற போலி நியாயங்களைக் கூறுவார்கள்.
ஆனால் சினிமா, சீரியல் பார்ப்பதற்காக தங்களுடைய வேலைகளையெல்லாம் ஒதுக்கிவைத்து விடுவார்கள். எந்த அளவுக்கெனில், பெண்கள் அதிகாலை எழுந்து பஜ்ருத் தொழுகையைத் தொழுது விட்டு, வீடு சுத்தம் செய்து, பாத்திரங்கள் கழுவி, சமையல் செய்து விட்டு லுஹர் (தொழுகை) நேரம் வந்துவிட்டது என்று தொழச்சென்ற காலம் கடந்து காலை ஏழு மணிக்கு எழுந்து பிள்ளைகளை அவசர அவசரமாய் பாடசாலைக்கு அனுப்பி “இன்றைக்கு கொஞ்சம் லேட்! கடையில் பார்த்துக் கொள்ளுங்கள்” என்று கணவனை அனுப்பி விட்டு அடுப்பில் சோற்றையும், கறியையும் ஏற்றிவைத்துவிட்டு அப்பாடா! என்று தொலைக்காட்சிக்கு முன் அமர்ந்து குக்கரின் ஒலி வரும்வரை சின்னத்திரையில் புதைந்து போகும் தாய்மார்களைப் பார்க்கின்றோம். இந்த நேரத்தில் சில தாய்மார்களுக்கு தான் பத்து மாதங்கள் சிரமத்திற்கு மேல் சிரமத்தை அனுபவித்து பெற்றெடுத்த பச்சிளம் குழந்தையின் அழுகுரல் கூட பாராமுகமாகி விடுகின்றது.
இந்த அளவிற்கு சினிமா, சீரியலுக்ககாக தங்களுடைய நேரத்தை திட்டமிட்ட முறையில் ஒதுக்கக் கூடிய எமது பெண்கள் எம்மை படைத்து பரிபாலிக்கும் இறைவனை வழிபடுவதற்காக நேரத்தை ஒதுக்குவதற்கு மாத்திரம் பல்வேறு போலி நியாயங்களைக் கற்பிக்கின்றனர். ஆனால் எமது முன்னோர்களான நபித்தோழியர் கடும் குளிரின் போதும், தூக்கம் மிகைக்கையிலும் அதிக கவனத்துடன் தொழுகையை தவறவிடாது நிறைவேற்றி வந்துள்ளார்கள்.
நபித்தோழியர் வணக்கவழிபாட்டில் காட்டிய ஆர்வத்தை எடுத்துரைக்கும் இன்னுமொரு செய்தியைப் பார்ப்போம்.
:நபிகளார் (ஸல்)அவர்கள் கூறுகின்றார்கள்
யார் இரவிலும் பகலிலும் பன்னிரண்டு ரக்அத்துக்கள் தொழுகிறாரோ அவருக்கு சொர்க்கத்தில் ஒரு வீடு கட்டப்படும். இதைச்செவியுற்ற உம்மு ஹபீபா (ரழி) அவர்கள் கூறினார்கள். நபி (ஸல்)அவர்களிடம் இருந்து இந்த செய்தியை கேட்டதிலிருந்து ஒவ்வொரு நாளும் பன்னிரண்டு ரக்அத்துக்கள் தொழுவதை நான் விடவே இல்லை.அறிவிப்பவர் : உம்மு ஹபீபா (ரழி)நூல் : முஸ்லிம் 1198
நமது பெண்கள் கடமையான தொழுகையைக் கூட நிறைவேற்றுவதும் இல்லை. தமது பிள்ளைகளை நிறைவேற்றுமாறு ஏவுவதும் இல்லை. ஆனால், நபித்தோழியரோ தொழுகை நேரம் வந்துவிட்டால் தமது கைக்குழந்தைகளைக் கூட தூக்கிக்கொண்டு தொழுகைக்கு செல்லக்கூடியவர்களாக இருந்துள்ளார்கள்.
:நபிகளார் (ஸல்)அவர்கள் கூறினார்கள்
நீண்ட நேரம் தொழுகை நடாத்தும் எண்ணத்துடன் நான் தொழுகையை ஆரம்பிக்கின்றேன். அப்போது குழந்தையின் அழுகுரலை நான் கேட்கிறேன். (எனக்குப் பின்னால் தொழுது கொண்டிருக்கும்) அக்குழந்தையின் தாயாருக்கு சிரமம் அளிக்கக் கூடாது என்பதற்காக தொழுகையைச்சுருக்கமாக முடித்து விடுகின்றேன்.
அறிவிப்பவர் : அனஸ் இப்னு மாலிக் (ரழி)
நூல் : ஸஹீஹுல் பபுஹாரி 709,710
: உண்மையாளர்களான பெண்கள் 2.
நம்மில் ஏராளமானவர்கள் மோசமான காரியங்களை செய்து விட்டு அதனை மறைப்பதற்காக பல்வேறு பொய்களை சோடனை செய்து கூறுவார்கள். மேலும் சிலர் பொய் சொல்லியே தமது பிழைப்பை நடத்துகிறார்கள். ஆனால் நபித்தோழியர்கள் தாங்கள் தவறு செய்துவிட்டாலோ, மார்க்கத்திறகு புறம்பாக நடந்துவிட்டாலோ ஊருக்கு, உலகிற்கு அஞ்ஞாது, மக்கள் தன்னை கேவலமாக கருதுவார்கள் என எண்ணாது, நாளை மறுமையில் இறைவன் தண்டிப்பானே என்ற இறையச்சத்தின் காரணமாக தனது தவறை, பிழையை ஒப்புக் கொண்டு உண்மையைக் கூறி வல்லோன் அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு தேடக்கூடிய உத்தம பெண்மணிகளாக விளங்கினார்கள்.
“காதிமிய்யா கோத்திரத்தை சேர்ந்த ஒரு பெண்மணி
நபி (ஸல்) அவர்களிடம் வந்து நான் பாவமான காரியம் (விபச்சாரம்) செய்துவிட்டேன் என்றதும் நபி (ஸல்) அவர்கள் “நீ திரும்பிப் போ!“ என விரட்டினார்கள். அடுத்த நாள் நபியிடத்தில் அப்பெண் வந்து ‘மாஇஸ் இப்னு மாலிக்கை‘ விரட்டியது போல் என்னை விரட்ட நாடுகிறீர்கள்??. என் உயிர் எவன் கைவசம் இருக்கின்றதோ அவன் மீது ஆணையாக நான் கர்ப்பமாக உள்ளேன் என்றார்.
அப்போதும் நபி (ஸல்)அவர்கள் அப்பெண்மணியை விரட்டினார்கள். அப்பெண் திரும்பிப் போய்விட்டாள். அடுத்த நாள் மீண்டும் வந்த போது குழந்தையை பெற்றெடுத்து வா! என்றார்கள். அப்பெண் குழந்தையை பெற்றெடுத்ததும் குழந்தையோடு நபி (ஸல்) அவர்களிடம் வந்தார். அதற்கு நபி (ஸல்)அவர்கள் குழந்தை பால்குடி மறக்கும் வரை இங்கு வராதே! என்றார்கள். (குழந்தை பால்குடி மறந்து உணவுகளை உண்ண ஆரம்பிக்கும் போது) குழந்தையின் கையில் சாப்பிட ஏதோ இருந்த நிலையில் கொண்டு வந்தார்.
நபி (ஸல்)அவர்கள் குழந்தையை முஸ்லிமான ஒரு ஆணிடம் ஒப்படைத்தார்கள். அப்பெண்ணுக்கு தண்டனை கொடுக்க ஏவினார்கள். எனவே, அப்பெண்ணுக்கான குழியை (நபித்தோழர்கள்) தோண்டினார்கள். அதில் அப்பெண்ணை நிற்க வைத்து கல்லெறிந்து கொலை செய்தார்கள். அப்பெண்ணை கொல்லுவதில் காலித் (ரழி) அவர்கள் ஈடுபட்டிருந்தார்கள். கல்லைக் கொண்டு காலித் (ரழி) அவர்கள் முகத்தில் அடிக்கும் போது அப்பெண்ணிண் இரத்தம் காலித் (ரழி) அவர்களின் முகத்தில் பட்டது. அப்பெண்ணை திட்டினார்கள். நபி (ஸல்) அவர்கள் இப்பெண் தவ்பாவை மேற்கொண்டு விட்டாள். குற்றம் செய்தவர் தவ்பா செய்தால் மன்னிப்பு கிடைக்கும் என்று சொல்லி விட்டு அப்பெண்ணுக்கு தொழ வைத்தார்கள். பின்பு அடக்கம் செய்தார்கள்
அறிவிப்பவர்:புரைதா (ரழி)
நூற்கள் : முஸ்லிம், அபூதாவூது
:3.பொறுமையாளர்களான பெண்கள்
:அதாவு பின் அபீ ரபாஹ் (ரஹ்) கூறியதாவது
இப்னு அப்பாஸ் (ரழி)அவர்கள் என்னிடம் சுவர்க்கவாசியான ஒரு பெண்மணியை உங்களுக்கு காட்டட்டுமா? என்று கேட்டார்கள். நான் ஆம் (காட்டுங்கள்) என்று சொன்னேன். அவர்கள் இந்த கறுப்பு நிறப்பெண்மணிதான் அவர். இவர் ஒரு தடவை நபி (ஸல்)அவர்களிடம் வந்து நான் வலிப்பு நோயால் (அடிக்கடி) பாதிக்கப்படுகின்றேன்.
அப்போது என் (உடலிலிருந்து ஆடை விலகி) உடல் திறந்து கொள்கிறது. ஆகவே எனக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள் என்றார்கள். நபி (ஸல்) அவர்கள் “நீ நினைத்தால் பொறுமையாக இருக்கலாம் (இதற்கு பதிலாக) உனக்கு சொர்க்கம் கிடைக்கும். நீ விரும்பினால் உனக்கு குணமளிக்கும்படி அல்லாஹ்விடம் நான் பிரார்த்தனை செய்கின்றேன்” என்று சொன்னார்கள்.
இந்தப் பெண்மணி நான் பொறுமையாகவே இருந்து விடுகின்றேன். ஆனால் வலிப்பு வரும்போது ஆடை விலகி என் உடல் திறந்து கொள்கிறது. அப்படி திறந்து கொள்ளாமலிருக்க அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யுங்கள் என்று சொன்னார். அவ்வாறே நபி (ஸல்) அவர்கள் இந்தப் பெண்ணுக்காக பிரார்த்தனை செய்தார்கள்.
நூல் : புஹாரி5652
வலிப்பு வந்த பெண்ணிண் பெயர் உம்மு ஸிஃபர் என்பதாகும். இவர் மனநோயால் பாதிக்கப்பட்டு இருந்தார் என்றும் சில அறிவிப்புக்களில் இடம்பெற்றுள்ளது.
ஆனால், இன்றைய காலத்து நமது பெண்கள் தமக்கு ஏதாவது சிறிய துன்பங்கள் ஏற்பட்டுவிட்டால் போதும் அதற்காக கைசேதப்பட்டடு, மனம் நொந்து இறைவனையே திட்டக்கூடிய அளவிற்கு வரம்பு மீறிச் சென்றுவிடுகின்றனர்.அதுமாத்திரமன்றி தமது நோய் மற்றும் துன்பத்தை தாங்க முடியாது தற்கொலை செய்து கொள்ளக்கூடிய அளவிற்கு கூட சென்று விடுகின்றார்கள். மேலும் சிலருக்கு குழந்தை பிறந்து மரணம் எய்துவிட்டால் பெற்றோர்களின் துயரத்தை வார்த்தைகளால் சொல்ல முடியாது.
பிரிவின் வேதனையை சமாதான வார்த்தைகள் ஈடுசெய்ய முடியாது. இறைவனை இகழ ஆரம்பித்து விடுகிறார்கள். ஒப்பாரி வைத்து மார்பில் அடித்துக் கொள்கிறார்கள். ஒரு மனிதன் சாதாரண நிலையில் எவ்வாறு நடந்து கொள்கின்றான் என்பதனை விட தலைகால் புரியாத மகிழ்ச்சிகரமான நிலையின் போதும் தாங்கொணாத சோதனைகளில் மனம் நொந்து வெதும்பிய நிலையில் எப்படி நடந்து கொள்கின்றான் என்பதை வைத்தே நாம் ஒருவனது ஆளுமையையும் இறைவனுக்கு அடிபணியும் தன்மையையும் அளவிட முடியும்.
எமது முன்னோர்களான நபித்தோழியர்கள் தமக்கு ஏற்படும் எவ்வாறான சோதனைகளின் போதும் பொறுமையுடன் ஏக இறைவனின் திருப்தியை மாத்திம் நாடி செயற்பட்டார்கள். இவ்வகையில் சோதனைகளின் போது நபிகளாரின் துணைவியார் அன்னை ஆயிஷா (ரழி)அவர்கள் காட்டிய பொறுமையும் அல்லாஹ்வின் மீதான அசைக்க முடியாத நம்பிக்கையும் அவர்களது அந்தஸ்த்தை மென்மேலும் உயர்த்திவிடுகின்றது.
ஒழுக்கங்கெட்ட பெண்கள்கூட தமது கற்பில் பிறர் களங்கம் கற்பிப்பதைச் சகித்துக் கொள்ளமாட்டார்கள். ஒழுக்கத்தின் சிகரமாகத் திகழ்ந்த அன்னையவர்களின் வாழ்வில் நயவஞ்சர்கள் கற்பித்த களங்கம் அன்னையின் வாழ்வின் சோதனையும்,வேதனையும் மிகுந்ததொரு நிகழ்ச்சியாகும். இது பற்றி அன்னையவர்களே கூறிக் காட்டுகிறார்கள்.
நபி (ஸல்)அவர்கள் ஏதேனும் பயணம் புறப்பட விரும்பினால் தம்மனைவியரிடையே சீட்டுக் குலுக்கி அழைத்துச் செல்வார்கள். ஒரு யுத்தத்திற்குச் செல்கையில் சீட்டுக் குலுக்கியபோது எனத பெயர் வந்தது. எனவே நானும் நபி (ஸல்) அவர்களுடன் பயணிக்கலானேன்.
அப்போது ஹிஜாப் பற்றிய சட்டம் இறங்கியிருந்தது. எனக்கென ஒரு பல்லக்கு இருந்தது. அதில்தான் நான் பயணித்தேன். யுத்தம் முடிந்து மீண்டு வரும் போது மதீனாவிற்கருகில் முகாமிட்டனர். நான் எனது தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காகப் படைவீரர்கள் எவரும் வராத அளவுக்கு தூரத்திற்குச் சென்றேன்.
என்தேவையை முடித்து நான் திரும்பி வரும்போது எனது மாலை காணாமல் போனதை அறிந்து மீண்டும் அதைத் தேடிச் சென்றதால் நான் தாமதித்து விட்டேன். எனது பல்லக்கை தூக்கி ஒட்டகையில் வைப்போர் நான் உள்ளே இருப்பதாக எண்ணி பல்லக்கைத் தூக்கி ஒட்டகத்தின் மீது வைத்துவிட்டனர். நபி (ஸல்) அவர்களின் மனைவியர்கள் அப்போதைய வறுமை காரணமாக மெலிந்தவர்களாக இருந்தனர். அத்தோடு நான் சிறு பிள்ளையாகவும் இருந்தேன்.
இதனால் பல்லக்கை தூக்கியவர்களுக்கு “பாரத்தில் வித்தியாசம் தெரியாமல் இருந்திருக்கலாம்” நான் மாலையை எடுத்துக் கொண்டு வந்த போது படையினர் போயிருந்தனர். என்னைக் காணாது மீண்டும் இதே இடத்திற்கு வருவார்கள் என்று எண்ணி அதே இடத்தில் அமர்ந்திருத்தேன். அப்படியே தூங்கிவிட்டேன்.
அப்போது படையின் பின்னால் சென்ற ஸப்வான் இப்னு முஅத்தல் (ரழி) படையிருந்த இடத்தில் தூங்கிகொண்டிருக்கும் ஒரு கரிய மனிதத் தோற்றத்தைக் கண்டு அந்த இடத்திற்கு வந்தவர்கள் நான் படுத்திருப்பதை அறிந்ததும் (இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்) என்றார்கள். நான் சத்தம் கேட்டு எழுந்து என் முகத்தை மறைத்துக் கொண்டேன். என்னுடன் அவர் ஒரு வார்த்தையும் பேசவும் இல்லை. இதைத் தவிர எந்த வார்த்தையும் அவரிடமிருந்து நான் செவியேற்கவுமில்லை.
அவர் ஒட்டகத்தை படுக்க வைத்தார். நான் அதில் ஏறிக் கொண்டேன். அவர் வழிநடத்திச் சென்றார். படையை பகல் பொழுதில் அடைந்தோம். இந்நிகழ்ச்சியை வைத்து என்னைப் பற்றியும் ஸப்வான் இப்னு முஅத்தல் (ரழி) அவர்களைப் பற்றியும் அவதூறை அப்துல்லாஹ் இப்னு உபை இப்னு ஸலூல் கட்டிவிட்டான்.
இதன் பின் ஒருமாத காலம் நான் நோயுற்றிருந்தேன். அப்போது நபி (ஸல்)அவர்கள் முன் போல் என்னுடன்
அன்புடன் நடக்கவில்லை. வெளியில் என்ன பேசப்படுகின்றது என்பதும் எனக்குத் தெரியாது. இயற்கைத் தேவையை நிவர்த்தி செய்ய வெளியில் சென்ற சந்தர்ப்பத்தில் உம்முமிஸ்தஹ் என்ற பெண்மணியினூடாக விபரம் அறிந்து வேதனைப்பட்டேன். என் நோய் மேலும் அதிகரித்தது.
தேவைகளை எல்லாம் முடித்துக் கொண்டு வீட்டுக்கு வந்தபோது நபி (ஸல்)அவர்கள் வந்திருந்தார்கள். என் பெற்றோரிடம் சென்று நிலவரத்தை சரியாகப் புரிந்து கொள்ள விரும்பிய நான் நபி (ஸல்)அவர்களிடம் ” என் பெற்றோர் இல்லம் செல்ல என்னை அனுமதிப்பீர்களா?” என்றேன். அவர்களும் அனுமதித்தார்கள்.
நான் என் பெற்றோரிடம் சென்று விபரம் அறிந்த போது அன்றைய இரவுபூராக உறங்காமல் அழுது கொண்டே இருந்தேன். இந்த நிலையில் நபி (ஸல்)அவர்கள் என்னைப் பற்றி என்ன முடிவு எடுப்பது என்பது பற்றி பலரிடம் ஆலோசனைகள் கேட்டார்கள். இப்பிரச்சினையால் நபித்தோழர்களிடையே கூட வாய்த்தர்க்கங்கள் எழுந்தன.
மறு நாள் பகல், இரவு பூராக நான் அழுது கொண்டே இருந்தேன். இவ்வாறு இரண்டு இரவுகள் ஒரு பகல்பூராக நான் அழுத வண்ணமே இருந்தேன். வேதனையால் என் இதயம் வெடித்து விடும் போல் இருந்தது. அப்போது என் தாயும் தந்தையும் என் அருகே வந்து அமர்ந்தனர். ஒரு அன்சாரிப் பெண்ணும் என்னிடம் வந்து அழுது கொண்டிருந்தாள். இந்நிலையில் நபி (ஸல்)அவர்கள் அங்கே வந்து ஸலாம் கூறி அமர்ந்தார்கள். வதந்தி பரப்பப்பட்டு ஒரு மாத காலமாக என்னருகில் அவர்கள் அமர்ந்ததில்லை. பின்னர்,
நபி (ஸல்): ஆயிஷாவே! உன்னைப் பற்றி இம்மாதிரியான செய்தி எனக்கு கிடைத்துள்ளது. நீ நிரபராதி எனின், அல்லாஹ் உன்னை இக்குற்றச்சாட்டிலிருந்து பாதுகாப்பான்! நீ தவறு செய்திருந்தால் உன் தவறை ஏற்றுக் கொண்டு அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புக் கேள்! ஏனெனில், தவறு செய்தவன் தவறை ஒப்புக்கொண்டு தவ்பா செய்திருந்தால் அல்லாஹ் மன்னிக்காதிருப்பதில்லை.
ஆயிஷா: தந்தையே! எனக்காக ரஸுலுல்லாஹ்வுக்கு பதில் கூறுங்கள்!
அபூபக்கர் : என்ன கூறுவதென்று எனக்கு தெரியவில்லை.
ஆயிஷா : தாயே! நீங்களாவது எடுத்துச் சொல்லுங்களேன்.
?உம்மு ரும்மான் : நான் என்ன கூற முடியும்
ஆயிஷா : (அப்போது நான் சிறுமியாக இருந்தேன். குர்ஆனில் அதிகம் மனனமாக இருக்கவில்லை.) நீங்கள் இந்தச் செய்தியைக் கேட்டு அது உங்களது உள்ளத்தில் பதிந்தும் விட்டது. அதை உண்மையென்றும் நீங்கள் நம்பி விட்டீர்கள். நான் குற்றமற்றவள் எனக்கூறினால்- ‘நான் குற்றமற்றவள் என்பதை அல்லாஹ் அறிவான்‘- நீங்கள் நம்ப போவதில்லை. நான் குற்றத்தை ஒப்புக் கொண்டால் என்னை நீங்கள் நம்புவீர்கள். எனக்கு இந்த இடத்தில் யூஸூப் (அலை)யின் தந்தையின் கூற்றே பதிலாகத்தெரிகின்றது.
(யூஸூப் (அலை) அவர்களை ஓநாய் கொன்று விட்டது என யூஸூபின் சகோதரர்கள் கூறிய போது யஃகூப் (அலை) அவர்கள்) பொறுமையே நல்லது, நீங்கள் வர்ணிப்பதிலிருந்து (பாதுகாப்பு பெற) அல்லாஹ்விடமே உதவி தேடுகின்றேன். (12:18) எனக்கூறிய ஆயத்தை ஓதிக்காட்டி விட்டு நான் சுருண்டு படுத்துக் கொண்டேன்.
என் விடயத்தை அல்லாஹ் கனவு மூலமாவது வெளிப்படுத்துவான் என்று நான் நம்பினேன். அல்லாஹ்வின் மீது சத்தியமாக அந்த இடத்திலிருந்து எவருமே வெளியேற முன்னர் வஹி வருவதற்கான அறிகுறி நபி (ஸல்) அவர்களிடம் தென்பட்டது.
நபி(ஸல்) : ஆயிஷாவே! அல்லாஹ் உன்னைத் தூய்மைப்படுத்தி விட்டான்.
உம்மு ரும்மான் : ஆயிஷாவே! நபியிடம் எழுந்து சென்று அவர்களுக்கு நன்றி கூறு.
ஆயிஷா : “அவர் பால் எழுந்து செல்லவும் மாட்டேன். அல்லாஹ்வைத் தவிர வேறு எவரையும் புகழவும் மாட்டேன். (ஹதீஸின் சுருக்கம்)
ஆதாரம் : புஹாரி 2661,4141,4750 அஹ்மத் 9/25680
முஸ்லிம் 2770
இது விடயமாக அந்நூர் அத்தியாயத்தில் 11 வசனங்கள் அருளப்பட்டுள்ளன. இங்கே நாம் குறிப்பாக நமது பெண்கள் அன்னை ஆயிஷா (ரழி) அவர்களின் பொறுமையைப் பற்றி சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம். பொறுமையே சிறந்தது. அல்லாஹ் உதவுவதற்குப் போதுமானவன் என உறுதியாக நம்பினார்கள்! இந்த ஆயிஷா (ரழி) அவர்களின் பொறுமையும், கொள்கை உறுதியும் இன்று எங்கே சென்றுவிட்டன??. சிறியதொரு பிரச்சினை, சோதனையென்றதும் அல்லாஹ்வை மறந்து விடும் பெண்களாகத்தான் எமது பெண்களில் பெரும்பான்மையானவர்களைப் பார்க்கின்றோம்.
நோய்,நொடி பிரச்சினை என்றதும் அல்லாஹ்வை மறந்து தர்ஹாக்களில் அவ்லியாக்களிடம் தஞ்சம் புகுகின்றனர். இன்றைய எமது பெண்கள், சிறியதொரு சோதனையென்றதும் ஒப்பாரி வைக்கின்றனர். குறி சொல்வர்களைத் தேடி விரைகின்றனர். கிணறு,கடல் எனக் குதிக்கப்பார்க்கின்றனர். நஞ்சு அருந்த முனைகின்றனர். இவர்களெல்லாம் அன்னை ஆயிஷா (ரழி)அவர்களின் பொறுமையை தமக்கு படிப்பினையாக, முன்மாதிரியாக கொண்டு தமது வாழ்வை அமைத்துக் கொள்ளுதல் வேண்டும். வானமே இடிந்து வீழ்ந்த போதும் தயங்கிடாது தாங்கும் பொறுமை வேண்டும்.
:.உள்ளச்சத்தோடு (அல்லாஹ்விற்கு) பயந்து நடக்கும்பெண்கள்4
நாம் செய்கின்ற ஒவ்வாரு காரியமும் உள்ளச்சத்துடன் அல்லாஹ்விற்காக என்ற தூய்மையான எண்ணத்துடன் செய்யப்படுதல் வேண்டும். வணக்கவழிபாடுகள் பிறர் பார்த்து மெச்ச வேண்டும் என்ற எண்ணமில்லாது அல்லாஹ்விற்காக என்ற எண்ணத்தில் நிறைவேற்றப்படல் வேண்டும். நபித்தோழியரின் செயற்பாடுகள் தமக்கு மறுமையில் மிகப் பெரிய சன்மானம் கிடைக்க வேண்டுமென்ற உயரிய எண்ணத்தில், அல்லாஹ்விற்காக என்ற உள்ளச்சத்துடனேயே அமைந்திருந்தன என்பதை பின்வரும் செய்தி நமக்கு எடுத்துரைக்கின்றது.
:ஜைனப் (ரழி)அவர்கள் கூறுகிறார்கள்
அபூசுப்யான் (ரழி)அவர்களின் மரணச்செய்தி சிரியாவிலிருந்து வந்த மூன்றாம் நாள் (அவரது மகள்) உம்மு ஹபீபா (ரழி) அவர்கள் மஞ்சள் நிற வாசனை திரவியத்தை வரவழைத்து தமது கன்னங்களிலும் முழங்கைகளிலும் தடவிக் கொண்டார்கள்.மேலும் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பியுள்ள ஒரு பெண் தனது கணவன் இறந்தால் தவிர மூன்று நாட்களுக்கு மேல் துக்கம் கடைப்பிடிக்ககூடாது, கணவன் இறந்தால் மட்டுமே நான்கு மாதமும் பத்துநாளும் துக்கம் கடைப்பிடிக்க வேண்டும். என நபிகளார் (ஸல்)அவர்கள் கூறியதை கேள்விப்பட்டிராவிட்டால் இ(இந்த வாசனை திரவியமான)து எனக்கு தேவையற்றதுதான் எனக் கூறினார்கள்.
நூல்: ஸஹீஹுல் புஹாரி1280
கணவன் அல்லாத மற்ற எவறின் இறப்புக்காகவும் ஒரு பெண் மூன்று நாட்களுக்கு மேல் துக்கம் கடைப்பிடிக்ககூடாது என்று நபிகளார் (ஸல்)அவர்கள் தடுத்தார்கள் என்ற ஒரே காரணத்திற்காக தனது தந்தை இறந்து மூன்றாவது தினம் வாசனை திரவியத்தை தடவிக்கொள்கிறார்கள். இது உம்மு ஹபீபா (ரழி) அவர்களது அல்லாஹ்விற்காக என்ற உள்ளச்சத்துடன் கருமமாற்றும் பண்பைக் காட்டுகின்றது.
: 5.தானம் செய்பவர்களான பெண்கள்
பெண்களைப் பொறுத்தமட்டில் நகைகளை சேர்த்து வைப்பதிலும் அதனைப் போட்டு அழகு பார்ப்பதிலும்தான் கண்ணும் கருத்துமாக இருக்கின்றார்கள் .நமது பெண்களில் சிலர் இல்லையென வருபவர்களுக்கு எதுவுமே வழங்காது விரட்டக்கூயவர்களாக உள்ளார்கள். ஆனால் நபித்தோழியர்களோ வாரி வாரி வழங்குவதானாலும் சரி ஏனைய நற்காரியங்களானாலும் சரி போட்டி போட்டுக் கொண்டு செயலாற்றக் கூடியவர்களாகத் திகழந்தார்கள்.
“நபி (ஸல்)அவர்கள் நோன்பு பெருநாளில் இரண்டு ரக்அத்கள் தொழுதனர். அதற்கு முன்னும் பின்னும் எதையும் தொழவில்லை. பிறகு பெண்கள் பகுதிக்கு வந்தனர். அவர்களுடன் பிலால் (ரழி)அவர்களும் இருந்தனர்.தர்மம் செய்வதின் அவசியத்தைக் குறித்து அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் விளக்கினார்கள்.சில பெண்கள் தங்கள் கழுத்து மாலைகளையும், வளையல்களையும் போடலானார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரழி)
நூல்:ஸஹீஹுல் புஹாரி
எந்த நகைகளைச் சேர்ப்பதற்காக நமது பெண்கள் மிகுந்த பிரயத்தனம் மேற்கொள்கின்றனரோ அந்த நகைகளே சில நேரங்களில் அவர்களது உயிருக்குப் பங்கம் விளைவிக்க கூடியதாக மாறிவிடுகின்றது. கரத்தை வெட்டி விட்டு வளையல் திருட்டு, கொலை செய்து விட்டு நகை கொள்ளை என எத்தனையோ செய்திகளை தினந்தோறும் நாளிதழ்களில் படிக்கிறோம்.
தர்மம் செய்யாது பூட்டி பூட்டி வைத்த நகைககள் யாருக்கும் உதவாமல் திருடன் கையில் போய்ச் சேர்கின்றது. தர்மம் செய்வதற்கு தயாரில்லை இன்றைய பெண்கள். கொடுத்து கொடுத்துச் சிவந்த நபித்தோழியர் எங்கே? இன்றைய எமது பெண்கள் எங்கே? வியக்க வைக்கும் நபித்தோழியரின் தயாள குணம் தொடர்பாக சில செய்திகளைப் பார்ப்போம்.
அப்துல்லாஹ் இப்னு ஸூபைர் (ரழி) அவர்கள் அன்னை ஆயிஷா (ரழி) அவர்களுக்கு ஒரு இலட்சம் தீனார்கள் அனுப்பி வைத்தார்கள். அதை அன்னையவர்கள் ஒரு பானையில் போட்டு மக்களுக்கு பகிர்ந்தளித்து விட்டார்கள். மாலையானதும் தனது பணிப்பெண்ணிடம் (உம்மு தர்ரா) உணவு கொண்டு வருமாறு கூறிய போது, உம்மு தர்ரா அவர்கள் அன்னையே ஒரு திர்ஹத்திற்காயினும் இறைச்சியைத் தங்களுக்காக வாங்கியிருக்க கூடாதா? எனக் கேட்ட போது, நீங்கள் முன்னரே நினைவூட்டியிருக்கலாமே என அன்னை ஆயிஷா (ரழி)அவர்கள் கேட்டார்கள்.
நூற்கள்:தபகாத் இப்னு ஸஅத் 8/67, ஹில்லியதுல் அவ்லியா 2/47
தனக்கு கிடைத்த அன்பளிப்பை எண்ணிக் கூட பார்க்காது தர்மம் செய்த தயாள குணம் கொண்ட அன்னை ஆயிஷா (ரழி) அவர்களின் வாழ்வில் நடந்த மற்றுமொரு நிகழ்ச்சி,
இவ்வாறே முஆவியா (ரழி) அவர்கள் அனுப்பிய 70,000 தீனார்களை ஒரேயடியாக மக்களுக்கு பகிர்ந்தளித்து விட்டார்கள்.
நூல் : ஹாகிம்
:அன்னை ஆயிஷா (ரழி)அவர்கள் கூறுகிறார்கள்
ஒரு பெண்மணி தனது இரு பெண்குழந்தைகளுடன் யாசித்த வண்ணம் என்னிடம் வந்தார். அப்போது ஒரு பேரீச்சம் பழத்தை தவிர வேறு எதுவும் என்னிடம் இல்லை. எனவே, அதை அந்தப் பெண்மணியிடம் கொடுத்தேன். அவர் அதை இரண்டாகப் பங்கிட்டு இரண்டு குழந்தைகளுக்கும் கொடுத்துவிட்டார். அவர் அதிலிருந்து சாப்பிடவில்லை. பிறகு அவர் எழுந்து சென்று விட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். நான் அவர்களிடம் இச்செய்தியைக் கூறியதும் அவர்கள் பல பெண்குழந்தைகளால் யார் சோதிக்கப்படுகிறாரோ அவருக்கு அக்குழந்தைகள் நரகத்திலிருந்து அவரைக் காக்கும் திரையாக ஆவார்கள் எனக் கூறினார்கள்.நூல்:புஹாரி
ஆயிஷா (ரழி) அவர்களிடம் இருந்ததோ, ஒரேயொரு பேரீச்சம் பழம். அதனையும் இல்லையென வந்தவருக்கு கொடுத்து விடுகிறார்கள்.அந்தப் பெண்மணியும் தான் உண்ணாமல் தன்னுடைய பிள்ளை உண்ணட்டும் என நினைத்து பிள்ளைகளுக்கு பங்கிட்டுக் கொடுக்கிறார்கள். நமது பெண்கள் இருக்கின்ற நேரத்திலேயே தர்மம் செய்வதில்லை .இல்லாத நேரத்தில் நமது பெண்கள் தர்மம் செய்வதை நினைத்து கூடப் பார்க்கத் தேவையில்லை.
உம்மு ஷரிக் என்ற நபித்தோழியப் பெண்மணியைப் பற்றி நபி (ஸல்) அவர்களே புகழ்ந்து கூறியுள்ளார்கள்.
நிச்சயமாக, உம்மு ஷரிக் என்ற பெண்மணி அன்ஸாரிகளில் செல்வந்தராக திகழ்ந்தார்கள். மேலும் அல்லாஹ்வுடைய பாதையில் தன்னுடைய மிகப்பெரும் செல்வத்தை வாரி வழங்கினார்கள். இவர்கள் செல்வந்தராக இருந்ததின் காரணமாக விருந்தாளிகள் இவர்கள் வீட்டில் தங்குவார்கள்.(நீண்ட ஹதீஸின் சுருக்கம்)
தங்களைப் பற்றி சிறிது கூட சிந்திக்காது நபித்தோழியர்கள் அள்ளி அள்ளி தர்மம் செய்துள்ளதைக் காண முடிகின்றது. பொதுவாக பெண்களிடமிருந்து தர்மம் பெறுவதென்பது கல்லில் நார் உரிக்கும் கதைதான். தஃவாவிற்காகவோ, சமூக நலனுக்காகவோ கணவனோ, சகோதரனோ செலவிடும் போது அதையிட்டு அதிருப்தியைத் தெரிவிப்பவர்களாகவே பெரும்பாலான பெண்கள் இருக்கின்றார்கள். ஏன் உற்றார், உறவினர்களுக்குக் கூட பொருளாதார உதவிகள் செய்வதை அவர்களால் சகித்துக் கொள்ள முடியாது. இம் மனநிலையைப் பெண்கள் மாற்றி தங்களிடம் தயாள குணத்தையும் தாராள மனத்தையும் வளர்க்க வேண்டும்.
: 6.நோன்பு நோற்பவர்களான பெண்கள்
ரமழான் மாதம் முழுவதும் நோன்பு நோற்பது இஸ்லாத்தின் கட்டாயக் கடமைகளில் ஒன்று. அந்த பர்ழான நோன்பை கூட எமது பெண்கள் சரி வர நோற்பதில்லை. ஆனால் நபித்தோழியர்கள் பர்ழான நோன்பை நோற்பது மாத்திரமன்றி உபரியான நோன்புகளை நோற்பதிலும் அதிக கவனம் செலுத்தக் கூடியவர்களாக இருந்துள்ளார்கள்.
நபிகளாரின் துணைவியார் அன்னை ஹப்ஸா (ரழி)அவர்கள் மற்ற துணைவியர்களை விட அதிகம் அதிகம் நோன்பு நோற்க கூடியவர்களாக திகழ்ந்துள்ளார்கள்.
ஹப்ஸா (ரழி)அவர்கள் நோன்பு நோற்காதவர்களாக இறக்கவில்லை. (அதாவது) கடைசி காலத்திலும் நோன்பு நோற்றவர்களாக திகழ்ந்துள்ளார்கள்
அறிவிப்பவர் : நாஃபிவு (ரழி)
நூல் :தபகாத் இப்னு ஸஅத்
நபித்தோழியர்கள் கடமையான நோன்பைத் தவிர ஏனைய உபரியான நோன்புகளை அதிகம் அதிகம் நோற்க கூடியவர்களாக திகழ்ந்துள்ளார்கள் என்பதற்கு மற்றொரு சான்றைப் பார்ப்போம்.
:உம்மு நுமைரா (ரழி) அவர்கள் கூறுகின்றார்கள்
நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். நான் அவர்களுக்கு முன் உணவை வைத்தேன். என்னையும் சாப்பிடச் சொன்னார்கள். நான் நோன்பாளி என்றேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் ஒரு நோன்பாளியிடம் மற்றவர்கள் சாப்பிட்டால் அவர்கள் சாப்பிட்டு முடியும் வரை வானவர்கள் அவருக்காக துஆச் செய்கின்றார்கள் என்றார்கள்.நூற்கள் : திர்மிதி, அஹ்மத், தாரமி
.மர்மஸ்தானங்களை காத்துக்கொள்பவர்களான பெண்கள : 7்
விபச்சாரம் என்பது பெரும்பாவங்களில் ஒன்றாகும். இன்று உலகளாவிய ரீதியில் இந்த விபச்சாரம் ஒவ்வொரு ஊரிலும் தெருவிலும் தலைவிரித்தாடுகின்றது. இதற்கு பல்வேறு காரணங்கள் இருந்த போதிலும் பிரதான காரணங்கள் இரண்டு. ஒன்று, இன்று சமூகத்தில் தலைவிரித்தாடுகின்ற
தன்மானமற்ற ஆண்மகனுக்கு :வரதட்சனை கொடுமை
வரதட்சனையாக பல இலட்ச ரூபாய்களும், வீடு, காணி, தோட்டமும் மற்றும் படுக்கும் கட்டில் முதல் தண்ணீர் குடிக்கும் குவளை வரை கொடுப்பதற்கு வழியற்று தனது வறுமைக்கும் இளமைக்கும் வடிகாலாய் விபச்சாரத்தை தீர்வாக தேடிக்கொண்ட கன்னியர்கள் ஆயிரமாயிரம் பேர் இன்று வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இவர்கள் நாளை மறுமையில் அல்லாஹ்வின் சந்நிதானத்தில் விசாரிக்கப்படுகையில், இறைவா! நாங்கள் விபச்சாரத்தில் ஈடுபட்டதற்கு காரணம் இந்த ஆண் சமுதாயம் எங்களை ‘நீயும் உனது தூதரும் காட்டித் தந்த முறையில் மஹர் கொடுத்து திருமணம் செய்வதற்கு பதிலாக, எங்களிடம் வரதட்சனை என்ற பெயரில் பகற்கொள்ளையில் ஈடுபட்டதன் காரணமாகவே நாங்கள் இப்பெரும்பாவத்தில் ஈடுபட்டோம்‘ என்று இந்த ஆண்சமுதாயத்தின் மீது குற்றம் சுமத்துவார்களே! அதற்கு இந்த ஆண் சமுதாயம் பதில் சொல்லத்தயாராக இருக்கட்டும்
விபச்சாரம் தலைவிரித்தாடுவதற்கு மற்றைய பிரதான காரணம்
:தொலைத் தொடர்பு சாதனங்கள்
தகவல் தொழிநுட்பத்தின் அபரிதமான வளர்ச்சி காரணமாக, இன்று நாம் அதன் தீமைகளுக்கு இலகுவில் ஆளாகின்ற ஒரு மோசமான சூழ்நிலையில் வாழ்கின்றோம்.
இணையம், தொலைக்காட்சி, பத்திரிகை,வானொலி போன்றவற்றினூடாக தூவப்படும் நச்சு விதைகள், பரப்பப்படுகின்ற ஒழுக்க சீர்கேடுகள் எமது இளைஞர் சமுதாயத்தை ஆண்,பெண் வேறுபாடின்றி மாசுபடுத்தும் வகையிலேயே அமைந்துள்ளன. இத்தொலைத் தொடர்பு சாதனங்கள் நம்மவர்களின் சிந்தனையில், நடத்தையில், ஒழுக்கத்தில் எவ்வாறான தாக்கத்தை செலுத்துகின்றன என்ற விரிவுக்குள் செல்லாது,விபச்சாரத்திற்கு எவ்வாறு காலாய் அமைகின்றன என்பது தொடர்பாக சுருக்கமாகப் பார்ப்போம்.
இன்று ஊடகங்களில் வியாபார நோக்கினை மாத்திரம் கருத்திற் கொண்டு முழுநிர்வாண விளம்பரங்கள், பாலியல் நிகழ்வுகள் போன்ற மட்டரகமான அம்சங்களே அதிகளவு காட்சிப்படுத்தப்படுகின்றன. பெரியவர்களின் மறைமுக நடவடிக்கைகளையெல்லாம் அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக் காடடும் சமூகத் துரோகியாகவும் இன்று பெரும்பாலான ஊடகங்கள் விளங்குகின்றன .
பல நூற்றாண்டுகளாக மிகக் கவனமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த பெரியவர்களின் அந்தரங்க நடவடிக்கைகள் எல்லாம் இன்று அம்பலப்படுத்தப்படுகின்றது. இதை தாய், மகள், மகன், தந்தை வேறுபாடின்றி குடும்பத்துடன் பார்த்து ரசிக்கின்றனர்.
இவ்வாறாக, பெரியவர்களின் பொறுப்பற்ற, ஒழுக்கக் கேடான வாழ்க்கையைப் பார்த்து வளர்கின்ற சிறுவர்கள் தங்களது தவறுகளுக்கு இவர்களை முன்மாதியாக்கிக் கொள்கின்றனர். பத்திரிகைகளை எடுத்துக் கொண்டால், குடும்ப பத்திரிகை என்ற பெயரில் ஆபாசத்தையும், காம உணர்வையும், விரச எண்ணத்தையும் தூண்டக்கூடிய மஞ்சள் பத்திரிகைகளாகவே பெரும்பாலான பத்திரிகைகள் காணப்படுகின்றன. இவ்வாறாக தொலைத் தொடர்பு சாதனங்களின் மூலம் விபச்சாரத்தின் பக்கம் மக்களைத் தூண்டுகின்றார்கள்.மக்களின் கலாசாரத்தின் மீது கல்லெறிகின்றார்கள்
எமது முன்னோர்களான நபித்தோழியர்கள் தவறான வழியில் சென்றுவிடக்கூடாது என்பதில் எவ்வளவு கண்ணும் கருத்துமாக இருந்துள்ளனர் என்பதை பின்வரும் நபி மொழி அழகுற தெளிவு படுத்துகிறது.
:இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்
ஸாபித் பின் கைஸ் இப்னு ஷம்மாஸ் (ரழி) என்பவருடைய மனைவி நபி (ஸல்)அவர்களிடத்தில் வந்து அல்லாஹ்வின் தூதரே! ஸாபித் பின் கைஸினுடைய குணத்தையோ, மார்க்கப் பற்றினையோ நான் குறை கூறவில்லை. எனினும் நான் இறைநிராகரிப்புக்குரிய காரியத்தை செய்து விடுவேனோ என்று பயப்படுகின்றேன். அப்போது நபி (ஸல்)அவர்கள் ஸாபித் உனக்கு மஹராக கொடுத்த தோட்டத்தை நீ கொடுத்து விடுவாயா? என்று கேட்டார்கள். அதற்கு அந்தப் பெண்மணி ஆம் என்று கூறி தோட்டத்தை ஸாபித் அவர்களுக்கே கொடுத்து விட்டார். நபி (ஸல்)அவர்கள் ஸாபித் அவர்களுக்கு உத்தரவிட தம் மனைவியிடமிருந்து பிரிந்துவிட்டார்கள்5277நூல்: புஹாரிஸாபித் பின் கைஸ் இப்னு ஷம்மாஸ் (ரழி) என்பவருடைய மனைவியின் பெயர் ஜமீலா என்பதாகும். ஜமீலா அவர்கள் கூறிய இறைநிராகரிப்புக்குரிய காரியம் என்பதின் பொருள் விபச்சாரம் செய்து விடுவேனோ என்பதாகும். இவ்வாறு அவர்கள் கூறியதற்கு காரணம் ஸாபித் பின் கைஸ் இப்னு ஷம்மாஸ் (ரழி) அவர்கள் தோற்றத்தில் மோசமானவர்களாக இருந்தமையேயாகும்.எனவேதான் இவ்வாறான பெரும்பாவத்தில் இருந்து தன்னைக் காததுக் கொண்டார்கள்.அல்லாஹ்வை அதிகமாக நினைவு கூறுபவர்களான பெண்கள் 8
:அலீ (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்
என் துணைவியார் பாத்திமா (ரழி) அவர்கள் மாவு அரைக்கும் திருகையினால் தமக்கு ஏற்பட்ட வேதனையைக்குறித்து முறையிட்டார்கள். நபி (ஸல்) அவர்களிடம் சில போர்க் கைதிகள் கொண்ட வரப்பட்டிருக்கிறார்கள். அவர்களை நபி (ஸல்) அவர்கள் முஸ்லிம்களிடையை பங்கிடஇருக்கின்றார்கள். என்ற செய்தி பாத்திமா (ரழி) அவர்களுக்கு எட்டியது. உடனே அவர்கள் நபி (ஸல்)அவர்களிடம் (அந்தபோர்க்கைதிகளிலிருந்து) ஒரு பணியாளை (தமக்கு கொடுக்கும் படி) கேட்கச் சென்றார்கள். ஆனால் நபி (ஸல்) அவர்கள் வீட்டில் இல்லாததால் பாத்திமா (ரழி) அவர்களால் அந்த நேரத்தில் சந்திக்க முடியவில்லை.
ஆகவே, ஆயிஷா (ரழி) அவர்களிடம் (தாம் வந்த காரணத்தை) கூறி விட்டுத் திரும்பினார்கள். பின்னர், நபி (ஸல்)அவர்கள் வந்தவுடன் அவர்களுக்கு ஆயிஷா (ரழி) அவர்கள் விஷயத்தை கூறினார்கள். (விபரமறிந்து கொண்ட) நபி (ஸல்) அவர்கள் நாங்கள் படுக்கைக்கு சென்ற பின்னால் எங்களிடம் வருகை தந்தார்கள். அவர்களைக் கண்டவுடன் நாங்கள் எழுந்து நிற்க முனைந்தோம்.
நபி (ஸல்)அவர்கள் (எழுந்திருக்க வேண்டாம்) உங்கள் இடத்திலேயே இருங்கள் என்று கூறினார்கள். (பிறகு) நான் அவர்களுடைய பாதத்தின் குளிர்ச்சியை என் நெஞ்சின் மீது உணர்ந்தேன். (அந்த அளவிற்கு ) எங்கள் அருகில் வந்து அமர்ந்து கொண்டார்கள். பின்னர் நீங்கள் இருவரும் என்னிடம் கேட்டதைவிடச் சிறந்த ஒன்றை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா?
நீங்கள் படுக்கைக்கு செல்லும் போது, அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகப் பெரியவன்) முப்பத்தி நான்கு தடவையும், அல்ஹம்துலில்லாஹ் (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று முப்பத்தி மூன்று தடவையும், சுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் எல்லா குறைகளிலிருந்தும் தூய்மையானவன்) என்று முப்பத்தி மூன்று தடவையும் சொல்லுங்கள். ஏனெனில் அது நீங்கள் இருவரும் என்னிடம் கேட்டதை விடச்சிறந்தது என்று சொன்னார்கள்
3113நூல் : புஹாரி
இது வரை நபித் தோழியரின் வாழ்வில் எமக்குள்ள சில படிப்பினைகளைக் கண்டோம். நபித் தோழியரின் வாழ்வை நாமும் படிப்பினையாகக் கொண்டு வாழ முயற்சிப்போமாக.
எல்லாம் வல்ல அல்லாஹ் சீர்கெட்ட சினிமா நடிகைகளையும், சீரழிந்த கலாசாரத்தின் சொந்தக்காரர்களான மேலைத்தேய நாகரிக நங்கைகளையும் விட்டும் காத்து, உத்தம நபியின் உன்னத வழியில் வாழ்ந்த நபித் தோழியர்களை முன்மாதிரியாகக் கொண்டு ஈருலகிலும் இன்புற்று வாழ
!எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக
Explore posts in the same categories: வகைப்படுத்தாதவை
0 comments:
Post a Comment