Monday, April 12, 2010

பெருவெடிப்புக் கொள்கையும் (Big Bang Theroy) உண்மைப்படுத்தும் இறைவேதமும்

முஹம்மட் அர்ஷாத் அல் அதரி
arshathalathary@gmail.com

“வானங்களும், பூமியும் இணைந்திருந்தன என்பதையும், அவ்விரண்டையும் நாமே பிரித்தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொரு பொருளையும் தண்ணீரிலிருந்து அமைத்தோம் என்பதையும் (நம்மை) மறுப்போர் சிந்திக்க வேண்டாமா? அவர்கள் நம்பிக்கை கொள்ள வேண்டாமா?” (அல்குர்ஆன்  21:30)
அற்புத இறைவேதம்
கி.பி.570ல் அரேபிய தீபகற்பத்தில் அகிலத்தின் அருட்கொடை அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிறந்தார்கள். இக்காலகட்டத்தில்  அன்றைய அரேபியப் பாலை நிலம் அறியாமைப் பேரிருளில் மூழ்கிக் கிடந்தது. அந்த அரபகத்தில் பகுத்தறிவு சிந்தனையும், அறிவாராய்ச்சியும் மருந்துக்கு கூட காணப்படவில்லை.
இவ்வாறான சூழ்நிலையில் பிறந்த எம்பெருமனார் (ஸல்) அவர்கள் தமக்கு இறைவனிடமிருந்து வந்த இறை வேதம் என்று ஒன்றை அறிமுகம் செய்கிறார்கள். அந்த இறைவேதத்தை ஆய்வு செய்கின்ற ஒவ்வொருவரும் அது அனைத்து மனித பலவீனங்களுக்கும் அப்பாற்பட்டு தனித் தன்மையோடு விளங்குவதை அறிந்து கொள்ளலாம். மேலும், அவ்வேதம் அதில் சந்தேகம் கொள்பவர்களைப் பார்த்து அதுபோன்ற ஒன்றை கொண்டு வருமாறு சவால் விடுகின்றது.
அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறைவேதம் என அறிமுகப்படுத்திய அல்குர்ஆன் ஆன்மீகத்தைப் பற்றி மட்டும் பேசவில்லை. மாறாக, வானவியல் (Astronomy), மருத்துவம் (Medicine), புவியியல் (Geography), இயற்பியல் (Physics), வேதியல் (Chemisty),  விலங்கியல் (Zoology),  தாவரவியல் (Botany), உயிரியல் (Biology), கருவியல் (Embryology), சமுத்திரவியல் (Oceanography), மண்ணியல் (Geology) உட்பட அனைத்து துறைகளைப் பற்றியும் மிக அழகாகவும், ஆணித்தரமாகவும் பேசுகின்றது. ஒவ்வொரு துறையைப் பற்றியும் அல்குர்ஆன் குறிப்பிடும் போதும் ஒவ்வொரு துறைசார்ந்த நிபுணர்கள், மாமேதைகள் குறிப்பிடுவதனை விட மிக அழகாகவும்,  துள்ளியமாகவும் பேசுகின்றது.
அருள்மறைக் குர்ஆன் குறிப்பிடுகின்ற இந்த அறிவியல் உண்மைகளையும், திருமறைக்குர்ஆன் இறங்கிய ஆறாம் நூற்றாண்டையும் இணைத்து ஒரு கணம் சிந்திக்கின்ற ஒவ்வொருவரும் நிச்சயமாக, இது மக்காவில் வாழ்ந்த, எழுதப்படிக்கத் தெரியாத முஹம்மது நபி (ஸல்) அவர்கள் சுயமாக பேசியது கிடையாது. பேசவும் முடியாது. மாறாக, இது முக்காலமும் உணர்ந்தவனான அருளாளன் அழ்ழாஹ்விடமிருந்து வந்த இறைசெய்திதான் என்பதை மிகத் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும்.
மேலும், இந்த அத்தாட்சிகள் நிறைந்த அற்புத வேதமான அல்குர்ஆன் நிரூபிக்கப்பட்ட விஞ்ஞான உண்மையான பெருவெடிப்புக் கொள்கை பற்றி என்ன சொல்கின்றது என நோக்குவோம்.
பெருவெடிப்பிற்கு முந்திய பிரபஞ்சத்தின் நிலை
deepfld
இப்பிரபஞ்சமானது கோள்கள், சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் போன்ற விண்பொருட்கள் தோன்றுவதற்கு முன்னர், அடர்ந்த சூடான வாயுக்களை கொண்டதாக, புகைப் படலமாய் இருந்தது. (The First There  Minutes a Modern View of the Origin of the Univere Weinberg  PP 94-105)  இவ்விஞ்ஞான உண்மையை அருள்மறைக் குர்ஆன் பின்வருமாறு உறுதி செய்கின்றது.
“பின்னர் வானம் புகையாக இருந்த போது அதை நாடினான். விரும்பியோ, விரும்பாமலோ நீங்கள் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்று அதற்கும், பூமிக்கும் கூறினான். விரும்பியே கட்டுப்பட்டோம் என்று அவை கூறின.” (அல்குர்ஆன்  41:11)
பெருவெடிப்புக் கொள்கை (Big Bang Theroy)
நாம் இன்று பார்க்கின்ற இப்பிரபஞ்சமானது கிட்டத்தட்ட சுமார் பதினான்கு பில்லியன் வருடங்களுக்கு முன்னர், மனித கண்களுக்குப் புலப்படாத அடர்த்தி குறைந்த வாயுக்களும், அண்டத் துகள்களும் இணைந்து புகைப்படலமாய் (Nebula) காட்சியளித்தது. மேலும், கடினமான பொருட்கள் யாவும் ஒன்று சேர்ந்து ஒரு சக்தி திரலாக (Ball of Energy) காணப்பட்டன. இவையனைத்தும் சேர்ந்து இப்பிரபஞ்ச புகையுரு கோளத்தின் மத்தியில் நெருப்புப் பிண்டமாக காட்சியளித்தன.
இப்பொருட்களின் வெப்பநிலையானது மனிதன் கற்பனை பண்ண முடியாத அளவிற்கு அதிகமாகக் காணப்பட்டது. இப்பொருட்கள் இரசாயன மாற்றத்தாலும், அழுத்தம் மற்றும் வானியல் காரணத்தினாலும் அணுக்கள் சிதைவடைந்து திடீரென வெடித்துச் சிதறி இப்பிரபஞ்சம் முழுவதும் ஒரே தூசு மண்டலமாய் பரவியது. புகை மண்டலமாய் காட்சியளித்த வாயுக்கள் மற்றும் அண்டத் துகள்கள் ஈர்ப்பு விசையின் காரணமாக படிப்படியாக பெரிதாகி நாம் வாழுகின்ற இப்பூமி மற்றும் சூரியன், சந்திரன், உடுக்கூட்டங்கள் மற்றுமுள்ள கோள்களாகவும் மாறியது என்பதுவே பெருவெடிப்புக் கொள்கையாகும்.
இப்பெருவெடிப்புக் கொள்கையானது 1973ம் ஆண்டு விஞ்ஞானிகளால் நிரூபிக்கப்பட்டது. இப்பிர பஞ்சத்தின் உருவாக்கம் பற்றிய விஞ்ஞான உண்மைகளை முதன் முதலில் வெளியிட்டவர்கள் எட்வின் பி ஹுப்பிள்   (Edvin P Hubble), ஜோஜஸ் காமோவ் (Geoges Gomow),     ஜோஜஸ‌ லமேட்ரி (Geoges Lamaitro)  என்கின்ற விஞ்ஞானிகள் ஆவார்கள். பெருவெடிப்புக் கொள்கை என்கின்ற விஞ்ஞான உண்மை விஞ்ஞானிகளால் நிரூபிக்கப்படும் வரை பிரபஞ்சத்தின் தோற்றம் தொடர்பாக பல்வேறு கற்பனைகளையும், கட்டுக்கதைகளையும் அடிப்படையாகக் கொண்டு பல்வேறு நூற்கள் வெளியிடப்பட்டன.
ஆனால், அருள்மறைக் குர்ஆனோ 1400 ஆண்டுகளுக்கு முன்னரே இன்றைய விஞ்ஞானிகள் கூறுகின்ற ‘பெருவெடிப்பு’ என்கின்ற நிகழ்வின் மூலமான உலக உருவாக்கம் பற்றி இந்த நூற்றாண்டின் மாபெரும் விஞ்ஞான மேதை பேசுவதனை விட மிகத்துள்ளியமாகவும், அழகாகவும் குறிப்பிடுகின்றது. இதனை அற்புத இறைமறை பின்வருமாறு கூறுகின்றது.
“வானங்களும், பூமியும் இணைந்திருந்தன என்பதையும், அவ்விரண்டையும் நாமே பிரித்தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொரு பொருளையும் தண்ணீரிலிருந்து அமைத்தோம் என்பதையும் (நம்மை) மறுப்போர் சிந்திக்க வேண்டாமா? அவர்கள் நம்பிக்கை கொள்ள வேண்டாமா?” (அல்குர்ஆன் 21:30)
இப்பெருவெடிப்புக் கொள்கை கண்டுபிடிக்கப்படும் வரை படைப்பாளனான இறைவனை மறுக்கும் நாத்திக சிந்தனையானது இப்பிரபஞ்சத்திற்கு ஆரம்பமும் முடிவும் இல்லை (நிரந்தர பிரபஞ்ச திட்டம்) என வாதிட்டு வந்தது. பெருவெடிப்புக் கொள்கை விஞ்ஞானிகளால் நிரூபிக்கப் பட்டதைத் தொடர்ந்து நிரந்தர பிரபஞ்சத்திட்டம் என்கின்ற வாதம் புதைகுழிக்கு அனுப்பப்பட்டது.
மேலும், பிரபஞ்சத்திற்கு தோற்றம் மற்றும் ஆரம்பம் இருந்தது என்பது பிரபஞ்சம் படைக்கப்பட்டது என்பதனை உணர்த்துகின்றது.
படைக்கப்பட்ட பொருள் உண்டு எனில் நிச்சயமாக படைப்பாளன் இருக்க வேண்டும் என்பதும் நாத்திக சிந்தனை என்கின்ற போலி வாதத்தை தகர்தெறிந்து, இப்பிரபஞ்சத்தைப் படைத்து பரிபாலித்து, ஆட்சி செலுத்துகின்ற அழ்ழாஹ்வின் வல்லமையையும், ஆற்றலையும் பறைசாற்றி நிற்கின்றது. இப்பெருவெடிப்புக் கொள்கையைப் பற்றி கலிபோனியா பல்கலைக்கழக பேராசிரியர் ‘ஜோர்ஜ் ரபல்’ கூறுகையில், ‘பெருவெடிப்பின் காரணமாக பிரபஞ்சமானது பலகோடி ஆண்டுகளுக்கு முன்னால் தோன்றியது என்பதை இன்றைய நவீன விஞ்ஞான உண்மைகள் பறைசாற்றுகின்றன.’ என்று கூறுகின்றார்.
இறுதியாக, இம்மாபெரும் விஞ்ஞான உண்மைகளை அறியாமை இருளில் மூழ்கிக் கிடந்த அரேபியப் பாலைவனத்தில் வாழ்ந்த ஒரு மனிதர் சுயமாக கூறியதாக இருக்க முடியாது என்பதையும், முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அழ்ழாஹ்வின் தூதர்தான் என்பதையும், அருள்மறைக்குர்ஆன் இறைவேதம்தான் என்பதையும் இதுபோன்ற விஞ்ஞான கண்டுபிடிப்புக்கள் இன்றைய நவீன உலகிற்கும், நாத்திக சித்தாந்தத்திற்கும் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன.

0 comments:

Post a Comment