முஹம்மட் அர்ஷாத் அல்அதரி
arshathalathary@gmail.com
“செய்திகளில் மிகவும் உண்மையானது அழ்ழாஹ்வுடைய வேதமாகும். நடைமுறையில் மிகவும் சிறந்தது அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய நடைமுறையாகும். காரியங்களில் தீயது (மார்க்கம் என்ற பெயரில்) புதிதாக உருவானவையாகும். புதிதாக உருவாகக் கூடியவைகள் அனைத்தும் பித்அத்கள் ஆகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும். ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் கொண்டு சேர்க்கும்.” (அறிவிப்பவர்: ஜாபிர்(ரழி), நூல்: நஸயீ-1560)
பிறந்த நாள் மற்றும் இறந்த நாள் கொண்டாட்டங்களில் ஈடுவபடுவது இஸ்லாமியக் கலாசாரம் கிடையாது. மாறாக, யூத, கிறிஸ்த்தவ கலாசாரமாகும். ஆனால், இஸ்லாமிய சமுதாயத்தைச் சார்ந்த மார்க்க அறிஞர்களில் சிலர் ரபீஉல் அவ்வல் மாதம் வந்துவிட்டால் சத்திய மார்க்கத்தைக் களங்கப்படுத்தக் கூடிய வகையில் பல்வேறு அநாச்சாரங்களை அரங்கேற்றுகின்றனர். கழிப்பறை ஒழுக்கம் முதல் அரசாட்சி நடாத்துவது வரை தன்னிகரில்லா உயரிய வழிகாட்டலினை வழங்கி நிற்கும் இறைமார்க்கமாம் இஸ்லாம் புனித மாதங்கள் விடயத்தில் என்ன கூறுகின்றது என நோக்குவோம்.
ரபீஉல் அவ்வல் புனித மாதமா?
புனித மாதங்கள் குறித்து திருமறைக் குர்ஆன் பின்வருமாறு கூறுகின்றது.
“வானங்களையும், பூமியையும் படைத்த நாள் முதல் அழ்ழாஹ்வின் பதிவேட்டில் உள்ளபடி மாதங்களின் எண்ணிக்கை அழ்ழாஹ்விடம் பன்னிரண்டாகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை.” (அல்குர்ஆன் 09:36)
அந்த நான்கு மாதங்கள் துல்கஃதா, துல்ஹஜ், முஹர்ரம், ரஜப் என அழ்ழாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்கள் நமக்குத் தெளிவுபடுத்துகின்றார்கள்.
‘வானங்களும் பூமியும் படைக்கப்பட்ட நாளில் இருந்த (பழைய) நிலைக்குக் காலம் திரும்பி விட்டது. வருடம் என்பது பன்னிரண்டு மாதங்களாகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை. (அவற்றில்) மூன்று மாதங்கள் தொடர்ந்து வரக் கூடியவை. அவை – துல்கஅதாஃ, துல்ஹஜ் மற்றும் முஹர்ரம் ஆகியனவாகும். (மற்றொன்று) ஜுமாதஸ் ஸானிக்கும், ஷஅபான் மாதத்திற்கும் இடையிலுள்ள ரஜப் மாதமாகும் என்று அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.’ (அறிவிப்பவர்: அபூபக்ரா (ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி- -3197)
எனவே, ரபீஉல் அவ்வல் மாதத்திற்கு என இஸ்லாத்தில் எந்த புனிதமும் இல்லை என மேலுள்ள வஹியின் வாசகங்களிலிருந்து மிகத் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.
நபிகளார் (ஸல்) அவர்களை நேசிப்பது கடமை
ஒரு முஸ்லிம் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நேசிக்காத வரை அவனுடைய ஈமான் பூரணமடையாது. இது குறித்து திருமறைக் குர்ஆன் பின்வருமாறு எடுத்தியம்புகின்றது.
“நம்பிக்கை கொண்டோருக்கு தங்களை விட இந்த நபி (முஹம்மத்) தான் முன்னுரிமை பெற்றவர்.” (அல்குர்ஆன் 33:06)
இது குறித்து அருமைத் தூதர் (ஸல்) அவர்கள் குறிப்பிடுகையில்,
“உங்களில் ஒருவருக்கு அவருடைய தந்தை, அவருடைய பிள்ளை, ஏனைய மக்கள் அனைவரையும் விட நான் நேசத்திற்குரியவனாக ஆகாதவரை அவர் (உண்மையான) இறைநம்பிக்கை (ஈமான்) கொண்டவர் ஆக மாட்டார் என்று அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அனஸ் (ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-15)
மீலாது கொண்டாட்டத்தின் தோற்றம்
இஸ்லாமிய வரலாற்றில், அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலம் முதல் ஹிஜ்ரி நான்காம் நூற்றாண்டு வரை மீலாத் விழா கொண்டாடப்படவில்லை. ஹிஜ்ரி நான்காம் நூற்றாண்டில் தாங்கள் பாத்திமா(ரழி) அவர்களின் பரம்பரையினர் எனப் போலியாக வாதிடக் கூடிய, அலி (ரழி) அவர்களே நபித்துவத்திற்கு தகுதியானவரர்கள் என்றும், விரல் விட்டு எண்ணக் கூடிய சில நபித்தோழர்களை விட ஏனைய நபித்தோழர்களை காபிர்கள் எனவும் கூறக்கூடிய ‘பாத்திமிய்யாக்களினால்’ எகிப்தில் ஆட்சி நிறுவப்படுகின்றது. ‘அப்துல்லாஹ் பின் மைமூன் அல்கதாஹ்’ என்கின்ற யூதனின் சந்ததியினரே இவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மக்களை தம்பக்கம் கவர்வதற்காகவும், தமது ஆட்சி, அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வதற்காகவும் பாத்திமிய்யாக்களின் நான்காவது ஆட்சியாளனான ‘அல்முயிஸ் லிதீனில்லா ஹில் உபைதி’ என்பவனால் அழ்ழாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களின் பெயரிலும், பாத்திமா (ரழி), அலி(ரழி), ஹுசைன் (ரழி), ஹஸன் (ரழி) ஆகியோரின் பெயரிலும், ஆட்சியாளர் ஹாழிர் (பாத்திமிய்யாக் களின் நம்பிக்கையின் அடிப்படையில் ஹிஜ்ரி 230ல் பிறந்து இன்று வரை மறைவாக உயிர் வாழ்ந்து கொண்டிருப்பவர்) என்பவர் பெயரிலும் மீலாது விழா (பிறந்த நாள்) கொண்டாட்டங்கள் ஆரம்பிக்கப்படுகின்றது.
கிறிஸ்மஸ் கொண்டாட்டமும் மீலாதுக் கொண்டாட்டமும்
கிறிஸ்த்தவ சமுதாய மக்கள் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதம் 25ம் நாள் கிறிஸ்மஸ் பண்டிகையைக் கொண்டாடுகின்றார்கள். அதாவது: நமது பரிபாஷையில் சொல்வதனால் இறைத்தூதுர் ஈஸா (அலை) அவர்களது பிறந்த தினத்தை கொண்டாடுகின்றார்கள். மீலாத் விழாக் கொண்டாட்டத்தில் ஈடுபடக் கூடியவர்கள் உண்மையில் நியாயமானவர்களாக இருந்தால் நபிமார்களுக்கிடையில் பாரபட்சம் காட்டாது மீலாது விழாவுடன் இணைத்து கிறிஸ்மஸ் பண்டிகையையும் கொண்டாட வேண்டும்.
நபிகளாரை நேசிப்பது எப்படி?
அருள்மறையாம் திருமறை கூறுகின்றது. “நீங்கள் அழ்ழாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அழ்ழாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அழ்ழாஹ் மன்னிப்பவன் நிகரற்ற அன்புடையோன் என்று கூறுவீராக!” (அல்குர்ஆன் 03:31)
அழ்ழாஹ்வும் அவனது தூதர் (ஸல்) அவர்களும் ஒரு விடயத்தை மார்க்கம் என்று தீர்மானித்து விட்டால் அதில் கூட்டல், குறைத்தல் செய்யாது, சுன்னாக்களை சில்லறைகள் என்று கூறி அற்பமாகக் கருதாது வஹியை மாத்திரம் பின்பற்றுவதே அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நேசிப்பதாக அமையும்.
மேலும், திருமறைக் குர்ஆன் கூறுகின்றது. “நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அழ்ழாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி இருந்தால் அழ்ழாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள்! இத்தூதருக்கும் (முஹம்மதுக்கும்), உங்களில் அதிகாரம் உடையோருக்கும் கட்டுப்படுங்கள்! ஏதேனும் ஒரு விஷயத்தில் நீங்கள் முரண்பட்டால் அதை அழ்ழாஹ்விடமும், இத்தூதரிடமும் கொண்டு செல்லுங்கள்! இதுவே சிறந்ததும் மிக அழகிய விளக்கமுமாகும்.” (அல்குர்ஆன்-4:59)
“அவர்களிடையே தீர்ப்பு வழங்குவதற்காக அழ்ழாஹ்விடமும், அவனது தூதரிடமும் அழைக்கப்படும் போது ‘செவியுற்றோம்; கட்டுப்பட்டோம்’ என்பதே நம்பிக்கை கொண்டோரின் கூற்றாக இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.” (அல்குர்ஆன்-24:51)
மீலாது கொண்டாட்டம் வழிபாடல்ல! வழிகேடு!
சத்திய இஸ்லாமிய மார்க்கத்தில் எவ்வித கூட்டலும், குறைத்தலும் இன்றி தனது தூதுத்துவப் பணியை மிகச் சரியாக நிறைவேற்றிய அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மீலாது கொண்டாட்டம் மார்க்கத்தில் உள்ள விடயமாக இருந்திருந்தால் நிச்சயமாக அதனை நமக்கு கற்றுத் தந்திருப்பார்கள். ஆனால், அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமக்கோ, தமக்கு முன்சென்ற இறைத்தூதர்களுக்கோ மீலாது விழாக் கொண்டாடவுமில்லை. கொண்டாடுமாறு கட்டளையிடவுமில்லை. இந்நிலையில், மீலாத் விழா மார்க்கத்தில் உள்ளதுதான் என ஒருவர் வாதிடுவாராயின் அழ்ழாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் தமது தூதுத்துவப் பணியை சரியாக நிறைவேற்றவில்லை எனவும், மீலாது விழா போன்ற மார்க்கத்தில் உள்ள விடயங்களை அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கற்றுத்தராது விட்டுவிட்டார்கள் என்பதாகிவிடும். மேலும், அருளாளன் அழ்ழாஹ் தனது அருள்மறையில் கூறுகின்றான்.
‘இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக் காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன்.’ (அல்குர்ஆன் 05:03)
மீலாத் விழா மார்க்கத்தில் உள்ளதுதான் என வாதிடும் போது மேலுள்ள அருள்மறை வசனத்தை மறுத்தவர்களாக ஆவதோடு, மார்க்கம் முழுமைப்படுத்தப் படாதது என்று கூறுகின்ற பெரும்பாவத்தில் ஈடுபட்டவர்களா கின்றோம். (இவ்வாறு வாதிடுவதிலிருந்து அழ்ழாஹ் எம்மனைவரையும் காப்பாற்றுவானாக!)
மேலும், அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிறந்த தலைமுறை என சிலாகித்துக் கூறப்பட்ட உத்தம நபித்தோழர்கள் காலத்திலோ, அதற்கடுத்து வந்த தலைமுறையினர்களது காலத்திலோ மீலாது விழா என்கின்ற அநாச்சாரம் இருந்ததில்லை. இதோ அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.
“உங்களில் (மக்களில்) சிறந்தவர்கள் என் தலைமுறையைச் சேர்ந்தவர்கள். பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள். பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள். இந்த ஹதீஸை அறிவிக்கும் அறிவிப்பாளர் இம்ரான் பின் ஹுஸைன் (ரழி) அவர்கள் இரண்டு தலைமுறைக்குப் பிறகு மூன்றாவதாக ஒரு தலைமுறையை அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னார்களா என்று எனக்குத் தெரியாது என்று கூறுகிறார்கள். (அறிவிப்பவர்: இம்ரான் பின் ஹுஸைன் (ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-2651)
மீலாது விழா ஏன் கொண்டாடக் கூடாது?
01. நாம் மீலாது விழாக் கொண்டாட்டங்களில் ஈடுபடுவது மறதி உட்பட அனைத்து பலவீனங்களுக்கும் அப்பாற்பட்ட, முக்காலமும் உணர்ந்த அழ்ழாஹ்வுக்கே பாடம் கற்பிப்பது போன்றதாகும். இதனை திருமறைக் குர்ஆன் பின்வருமாறு கூறிக் காட்டுகின்றது.
‘உங்கள் மார்க்கத்தை அழ்ழாஹ்வுக்குக் கற்றுக் கொடுக்கிறீர்களா?’ (அல்குர்ஆன் 49:16)
எனவே, மீலாது விழாக் கொண்டாட்டம் என்கின்ற அநாச்சாரத்தை அரங்கேற்றி அழ்ழாஹ்வுக்கு பாடம் கற்பிக்க முனைவோமாயின் அது எம்மை கொழுந்து விட்டெரியும் நரக நெருப்பிற்கு இட்டுச் செல்லும்.
02.மீலாது விழாக் கொண்டாட்டங்களில் ஈடுபடும் போது அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது தூதுத்துவப் பணியில் குறை காண வேண்டிய நிலை ஏற்படுகின்றது. ஆனால், ஆதாரபூர்வமான நபிமொழிகள் இதற்கு நேர்எதிராக சான்று பகர்கின்றன.
‘அழ்ழாஹ்வின்; தூதர்(ஸல்) அவர்கள (துல்ஹஜ் 10ஆம் நாளில் மக்காவில்) மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். அப்போது இது எந்த நாள் என்பது உங்களுக்குத் தெரியாதா? என்று கேட்டார்கள். மக்கள் அழ்ழாஹ்வும், அவனுடைய தூதருமே நன்கு அறிந்தவர்கள் என்று கூறினார்கள். அந்த நாளுக்கு அவர்கள் வேறு பெயர் சூட்டுவார்களோ என்று நாங்கள் எண்ணினோம். (அந்த அளவிற்கு மௌனமாக இருந்தார்கள்) பிறகு இது ‘நஹ்ர்’ உடைய (துல்ஹஜ் 10ஆம்) நாள் அல்லவா என்று கேட்டார்கள். நாங்கள் ஆம்! அழ்ழாஹ்வின் தூதரே என்று சொன்னோம். நபியவர்கள், இது எந்த ஊர்? இது புனித நகரமல்லவா என்று கேட்டார்கள். நாங்கள் ஆம்! அழ்ழாஹ்வின் தூதரே! என்று சொன்னோம். நபி (ஸல்) அவர்கள், அவ்வாறாயின் (புனிதம் வாய்ந்த) உங்களது இந்த நகரத்தில் உங்களுடைய (புனிதமான) இந்த மாதத்தில் இந்த நாள் எவ்வளவு புனிதமானதோ அந்த அளவுக்கு உங்கள் உயிர்களும், உங்கள் செல்வங்களும், உங்களது மானமும், உங்கள் உடல்களும் உங்களுக்குப் புனிதமானவையே என்று கூறிவிட்டு, ‘(நான் வாழ்ந்த இதுகாலம் வரை உங்களிடம் இறைச் செய்திகள் அனைத்தையும்) தெரிவித்துவிட்டேனா எனக் கேட்டார்கள். நாங்கள் ஆம் (தெரிவித்துவிட்டீர்கள்) என்று பதிலளித்தோம். பிறகு நபி (ஸல்) அவர்கள் இறைவா! நீயே சாட்சி! என்று சொன்னார்கள்.’ பிறகு (மக்களிடம்) இங்கு வந்திருப்பவர்கள் வராதவர்களுக்கு அறிவித்து விடுங்கள். ஏனெனில், இச்செய்தியை (ப் பிறருக்கு)த் தெரிவிப்பவர்களில் எத்தனையோ பேர் தம்மைவிட அதை நன்கு நினைவிலிருத்திக் கொள்பவரிடம் தெரிவிக்கலாம் என்று கூறினார்கள்.’ (அறிவிப்பவர்: அபூபக்ரா(ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-7078)
03.பிறந்தநாள் கொண்டாட்டங்களில் ஈடுபடுவது முற்றிலும் யூத, கிறிஸ்த்தவ சமுதாயக் கலாசாரமாகும். இது குறித்து அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறுகின்றார்கள்.
‘யார் பிற சமுதாய கலாசாரத்திற்கு ஒப்பாக நடக்கின்றாரோ அவர் அந்த சமுதாயத்தை சார்ந்தவரே என்று அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.’ (அறிவிப்பவர்: இப்னு உமர்(ரழி), நூல்: அபூதாவுத்-4033)
மேலும், அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகையில்,
“உங்களுக்கு முன்னிருந்த (யூதர்கள் மற்றும் கிறிஸ்த)வர்கள் வழிமுறைகளை நீங்கள் அங்குலம் அங்குலமாக, முழம் முழமாகப் பின்பற்றுவீர்கள். எந்த அளவிற்கென்றால் அவர்கள் ஓர் உடும்பின் பொந்துக்குள் புகுந்திருந்தால் கூட நீங்கள் அதிலும் புகுவீர்கள் என்று அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அழ்ழாஹ்வின் தூதரே! (நாங்கள் பின்பற்றக் கூடியவர்கள் என்று) யூதர்களையும் கிறிஸ்தவர்களையுமா நீங்கள் குறிப்பிடுகிறீர்கள்?’ என்று நாங்கள் கேட்டோம். அதற்கு அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘வேறெவரை’ என்று பதிலளித்தார்கள். (அறிவிப்பவர்: அபூசயீது அல் குத்ரீ (ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-3456)
மீலாதும் நரக நெருப்பும்
அகிலத்தின் இரட்சகன் அருளாளன் அழ்ழாஹ்விற்கும், அவனது அருமைத் தூதர் (ஸல்) அவர்களுக்கும் பாடம் கற்பிப்பது போன்று, (அழ்ழாஹ் இத்தகைய செயற்பாடுகளிலிருந்து எம்மைப் பாதுகாப்பானாக!) இஸ்லாத்தின் எதிரிகளால் உருவாக்கப்பட்ட மீலாது கொண்டாட்டம் எம்மை நிச்சயமாக கொழுந்து விட்டெறியும் நரக நெருப்பிலேயே கொண்டு போய்ச் சேர்க்கும்.
இதோ, அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்கூறுகின்றார்கள்:
“செய்திகளில் மிகவும் உண்மையானது அழ்ழாஹ்வுடைய வேதமாகும். நடைமுறையில் மிகவும் சிறந்தது அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய நடைமுறையாகும். காரியங்களில் தீயது (மார்க்கம் என்ற பெயரில்) புதிதாக உருவானவையாகும். புதிதாக உருவாகக் கூடியவைகள் அனைத்தும் பித்அத்கள் ஆகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும். ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் கொண்டு சேர்க்கும்.” (அறிவிப்பவர்: ஜாபிர்(ரழி), நூல்: நஸயீ-1560)
“அழ்ழாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘நம்முடைய இந்த (மார்க்க) விவகாரத்தில் அதில் இல்லாததைப் புதிதாக எவன் உண்டாக்குகின்றானோ அவனுடைய அந்தப் புதுமை நிராகரிக்கப்பட்டதாகும்.” (அறிவிப்பவர்: ஆயிஷா(ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-2697)
பகிரங்க விவாத அழைப்பு
மீலாது, மவ்லீது, தாயத்து, தட்டு, தகடு, கத்தம், பாத்திஹாக்கள், தரீக்காக்கள், மத்ஹபுகள், கந்தூரி, கொடியேற்றங்கள், கப்று வணக்கம், அழ்ழாஹ் அல்லாதவர்களுக்கு அறுத்துப் பலியிடுதல் போன்ற அநாச்சரங்கள் இஸ்லாத்தில் உள்ளதுதான் என்ற எந்த மார்க்க அறிஞராவது வாதிடுவார்களாயின் அவர்களோடு அல்குர்ஆன், ஆதாரபூர்வமான நபிமொழிகள் என்கின்ற தூயமூலாதாரங்களின் அடிப்படையில் பகிரங்க விவாதத்திற்கு இத்தாள் அழைப்பு விடுக்கின்றோம்
இறுதியாக, குளிக்கச் சென்று சேற்றை அள்ளிப் பூசிக் கொண்ட கதையாக, மீலாது விழா போன்ற, கொழுந்து விட்டெரியும் நரக நெருப்பிற்கு எம்மை இட்டுச் செல்லக் கூடிய அநாச்சாரங்களிலிருந்து முற்றுமுழுதாக மீண்டு, இஸ்லாத்தின் தூய மூலாதாரங்களான அல்குர்ஆன், ஆதாரபூர்வமான நபிமொழிகளிலிருந்து அழ்ழாஹ்வின் மார்க்கத்தை உரிய முறையில் விளங்கிப் பின்பற்றி வெற்றிபெற்றிட அருளாளன் அழ்ழாஹ் எமக்கு அருள்பாலிப்பானாக!
0 comments:
Post a Comment