Sunday, August 8, 2010

உயர்ந்தவனான இரட்சகன் உருவமற்றவனா?

முஹம்மட் அர்ஷாத் அல்அதரி

அகில உலகங்களையும், அண்ட சராசரங்களையும் படைத்துப் பரிபாலிக்க கூடிய அருளாளன் அழ்ழாஹ்வை எவ்வாறு நம்ப வேண்டுமென அழ்ழாஹ்வும், அவனது அருமைத் தூதர் (ஸல்) அவர்களும் நமக்கு கற்றுத் தந்தார்களோ அவ்வாறு நம்பாத வரை நமது இறை நம்பிக்கை பரிபூரணமடையாது. அந்த வகையில் அகிலத்தின் இரட்சகன் அழ்ழாஹ்வுக்கு உருவம் உண்டா? இல்லையா? என்பதில் நமது சமுதாய மக்களில் ஒரு சாரார் தொடர்ந்தும் தெளிவற்றவர்களாகவே இருந்து வருகின்றனர்.

இவற்றைத் தெளிவுபடுத்த வேண்டிய மார்க்க அறிஞர்களோ ‘ஸுன்னாக்களை சில்லறைகள்’ என சிறுபிள்ளைத்தனமாக விமர்சிப்பதற்கும், சத்திய இஸ்லாத்தை அதன் தூய்மையான வடிவில் கூட்டல், குறைத்தல் செய்யாது எடுத்துரைப்பவர்களை சமூக ஒற்றுமைக்கு(?) எதிரானவர்களாக சித்தரிப்பதற்கும் மிம்பர் மேடைகளைப் பயன்படுத்தி பாழ்படுத்துகின்றனர்.

எனவே, சத்திய மார்க்கத்தின் தூய மூலாதாரங்களான அல்குர்ஆன், ஆதாரபூர்வமான நபிமொழிகளின் ஒளியில் அருளாளன் அழ்ழாஹ்வுக்கு உருவம் உண்டா? இல்லையா? என்பது பற்றி நோக்குவோம்.

வல்லமைமிக்கவனின் இருகைகள்

‘எனது இரு கைகளால் நான் படைத்ததற்கு நீ பணிவதை விட்டும் எது உன்னைத் தடுத்தது? அகந்தை கொண்டு விட்டாயா? அல்லது உயர்ந்தவனாக ஆகி விட்டாயா?’ என்று (இறைவன்) கேட்டான். (அல்குர்ஆன் 38:75)

‘அழ்ழாஹ்வின் கை கட்டப்பட்டுள்ளது’ என்று யூதர்கள் கூறுகின்றனர். அவர்களின் கைகளே கட்டப்பட்டுள்ளன. அவர்களது இக்கூற்றின் காரணமாக அவர்கள் சபிக்கப்பட்டனர். மாறாக, அவனது இரு கைகளும் விரிக்கப்பட்டே உள்ளன. அவன் நாடியவாறு வழங்குவான். (அல்குர்ஆன் 05:64)

கண்ணியமிக்கவனின் மகத்துவம் நிறைந்த முகம்

‘இதில் உள்ள அனைவரும் அழிபவர்கள். மகத்துவமும், கண்ணியமும் மிக்க உமது இறைவனின் முகமே மிஞ்சும்’ (அல்குர்ஆன் 55:26,27)

சிரிக்கும் அளவற்ற அருளாளன்

அழ்ழாஹ் இரண்டு மனிதர்களைப் பார்த்துச் சிரிக்கின்றான். அவ்விருவரில் ஒருவர் மற்றொருவரைக் கொன்றுவிடுகின்றார். இருவருமே சொர்க்கத்தில் நுழைகின்றார்கள். இவர் அழ்ழாஹ்வின் பாதையில் போரிட்டுக் கொல்லப்படுகின்றார். பிறகு (அவரைக்) கொன்றவர் பாவமன்னிப்புக் கோர, அதை ஏற்று அவரை அழ்ழாஹ் மன்னித்து விடுகின்றான். பிறகு, அவரும் அறப்போரில் (கொல்லப்பட்டு) உயிர்த் தியாகியாகி விடுகின்றார்கள் என்று அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி)  நூல்: ஸஹீஹுல் புஹாரி-2826)
பேசுகின்ற நிகரற்ற அன்புடையோன்
(முஹம்மதே!) இதற்கு முன் சில தூதர்களின் வரலாற்றை உமக்குக் கூறியுள்ளோம். சில தூதர்களின் வரலாற்றை நாம் உமக்குக் கூறவில்லை. அழ்ழாஹ் மூஸாவுடன் உண்மையாகவே பேசினான். (அல்குர்ஆன் 04:164)

செவியுறும் அகிலத்தின் இரட்சகன்

‘தனது கணவர் பற்றி உம்மிடம் தர்க்கம் செய்து அழ்ழாஹ்விடம் முறையிட்டவளின் சொல்லை அழ்ழாஹ் செவியுற்றான். உங்களிருவரின் வாதத்தை அழ்ழாஹ் செவியுறுகிறான். அழ்ழாஹ் செவியுறுபவன் பார்ப்பவன்’ (அல்குர்ஆன் 58:01)

‘இறைவா! என் வயிற்றில் உள்ளதை (குழந்தையை) உனக்காக நேர்ச்சை செய்து விட்டேன். அது (உனக்காக) முழுமையாக அர்ப்பணிக்கப்படும். (இதை) என்னிடமிருந்து ஏற்றுக் கொள்வாயாக! நீயே செவியுறுபவன், அறிந்தவன்’ என்று இம்ரானின் மனைவி கூறியதை நினைவூட்டுவீராக! (அல்குர்ஆன் 03:35)

‘அந்த ஆலயத்தின் அடித்தளத்தை இப்ராஹீமும், இஸ்மாயீலும் உயர்த்திய போது ‘எங்கள் இறைவா! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக! நீயே செவியுறுபவன், அறிந்தவன்’ (என்றனர்.)’ (அல்குர்ஆன் 02:127)

‘நீங்கள் நம்பிக்கை கொண்டது போல் அவர்களும் நம்பிக்கை கொண்டால் நேர் வழி பெறுவர். புறக்கணிப்பார்களாயின் அவர்கள் எதிரிகளே. அவர்கள் விடயத்தில் அழ்ழாஹ் உமக்குப் போதுமானவன் அவன் செவியுறுபவன், அறிந்தவன்.’ (அல்குர்ஆன் 02:137)

ஒற்றைக் கண்ணன் அல்லன்

….. பிறகு அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களிடையே எழுந்து நின்று, அழ்ழாஹ்வை அவனது தகுதிக்கேற்பப் புகழ்ந்தார்கள். பிறகு தஜ்ஜாலை நினைவு கூர்ந்து சொன்னார்கள். நான் அவனைக் குறித்து உங்களை எச்சரிக்கின்றேன். எந்த இறைத் தூதரும் அவனைக் குறித்து தன் சமுதாயத்தாரை எச்சரிக்காமல் இருந்ததில்லை. நூஹ் (அலை) அவர்கள் தம் சமுதாயத்தினரை அவனைக் குறித்து எச்சரித்தார்கள். ஆயினும், நான் அவனைப் பற்றி வேறெந்த இறைத்தூதரும் தன் சமுதாயத்தாருக்குச் சொல்லாத ஒரு விபரத்தை உஙகளுக்குச் சொல்கிறேன். அவன் ஒற்றைக் கண்ணன் என்பதையும் அழ்ழாஹ் ஒற்றைக் கண்ணன் அல்லன் என்பதையும் அறிந்து கொள்ளுஙகள். (அறிவிப்பவர்: இப்னு உமர் (ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-3057, 3337)

திறக்கப்படும் கெண்டைக்கால்

கெண்டைக் கால் திறக்கப்பட்டு ஸஜ்தாச் செய்ய அழைக்கப்படும் நாளில் அவர்களுக்கு அது இயலாது.  (அல்குர்ஆன் 68:42)

அருளாளனின் அழகிய பாதம்

(நரகவாசிகள்) நரகத்தில் போடப்படுவார்கள். நரகம், (வயிறு நிரம்பாத காரணத்தால்) இன்னும் அதிகம் இருக்கிறதா? என்று கேட்கும். இறுதியில் அழ்ழாஹ் தனது பாதத்தை (அதில்) வைப்பான். அப்போது அது, போதும்! போதும்! என்று கூறும் என்று அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அனஸ் (ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-4848)
நரகத்திடம் உனக்கு வயிறு நிரம்பிவிட்டதா? என்று கேட்கப்படும். அது இன்னும் அதிகம் இருக்கிறதா? என்று கேட்கும். அப்போது அருள் வளமிக்கவனும், உயர்ந்தோனுமான அழ்ழாஹ் தனது பாதத்தை அதன்மீது வைப்பான். உடனே அது போதும்! போதும்! என்று கூறும் என்று அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-4849)

மேலுள்ள அருள்மறை வசனங்களும், அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது ஆதாரபூர்வமான நபிமொழிகளும் அகிலத்தின் இரட்சகன் அழ்ழாஹ்வுக்கு தன்னிகரில்லா, தனி உருவம் உண்டு எனப் பறைசாற்றி நிற்கின்றன. மேற்கூறப்பட்ட அழ்ழாஹ்வின் பண்புகளை, படைப்புக்களின் பண்புகளுக்கு நிகராக்கி விடாது, நாமாக உருவம் கற்பிக்காது, வலிந்துரை செய்யாது நம்புதல் வேண்டும்.
உதாரணமாக, பார்வை என்கின்ற பண்பைப் பொறுத்தவரை மனிதப் பார்வையானது பல்வேறு குறைபாடுகளை உள்ளடக்கியது. ஆனால், அகிலத்தின் இரட்சகனின் பார்வையானது குறைபாடுகளுக்கு அப்பாற்பட்ட தூய்மையான, பரிபூரணமான பார்வையாகும். குறைபாடுள்ள மனிதப் பார்வையினால் மின்சாரத்தையோ, காற்றையோ, ஒளியினால் படைக்கப்பட்ட ஜின்களையோ, பகல் வேளையிலும் வான்வெளியில் பரந்துபட்டு காணப்படும் பல்லாயிரக் கணக்கான நட்சத்திரங்களையோ காண முடியாது. ஆனால், இறைவனின் பார்வையோ இதற்கு முற்றிலும் மாறுபட்டது. இதனைப் போன்று அருளாளன் அழ்ழாஹ்வின் ஒவ்வொரு பண்புகளும் பலவீனங்களுக்குற்பட்ட மனிதப் பண்புகளுக்கு முரணனான தூய்மையானதாகும்.

இதனையே திருமறைக்குர்ஆன் பின்வருமாறு கூறிக்காட்டுகின்றது.

அவனைப் போல் எதுவும் இல்லை. அவன் செவியுறுபவன், பார்ப்பவன் (அல்குர்ஆன் 42:11)

‘அவனைக் கண்கள் பார்க்காது. அவனோ கண்களைப் பார்க்கிறான். அவன் நுட்பமானவன், நன்கறிந்தவன்’ (அல்குர்ஆன் 06:103)

‘அழ்ழாஹ் ஒருவன்’ என (முஹம்மதே!) கூறுவீராக! அழ்ழாஹ் தேவையற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. (அல்குர்ஆன் 112:01-04)

மிஃராஜின் போது அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அழ்ழாஹ்வைப் பார்த்தார்களா?

அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மிஃராஜின் போது அழ்ழாஹ்வைப் பார்த்ததாகவே இஸ்லாமிய சமுதாய மக்களில் பலர் நம்பியுள்ளனர். இதன் உண்மை நிலை தொடர்பாக அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் பின்வருமாறு தெளிவுபடுத்துகின்றார்கள்.

‘நான் (அன்னை) ஆயிஷா (ரழி) அவர்களிடம் சாய்ந்து அமர்ந்திருந்தேன். அப்போது அவர்கள் (என்னிடம்) அபூ ஆயிஷா, ‘மூன்று விஷயங்கள் உள்ளன. அவற்றில் எந்த ஒன்றை யார் கூறினாலும் அவர் அழ்ழாஹ்வின் மீது மிகப் பெரும் பொய்யை இட்டுக்கட்டியவர் ஆவார்’ என்று கூறினார்கள். நான், ‘அவை எவை? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘யார் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் இறைவனை (நேரில்) பார்த்தார்கள் என்று கூறுகின்றாரோ அவர் அழ்ழாஹ்வின் மீது மிகப்பெரும் பொய்யை இட்டுக்கட்டி விட்டார்’ என்று சொன்னார்கள்.

உடனே சாய்ந்து அமர்ந்து (ஓய்வு எடுத்துக்) கொண்டிருந்த நான் எழுந்து (நேராக) அமர்ந்து, ‘இறை நம்பிக்கையாளர்களின் அன்னையே! நிதானித்துக் கூறுங்கள்! அவசரப்படாதீர்கள். வலிவும் மாண்புமிக்க அழ்ழாஹ், ‘அவரை தெளிவான அடிவானத்தில் பார்த்தார்’ (அல்குர்ஆன் 81:23) என்றும், ‘ஸித்ரதுல் முன்தஹாவுக்கு அருகில் மற்றொரு தடவையும் அவரை இறங்கக் கண்டார்’ (அல்குர்ஆன் 53:13) என்றும் கூறவில்லையா?’ என்று கேட்டேன்.

அதற்கு ஆயிஷா (ரழி) அவர்கள் பின்வருமாறு விளக்கமளித்தார்கள். இந்த சமுதாயத்தாரில் இது தொடர்பாக அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேள்வி கேட்ட முதல் ஆள் நான்தான். அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) ‘அது, (வானவர்) ஜிப்ரீலை (நான் பார்த்ததை)யே குறிக்கிறது. நான் ஜிப்ரீலை, அவர் படைக்கப் பெற்றுள்ள (நிஜத்) தோற்றத்தில் இந்த இரு தடவைகள் தவிர வேறெப்போதும் பார்த்ததில்லை. அவர் வானிலிருந்து (பூமிக்கு) இறங்கிக் கொண்டிருந்ததை நான் பார்த்தேன். அப்போது அவருடைய பிரமாண்டமான தோற்றம் வானம் பூமிக்கிடையேயுள்ள இடைவெளியை அடைத்துக்கொண்டிருந்தது. என்று கூறினார்கள்.

மேலும், ஆயிஷா (ரழி) அவர்கள் (தமது கருத்துக்குச் சான்றாக) அழ்ழாஹ் (பின்வருமாறு) கூறுவதை நீங்கள் செவியுறவில்லையா? என்று கேட்டார்கள். ‘அவனைக் கண்கள் பார்க்காது. அவனோ கண்களைப் பார்க்கிறான். அவன் நுட்பமானவன்;. நன்கறிந்தவன்.’ (அல்குர்ஆன் 6:103)

அல்லது (பின்வருமாறு) அழ்ழாஹ் கூறுவதை நீங்கள் செவியுறவில்லையா? ‘எந்த மனிதருடனும் அழ்ழாஹ் நேருக்கு நேர் பேசுவதில்லை. ஆயினும், வஹீயின் மூலமோ, திரைக்கப்பால் இருந்தோ அல்லது ஒரு தூதரை அனுப்பி தனது விருப்பப்படி தான் நாடியதை அறிவிப்பதன் மூலமோ தவிர (வேறு வழிகளில்) எந்த மனிதரிடமும் அழ்ழாஹ் பேசுவதில்லை. அவன் உயர்ந்தவன்; ஞானமிக்கவன்.’ (அல்குர்ஆன் 42:51) (தொடர்ந்து) ஆயிஷா (ரழி) அவர்கள் மீதமுள்ள இரண்டு விஷயங்களையும் கூறினார்கள்.’ (அறிவிப்பவர்: மஸ்ரூக் பின் அஜ்தஉ (ரஹ்), நூல்: ஸஹீஹ் முஸ்லிம்-287)

‘நான் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், ‘நீங்கள் உங்கள் இறைவனைப் பார்த்தீர்களா?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள் ‘அவன் ஒளியாயிற்றே நான் எப்படி பார்க்க முடியும்?’ என்று கேட்டார்கள்.’ (அறிவிப்பவர்: அபூதர்(ரழி), நூல்:ஸஹீஹ் முஸ்லிம்-291)

மேலுள்ள நபிமொழிகள் மூலம் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எச்சந்தர்ப்பத்திலும் அழ்ழாஹ்வைப் பார்க்கவில்லை. மாறாக, இவ்வுலகில் பார்க்கவும் முடியாது என்பதை தெளிவுபடுத்துகின்றது.

நபி மூஸா (அலை) அவர்கள் அழ்ழாஹ்வைப் பார்த்தார்களா?

நாம் வாக்களித்த இடத்துக்கு மூஸா வந்து, அவரிடம் அவரது இறைவன் பேசிய போது ‘என் இறைவா! (உன்னை) எனக்குக் காட்டுவாயாக! நான் உன்னைப் பார்க்க வேண்டும்’ எனக் கூறினார். அதற்கு (இறைவன்) ‘என்னை நீர் பார்க்கவே முடியாது. எனினும் அந்த மலையைப் பார்ப்பீராக! அது அதற்குரிய இடத்தில் நிலையாக இருந்தால் நீர் என்னைப் பார்க்கலாம்’ என்று கூறினான். அவரது இறைவன் அந்த மலைக்குக் காட்சி தந்த போது அதைத் தூளாக்கினான். மூஸா மூர்ச்சித்து விழுந்தார். அவர் தெளிவடைந்த போது, ‘நீ தூயவன். உன்னிடம் மன்னிப்புக் கேட்கிறேன். நம்பிக்கை கொண்டோரில் நான் முதலாமவனாக இருக்கிறேன்’ எனக் கூறினார். (அல்குர்ஆன் 07:143)

மேலுள்ள அருள்மறை வசனத்தில் அழ்ழாஹ் மூஸா (அலை) அவர்களைப் பார்த்து, ‘என்னை நீர் பார்க்கவே முடியாது’  என்று கூறுவதன் மூலம் நபி மூஸா (அலை) அவர்கள் அழ்ழாஹ்வைப் பார்க்கவில்லை என்பதை மிகத் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.

மறுமையில் காட்சி தரும் நியாயத்தீர்ப்பு நாளின் அதிபதி

‘முழு நிலவுள்ள ஓர் இரவில் நாங்கள் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்து கொண்டிருந்தோம். அப்போது அவர்கள் நிலவைக் கூர்ந்து பார்த்தபடி, அறிந்துகொள்ளுங்கள்! இந்த நிலவை நீங்கள் நெரிசல் இல்லாமல், அல்லது குழப்பமடையாமல் காண்பது போன்று உங்கள் இறைவனையும் நீங்கள் நிச்சயம் காண்பீர்கள்… (அறிவிப்பவர்: ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-573)
‘நம் இறைவன் (காட்சியளிப்பதற்காகத்) திரையை அகற்றித் தன் காலை வெளிப்படுத்தும் அந்த (மறுமை) நாளில், இறை நம்பிக்கையுள்ள ஒவ்வோர் ஆணும், இறை நம்பிக்கையுள்ள ஒவ்வெரு பெண்ணும் அவனுக்கு முன்னால் சிரவணக்கம் (சஜ்தா) செய்வார்கள். முகஸ்துதிக்காகவும், மக்களின் பாராட்டைப் பெறுவதற்காகவும் இவ்வுலகில் (தொழுது) சஜ்தா செய்து வந்தவர்கள் மட்டுமே எஞ்சியிருப்பர். அப்போது அவர்கள் சஜ்தா செய்ய முற்படுவார்கள் (ஆனால்) அவர்களது முதுகு (குனிய முடியாதவாறு) ஒரே கட்டையைப் போல் மாறிவிடும். (அறிவிப்பவர்: அபூசயீத் (ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-4919)
‘மக்கள் (அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம்), அழ்ழாஹ்வின் தூதரே! நாங்கள் எங்கள் இறைவனைக் காண்போமா? என்று வினவினர். அதற்கு அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், பௌர்ணமி இரவில் கீழே மேகம் சூழாத (வானில்) சந்திரனைக் காண்பதில் நீங்கள் ஐயம் கொள்வீர்களா? என்று கேட்டார்கள். மக்கள், இல்லை (ஐயம் கொள்ள மாட்டோம்) அழ்ழாஹ்வின் தூதரே! என்றார்கள். மீண்டும் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், கீழே மேகம் சூழாத சூரியனைக் காண்பதில் நீஙகள் ஐயம்கொள்வீர்களா? எனக் கேட்டார்கள். அதற்கும் மக்கள், இல்லை என்று பதிலளித்தனர். அப்போது அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இவ்வாறுதான் உறுதியாக நீங்கள் இறைவனைக் காண்பீர்கள் என்று கூறிவிட்டு (பின்வருமாறும்) கூறினார்கள்:
மறுமை நாளில் மக்கள் அனைவரும் ஒன்று குவிக்கப்படுவார்கள். அப்போது, (உலகத்தில்) யார் எதனை வணங்கிக்கொண்டிருந்தார்களோ அதனைப் பின்பற்றிச் செல்லட்டும் என்பான் (இறைவன்). ஆகவே, சிலர் சூரியனைப் பின்பற்றிச் செல்வர். இன்னும் சிலர் சந்திரனைப் பின்பற்றிச் செல்வர். வேறு சிலர் தீய சக்தி(களான ஷைத்தான்கள், சிலைகள், மந்திரவாதிகள் போன்ற வழிகேடர்)களைப் பின்பற்றிச் செல்வர். இறுதியில் (எனது) இந்த சமுதாயம் மட்டும் தங்களிடையே நயவஞ்சகர்கள் இருக்கும் நிலையில் எஞ்சியிருக்கும்.
அப்போது வலிவும் மாண்பும் உடைய இறைவன் (அவர்கள் அறியாத தோற்றத்தில்) அவர்களிடம் வந்து, நான் உங்கள் இறைவன் என்பான். உடனே அவர்கள், எங்கள் இறைவன் எங்களிடம் வரும்வரை நாங்கள் இங்கேயே இருப்போம். எங்கள் இறைவன் எங்களிடம் வந்தால் அவனை நாங்கள் அறிந்துகொள்வோம், என்று கூறுவார்கள். அப்போது அழ்ழாஹ் (அவர்கள் அறிந்த தோற்றத்தில்) அவர்களிடம் வந்து, நானே உங்கள் இறைவன் என்பான். அப்போது அவர்கள், நீ எங்கள் இறைவன்தான் என்பார்கள். பிறகு அவர்களை இறைவன் அழைப்பான். நரகத்தின் மேற்பரப்பில் பாலம் அமைக்கப்படும். (இறைத்தூதர்கள். தத்தம் சமுதாயத்தினருடன் அதைக் கடப்பார்கள். நானே அ(ந்தப் பாலத்)தை முதலாவதாகக் கடப்பவன் ஆவேன்.
அன்றைய தினத்தில் இறைத் தூதர்களைத் தவிர வேறுயாரும் பேசமாட்டார்கள். அன்றைய தினத்தில், இறைவா! காப்பாற்று! காப்பாற்று!, என்பதே இறைத் தூதர்களின் பிரார்த்தனையாகும். தொடர்ந்து அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அந்நரகத்தி(ன் பாலத்தி)ல் கொக்கிகள் அமைந்திருக்கும். அவை (ஊமத்தங்காயின் முள்வடிவில்) சஅதான் செடியின் முள்ளைப் போன்றிருக்கும் என்று கூறிவிட்டு, சஅதான், செடியின் முள்ளை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? என்று கேட்டார்கள். மக்கள், ஆம் (பார்த்திருக்கிறோம்) என்று பதிலளித்தார்கள். தொடர்ந்து அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அந்தக் கொக்கிகள் சஅதான் செடியின் முள்ளைப் போன்றிருந்தாலும் அதன் பருமனை அழ்ழாஹ்வைத் தவிர வேறெவரும் அறியமாட்டார்கள். அப்போது அந்த கொக்கி மக்களை அவர்களின் (தீய) செயல்களுக்கேற்ப பற்றிப் பிடிக்கும். அவர்களிடம் தம் (தீய) செயல்களை முன்னிட்டு பேரழிவுக்கு உள்ளாபவர்களும் உண்டு. (அந்தப் பாலத்தில்) தட்டுத்தடுமாறிய பின் தப்புபவர்களும் உண்டு.
இறுதியாக இறைவன் நரகத்திற்குரியவர்களில் தான் நாடிய சிலர் மீது கருனை காட்ட நினைக்கும்போது வானவர்களிடம், அழ்ழாஹ்வை வணங்கிக்கொண்டிருந்தவர்களை நரகத்திலிருந்து வெளியேற்றுமாறு கட்டளையிடுவான். அவ்வாறே வானவர்கள் அவர்களை வெளியேற்றுவார்கள். சஜ்தாச் செய்த அடையாளங்களை வைத்து இவர்களை வானவர்கள் அடையாளம் காண்பார்கள். சஜ்தா செய்ததனால் (ஏற்பட்ட) அடையாளங்களைப் புசிக்கக் கூடாதென நரகத்திற்கு இறைவன் தடை விதித்துவிட்டான். ஆகவே (அழ்ழாஹ்வை வணங்கியவர்கள்) நரகத்திலிருந்து வெளியேற்றப்படுவார்கள். சஜ்தா செய்த(தால் ஏற்பட்ட) வடுக்களைத் தவிர ஆதமின் மைந்த(னான மனித)ர்களுடைய முழு உடம்பையும் நரகம் புசித்துவிடும்.

இந்த நிலையில் அவர்கள் கருகிப் போனநிலையில் நரகத்திலிருந்து வெளியேறுவார்கள். அப்போது அவர்கள் மீது (மாஉல் ஹயாத் எனும்) ஜீவநீரை ஊற்றப்படும். உடனே அவர்கள் வெள்ளச் சேற்றில் முளைத்துவிடும் தானிய வித்தைப் போன்று செழிப்புடன் எழுவார்கள். பின்னர் அழ்ழாஹ் அடியார்களிடையே தீர்ப்பளித்து முடிப்பான்.
இறுதியாக ஒரே ஒரு மனிதன் சொர்க்கத்திற்கும் நரகத்திற்கும் இடையே எஞ்சி நிற்பான். அவன்தான் நரகவாசிகளில் கடைசியாக சொர்க்கத்திற்கு செல்பவன். அவன் நரகத்தை முன்னோக்கியபடி, இறைவா! நரகத்தை விட்டும் என் முகத்தை திருப்புவாயாக! அதன் நச்சுக் காற்று என்னை அழித்துவிட்டது. அதன் ஜுவாலை என்னைக் கரித்துவிட்டது என்று கூறுவான். அப்போது அழ்ழாஹ், (உனது கோரிக்கைப்படி) இவ்வாறு உனக்கு செய்து கொடுக்கப்பட்டால் வேறு எதனையும் நீ கேட்காதிருப்பாயா? என்று கேட்பான். அதற்கு அம்மனிதன், இல்லை, உன் கண்ணியத்தின் மீதாணையாக! (வேறெதையும் கேட்கமாட்டேன்) என்பான்.
அந்தமனிதன் அழ்ழாஹ்விடம் தான் நாடிய உறுதிமொழியையும் வாக்குறுதிகளையும் வழங்குவான். அழ்ழாஹ் நரகத்தைவிட்டும் அம்மனிதனுடைய முகத்தை திருப்பிவிடுவான். சொர்க்கத்தை நோக்கி அவனுடைய முகத்தை திருப்பியதும் அம்மனிதன் சொர்க்கத்தின் செழிப்பைப் பார்த்துக்கொண்டு அழ்ழாஹ் நாடிய அளவு நேரம் அமைதியாக இருப்பான். பிறகு, இறைவா! என்னைச் சொர்க்கத்தின் வாசலருகே செல்லவைப்பாயாக! என்று கேட்பான். அதற்கு இறைவன், முன்பு கேட்டதைத் தவிர வேறெதையும் நீ என்னிடம் கேட்கமாட்டேன் என்று கூறி உறுதிமொழியும் வாக்குறுதியும் அளித்தாயே என்று கேட்பான். அதற்கு அம்மனிதன், இறைவா! என்னை உன் படைப்புக்களிலேயே நற்கதியற்றவனாய் ஆகிவிடக்கூடாது!’ என்று கூறுவான். அதற்கு இறைவன் “(நீ கேட்டது) உனக்கு வழங்கப்பட்டால் வேறு எதையும் நீ கேட்காமலிருப்பாயா” என்பான். அம்மனிதன் “இல்லை உன் கண்ணியத்தின் மீதாணையாக! இதல்லாத வேறெதையும் நான் கேட்கமாட்டேன்” என்பான்.
இதுகுறித்து இறைவனிடம் உறுதிமொழியும் வாக்குறுதியும் அந்த மனிதன் அளிப்பான். உடனே இறைவன் அந்த மனிதனை சொர்க்கத்தின் வாசல் வரை செல்லவைப்பான். அதன் வாசலை அவன் அடைந்ததும் அதன் ரம்மியத்தைக் காண்பான் அதிலுள்ள செழுமையையும் (மனதிற்கு) மகிழ்ச்சி (தரத் தக்கவை)யையும் காண்பான். பிறகு அழ்ழாஹ் நாடிய அளவுக்கு அவன் அமைதியாக இருப்பான். அதன்பின் அந்த மனிதன் “இறைவா! என்னை சொர்க்கத்திற்குள் செல்ல அனுமதிப்பாயாக!” என்று கூறுவான். அதற்கு உன்னதனாகிய அழ்ழாஹ் “ஆதமின் மகனே! உனக்கு என்ன கேடு! ஏன் வாக்கைக் காப்பாற்றத் தவறிவிட்டாய் முன்பு வழஙகப்பட்டதைத் தவிர வேறெதையும் நான் கேட்கமாட்டேன் என உறுதிமொழியும் வாக்குறுதியும் அளித்தாயே!” என்று கேட்பான். அதற்கு அம்மனிதன், இறைவா! உன் படைப்புகளிலேயே என்னை நிற்கதியற்றவனாய் ஆக்கிவிடாதே! என்பான். இம்மனிதனின் நிலை இறைவன் கண்டு சிரிப்பான். பிறகு அவனுக்கு சொர்க்கத்திற்குள் செல்ல அனுமதியளித்துவிடுவான்.
அதன் பின் இறைவன் அம்மனிதனிடம், நீ ஆசைப்படுவதைக் கேள்! என்று கூறுவான். அம்மனிதனும் தான் ஆசைப்படுவதை கூறுவான். இறுதியில் அவன் தன் ஆசைகள் யாவும் முற்றுப்பெறும் போது (அவனிடம்) இறைவன், இதைவிட அதிகத்தை நீ ஆசைப்படு! என்று சொல்லிக் கொடுப்பான். இறுதியில் ஆசைகள் முற்றுப் பெற்றுவிடும் போது உன்னதமானவனாகிய அழ்ழாஹ், உனக்கு இதுவும் உண்டு. இதைப்போன்று இன்னொரு மடங்கும் உண்டு என்பான்’ (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-806)

இறுதியாக, அருள்மறை வசனங்களும், அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது ஆதாரபூர்வமான நபிமொழிகளும் போதிக்கும் அடிப்படையில் அகிலத்தின் இரட்சகன் அழ்ழாஹ்வுக்கு தன்னிகரில்லா, தனி உருவம் உண்டு எனவும், அகிலத்தின் இரட்சகனை இவ்வுலகில் ஒருபோதும் பார்க்கவே முடியாது எனவும், நம்புவதுடன் அழ்ழாஹ்வின் பண்புகளை, படைப்புக்களின் பண்புகளுக்கு நிகராக்கி விடாது, நாமாக உருவம் கற்பிக்காது, வலிந்துரை செய்யாது நம்புதல் வேண்டும்.

0 comments:

Post a Comment