Sunday, August 8, 2010

தங்க வளையல் அணியும் நங்கையரே! நரக நெருப்பை அஞ்சிக் கொள்ளுங்கள்!

முஹம்மட் அர்ஷாத் அல்அதரி
பிரச்சாரகர்- தாருல் அதர் அத்தஅவிய்யா
‘வாரஉரைகல்’ பதிவு 114 இல் ‘தங்கத்தினாலான எல்லா நகைகளையும் பெண்கள் அணியலாம்’ என்கின்ற தலைப்பில் ‘அல்மின்ஹாஜ்’ மாதஇதழில் வெளிவந்த ஆக்கம் ஒன்று மீள்பிரசுரிக்கப்பட்டிருந்ததை வாசகர்களாகிய நீங்கள் அறிந்திரூப்பீர்கள். அவ்வாக்கத்தில் கூறப்பட்டுள்ள தவறான வாதங்களுக்கான தக்கபதில்கள்:
‘தங்கத்தினாலான எல்லா நகைகளையும் பெண்கள் அணியலாம்!’, ‘வளைந்த வடிவம் கொண்ட தங்க நகைள் அணிவது ஹராம்’  என்கின்ற சர்சைக்குள் நுழைவதற்கு முன்னர் சில அடிப்படையான விடயங்களை வாசகர்களின் கவனத்திற்கு கொண்டு வருகின்றேன்.

சத்திய இஸ்லாமிய மார்க்கத்தின் சட்ட மூலாதாரம் அருள்மறைக்குர்ஆனும், ஆதாரபூர்வமான நபிமொழிகளும் மாத்திரமே. மாறாக, நபித்தோழர்களின் சொந்த செயற்பாடுகள், இஜ்மா, கியாஸ், இமாம்கள், பெரியார்களின் சொந்தக் கூற்றுக்கள் மார்க்க ஆதாரமெனக் கருதுவது ஈமானுக்கு மாற்றமான நிலையாகும். இது தொடர்பாக அருள்மறைக் குர்ஆன் குறிப்பிடுகையில்,

‘உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அருளப்பட்டதையே பின்பற்றுங்கள்! அவனை விடுத்து  (மற்றவர்களை) பொறுப்பாளர்களாக்கிப் பின்பற்றாதீர்கள்! குறைவாகவே படிப்பினை பெறுகிறீர்கள்!’ (அல்குர்ஆன்- 07:03)

மேலும் பார்க்க அல்குர்ஆன்: 2:38, 2:170, 6:106, 10:15, 3:103, 33:02, 39:03,
10:109, 39:55, 46:09, 49:16

அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குறிப்பிடுகையில்,

‘நான் உங்களுக்கு மத்தியில் இரண்டு விடயங்களை விட்டுச் செல்கின்றேன். அவ்விரண்டையும் நீங்கள் பற்றிப் பிடிக்கும் காலமெல்லாம் ஒரு போதும் வழிதவற மாட்டீர்கள். ஒன்று அழ்ழாஹ்வின் வேதம் மற்றையது எனது வழிமுறை என்று அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.’ (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரழி), நூல்: ஹாகிம்)

‘நான் உங்களிடையே கனமான இரண்டு பொருட்களை விட்டுச் செல்கின்றேன். அவற்றில் ஒன்று அழ்ழாஹ்வின் வேதமாகும். அதில் நல் வழியும் பேரொளியும் உள்ளது. எனவே அவ் வேதத்தை பலமாகப் பற்றிக் கொள்ளுங்கள்.’ (அறிவிப்பவர்: ஸைத் பின் அர்கம் (ரழி), நூல்: முஸ்லிம்-4782)
மேற்குறித்த அடிப்படையை மனதில் இறுத்தியவர்களாக, பெண்கள் வளைந்த வடிவம் கொண்ட தங்க நகைள் அணிவது ஹலாலா? ஹராமா? என்கின்ற விடயத்தை அல்குர்ஆன், ஆதாரபூர்வமான நபிமொழிகளின் அடிப்டையில் காய்தல், உவத்தல் இன்றி நடுநிலையுடன் இறையச்சத்தை மாத்திரம் முன்னிறுத்தி ஆயு;வுக்குட்படுத்துவோம்.

பெண்கள் வளைந்த வடிவம் கொண்ட தங்க நகைகள் அணிவது ஹராமாகுமா?

குறித்த விடயம் தொடர்பான ஆய்வுக்குள் நுழைவதற்கு முன்னர், சில விடயங்களை வாசகர்களின் கவனத்திற்கு கொண்டு வருகின்றேன்.
ஒரு  ஆய்வு  முன்வைக்கப்படும் போது அது குறித்து முறையாக தெரிந்து கொள்வதும்,  சரியாக இருக்கும் பட்சத்தில் அதை பின்பற்றுவதுமே ஒரு முஸ்லிமுக்கு அழகாகும்.  இது பற்றி திருமறைக் குர்ஆன் குறிப்பிடுகையில்,
‘அழ்ழாஹ் அருளியதைப் பின்பற்றுங்கள்! என்று அவர்களிடம் கூறப்பட்டால் ‘எங்கள் முன்னோர்களை எதில் கண்டோமோ அதையே பின்பற்றுவோம்’ என்று கூறுகின்றனர். அவர்களின் முன்னோர்கள் எதையும் விளங்காமலும் நேர் வழி பெறாமலும் இருந்தாலுமா? (அல்குர்ஆன்-02:170)

மேலும், ஒரு கருத்து அல்குர்ஆன், ஆதாரபூர்வமான நபிமொழிகளின் அடிப்படையில் முன்வைக்கப்படும் போது ‘புதிய கருத்து’ ‘எங்களது முன்னோர்கள் செய்யவில்லை’ என்கின்ற போலிவாதங்களை கூறி புறந்தள்ளுவதை விடுத்து, குறித்த விடயத்தை அல்குர்ஆன் ஆதாரபூர்வமான நபிமொழிகள் என்கின்ற உரைகல்லில் உரசிப் பார்த்து சரியாக இருக்கும் பட்சத்தில் ஏற்றுக் கொள்வதுதான் நம்பிக்கை கொண்ட முஸ்லிம்களுக்கு அழகானதாகும். இதனை திருமறைக் குர்ஆன் பின்வருமாறு கூறிக் காட்டுகின்றது.

‘நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அழ்ழாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி இருந்தால் அழ்ழாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள்! இத்தூதருக்கும், (முஹம்மதுக்கும்) உங்களில் அதிகாரம் உடையோருக்கும் கட்டுப்படுங்கள்! ஏதேனும் ஒரு விஷயத்தில் நீங்கள் முரண்பட்டால் அதை அழ்ழாஹ்விடமும், இத்தூதரிடமும் கொண்டு செல்லுங்கள்! இதுவே சிறந்ததும், மிக அழகிய விளக்கமுமாகும்.’  (அல்குர்ஆன்-4:59)

இன்று எமது இஸ்லாமிய சமுதாய மக்களில் பலர் அறியாத, அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடைசெய்த  ஒரு விடயம்தான் பெண்கள் வளைந்த வடிவம் கொண்ட தங்க நகைகள் அணிவது ஹராம் என்பதாகும்.

இஸ்லாத்தின் பார்வையில் காப்பு, மாலை உள்ளடங்கலாக வளைந்த வடிவம் கொண்ட தங்க நகைகள் அணிவது ஹராமாகும். மாறாக, வளையல் அல்லாத தங்க நகைகளை தாரளமாக அணிந்து கொள்ளலாம்.
இது தொடர்பாக அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஆதாரபூர்வமான நபிமொழிகள் தெளிவுபடுத்துகின்றன.

1
 
‘(உங்களில்) யார் தான் நேசிக்கின்றவளுக்கு (மனைவி, சகோதரி, தாய், உறவு முறைப்பெண்) ஆகியோருக்கு நரக நெருப்பினால் ஒரு வளையத்தை அணிவிக்க  விரும்புகின்றாரோ அவர் தங்கத்தினால் ஒரு வளையலை அவளுக்கு அணிவிக்கட்டும். (உங்களில்) யார் தான் நேசிக்கின்றவளுக்கு நரக நெருப்பினால் ஒரு கழுத்தணியை  அணிவிக்க விரும்புகின்றாரோ அவர் தங்க மாலையை அவளுக்கு அணிவிக்கட்டும். உங்களில் யார் தான் நேசிக்கின்றவளுக்கு நரக நெருப்பினால் காப்பு அணிவிக்க விரும்புகின்றாரோ அவர் தங்கக் காப்பை அணிவித்துக் கொள்ளட்டும். என்றாலும் வெள்ளியை உங்களுக்கு நான் ஏவுகின்றேன். அவற்றை தாராளமாகப் பயன்படுத்துங்கள்! என அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), நூற்கள்: முஸ்னத் அஹ்மத், ஸுனன் அபீதாவுத்-4236)

2
‘ஹுபைறா என்பவரின் மகள் (ஹிந்த்) அழ்ழாஹ்வின் தூதரிடத்தில் தங்க மோதிரம் அணிந்தவளாக வந்தாள். அப்பெண்னின் கையை அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தட்டிவிட்டார்கள்.

அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது இச்செயலை அப்பெண் பாத்திமா (ரழி) அவர்களிடத்தில் முறைப்பட்டாள். உடனே, பாத்திமா (ரழி) அவர்கள் தான் அணிந்திருந்த தங்க மாலையைக் கழற்றி ‘இதனை ஹஸனின் தந்தை (அலி ரழி)  அவர்கள் தான் எனக்கு அன்பளிப்பாகத் தந்தார்கள்’ எனக் கூறினார். பாத்திமா (ரழி) அவர்களின் கரத்தில் தங்கமாலை இருக்கும் சமயத்தில் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அங்கு வந்தார்கள்.

பாத்திமாவே! முஹம்மதின் மகள் பாத்திமாவின் கரத்தில் நரக நெருப்பினால் ஆன மாலை இருக்கின்றது என மக்கள் பேசிக் கொள்வது உனக்கு மகிழ்ச்சியளிக்கின்றதா! எனக் கேட்டு விட்டு அங்கு உட்காரமல் திரும்பி விட்டார்கள். உடனே பாத்திமா (ரழி) அவர்கள் அம்மாலையைக் கழற்றி கடையில் விற்று வருமாறு ஆளப்பினார்கள். மாலை விற்றவுடன் அப்பணத்தினால் ஒரு அடிமையை வாங்கி உரிமை இட்டார்கள். பாத்திமாவின் இச்செயல் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குக் கிடைத்த போது ‘நரக நெருப்பை விட்டு பாத்திமாவைக் காப்பாற்றிய அந்த அழ்ழாஹ்வுக்கே புகழ் அனைத்தும்’ எனக் கூறினார்கள்.’ (அறிவிப்பாளர்: தவ்பான் (ரழி), நூல்:ஸுனனுன் நஸாயீ-5140)

மேலுள்ள நபிமொழிகள் மூலம் கழுத்தணி உள்ளடங்கலாக வளைந்த வடிவம் கொண்ட தங்க நகைகள் அணிவது ஹராம் என்பதை மிகத் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.

மேற்படி ஆதாரபூர்வமான நபிமொழிகளுக்கு எதிராக சில அறிஞர்களால் சில வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. மாற்றுக் கருத்திலுள்ள சகோதரர்கள் முன்வைக்க கூடிய ஆதாரங்கள் வாதங்களை பரிசீலனைக்கு உட்படுத்துவோம்.

தங்கத்திலான எல்லா நகைகளையும் பெண்கள் அணியலாமா?

தங்கத்தினாலான எல்லா நகைகளையும் அணியலாம் என்று கூறக் கூடிய சகோதரர்களின் வாதங்களில் உள்ள தவறுகளை நோக்குவதற்கு முன்னர், நான் எனது ஆய்வின் ஆரம்பத்தில் குறிப்பிட்ட விடயத்தை மீண்டும் சகோதரர்களின் கவனத்திற்கு கொண்டு வருகின்றேன்.

சத்திய இஸ்லாமிய மார்க்கத்தின் சட்ட மூலாதாரம் அருள்மறைக்குர்ஆனும், ஆதாரபூர்வமான நபிமொழிகளும் மாத்திரமே. ஆனால், குறித்த கட்டுரையின் ஆரம்பத்திலேயே ‘ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்’ என்பது போன்று,

‘பெண்களுக்கு தங்கம், வெள்ளி, முத்து, பவளம், வெண்முத்து, வைரம் போன்றவற்றைக் கொண்ட ஆபரணங்களை அணிவது ஹலாலாகும். இக்கருத்தை ஹனபி, மாலிகி, ஷாபிஈ, ஹன்பலி, ழாஹிரி ஆகிய மத்ஹபுகளை சேர்ந்த பெரும்பான்மையான அறிஞர்கள் கூறுகின்றார்கள்.’

என்று தமது வாதத்தை ஆரம்பிப்பதன் மூலம் என்னதான் குர்ஆன், ஹதீஸ் என்று கூறிக் கொண்டாலும் தாங்கள் இன்னும் மத்ஹப் மாயை, முன்னோர்கள் மீதான வரட்டு பக்தி போன்ற வழிகேடுகளில் இருந்து மீளவில்லை என்பதை மீண்டுமொரு முறை பறைசாற்றியிருக்கின்றார்கள்.
மேலும், குறித்த கட்டுரையானது முழுக்க, முழுக்க மத்ஹபு நூற்கள், மத்ஹபு சார் அறிஞர்களின் கூற்றுக்களை தழுவியதாகவே காணப்படுகின்றது. மத்ஹபுகள், பெரியார்கள், நாதாக்கள், ஷேகுமார்கள், பெரும்பான்மை மக்களைப் பின்பற்றுவது தொடர்பாக அருள்மறைக் குர்ஆன் பின்வருமாறு மிகக் கடுமையாக எச்சரிக்கின்றது.

‘அவர்களின் முகங்கள் நரகில் புரட்டப்படும் நாளில் ‘நாங்கள் அழ்ழாஹ்வுக்குக் கட்டுப்பட்டிருக்கக் கூடாதா? இத்தூதருக்குக் கட்டுப்பட்டிருக்கக் கூடாதா?’ எனக் கூறுவார்கள். ‘எங்கள் இறைவா! எங்கள் தலைவர்களுக்கும், எங்கள் பெரியார்களுக்கும் நாங்கள் கட்டுப்பட்டோம். அவர்கள் எங்களை வழி கெடுத்து விட்டனர்’ எனவும் கூறுவார்கள். ‘எங்கள் இறைவா! அவர்களுக்கு இருமடங்கு வேதனையை அளிப்பாயாக! அவர்களை மிகப் பெரிய அளவுக்குச் சபிப்பாயாக!’ எனவும் கூறுவார்கள்.’ (அல்குர்ஆன்-33:66-68)

‘உங்களுக்கு முன் சென்று விட்ட சமுதாயங்களான ஜின்கள் மற்றும் மனிதர்களுடன் நீங்களும் நரகத்தில் நுழையுங்கள்! என்று (அவன்) கூறுவான். ஒவ்வொரு சமுதாயமும் அதில் நுழையும் போது தம் சகோதர சமுதாயத்தைச் சபிப்பார்கள். முடிவில் அவர்கள் அனைவரும் நரகத்தை அடைந்தவுடன் ‘எங்கள் இறைவா! இவர்களே எங்களை வழி கெடுத்தனர். எனவே இவர்களுக்கு நரகமெனும் வேதனையை இரு மடங்கு அளிப்பாயாக!’ என்று அவர்களில் பிந்தியோர், முந்தியோரைப் பற்றிக் கூறுவார்கள். ‘ஒவ்வொருவருக்கும் இரு மடங்கு உள்ளது. எனினும் நீங்கள் அறிய மாட்டீர்கள்’ என்று (அவன்) கூறுவான். ‘எங்களை விட உங்களுக்கு எந்தச் சிறப்பும் கிடையாது. எனவே நீங்கள் செய்து வந்ததன் காரணமாக வேதனையைச் சுவையுங்கள்!’ என்று முந்தியோர், பிந்தியோரிடம் கூறுவார்கள்.’ (அல்குர்ஆன்-07:38,39)

‘அழ்ழாஹ் அருளியதை நோக்கியும் இத்தூதரை நோக்கியும் வாருங்கள்! என்று அவர்களிடம் கூறப்பட்டால் ‘எங்கள் முன்னோர்களை எதில் கண்டோமோ அதுவே எங்களுக்குப் போதும்’ என்று கூறுகின்றனர். அவர்களின் முன்னோர்கள் எதையும் அறியாமலும், நேர் வழி பெறாமலும் இருந்தாலுமா?’ (அல்குர்ஆன்-05:104),

‘அநீதி இழைத்தவன் தனது கைகளைக் கடிக்கும் நாளில், ‘இத்தூதருடன் நான் ஒரு தொடர்பை ஏற்படுத்தியிருக்கலாமே’ என்று கூறுவான். இன்னாரை நான் உற்ற நண்பனாக ஆக்காமல் இருந்திருக்கக் கூடாதா? அறிவுரை எனக்குக் கிடைத்த பின்பும் அதை விட்டு என்னை அவன் கெடுத்து விட்டான். ஷைத்தான் மனிதனுக்குத் துரோகம் செய்பவனாகவே இருக்கிறான் (என்றும் கூறுவான்.) ‘என் இறைவா! எனது சமுதாயத்தினர் இந்தக் குர்ஆனைப் புறக்கணிக்கப்பட்டதாக ஆக்கி விட்டனர்’ என்று இத்தூதர் கூறுவார்.’ (அல்குர்ஆன்-25:27-30)

மேலும் பார்க்க அல்குர்ஆன்: 02:170, 07:28, 10:78, 21:53, 31:21, 36:74, 43:22, 43:23,   53: 23
அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குறிப்பிடுகையில்,

‘நான் உங்களை தெட்டத்தெளிவான ஆதாரத்தின் மீது விட்டுச் செல்கின்றேன். அதன் இரவும் பகலைப் போன்றது. எனக்குப் பின்னால் அதைவிட்டும் திசை மாறுபவர் அழிந்தவர் ஆவார் என்று அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.’ (அறிவிப்பாளர்: இர்பால் பின் ஸாரயா, ஆதாரம்: இப்னுமாஜா-42, முஸ்னத் அஹ்மத்-16813)

பெரும்பான்மையைப் பின்பற்றுவது தொடர்பாக அருள்மறைக் குர்ஆன் குறிப்பிடுகையில்,

‘பூமியில் உள்ளவர்களில் அதிகமானோருக்கு (முஹம்மதே!) நீர் கட்டுப்பட்டால் அவர்கள் உம்மை அழ்ழாஹ்வின் பாதையிலிருந்து வழி கெடுத்து விடுவார்கள். அவர்கள் ஊகத்தையே பின்பற்றுகின்றனர். அவர்கள் அனுமானம் செய்வோர் தவிர வேறு இல்லை.’     (அல்குர்ஆன்-06:116)

‘ஜின்களிலும் மனிதர்களிலும் நரகத்திற்காகவே பலரைப் படைத்துள்ளோம்.’     (அல்குர்ஆன்-07:179)

‘நீர் பேராசைப் பட்டாலும் மக்களில் அதிகமானோர் நம்பிக்கை கொள்வோராக இல்லை.’ (அல்குர்ஆன் 12:103).

மேலும் பார்க்க அல்குர்ஆன்:  07:187, 12:21, 12:40, 12:68, 16,38, 25:50, 30:06, 30:30, 34:28, 34:36, 40:57, 45:27

மேலுள்ள திருமறை வசனங்கள், ஆதாரபூர்வமான நபிமொழிகள் மத்ஹபுகள், பெரியார்கள், முன்னோர்கள், நாதாக்களை பின்பற்றுவது கூடாது என தடை செய்வதுடன், அவ்வாறு பின்பற்றுபவர்களுக்கு நரகினைக் கொண்டும் எச்சரிக்கை செய்கின்றது.

எனவே, மத்ஹபு அறிஞர்களின் மனிதக் கருத்துக்களை விடுத்து, அவர்கள் தமது கருத்துக்கு ஆதாரமாக முன்வைத்த அருள்மறைக் குர்ஆன் வசனங்கள், நபிமொழிகள் என்பற்றை பரிசீலனைக்கு உட்படுத்துவோம்.

தவறான வாதம்:

‘ஆபரணத்திலும் (சிங்காரிப்பிலும்) வளர்க்கப்பட்டு தன் (சொந்த) விவகாரத்தில் (கூட தன்நிலையை) தெளிவாக எடுத்துக் கூறச் சக்தியற்ற ஒன்றையா (பெண்களையா) அவனுக்கு சந்ததிகள் என்று ஆக்குகிறார்கள்?’ (அல் ஸுஹ்ருப்: 18)

இந்த வசனம் பெண்களின் இயற்கையான சுபாவத்தைத் தெளிவுபடுத்துகின்றது. அவர்கள் சிறுபராயத்திலிருந்தே தங்கம், வெள்ளி, அலங்காரக் கற்களினாலான ஆபரணங்களைக் கொண்டு தம்மை அலங்கரிப்பதை விரும்பக் கூடியவர்களாக இருக்கின்றார்கள்.  எனவே, இந்த வசனம் மேற்குறித்த ஆபரணங்களை பெண்கள் அணிவது கூடும் என்பதைச் சுட்டிக்காட்டுகின்றது.

தக்க பதில்:

‘தங்கத்தினாலான எல்லா நகைகளையும் பெண்கள் அணியலாம்!’ என்று கூறக் கூடிய சகோதரர்கள் தமது  வாதத்திற்கு சான்றாக எடுத்து வைத்த அருள்மறை வசனத்தை அடைப்புக்குறிக்குள் இடப்பட்டுள்ள மொழிபெயர்ப்பாளரின் கருத்துக்களை விடுத்து, வல்லோன் அழ்ழாஹ்வின் வார்த்தையை நேரடியாக நோக்குவோம்.

3 

‘ஆபரணத்திலும் வளர்க்கப்பட்டு தன் விவகாரத்தில் தெளிவாக எடுத்துக் கூறச் சக்தியற்ற ஒன்றையா அவனுக்கு சந்ததிகள் என்று ஆக்குகிறார்கள்?’ (அஸ்ஸுக்ருஃப்: 18)

மாற்றுக் கருத்துள்ள சகோதரர்கள் இந்த அல்குர்ஆன் வசனத்தை வைத்துக் கொண்டு பெண்கள் தங்க வளையல் அணியலாம் என்று வாதிட முடியாது. இதனை மாற்றுக் கருத்துக் கொண்ட சகோதரர்கள் ஆதாரமாக முன் வைப்பதே பல அடிப்படைகளில் தவறானதாகும்.

குறித்த அல்குர்ஆன் வசனத்தில் வளையல் நகைகளோ அல்லது வளையல் அல்லாத நகைகளோ பற்றி கூறப்படவில்லை. மாறாக, ஆபரணங்கள் என்றே கூறப்படுகின்றது. அது தங்கம் அல்லாத ஆபரணங்களாக, வெள்ளி ஆபரணங்களாகக் கூட இருக்க முடியும்.
குறித்த வசனத்தில் ‘ஆபரணங்கள் அணியும் பெண்கள்’ அல்லது ‘பெண்கள்’  என்கின்ற வாசகம் அரபி மூலத்தில் கிடையாது. ஆனால், மதிப்பிற்குரிய சகோதரர் அவர்கள் தமது மொழிபெயர்ப்பில் பெண் என்று அடைப்புக்குறிக்குள் இட்டு அதன் அடிப்படையிலேயே பெண்கள் ‘ஆபரணங்களைக் கொண்டு தம்மை அலங்கரிப்பதை விரும்பக் கூடியவர்களாக இருக்கின்றார்கள்’ என்று தனது வாதத்தை தொடர்ந்துள்ளார்.  மாறாக,  இவ்விடத்தில் ‘தன் விவாகரத்தை தெளிவாக எடுத்துச் சொல்ல சக்தியற்றவை’ பற்றியே குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ஒரு வாதத்திற்காக பெண் என்றே வைத்துக் கொண்டாலும் அது மாற்றுமத பெண்களைக் கூட குறிப்பதற்கு சாத்தியம் இருக்கின்றது.
ஒரு வாதத்திற்கு இது முஸ்லிம் பெண்களைத் தான் குறிக்கின்றது என்று வைத்துக் கொண்டாலும் வளையல் அல்லாத நகைகளைக் குறிக்கின்றது என்று விளங்க முடியும்.
ஆகுமான ஒரு செயலும் தடைசெய்யப்பட்ட ஒன்றும் இடம்பெற்றால் தடைசெய்யப்பட்டதைத் தான் முதன்மைப் படுத்த வேண்டும். இது ஒரு சட்டக்கலை விதியாகும்.
இதனை அரபியில்              என்று கூறப்படும். இந்த விதியை மறுத்தால் நிறைய ஹதீத்களை தவறாகப் புரிந்து கொள்ள வேண்டிய நிலமைக்கு உட்படுவீர்கள்.
சமூகத்தில் நடக்கின்ற ஒன்றை உதாரணமாகக் குறிப்பிட்டால் அதை ஆதரிக்கின்றார்கள்; என்று புரிந்து கொள்ளக் கூடாது.

உதாரணமாக, சமூகத்தில் சிலர் விபச்சாரம் செய்கிறார்கள் என்று நாம் கூறினால் நாம் அதனை ஆதரிக்கின்றோம் என்று எவரும் புரிந்து கொள்ள மாட்டார்கள். அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்,  எனது சமூகம் 73 கூட்டமாகப் பிரியும் என்று கூறியதால் அவ்வாறு பிரிவதை அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அங்கீகரித்திருக்கின்றார்கள் என்று எவராவது புரிந்து கொண்டால் அவரை விவரமற்றவர் என்றே கூறுவோம். அதே போன்று அன்று அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் அந்நிய பெண்களை காபிர்கள் கடவுளாக்கிய போது அதனை கண்டிக்கின்ற தொனியில் இறைவன் இவ்வசனத்தை இறக்கியிருக்கலாம். முந்திய வசனங்கள் இதனை உறுதிப்படுத்துகின்றது.

இதனை  எனக் கூறப்படும். பல விளக்கங்களுக்கும் சாத்தியமாகவுள்ள இவ்வசனத்தினை வளையல் நகை அணிவதை ஆதரிக்கின்றது என்று விளங்குவது அறிவுப்பூர்வமானதன்று.

அழ்ழாஹ் அல்குர்ஆனில் பொதுவாக குறிப்பிட்ட ஒன்றை அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது பொன்மொழியில் தெளிவுபடுத்துவார்கள். இதற்கு என்று சொல்லப்படும். இந்த நடைமுறையை அல்குர்ஆனில் அதிகமான இடங்களில் காணமுடியும். இந்த சட்டக்கலை விதியை மாற்றுக் கருத்திலுள்ள சகோதரர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்றே நம்புகின்றோம். இந்த நடைமுறையின் பிரகாரம் இறைவன் பொதுவாகக் குறிப்பிட்ட ஆபரணங்கள் என்பதிலிருந்து அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்திய தங்க வளையல்கள் விதிவிலக்குப் பெறுகின்றது என்று விளங்க முடியும்.

ஆகவே, இவ்வசனத்தினை ஆதாரமாக முன் வைத்தால் பல கேள்விகளுக்கு பதில் இல்லாமல் போகிறது என்பதனை புரிந்து கொள்ள வேண்டும்.

தவறான வாதம்:

‘நபியவர்கள் கூறினார்கள். எனது சமூகத்தில் ஆண்கள் பட்டாடையும், தங்கமும் அணிவது ஹராமானதாகும். பெண்களுக்கு ஹலாலானதாகும்.’ (அறிவிப்பவர்: அபூமூஸா அல்அஷ்அரி (ரழி), நூல்: திர்மிதி)

ஆயினும் இந்த ஹதீஸின் தரம் பற்றி அறிஞர்களுக்கிடையே கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. இமாம் அஹ்மது (ரஹ்) அவர்கள் கூறும் போது, ‘இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் வரக்கூடிய  ‘மைமூன் அல்கன்னாத்’ என்பவர் அறிமுகமானவரில்லை’ என்கிறார். இமாம் புகாரி (ரஹ்) அவர்கள் ‘மைமூன் அல்கன்னாத், ஸயீத் இப்னு முஸையிப்’ மற்றும் அபூகிலாபா ஆகியோரைத் தொட்டும் அறிவித்தால் அது முர்ஸலைச் சார்ந்ததாகும்’ என்கிறார். ராஸி அவர்கள் கூறும் போது ‘அபூகிலாபா, முஆவியாச் சந்தித்ததேயில்லை’ என்கிறார்.

ஆயினும் சில அறிஞர்கள் இந்த ஹதீஸின் கருத்தையொட்டி பல ஹதீஸ்கள் வந்துள்ளதால் அதனைக் கருத்திற் கொண்டு இச்செய்தியை ஸஹீஹ் எனும் தரத்தில் உள்ளடக்குகின்றார்கள். அவர்களில் அஷ்ஷேஹ் அல்பானி (ரஹ்) அவர்களும் ஒருவராகும் என்பது குறிப்பிடத்தக்கது.
‘பிலால் (ரழி) மற்றும் இப்னு அப்பாஸ் (ரழி) ஆகியோர் அறிவிக்கின்றார்கள். ‘நிச்சயமாக நபியவர்களின் காலத்தில் பெண்கள் மோதிரம், மெட்டி, மாலை போன்றவற்றை அணியக் கூடியவர்களாக இருந்தார்கள்.’ (ஜாமிஉல் உஸுல் 04:179)

‘ஆயிஷா (ரழி) அவர்கள் கூறுகின்றார்கள். ‘(ஒரு முறை) நஜ்ஜாஸி மன்னனிடமிருந்து ஆபரணங்கள் நபியவர்களுக்கு அன்பளிப்புப் பொருட்களாக் கிடைத்தன. அவற்றிலே ஹபஷா நாட்டு முத்திரை குத்தப்பட்ட ஒரு தங்க மோதிரமும்  நபியவர்கள் அதனை ஒரு குச்சியின் மூலம்- வேறு ஓர் அறிவிப்பில்- தமது விரல்களால் எடுத்தார்கள். பின்னர் தனது மகளான ஸைனப் (ரழி) அவர்களின் மகள் உமாமா பிந்து அபுல் ஆஸ் (ரழி) அவர்களை அழைத்து அதனை அணிந்து கொள்ளுமாறு கொடுத்தார்கள்.’ (அபூதாவுத் 04:92)

‘நான் ஆயிஷா (ரழி) அவர்களை தங்க மோதிரங்களுடன் பார்த்திருக்கின்றேன்.’
(பார்க்க: புஹாரி07:54)

‘இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் தனது நூலான பத்ஹுல் பாரியில், இப்னு ஸஅத் அவர்கள் அம்ரு இப்னு அபூஅம்ரைத் தொட்டும் வரும் அறிவிப்பிலே கூறும்பொழுது ‘நான் காஸிம் இப்னு முஹம்மதிடத்தில் இதைப் பற்றிக் கேட்ட போது, அவர் அழ்ழாஹ் மீது சத்தியமாக! ஆயிஷா (ரழி) அவர்களை (குங்குமமிடப்பட்ட) மஞ்சள் ஆடையையும், தங்க மோதிரங்களையும் அணியக் கண்டிருக்கின்றேன்’ என்று கூறினார்கள்.’

‘பாத்திமா (ரழி) அவர்கள் தங்கத்தினாலான ஒரு மாலையை தனது கழுத்திலிருந்து கழட்டி இதனை அபுல் ஹஸன் எனக்கு அன்பளிப்பாகத் தந்தார் எனக் கூறினார்கள்.’ என ஸப்வான் (ரழி) அவர்கள் கூறினார்கள்’ (நஸாயி-5140, அஹ்மத்21892)

மேற்கூறப்பட்ட செய்திகள் பெண்கள் தங்கத்தினாலான ஆபரணங்களை அணிய முடியும் என்பதை வலுப்படுத்துகின்றன.

தக்க பதில்:

‘எனது சமூகத்தில் ஆண்களுக்கு பட்டும் தங்கமும் அணிவது ஹராமாக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு அவ்விரண்டும் ஆகுமாக்கப்பட்டுள்ளது என்று அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.’ (அறிவிப்பவர்: அபூமூஸா அல்அஷ்அரி (ரழி), நூல்: திர்மிதி-1687)

மேற்குறித்த நபிமொழி ‘ஸஹீஹ் லிஹைரிஹி’ எனும் தரத்தில் அமைந்த ஹதீஸாகும். மாறாக, அண்மைக்காலத்தில் சில சகோதரர்கள் செய்வது போன்று, தமது மாற்றுக் கருத்திலுள்ள சகோதரர்கள் ஆதாரமாக முன்வைத்துள்ளார்கள் என்பதற்காக பலவீனப்படுத்துகின்ற நடைமுறை எம்மிடம் கிடையாது என்பதையும் சகோதரர்களின் கவனத்திற்கு கொண்டு வருகின்றோம்.

‘நான் ஆயிஷா (ரழி) அவர்களை தங்க மோதிரங்களுடன் பார்த்திருக்கின்றேன்.’ (பார்க்க: புஹாரி 07:54)

என்பதை ஆதாரமாக முன்வைத்துள்ளார்கள். மதிப்பிற்குரிய சகோதரர் அவர்களே! நான் எனது ஆய்வின் ஆரம்பத்தில் குறிப்பிட்டது போன்று அருள்மறைக்குர்ஆனும், ஆதாரபூர்வமான நபிமொழிகளுமே சத்திய இஸ்லாமிய மார்க்கத்தின் சட்ட மூலாதாரமாகும். நபித்தோழர்களைப் பொறுத்த வரையில் இஸ்லாத்திற்காக அளப்பரிய தியாகம் செய்தவர்கள். அந்த உத்தமர்களைப் பற்றி அழ்ழாஹ் தனது திருமறையில் குறிப்பிடும் போது,  ‘அவர்களை அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களும் அழ்ழாஹ்வைப் பொருந்திக் கொண்டனர்’ (அல்குர்ஆன்-58:22)

அதே வேளை மனிதர்களில் சிறந்தவர்கள் என்பதற்காக அவர்களின் சுய கருத்துக்கள், செயற்பாடுகள் ஒரு போதும் மார்க்க ஆதாரமாகாது. மாறாக, வஹியை மாத்திரமே நாம் பின்பற்ற வேண்டும். இதனையே  அருள்மறைக் குர்ஆன், ‘அழ்ழாஹ் அருளியதைப் பின்பற்றுங்கள்! என்று அவர்களிடம் கூறப்பட்டால் ‘எங்கள் முன்னோர்களை எதில் கண்டோமோ அதையே பின்பற்றுவோம்’ என்று கூறுகின்றனர். அவர்களின் முன்னோர்கள் எதையும் விளங்காமலும் நேர் வழி பெறாமலும் இருந்தாலுமா?’ (அல்குர்ஆன்-02:170) என்று குறிப்பிடுகின்றது.

மனிதர்கள் என்கின்ற அடிப்படையில் நபித்தோழர்களுக்கும் பல்வேறு செய்திகள் தெரியாதிருந்துள்ளன. உதாரணமாக, அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் லுஹா தொழுதுள்ளதாக பல்வேறு நபித்தோழர்கள் அறிவித்திருந்தும் நபிகளார் (ஸல்) அவர்கள் லுஹா தொழுததேயில்லை என அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அருமை மனைவி அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (பார்க்க: ஸஹீஹுல் புஹாரி-1177)

அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் லுஹா தொழுததை அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் அறியாதிருந்திருககின்றார்கள்.  எனவே, வஹி அருளப்பெறாத மனிதர்கள் என்கின்ற அடிப்படையில் நபித்தோழர்களின் சுய கருத்துக்கள், செயற்பாடுகள் ஒரு போதும் மார்க்க ஆதாரமாக முடியாது.

‘பிலால் (ரழி) மற்றும் இப்னு அப்பாஸ் (ரழி) ஆகியோர் அறிவிக்கின்றார்கள். நிச்சயமாக நபியவர்களின் காலத்தில் பெண்கள் மோதிரம், மெட்டி, மாலை போன்றவற்றை அணியக் கூடியவர்களாக இருந்தார்கள்.’ (ஜாமிஉல் உஸுல் 04:179)

குறித்த செய்தி ஸஹீஹுல் புஹாரி மற்றும் ஸஹீஹ் முஸ்லிமில் தெளிவாக இடம் பெற்றுள்ளது.

‘அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளில் இரண்டு ரக்அத்கள் (மட்டுமே) தொழுதார்கள். அதற்கு முன்பும் (எதையும் கூடுதலாகத்) தொழவில்லை, அதற்குப் பின்பும் (எதையும் கூடுதலாகத்) தொழவில்லை. (ஆண்களுக்கு உரை நிகழ்த்திய) பிறகு தம்முடன் பிலால் (ரலி) அவர்கள் இருக்க பெண்கள் பகுதிக்கு வந்து (உபதேசம் புரிந்தார்கள். அப்போது) தர்மம் செய்யுமாறு அவர்களைப் பணித்தார்கள். உடனே பெண்கள் (தம்மிடம் இருந்ததை பிலால் அவர்களின் (கரத்திலிருந்த துணியில்) இடலாயினர். சில பெண்கள் தம் காதணிகளையும், தம் (கழுத்தில் அணிந்திருந்த) நறுமண மாலைகளையும் இட்டனர்.’ (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-964, ஸஹீஹ் முஸ்லிம்-1616)

‘அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பெருநாளன்று இரண்டு ரக்அத்கள் தொழு(வித்)தார்கள். அதற்கு முன்பும், பின்பும் எதையும் தொழவில்லை. பிறகு பிலால் (ரலி) அவர்களுடன் பெண்கள் பகுதிக்கு வந்தார்கள். பெண்களுக்கு உபதேசித்துவிட்டு, தர்மம் செய்யுமாறும் கட்டளையிட்டார்கள். உடனே, பெண்கள் தங்கள் காது வளையங்களையும் கை வளையல்களையும் (தர்மமாக) வழங்கலானார்கள். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி- 1431)

சகோதரர் அவர்களின் கருத்தை சரிகாணக்கூடிய சகோதரர்கள்; குறிப்பிட்டுள்ள நபிமொழியில் ‘தங்க வளையல்’ என்று இடம் பெற்றுள்ளதா என்பதனை பரிசீலிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.

அடுத்து, ஒரு வாதத்திற்காக தங்கம் என்றுதான் வைத்துக் கொண்டாலும் பெண்களுக்கு ‘பொதுவாக ஆகும்’ என்ற காலப்பகுதியில் நடைபெற்ற சம்பவம் என்றும்,  ‘வளையல்தங்கம் அணியக் கூடாது’ என்ற சட்டம் அதன் பின் வந்தது என்றும் புரிந்து கொண்டால் எவ்வித முரண்பாடும் ஏற்பட மாட்டாது. இவ்வாறான அடிப்படையில், வணக்கம் இல்லாத அம்சங்கள் பொதுவாக ஆகும் என்ற தரத்திலேயே இருக்கும் இந்த விதியை அரபியில்  என்று சொல்லப்படும். எனவே, பெண்களுக்கு தங்க நகை அணிவது ஆகும் என்று ஆரம்பத்தில் அனுமதிக்கப்பட்டிருந்தது. இவ்வாறான நிலையில் ‘வளையல் தங்கம் மட்டும்’ அணியக் கூடாது என்று பின்னர்  தடை செய்யப்பட்டது. தங்க நகைகள் தொடர்பான அறிப்புக்களை இவ்வாறு புரிந்து கொண்டால் எவ்வித முரண்பாடும் தோன்றமாட்டாது.

அடுத்து,          ‘ஹதீத் திறனாய்வுக்கலை’யோடு சம்பந்ப்பட்ட            ‘நாஸிஹ், மன்ஸுஹ்’   ‘மாற்றியது, மாற்றப்பட்டது’ சம்பந்தமாக உங்களது ஆய்வில் கூறியுள்ளீர்கள். பெண்கள் தங்க வளையல் அணிவது கூடும் என்று கூறக்கூடிய சகோதரர்கள் தங்க வளையல் அணிவதைத் தடை செய்து வருகின்ற செய்திகளை, தங்க வளையல் ஆகும் என்று வந்துள்ள செய்திகள் மாற்றிவிட்டது என வாதிடுகின்றனர்.  இது தொடர்பாக ஏலவே, விளக்கமளித்துள்ளேன்.

மேலும், ஒரு ஹதீஸ் மாற்றப்பட்டது எனக் கூறுவதாக இருந்தால் அதற்கு பல நிபந்தனைகளை இக்கலையோடு சம்பந்தப்பட்ட இமாம்கள் கூறியுள்ளனர். அதில் மிக முக்கியமான நிபந்தனைகள் இரண்டு.

1. ‘நாஸிஹ்’ – மாற்றக் கூடிய செய்தி, ‘மன்ஸுஹ்’ – மாற்றப்பட்ட செய்திக்கு பின் இடம்பெற    வேண்டும்.

2. முரண்பட்ட ஆதாரபூர்வமான இரண்டு செய்திகள் இடம்பெறும் போது முரண்பாடில்லாமல் இரண்டையும் சேர்த்து விளங்குவதற்கு இடம்பாடு இல்லாமல் இருக்க வேண்டும்.

பெண்கள் வளையத்தினாலான தங்க நகைகள் அணிவது கூடாது என்று இடம் பெறக் கூடிய  செய்திகளை மாற்;றப்பட்டது என்று கூறக் கூடிய சகோதரர்கள் இவ்விரண்டு நிபந்தனைகளையும் மீறியுள்ளனர். மன்ஸுஹ் என்பதற்கு வளைந்த தங்கம் ஆகும் என்ற செய்திகள் பிந்தித்தான் சொல்லப்பட்டது என்பதை உறுதி செய்யக் கூடிய எந்தவொரு ஆதாரத்தையும் மாற்றுக் கருத்திலுள்ள அன்புச் சகோதரர்கள் முன்வைக்கவில்லை.

அடுத்து, முரண்பட்ட ஆதாரபூர்வமான இரு செய்திகளையும்  இணைத்து முடிவெடுப்பதற்கு வாய்ப்பிருந்தும் அவ்வாறு செய்யவில்லை என்பதையும் உங்களது கவனத்திற்கு கொண்டு வருகின்றேன்.

எவ்வாறு இணைத்து விளங்கலாம்?

மேற்குறித்த செய்திகளில் ஒன்றை விட்டு, ஒன்றை எடுக்காமல் மொத்தமாக இணைத்து ‘ஜம்உ’ செய்து விளங்குவதன் மூலம், அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அனைத்து செய்திகளையும் இலகுவாக அமுல்படுத்த முடியும். ‘ஆகும்’ என்று தரத்தில் கூறப்பட்ட செய்திகள் அனைத்தும் பொதுவானவை   என்றும் ‘ஆகாது’ என்ற தரத்தில் கூறப்பட்டசெய்திகள் வரையறைசெய்யபட்டவை   என்றும் இணைத்து விளங்குவதன் மூலம் எல்லா செய்திகளையும் அமுல்படுத்த முடியும். வளையல், மாலை, காப்பு, மோதிரம் போன்ற வரையறை செய்யப்பட்ட வளையல் நகைகள் ‘கூடாது’ என்றும் என்ற ஏனைய, தங்கத்திலான நகைகள் கூடும் என்றும் விளங்கிக் கொண்டால் எந்த  முரண்பாடும் கிடையாது. மாற்றப்பட்டது என்று கூறவும் முடியாது.

அடுத்து,    சட்டக்கலையில்   என்றறொரு விதி உண்டு.   என்றால் பொதுவானது.    என்றால் வரையறையுடன் குறிப்பாக்கப்பட்டது. இந்த விதியை அடிப்படையாகக் கொண்டே பல நபிமொழிகளை விளங்குகின்றோம். பொதுவாக ஆகுமாக்கப்பட்டு விட்ட ஒன்றை, குறிப்பாக்கப்பட்ட வரையறையுடன் தடைசெய்தால் அந்த வரையறையை உட்பொதிந்த காரியம் மாத்திரம்தான் உள்ளடங்கும் என்பதனை சட்டக்கலையும்,  எமது அறிவும் ஏற்றுக் கொள்கிறது.

உதாரணமாக,  நாம் ஒருவரைப் பார்த்து ‘நீங்கள் பாடசாலைக்கு செல்லுங்கள்’ என்று கூறுகின்றோம் என்று வைத்துக் கொள்வோம். பின்னர், சிறிது காலத்தின் பின் அவரைப் பார்த்து, ‘நீங்கள் அழுக்காக இருந்தால் பாடசாலைக்கு செல்லாதீர்கள்’  எனக் கூறினால் ‘அழுக்காக இருக்கும் நிலையில்’ மாத்திரம் பாடசாலைக்கு செல்ல வேண்டாம் என்றே அவரும் புரிந்து கொள்வார். அதே போன்றுதான் தங்கம் பெண்களுக்கு ஆகுமாக்கப்பட்டது என்ற பொதுவான நிலைக்குப் பின்னால் வளையல் தங்கம் பிரேத்தியேகமாக தடை செய்யப்படுகின்றது.

ஆனால், மதிப்பிற்குரிய சகோதரர் அவர்கள், ‘வளையல்களை அணியத் தடைசெய்கின்ற ஹதீஸ்கள் அணிய அனுமதிக்கின்ற ஹதீஸ்களால்  மாற்றப்பட்டுவிட்டன’ என வாதிடுகின்றார்கள்.

அதாவது,; சகோதரர் அவர்கள் தங்க வளையல் அணிவதைத் தடைசெய்யும் செய்தி ஆரம்பத்தில் வந்ததென்றும்,  தங்கம் ஆகுமாக்கப்பட்டது என்று வந்துள்ள செய்தி பின்னர் வந்தது என்றும் கூறுகின்றார்.

இவ்வாறு விளங்குவது அது தவறான விளக்கமாகும். ஏனெனில், வரையறையுடன் உள்ளது ஆரம்பத்தில் வருவதும் பொதுப்படையானது பின்னால் வருவதும் சட்டக் கலைக்கு முரணானதும்,  அறிவுக்கு ஒவ்வாததும் ஆகும். நாம் மேற்கூறிய அதே உதாரணத்தினை எடுத்துக் கொள்வோம்.

‘நீங்கள் அழுக்காக இருந்தால் பாடசாலைக்குச் செல்லாதீர்கள்!’ என்பதனை ஆரம்பத்தில் கூறியது என்றும், ‘நீங்கள் பாடசாலைக்கு செல்லுங்கள்’ என்பது பின்னர் கூறியது என்றும்  ஒருவர் விளங்குகின்றார் என்று வைத்துக் கொள்வோம்.

ஆரம்பத்தில் கூறியதை எடுக்க முடியாது என்று விளங்கிக் கொண்டு ‘அழுக்காக இருந்தாலும் பாடசாலைக்கு செல்ல முடியும்’ என்று விளங்க முடியுமா? அவ்வாறு விளங்கினால் ‘நீங்கள் அழுக்காக இருந்தால் பாடசாலைக்கு செல்லாதீர்கள்’ என்ற வார்த்தைக்கு அர்த்தம் இல்லாமல் போகின்றதல்லவா?  இதற்கு மதிப்பிற்குரிய சகோதரர் அவர்களை அல்லது அவரது நிலைப்பாட்டை ஆதரிக்க கூடிய சகோதரர்களை விளக்கம் சொல்லுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.

அடுத்து,  பொதுவாக ஒரு தடை வருமென்றால் அதற்கு முன்பு அது ஆகுமாக்கப்பட்ட ஒரு நிலை இருந்திருக்கும். இது இரு முரண்பட்ட செய்திகளுக்கு மாத்திரமே என்பதனை இவ்விடத்தில் புரிந்து கொள்ள வேண்டும். ‘அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் சில நபித்தோழர்கள் நின்று கொண்டு நீர் அருந்தியுள்ளார்கள்.

ஏன் நபியவர்களே நின்று கொண்டு நீர் அருந்தியுள்ளார்கள். பின்னர் அதனை தடைசெய்கிறார்கள்.’ இதனைப் பார்க்கும் ஒருவர் ‘தடை’ தான் முந்தியது என்றும் ‘ஆகும்’ என்பது பிந்தியது என்றும் வாதிட்டால் அவரை நாம் என்னவென்று கூறுவோம்? முரண்பட்ட செய்திகளில் ஆகும் என்ற நிலைக்குப் பின்னர்தான் தடை வரும் என்பதனை அவருக்கு விளக்குவோம். அதே போன்றுதான் பெண்களுக்கு தங்கம் ஆகுமாக்கப்பட்டது என்ற ஆகுமான நிலைக்குப் பின்னர் அதில் ஒரு பகுதியான வளையல் நகை அணிவது தடுக்கப்படுகின்றது என்று நாம் ஹதீதினை புரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு வாதத்திற்கு நீங்கள் முன் வைத்த ஆதாரங்களின் அடிப்படையிலும், தடையும் அனுமதியும் வந்தால் தடையைத்தான் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்கின்ற சட்டக்கலை விதி தொடர்பாக மதிப்பிற்குரிய சகோதரர் அவர்கள் அல்லது சகோதரரின் நிலைப்பாட்டினை ஆதரிக்க கூடிய சகோதரர்கள் தமது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்த வேண்டும். அவ்விதியினை சகோதரர்கள்; மறுக்கும் பட்சத்தில் பல கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டி வரும் என்பதனையும் இவ்விடத்தில் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

அடுத்து, மிக முக்கியமானதொரு விடயத்தை மதிப்பிற்குரிய சகோதரர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு வருகின்றேன். வளைந்த தங்க நகை அணிவது தொடர்பாக ஏலவே, ஒரு நிலைப்பாட்டை எடுத்து வைத்துக் கொண்டு நபிமொழிகளை அணுகியதன் விளைவாக, ஹதீஸ்களில் திரித்தல், கூட்டல், குறைத்தல் செய்ய வேண்டிய நிலைக்கு அது உங்களை இட்டுச் சென்றுள்ளது. மிகத் தெளிவாக வளைந்த தங்கம் அணிவதைத் தடைசெய்து இடம் பெற்றுள்ள நபிமொழியை வளைந்த தங்கம் அணியலாம் என்பதற்கு ஆதாரமாக முன்வைத்துள்ளீர்கள்.

அன்புச் சகோதரர் அவர்கள் முன்வைத்த நபிமொழியில் உள்ள சில வார்த்தைகள்:

‘பாத்திமா (ரழி) அவர்கள் தங்கத்தினாலான ஒரு மாலையை தனது கழுத்திலிருந்து கழட்டி இதனை அபுல் ஹஸன் எனக்கு அன்பளிப்பாகத் தந்தார் எனக் கூறினார்கள்.’ என ஸப்வான் (ரழி) அவர்கள் கூறினார்கள்’ (நஸாயி-5140, அஹ்மத்21892)

குறித்த நபிமொழியின் முழுமையான வாசகங்கள்:

‘ஹுபைறா என்பவரின் மகள் (ஹிந்த்) அழ்ழாஹ்வின் தூதரிடத்தில் தங்க மோதிரம் அணிந்தவளாக வந்தாள். அப்பெண்னின் கையை அழ்ழாஹ்வின் தூதர்(ஸல்)அவர்கள் தட்டிவிட்டார்கள். அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது இச்செயலை அப்பெண் பாத்திமா (ரழி) அவர்களிடத்தில் முறைப்பட்டாள். உடனே, பாத்திமா (ரழி) அவர்கள் தான் அணிந்திருந்த தங்க மாலையைக் கழற்றி ‘இதனை ஹஸனின் தந்தை (அலி ரழி)  அவர்கள் தான் எனக்கு அன்பளிப்பாகத் தந்தார்கள்’ எனக் கூறினார்.

பாத்திமா (ரழி) அவர்களின் கரத்தில் தங்கமாலை இருக்கும் சமயத்தில் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அங்கு வந்தார்கள். பாத்திமாவே! முஹம்மதின் மகள் பாத்திமாவின் கரத்தில் நரக நெருப்பினால் ஆன மாலை இருக்கின்றது என மக்கள் பேசிக் கொள்வது உனக்கு மகிழ்ச்சியளிக்கின்றதா! எனக் கேட்டு விட்டு அங்கு உட்காரமல் திரும்பி விட்டார்கள். உடனே பாத்திமா (ரழி) அவர்கள் அம்மாலையைக் கழற்றி கடையில் விற்று வருமாறு ஆளப்பினார்கள். மாலை விற்றவுடன் அப்பணத்தினால் ஒரு அடிமையை வாங்கி உரிமையிட்டார்கள்.

பாத்திமாவின் இச்செயல் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குக் கிடைத்த போது ‘நரக நெருப்பை விட்டு பாத்திமாவைக் காப்பாற்றிய அந்த அழ்ழாஹ்வுக்கே புகழ் அனைத்தும்’ எனக் கூறினார்கள்.’ (அறிவிப்பாளர்: தவ்பான்(ரலி), நூல்:ஸுனனுன் நஸாயீ-5140)

அன்புச் சகோதரர் அவர்களே! மாற்றுக் கருத்திலுள்ளவர்கள் ஆதாரமாக முன்வைக்கின்றார்கள் என்கின்ற காரணத்திற்காக நபிமொழியில் இவ்வாறு மோசடி செய்வது நியாயமானதா? மார்க்கத்தை கற்றறிந்த மார்க்க அறிஞர்கள் இவ்வாறு நடந்து கொள்ளலாமா?

இவ்வாறு வேதத்தில் கூட்டல், குறைத்தல், திரித்தல் செய்வதை அழ்ழாஹ் திருமறைக் குர்ஆனில் மிக கடுமையாகக் கண்டிக்கின்றான்.

‘வேதத்தில் ஒரு பகுதியை ஏற்று, மறு பகுதியை மறுக்கிறீர்களா? உங்களில் இவ்வாறு செய்பவனுக்கு இவ்வுலக வாழ்க்கையில் இழிவைத் தவிர வேறு கூலி இல்லை. கியாமத் நாளில் கடுமையான வேதனைக்கு உட்படுத்தப் படுவார்கள். நீங்கள் செய்வதை அல்லாஹ் கவனிக்காதவனாக இல்லை. (அல்குர்ஆன்-02:85)

தவறான வாதம்:

இந்த ஹதீஸில் குறிப்பிடப்பட்டுள்ள எச்சரிக்கையானது, எவர்களெல்லாம் தங்கத்திற்கு ஸகாத் கொடுக்காமல்  இருக்கின்றார்களோ அவர்களையே குறிக்கின்றது. இக்கருத்தைக் கூறக்கூடியவர்கள் ஆபரணங்களுக்கு ஸகாத் கொடுக்கப்பட வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தக் கூடிய ஹதீஸ்களை ஆதாரமாக முன்வைக்கின்றனர். அவற்றுள் பின்வரும் அம்ருப்னு ஷுஅய்ப் (ரழி) அவர்களின் ஹதீஸ் குறிப்பிடத்தக்கது.

அவர்கள் கூறுகின்றார்கள்.

‘ஒரு பெண்மணி யமன் நாட்டிலிருந்து நபி அவர்களிடத்தில் வந்தார். அவருடன் அவரின் மகளும் இருந்தார். அவரின் மகளின் கையில் தங்கத்தினாலான இரு வளையல்கள் இருந்தன. அப்போது நபியவர்கள் அப்பெண்ணை நோக்கி ‘நீர் இதற்குரிய ஸகாத்தைக் கொடுத்து விட்டீரா?’ என வினவினார்கள். அதற்கவர் ‘இல்லை’ என பதிலளிக்க  நபியவர்கள் ‘அழ்ழாஹ் நெருப்பினாலான ஒரு காப்பை அணிவிப்பது உனக்கு சந்தோஷத்தை அளிக்கின்றதா?’ என வினவினார்கள். அதற்கவர் இரு காப்புக்களையும் கழற்றி நபியவர்களிடத்தில் கொடுத்து விட்டு ‘இந்த இரண்டும் அழ்ழாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் உரியதாகும்.’ எனக் கூறினார். (அபூதாவுத் 02:95)

தக்க பதில்:

சகோதரர் அவர்கள் எடுத்து வைத்த நபிமொழியில்,  அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கனமான இரு தங்க வளையல்கள் அணிந்திருந்ததை வெறுக்கவில்லை. மாறாக, அவ்விரண்டுக்கும் ஸகாத் கொடுக்காததைத்தான் வெறுத்துள்ளார்கள்.


ஆனால், நாம் எடுத்து வைத்த அபூஹுரைரா (ரழி) அறிவிக்கும் நபிமொழியில் வளையல் நகை அணிவதனையே தடைசெய்துள்ளார்கள். அதில் ஸகாத் கொடுக்கப்பட்டதா? என்றெல்லாம்,  அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்கவில்லை. மேலும்,  தங்க வளையல் நகை அணிவது தடைசெய்யப்பட்டதுதான் என்பதை  அபூஹுரைரா (ரழி) அவர்கள் தமது மகளுக்கு தங்கம் அணியக் கூடாது என்று தடைசெய்தது உறுதிப்படுத்துகின்றது.
4
முஹம்மத் இப்னு ஸீரீன் அவர்கள், அபூஹுரைரா (ரழி) அவர்கள் தமது மகளுக்கு பின்வருமாறு கூற தான் கேட்டதாக அறிவிக்கின்றார்கள். ‘நீ தங்கத்தை அணிய வேண்டாம். ஏனெனில் உன் மீது கொழுந்து விட்டெரியும் நரக நெருப்பை நான் பயப்படுகின்றேன்.’ (நூல்: முஸன்னப் இப்னு ஷைபா- 19935)

குறித்த செய்தியை இவ்விடத்தில் நான் கூறுவதால் ஸஹாபியின் கூற்றை ஆதாரமாக முன்வைக்கின்றேன் எனத் தவறாக விளங்கிக் கொள்ளக் கூடாது மாறாக, பின்வரும் இரண்டு காரணங்களுக்காக குறித்த செய்தியை இங்கு மேற்கோள் காட்டியுள்ளேன்.

அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கும் அபூதாவுதில் இடம் பெற்றுள்ள செய்தியை, அவர்களே ‘தமது மகளை தங்க நகையை அணிய வேண்டாம்’ எனத் தடுத்த செய்தி, உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
குறித்த  செய்தியை அறிவிக்கும் நபித்தோழரே இவ்வாறு நடந்துள்ளதால், ‘ஒரு செய்தியை அறிவித்தவரே அதன் கருத்துக்களை மிகவும் அறிந்தவராக இருப்பார்’ என்பதும் அபூ{ஹரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கும் அபூதாவுதில் இடம் பெற்றுள்ள செய்தியை உறுதிப்படுத்துகின்றது.
இதற்கு உஸுலுல் ஹதீஸில்  என்று  கூறப்படும்.
ஒரு வாதத்திற்கு அன்புச் சகோதரர் அவர்கள் சொல்வது போன்று ஸகாத் கொடுக்கப்படாத தங்க வளையல் நகையதைதான் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடுத்தார்கள் என வைத்துக் கொண்டாலும் நமது வாதம் வலுவிழந்துபோகாது.

ஏனெனில், அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஸகாத்தை நிறைவேற்றச் சொன்ன காலம் ‘பெண்கள் பொதுவாக தங்கம் அணியலாம்’ என்ற நிலையில் இருந்த போது என்றும், தங்க வளையல்கள் அணியக் கூடாது என்று தடை செய்ததது அதற்குப் பிற்பட்ட காலம் என்றும் விளங்கினால் எவ்வித வியாக்கியானங்களும் சொல்ல வேண்டிய தேவை ஏற்படாது என்பதைப் புரிந்து கொள்ளலாம். மேலும்,  நபித்தோழர் தவ்பான் (ரழி) அவர்கள் அறிவிக்கும் நஸயீ இல் இடம்பெற்றுள்ள செய்தியும் ‘பொதுவாகவே’ அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தங்க வளையலை தடை செய்துள்ளார்கள் என்பதை உறுதி செய்கின்றது.
5

ஹுபைறா என்பவரின் மகள் (ஹிந்த்) அழ்ழாஹ்வின் தூதரிடத்தில் தங்க மோதிரம் அணிந்தவளாக வந்தாள். அப்பெண்னின் கையை அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தட்டிவிட்டார்கள்.

அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இச்செயலை அப்பெண் பாத்திமா (ரழி) அவர்களிடத்தில் முறைப்பட்டாள். உடனே, பாத்திமா (ரழி) அவர்கள் தான் அணிந்திருந்த தங்க மாலையைக் கழட்டி ‘இதனை ஹஸனின் தந்தை (அலி (ரழி) அவர்கள் தான் எனக்கு அன்பளிப்பாகத் தந்தார்கள்’ எனக் கூறினார்.

பாத்திமா (ரழி) அவர்களின் கரத்தில் தங்கமாலை இருக்கும் சமயத்தில் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அங்கு வந்தார்கள். பாத்திமாவே! முஹம்மதின் மகள் பாத்திமாவின் கரத்தில் நரக நெருப்பினால் ஆன மாலை இருக்கின்றது என மக்கள் பேசிக் கொள்வது உனக்கு மகிழ்ச்சியளிக்கின்றதா?  எனக் கேட்டு விட்டு அங்கு உட்காரமல் திரும்பி விட்டார்கள்.

உடனே பாத்திமா (ரழி) அவர்கள் அம்மாலையைக் கழற்றி கடையில் விற்று வருமாறு ஆளப்பினார்கள். மாலை விற்றவுடன் அப்பணத்தினால் ஒரு அடிமையை வாங்கி உரிமையிட்டார்கள். பாத்திமாவின் இச்செயல் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குக் கிடைத்த போது ‘நரக நெருப்பை விட்டு பாத்திமாவைக் காப்பாற்றிய அந்த அழ்ழாஹ்வுக்கே புகழ் அனைத்தும்’ எனக் கூறினார்கள்.’ (அறிவிப்பாளர்: தவ்பான் (ரழி), ஆதாரம்:ஸுனனுன் நஸாயீ-5140)

குறித்த நபிமொழியில் பாத்திமா (ரழி) அவர்கள் தாம் அணிந்திருந்த தங்க மாலையை கழற்றி விற்பதற்காக அனுப்புகின்றார்கள். விற்ற அப்பணத்திற்கு ஒரு அடிமையை விலைக்கு வாங்கி உரிமையிட்டார்கள்.

மதிப்பிற்குரிய சகோதரர் அவர்கள் கூறுவது போன்று ஸகாத் கொடுக்கப்படாத தங்க வளையல்களைத்தான் நபியவர்கள் தடுத்தார்கள் என்றிருந்தால் பாத்திமா (ரழி) அவர்கள் குறித்த தங்க மாலைக்கு ஸகாத் கொடுத்திருக்க வேண்டும். ஆனால், வளையல் விற்ற பணத்திலிருந்து ஸகாத் கொடுக்கவில்லை. மாறாக, அப்பணத்தினால் ஒரு அடிமையையே வாங்கி உரிமையிட்டார்கள். இதனை அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அங்கீகரித்துள்ளார்கள்.

எனவே, நீங்கள் முன்வைத்த வாதம் நபித்தோழர் அபூஹுரைரா (ரழி) மற்றும் நபித்தோழர் தவ்பான் (ரழி) அவர்கள் அறிவிக்கும் நபிமொழிகள் மூலம் தவறானது என்பதைப் புரிந்து கொள்ளலாம். மேலும், காரணம் சொல்லப்படாத ஒன்றுக்கு நாமாகவே ‘காரணம்’  கற்பிப்பதும் இவ்வாறு இருக்கலாம் என கற்பனை பண்ணுவதும்  அறிவுடமையாகாது என்பதை நான் சொல்லிப் புரிய வேண்டுமென்பதில்லை.

தவறான வாதம்:

‘இந்த ஹதீஸில் வரக் கூடிய ‘ஹபீபஹு’ என்கின்ற சொல் ‘தனது நேசத்திற்குரியவர்’ என்ற கருத்தைத் தருகின்றது.  சிறுவர்களும் நேசத்திற்குரியவர்கள் பட்டியலில் அடங்குவர்’

தக்க பதில்:

மேற்படி நபிமொழியில்  எனும் அறபு வார்த்தை ‘நேசிக்கப்படும் ஆண்’ அல்லது சிறுவர்களைத்தான் குறிக்கும் என வாதிடுவது தவறானதாகும். காரணம் எனும் அமைப்பில் அமைந்திருக்கும் பெயர்ச்சொல் மாதிரிகள் ஆண்,பெண் இரு பாலருக்கும் பொதுவாகவே அறபு இலக்கணத்தில் பயன்படுத்தப்படும்.

பொதுவாக ‘ஹபீப்’ என்ற வார்த்தைக்கு நேசத்திற்குரிய ஆண் என்று மாத்திரம் அர்த்தம் இருந்தால் உங்கள் வாதப்படி அது நியாயமானதாகும். ஆனால் அறபு மொழி விதியின் பிரகாரம் இவ்வாறான வார்த்தைகளுக்கு நேசத்திற்குரிய ஆண் என்றும் மொழி பெயர்க்கலாம் நேசத்திற்குரிய பெண் என்றும் மொழி பெயர்க்கலாம் இரண்டு அர்த்தங்களை கொண்டிருக்கும் போது அது நேசத்திற்குரிய பெண் என்பதைத்தான் குறிக்கின்றது என்று நாம் கூறுவதற்கு பிரதானமாக இரண்டு காரணிகளைக் கூற முடியும்

அது ஆணைத்தான் குறிக்கின்றது என்றால் ஆண்களுக்கு தங்கம் ஏற்கனவே தடைசெய்யப்பட்டு விட்டது. தடை செய்யப்பட்டு விட்டதன் பின்னால் அழ்ழாஹ்வின் துதர் மீண்டும் அதனைக் கூறினால் அவ்வார்த்தைக்கு அர்த்தம் இல்லாமல் போய் விடுகின்றது.
அது பெண்களைத்தான் குறிக்கின்றது என்பதற்கு ஆதாரமாக இன்னுமொரு அறிவிப்பு முஸ்னத் அஹ்மத் என்ற கிரந்தத்தில் வருகின்றது. அந்த அறிவிப்பில் தான் நேசிக்கின்றவளுக்கு என்று இடம் பெற்றுள்ளது.   அந்த அறிவிப்பiயும் சிலர் பலவீனப்படுத்த முயற்சிக்கலாம். அதனால் அது பற்றிய விவரங்களையும் நாம் தருகின்றோம்.

இந்த அறிவிப்பில் இடம்பெறும் அறிவிப்பாளரான ‘அப்துர்ரஹ்மான் பின் அப்துல்லாஹிப்னு தீனார்’ என்பவர் இடம் பெறுகிறார். இவரைப் பற்றிக் கூறப்படும் கருத்துக்களைப் பார்ப்போம்.

இமாம் யஹ்யா பின் மயீன்:  என்னிடத்தில் இவரது ஹதீதில் சற்று பலவீனம் உண்டு
இமாம் இப்னு ஹஜர்:  தவறிழைக்கும் சாதாரன நம்பகத்தன்மை கொண்டவர்
இமாம் அபுஹாதம்: இவரது ஹதீத் எழுதப்படும் அவரை ஆதாரம் பிடிக்கப்பட மாட்டாது
இப்னு அதீ: இவர் அறிவிப்பவற்றில் மறுக்கப்பட வேண்டிய சிலதும் உண்டு. மேலும், இவர் அறிவிப்பவற்றை வழி மொழியும் துணை ஆதாரமும் கிடையாது ஆக மொத்தத்தில் இவரது ஹதீத் எழுதப்படும்.
இவை அனைத்தும் இவர் பற்றி கூறப்பட்ட சில குற்றச்சாட்டுக்கள்
இவர் பற்றி கூறப்பட்ட நல்ல கருத்துக்கள்:
இமாம் பகவீ: இவர் ஹதீதில் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு தகுதியானவர்
இமாம் அலீ பின் மத்யனீ: இவர் சாதாரன நம்பகத்தன்மை கொண்டவர்
இமாம் ஹர்பீ: ஏனையோர் இவரை விட அதிக நம்பகத்தன்மை வாய்ந்தவர்கள்

மேலே நாம் சுட்டிக் காட்டியுள்ள விமர்சனங்களையும் நியாயங்களையும் நோக்கும் போது இந்த அறிவிப்பாளருடைய குறை ஹதீதினை பலவீனப்படுத்துமளவிற்கு கிடையாது இவரை விட ஏனையோர் அதிக நம்பகத்தன்மை வாய்ந்தவர் என்று இமாம் ஹர்பீ கூறிய கூற்றிலிருந்தே இவர் சாதாரன நம்பகத்தன்மை கொண்டவர் என்பது தெளிவாக விளங்குகின்றது.

தவறான வாதம்:

இது போன்ற ஹதீஸ்கள் மக்கள் தங்கத்தைச் சேகரிக்கும் விடயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்காக கூறப்பட்டிருக்கலாம். ஏனெனில், இது விடயத்தில் மக்கள் அதிக ஈடுபாட்டைக் காட்டுவது அவர்களைச் செல்வங்களைச் சேகரிப்பதன்பால் திசைதிருப்பிவிடும். இதனால் சில சமயங்களில் ஸகாத் கடமையானதையும் பொருட்படுத்தாமல் இருக்கும் நிலை ஏற்பட்டுவிடும்.

தக்க பதில்:

மதிப்பிற்குரிய சகோதரர் அவர்கள் முன்வைத்துள்ள வாதம் தவறான வாதமாகும் ஏனெனில்,வெள்ளியைப் பற்றி அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குறிப்பிடுகையில்,

‘வெள்ளியை உங்களுக்கு நான் ஏவுகின்றேன். அவற்றை தாராளமாகப் பயன்படுத்துங்கள்! என அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நபிமொழியின் சுருக்கம்) (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), நூற்கள்: முஸ்னத் அஹ்மத், ஸுனன் அபீதாவுத்-4236)

மதிப்பிற்குரிய சகோதரர்கள் கூறுவதைப் போன்று தங்கத்தை சேகரிக்கும் விடயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றால் வெள்ளியைச் சேகரிக்கும் விடயத்தில் எச்சரிக்கையாக இருக்கத் தேவையில்லா?
அருள்மறைக் குர்ஆன் குறிப்பிடுகையில், ‘அழ்ழாஹ்வின் பாதையில் செலவிடாமல் தங்கத்தையும்,வெள்ளியையும் சேர்த்து வைப்போருக்கு துன்புறுத்தும் வேதனை உண்டு என்று எச்சரிப்பீராக!’ (அல்குர்ஆன்-09:34) எனக் கூறுகின்றது. எனவே, சகோதரர் அவர்களின் வாதம் தவறான வாதமாகும்.

தவறான வாதம்:

நபி அவர்களின் காலத்தைத் தொடர்ந்து இன்று வரைக்கும் பெண்களால் இவ்வகை நகைகள் அணியப்பட்டே வருகின்றன.

தக்க பதில்:

நபி அவர்களின் காலம் தொடக்கம் இன்று வரைக்கும் பெண்களால் இவ்வகை நகைகள் அணியப்பட்டு வருகின்றது என்கின்ற வாதம் அடிப்படையில் தவறானதாகும். மாறாக, அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலம் தொடக்கம் இன்று வரை தங்க வளையல் ஹராம் என்கின்ற நிலைப்பாட்டில் பல முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றனர். என்பதனை அன்புச் சகோதரர் அவர்களின் கவனத்திற்க கொண்டு வருகின்றேன்.

இது தவிர எவராவது பெண்கள் அனைத்து வகையான தங்க ஆபரணங்களையும் அணியலாம் என இஜ்மா உள்ளதாக வாதிடுவார்களாயின்  இவர்கள் இது தொடர்பாக முதலாவது ஒரு அடிப்படையான விடயத்தினைப் புரிந்து கொள்ள வேண்டும். சத்திய இஸ்லாமிய மார்க்கத்தின் சட்ட மூலாதாரம் அருள்மறைக்குர்ஆனும், ஆதாரபூர்வமான நபிமொழிகளும் மாத்திரமே. இதனை எமது ஆய்வின் ஆரம்பத்தில் விபரமாகவே நோக்கினோம்.

ஒரு வாதத்திற்காக இஜ்மா என்பது ஒரு சட்டம் மூலாதாரம்  என வைத்துக் கொண்டாலும் ஒரு ஸஹீஹான ஹதீஸுக்கு முரணாக எவ்வாறு இஜ்மா அமைய  முடியும் என்பதை நாம் கவனத்திற் கொள்ளவேண்டும். இது தொடர்பான மேலதிக சட்டக் கலைவிதிகளைப் பார்வையிட பின்வரும் நூற்களைப் பார்வையிடவும்.

6
இதனைத்தான் இமாம் அஹ்மத் பின் ஹம்பல் (ரஹ்) அவர்கள் குறிப்பிடும் போது, ‘குறித்த ஒரு விடயத்தில், ஒரு ஆதாரபூர்வமான நபிமொழிக்கு முரணாக இஜ்மா வந்துள்ளது என்று எவனாவது வாதிடுவானாயின் அவன் பொய்யன் ஆவான்’ எனக் குறிப்பிடுகின்றார்கள்.’
7
அத்துடன் பெண்களுக்கு எல்லாவகையான தங்கமும் ஹாலால் இல்லை என்ற கருத்தை வரலாறு நெடுகிலும் பல அறிஞர்கள் கொண்டிருந்துள்ளனர். உதாரணமாக நபித்தோழர் அபூஹுரைரா (ரழி) அவர்கள் உட்பட  இமாம் ஷவ்கானி, ஷாஹ் வலிய்யுல்லா திஹ்லவி, நாஸிருத்தீன் அல்பானி,  சித்தீக் ஹஸன்கான், இப்றாஹீம் ஷைபானி போன்ற அறிஞர்களைக் குறிப்பிடலாம்.

இறுதியாக அழ்ழாஹ்வும், அவனது தூதரும் தங்க வளையல் ஹராம் எனத் தீர்மானித்ததன் பின்னர் நம்பிக்கை கொண்டோரின் கூற்று எவ்வாறு அமையவேண்டும் என பின்வரும் அருள்மறை வசனம்தெளிவுபடுத்துகின்றது.

‘அவர்களிடையே தீர்ப்பு வழங்குவதற்காக அழ்ழாஹ்விடமும், அவனது தூதரிடமும் அழைக்கப்படும் போது ‘செவியுற்றோம்; கட்டுப்பட்டோம்’ என்பதே நம்பிக்கை கொண்டோரின் கூற்றாக இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.’ (அல்குர்ஆன்-24:51)
குறிப்பு: தங்க வளையல் அணிவது ஹராம் என்கின்ற நிலைப்பாட்டில் மாற்றுக் கருத்துள்ள, சந்தேகம்  உள்ள சகோதரர்கள் தங்களது கருத்துக்களை தாராளமாக எழுதுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன். குறித்த விடயம் தொடர்பாக இறையச்சத்தை மாத்திரம் முன்னிறுத்தி அல்குர்ஆன், ஆதாரபூர்வமான நபிமொழிகளின் அடிப்டையில் மேற்கொள்ளப்பட்ட தெளிவான ஆய்வு எம்மிடம் உள்ளதால்  இன்ஷா அழ்ழாஹ் பதிலளிக்கப்படும்.

0 comments:

Post a Comment