Tuesday, August 10, 2010

அண்ணல் வழியில் அருள்மிகு ரமழான்

சத்திய இஸ்லாமிய மார்க்கத்தைப் பொறுத்த வரை ஒரு வணக்கத்தைச் செய்வதாக இருந்தால் அருள்மறைக் குர்ஆனிலோ, அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது ஆதாரபூர்வமான நபிமொழிகளிலோ இடம்பெற்றிருக்க வேண்டும் என்பதற்கிணங்க ரமழான் குறித்து இறைமறையும், இறைத் தூதர் (ஸல்) அவர்களும் என்ன கூறுகின்றார்கள் என சுருக்கமாக நோக்குவோம்.

அருள்மறையும் அருள்மிகு ரமழானும்

அருள்மிகு ரமழான் மாதத்தின் சிறப்புக்களில் மிக முக்கியமானது அகிலத்தாருக்கு வழிகாட்டியான அருள்மறைக் குர்ஆன் இறக்கியருளப்பட்டதாகும். இது குறித்து திருமறைக்கு குர்ஆன் குறிப்பிடுகையில்,

‘இந்தக் குர்ஆன் ரமழான் மாதத்தில் தான் அருளப்பட்டது. (அது) மனிதர்களுக்கு நேர் வழி காட்டும். நேர் வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும்.’ (அல்குர்ஆன் 02:185) என்று கூறுகின்றது.

உலகப் பொதுமறை இறக்கியருளப்பட்ட அருள்மிகு ரமழான் மாதத்தில் அல்குர்ஆன் பாமரர்களுக்கு விளங்காது? என்கின்ற அர்த்தமற்ற, அறிவுபூர்வமற்ற வரட்டுச் சித்தாங்களை தூக்கி வீசிவிட்டு சத்தியத்தையும், அசத்தியத்தையும் பிரித்தறிவிக்ககூடிய, சிந்திக்கத் தூண்டக் கூடிய, இறையச்சமுடையோருக்கு நேர்வழிகாட்டக் கூடிய அதிஅற்புத வேதத்தை  கற்று, அதன்படி செயற்பட்டு, அகிலத்தின் இரட்சகனின் அருளை அதிகமதிகம் பெற்றுக் கொள்வதற்கு முயற்சி செய்ய வேண்டும்.

இதோ அருள்மறை பேசுகின்றது.

‘அவர்கள் இக்குர்ஆனைச் சிந்திக்க வேண்டாமா? அல்லது அவர்களின் உள்ளங்கள் மீது அதற்கான பூட்டுக்கள் உள்ளனவா?’ (அல்குர்ஆன் 47:24)

‘இது (அழ்ழாஹ்வின்) திரு வேதமாகும். இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை, பய பக்தி யுடையோருக்கு (இது) நேர்வழி காட்டியாகும்.’ (அல்குர்ஆன் 02:02)

இறையச்சமே இலக்கு

‘நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் (அழ்ழாஹ்வை) அஞ்சி நடப்பதற்காக உங்களுக்கு முன்பிருந்தோர் மீது விதியாக்கப்பட்டது போன்று உங்கள் மீதும் நோன்பு விதியாக்கப்பட்டுள்ளது.’ (2:83)

மேலுள்ள அருள்மறை வசனம் ரமழான் மாத நோன்பு கட்டாயக் கடமை என்பதை உணர்த்துவதோடு, கடமையாக்கப்பட்டதற்கான காரணம் இறையச்சமே என்று எடுத்தியம்புகின்றது.

நோன்பு ஓர் கேடயம்

அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

“நோன்பு (பாவங்களிலிருந்து) காக்கின்ற கேடயம் ஆகும். எனவே, நோன்பாளி கெட்ட பேச்சுக்களைப் பேச வேண்டாம். அறிவீனமான செயல்களில் ஈடுபட வேண்டாம்.! யாரேனும் அவருடன் சண்டைக்கு வந்தால் நான் நோன்பாளி! என்று இருமுறை கூறட்டும். என் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அ(ந்த இறை)வன் மேல் ஆணையாக! நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடை அழ்ழாஹ்விடம் கஸ்தூரியின் வாடையைவிடச் சிறந்ததாகும்! (மேலும்) எனக்காக நோன்பாளி தமது உணவையும், பானத்தையும், இச்சையையும் விட்டுவிடுகிறார்! நோன்பு எனக்கு (மட்டுமே) உரியது. அதற்கு நானே கூலி கொடுப்பேன்! ஒரு நன்மை என்பது அது போன்ற பத்து மடங்குகளாகும்! (என்று அழ்ழாஹ் கூறுகிறான்) (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-1894)

மேலுள்ள நபிமொழி ‘நோன்பு பாவங்களிலிருந்து காக்கின்ற கேடயம்’ என்பதை மாத்திரமன்றி, ‘நோன்பாளியின் வாயிலிருந்து வருகின்ற வாடை கஸ்தூரியின் வாடையைவிடச் சிறந்தது’ என்று கூறுவதன் மூலம் நோன்பாளியின் சிறப்பினை உணர்த்தி நிற்கின்ற அதே வேளை, ‘நோன்பு எனக்கு (மட்டுமே) உரியது. அதற்கு நானே கூலி கொடுப்பேன்’ என்று அருளாளன் விஷேடமாகக் குறிப்பிடுவதன் மூலம் நோன்பின் மகத்துவத்தினை உணர்ந்நது கொள்ளலாம்.

ரய்யான் நோன்பாளிகளுக்கே!

“சொர்க்கத்தில் ‘ரய்யான்’ என்று கூறப்படும் ஒரு வாசல் இருக்கிறது! மறுமை நாளில் அதன் வழியாக நோன்பாளிகள் நுழைவார்கள். அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள்! ‘நோன்பாளிகள் எங்கே?’ என்று கேட்கப்படும். உடனே, அவர்கள் எழுவார்கள். அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள்! அவர்கள் நுழைந்ததும் அவ்வாசல் அடைக்கப்பட்டுவிடும். அதன் வழியாக வேறு எவரும் நுழையமாட்டார்கள்!’ என அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.”  (அறிவிப்பவர்: ஸஹ்ல் (ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-1896)
 
திறக்கப்படும் சுவன வாசல்கள்

“ரமழான் வந்துவிட்டால்  சொர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன எனஅழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.” (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-1898)

விலங்கிடப்படும் ஷைத்தான்கள்

“ரமழான் மாதம் வந்துவிட்டால் வானத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன. நரகத்தின் வாசல்கள் அடைக்கப்படுகின்றன. ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர் என அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்”(அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-1899)

பாவங்களுக்குப் பிரியாவிடை

“யார் பொய்யான பேச்சையும், பொய்யான நடவடிக்கைகளையும் விட்டு விடவில்லையோ அவர் தமது உணவையும், பானத்தையும் விட்டு விடுவதில் அழ்ழாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை என்று அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.”  (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-1903)

மன்னிக்கப்படும் பாவங்கள் 

“யார் ரமழானில் நம்பிக்கையுடனும், நன்மையை எதிர்பார்த்தும் வணங்குகிறாரோ அவர் (அதற்கு) முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்.” (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-2008)

மழைக்காற்றை விட அதிகமாக வாரிவழங்கும் வள்ளல்

“அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களுக்கு நல்லதை வாரி வழங்குபவர்களாக இருந்தார்கள. வானவர் ஜிப்ரீல் (அலை) ரமழான் மாதத்தில் சந்திக்கும் வேளையில் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதிகமதிகம் வாரி வழங்குவார்கள். ஜிப்ரீல் (அலை) ரமழானின் ஒவ்வோர் இரவும் – ரமழான் முடியும் வரை-  அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்)  அவர்களைச் சந்திப்பார்கள். அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஜிப்ரீல் (அலை) அவர்கள் தம்மைச் சந்திக்கும் போது மழைக் காற்றை விட, அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வாரி வழங்குவார்கள்.” (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரழி),  நூல்: ஸஹீஹுல் புஹாரி-1902)

ரமழானை ஆரம்பிப்பது எவ்வாறு?

அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தலைப்பிறையை தீர்மானிப்பதற்கு மூன்று வழிமுறைகளை நமக்கு கற்றுத் தந்துள்ளார்கள். அவையாவன:

01.29ம் நாளை நிறைவு செய்த பின்னர், பிறையைக் கண்டு நோன்பு நோற்பது, பிறையைக் கண்டு நோன்பை விடுவது:

“அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பிறையைப் பார்த்து நோன்பு வையுங்கள் பிறையைப் பார்த்து நோன்பு விடுங்கள்! உங்களுக்கு மேக மூட்டம் தென்பட்டால் ஷஅபான் மாதத்தை முப்பது நாட்களாக முழுமைப்படுத்துஙகள்!”(அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி),  நூல்: ஸஹீஹுல் புஹாரி-1909)

02.பிறை கண்ட சாட்சியத்தின் அடிப்படையில், தகவலின் அடிப்படையில் நோன்பைத் தீர்மானிப்பது:

“இரு சாட்சிகள் (பிறை கண்டதாக) சாட்சி சொன்னால் நோன்பு வையுங்கள். நோன்பை விடுங்கள்” (அறிவிப்பவர்: அப்துர் ரஹ்மான் (நபித்தோழர்களிடமிருந்து), நூல்: நஸயி-2116)

03. மாதத்தினை முப்பதாக பூர்த்தி செய்வது:

நமது பகுதியில் பிறை தென்படாதிருந்து, வெளியிலிருந்தும் பிறை காணப்பட்ட தகவல் வராத பட்சத்தில் மாத நாட்களின் எண்ணிக்கையை முப்பதாகப் பூர்த்தி செய்ய வேண்டும்.

“அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பிறையைப் பார்த்து நோன்பு வையுங்கள் பிறையைப் பார்த்து நோன்பு விடுங்கள்! உங்களுக்கு மேக மூட்டம் தென்பட்டால் ஷஅபான் மாதத்தை முப்பது நாட்களாக முழுமைப்படுத்துங்கள்!”(அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி),  நூல்: ஸஹீஹுல் புஹாரி-1909)

இரவுத் தொழுகை நபிவழியும் புதுவழியும்

“நான் (அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் துணைவியார்) ஆயிஷா (ரழி) அவர்களிடம், ரமழான் மாதத்தி(ன் இரவுகளி)ல் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தொழுகை எவ்வாறு இருந்தது, என்று கேட்டேன். அதற்கு அவர்கள், அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரமழானிலும் ரமழான் அல்லாத மற்ற காலங்களிலும் பதினொரு ரக்அத்களைவிட அதிகமாகத் தொழமாட்டார்கள். (முதலில்) நான்கு ரக்அத்கள் தொழுவார்கள். அதன் அழகையும் நீளத்தையும் பற்றி நீ கேட்காதே! பிறகு நான்கு ரக்அத்கள் தொழுவார்கள். அதன் அழகையும் நீளத்தையும் பற்றி நீ கேட்காதே! பின்னர் மூன்று ரக்அத்கள் தொழுவார்கள், என்று விடையளித்தார்கள்.”(அறிவிப்பவர்: அபூசலமா பின் அப்திர்ரஹ்மான் (ரஹ்), நூல்: ஸஹீஹுல் புஹாரி-1147,2013,3569)

மேலுள்ள நபிமொழியை நாம் நடுநிலையோடு ஆய்வுக்குட்படுத்துகையில் நமக்கு ஒரு விடயம் நன்கு தெளிவாகின்றது. அன்னை ஆயிஷா (ரழி) அவர்களிடம் ‘ரமழான் மாதத்தில் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தொழுகை எவ்வாறு இருந்தது?’ என்றே கேட்கப்படுகின்றது.

ஆனால், அன்னையவர்கள் ’ரமழானிலும் ரமழான் அல்லாத மற்ற காலங்களிலும் பதினொரு ரக்அத்களைவிட அதிகமாகத் தொழமாட்டார்கள்.’ என்று  மிக அழுத்தமாக ரமழான் அல்லாத காலங்களையும் குறிப்பிட்டு பதிலளிக்கின் றார்கள். மேலுள்ள நபிமொழியில் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரமழான் கால இரவுத் தொழுகையின் ரக்அத்களை அதிகப்படுத்தாது, வழமையாக இரவுத்தொழுகை எத்தனை ரக்அத்கள் தொழுது வந்தார்களோ, அதே பதினொரு ரக்அத்களையே ரமழானிலும் தொழுது வந்தார்கள் என அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் தெளிவுபடுத்துகின்றார்கள்.
ஆனால், நமது சமுதாய மக்கள் தராவீஹ் என்ற பெயரில் 20 ரக்அத்களும், வித்ர் என்ற பெயரில் 3 ரக்அத்களும், கியாமுல்லைல் என்ற பெயரில் 11 ரக்அத்களுமாக, 11 ரக்அத்களை மாத்திரம் கொண்ட ஒரே தொழுகையை 34 ரக்அத்களாக தொழுதுவருகின்றனர். இவ்வாறு தொழுவதன் மூலம் இரவுத் தொழுகையை அதிகப்படுத்திய குற்றத்திற்குள்ளாவதுடன்,

‘இரவுத் தொழுகையில் கடைசியை ஒற்றைப்படையாக்கி கொள்ளுங்கள்.’ (அறிவிப்பவர்: இப்னு உமர் (ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-472,998) என்கின்ற நபிமொழியையும் மீறுகின்றனர். அழ்ழாஹ்வும், அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் இரவுத் தொழுகை பதினொரு ரக்அத்கள் எனத் தீர்மானித்ததன் பின்னர் இரவுத் தொழுகையின் ரக்அத்களை அதிகப்படுத்துவது தொடர்பாக  நபிமொழிகள் மிகக் கடுமையாக எச்சரிக்கின்றன.

வெள்ளைக் கயிரும் கறுப்புக் கயிறும்

‘கறுப்புக் கயிற்றிலிருந்து வெள்ளைக் கயிறு தெளிவாகும் வரை, என்ற (2:187) இறைவசனம் அருளப்பெற்றபோது, நான் ஒரு கறுப்புக் கயிற்றையும் வெள்ளைக் கயிற்றையும் எடுத்து என் தலையணையில் வைத்துக்கொண்டேன். இரவில் அதைப் பார்க்கலானேன். எனக்கு எதுவும் தெளிவாகவில்லை! விடிந்ததும் நபி (ஸல்) அவர்களிடம் சென்று இதுபற்றிக் கூறினேன். அதற்கு அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (கறுப்புக் கயிறு என்பதன் கருத்து) இரவின் கருமையும் (வெள்ளைக் கயிறு என்பதன் கருத்து) விடியலின் வெண்மையும்தான்! என்று பதிலளித்தார்கள்’ (அறிவிப்பவர்:  அதீ பின் ஹாத்திம் (ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-1916)

பரக்கத் மிக்க ஸஹர்

“நீங்கள் ஸஹர் செய்யுங்கள். நிச்சயமாக ஸஹர் செய்வதில் அருள்வளம் -பரக்கத்- இருக்கின்றது என்று அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.”(அறிவிப்பவர்:  அனஸ் பின் மாலிக் (ரலி),  நூல்: ஸஹீஹுல் புஹாரி-1923)

நிய்யத்தை வாயால் மொழியலாமா?

நிய்யத் என்ற சொல்லுக்கு உள்ளத்தால் நினைத்தல் என்பதுவே பொருளாகும்.
மாறாக,  வாயால் மொழிதல் என்ற பொருள் கிடையாது. “நவைத்து ஸவ்மகதின் அன் அதாயி ஃபர்லி ரமலானி ஹாதிஹிஸ்ஸனதி லில்லாஹி தஆலா’  இந்த வருடம் ரமலான் மாதத்தின் பர்ழான நோன்பை அதாவாக நாளை நோற்பதற்கு நிய்யத்து செய்கிறேன் அல்லாஹ்வுக்காக”
குறித்த செய்தியை அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது வாழ்வில் ஒரு முறை கூட ஓதியதாக எந்த ஆதாரமும் கிடையாது.  மாறாக, குறித்த துஆவை ஓதுவது நபிகளாரின் தூதுத்துவத்தில் குறை காணும் செயலாகும். “நான் நோன்பு நோற்கின்றேன்” என்ற எண்ணம் மனதில் இருக்குமானால் அதுவே நிய்யத் ஆகும். இதனையே அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறுகின்றார்கள்.

”அமல்கள் யாவும் எண்ணங்களைப் பொறுத்தே என்று அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.” (அறிவிப்பவர் : உமர் பின் கத்தாப் (ரலி),  நூல்: ஸஹீஹுல் புஹாரி-01)

மறதியாக உண்ணல், பருகல்

“ஒருவர் மறதியாக உண்ணவோ, பருகவோ செய்தால் அவர் தமது நோன்பை முழுமைப்படுத்தட்டும். ஏனெனில், அழ்ழாஹ்வே உண்ணவும், பருகவும் செய்தான்.” (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-1933)

உயிர்ப்பிக்கப்பட வேண்டிய இறுதிப் பத்து

“(ரமழானின் கடைசிப்) பத்து நாட்கள் வந்துவிட்டால், அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தானும் இரவை உயிர்ப்பித்து, தனது குடும்பத்தை விழிப்பூட்டி, தனது வேஷ்டியையும் (அழ்ழாஹ்வை வணங்குவதற்காக) இறுக்கமாக கட்டிக்கொள்ளுவார்கள்.”  (ஸஹீஹுல் புஹாரி-2024)

உம்ரா செய்தால் ஹஜ் நன்மை.

“ரமழான் மாதத்தில் உம்ரா செய்வது ஹஜ் (செய்த நன்மை) ஆகும் என்று அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.”  (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: ஸஹீஹுல் புஹாரி (1782) 

ஆதாரபூர்வமற்ற நோன்பு திறக்கும் துஆக்கள்

நோன்பு திறக்கும் நேரங்களில் நமது சமூகத்தில் பரவலாக ஓதப்பட்டு வருகின்ற”அழ்ழாஹும்ம லக்க ஸும்த்து வபிக ஆமன்த்து வஅலைக்க துவக்கல்த்து வஅலா ரிஜ்க்கிக்க அஃப்தர்த்து ஃபதகப்பல்மின்னி”,  ”தஹபல் லமஉ வப்தல்லதில் உரூகு வஸபதல் அஜ்ரு இன்ஷா அல்லாஹ்”ஆகிய இரண்டு துஆக்களும் ஆதாரபூர்மற்றவைகள் ஆகும்.

மேலும், பிரார்த்தனை அங்கீகரிக்கப்படும்  நேரங்களில் மிக முக்கிய நேரம் ” நோன்பு திறக்கும் நேரம்” என்கின்ற கருத்தில் இடம்பெற்றுள்ள செய்தியும் ஆதாரபூர்வமற்றதாகும். இது தொடர்பான மேலதிக விபரங்களுக்கு எமது தளத்தில் வெளியிடப்பட்டுள்ள “நோன்பு திறக்கும் போது ஓதும் துஆக்கள்?” என்கின்ற ஆய்வுக் கட்டுரையைப் பார்வையிடவும்.

அனைத்தும் ஆதாரபூர்வமற்றவைகளே!

“அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஷஃபான் மாதத்தின் இறுதித் தினத்தன்று எங்களுக்கு பிரசங்கம் செய்யும் போது கூறினார்கள். ‘மனிதர்களே! பரகத் செய்யப்பட்ட சங்கை மிகு மாதம் உங்களிடம் வந்துள்ளது. அதில் ஆயிரம் மாதங்களைவிட சிறந்த ஒரு இரவு இருக்கின்றது. அதில் அழ்ழாஹ் நோன்பு நோற்பதை கடமையாகவும், இரவில் நின்று வணங்குவதை உபரியான (சுன்னத்) தாகவும் ஆக்கியுள்ளான். யார் அம்மாதத்தில் ஏதோ ஒரு நற்கருமத்தைப் புரிகின்றாரோ அவர் ரமழான் அல்லாத மாதத்தில் கடமையான (வணக்கத்)தை நிறைவேற்றியவரைப் போன்றாவார்.

மேலும், யார் அம்மாதத்தில் கடமையான (வணக்கத்)தை நிறைவேற்றுகின்றாரோ, அவர் ரமழான் அல்லாத மாதத்தில் எழுபது கடமை (வணக்கங்) களைப் புரிந்தவரைப் போன்றாவார். இம்மாதம் பொறுமை செய்யும் மாதமாகும். பொறுமைக்குக் கூலி சுவர்க்கமாகும். மேலும், இம்மாதத்தில் ஒரு விசுவாசியின் வாழ்வாதாரம் அதிகரிக்கும். யார் இதில் ஒரு நோன்பாளியை நோன்பு திறக்கச் செய்கிறாறோ, அது அவரது பாவங்களுக்கு மன்னிப்பாகவும் அவரை  நரக நெருப்பிலிருந்து விடுவிக்கக் கூடியதாகவும் மாறிவிடுகின்றது. மேலும், (நோன்பு திறந்தவருடைய) கூலியிலிருந்து எதுவும் குறைந்துவிடாமல் அவருக்கு கிடைப்பது போன்ற கூலி இவருக்கும் கிடைக்கும். அப்போது ஸஹாபாக்கள், நோன்பாளியை நோன்பு திறக்கச் செய்வதற்குரிய வசதி எங்களிடம் இல்லையே? என்று கேட்டனர். அதற்கு அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பேரீத்தம் பழம் அல்லது ஒரு மிடரு நீர் அல்லது ஒரு மிடரு பாலைக் கொடுத்து நோன்பு திறக்கச் செய்பவருக்கும், இக்கூலியை அழ்ழாஹ் வழங்குவான் என்று கூறினார்கள். இம்மாதத்தின் ஆரம்பப் பகுதி (ரஹ்மத்) அருளுக்குரிய தாகும். நடுப்பகுதி (மஃபிரத்) பாவமன்னிப்பிற்குரியதாகும். இறுதிப்பகுதி (இத்கும்மினன் நார்)  (நரக) நெருப்பிலிருந்து விடுதலை பெறுவதற்குரியதாகும். யார் தனது பொறுப்பின் கீழ் உள்ளவர்களை (வேலைகளை) இலகு படுத்துகின்றாரோ அவரை அழ்ழாஹ் மன்னித்து (நரக) நெருப்பிலிருந்து விடுவிக்கின்றான்.

இம்மாதத்தில் நான்கு விடயங்களை அதிகப்படுத்திக் கொள்ளுங்கள். அவற்றில் இரண்டு உங்களுடைய இறைவனை திருப்திப்படுத்தக்கூடிய விடயமாகும். மற்றைய இரண்டும் அவற்றை விட்டு விலகி அலட்சியமாக இருக்க முடியாதவையாகும். (இறைவனை திருப்திப்படுத்தக் கூடிய) இரண்டு விடயங்களில் ஒன்று வணங்கப்படுவதற்கு தகுதியானவன் அழ்ழாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை. என்று சான்று பகர்வதாகும். (இரண்டாவது) பிழை பொறுக்கத் தேடுவதாகும். அலட்சியமாக இருக்க முடியாத இருவிடயங்களில் ஒன்று அழ்ழாஹ்விடத்தில் நீங்கள் சுவனத்தைக் கேட்பதாகும். (இரண்டாவது) நரக நெருப்பிலிருந்து பாதுகாப்புத் தேடுவதாகும். எவரொருவர் இம்மாதத்தில் ஒரு நோன்பாளியை வயிறு நிரம்பச் செய்கிறாரோ அவருக்கு அழ்ழாஹ் சுவனம் நுழையும் வரை தாகமே ஏற்படாத அளவிற்கு தன்னுடைய நீர்த்தடாகத்திலிருந்து ஒரு மிடரு நீரை குடிக்கக் கொடுக்கின்றான்.’ (அறிவிப்பவர்: சல்மான் (ரழி), நூற்கள்: ஸஹீஹ் இப்னு குஸைமா-1887, சுஅபுல் ஈமான்-3608)

‘அலி இப்னு ஷைத் இப்னு ஜத்ஆன்’ என்கின்ற பலவீனமான அறிவிப்பாளர் இடம்பெறுவதால் இது ஆதாரபூர்வமற்ற செய்தியாகும்.
‘அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்)  அவர்கள் ரஜப் மாதம் வந்துவிட்டால், ‘இறைவா! ரஜப் மாதத்திலும் ஷஃபான் மாதத்திலும் எங்களுக்கு பரகத் செய்வாயாக! மேலும், ரமழானை எங்களை அடையச் செய்வாயாக!’ எனப் பிராத்திப் பார்கள்.’ (அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரழி), நூற்கள்;: அஹ்மத்-2346, முஃஜமுல் அவ்சத்-3939)

‘ஸயீத் இப்னு அபிர்ருகாத்’ என்கின்ற பலவீனமான அறிவிப்பாளர் இடம்பெறுவதால் இது ஆதாரபுர்வமற்ற செய்தியாகும்.

பித்அத்களை முற்று முழுதாக புறக்கணிப்போம்.

15 ம் கிழமை, 27 ம் கிழமை என்று குறித்த சில தினங்ககளை விஷேட தினங்களாக கருதி உயிர்ப்பிப்பது, ஸலவாத் மாலை என்ற பெயரில் நபிவழிக்கு எதிரான கருத்துக்களைக் கொண்ட நூலை பள்ளிவாயல் ஒலிபெருக்கியில் சிறுவர்களைக் கொண்டு பாடச் செய்வது, தவ்பா என்ற பெயரில் இமாம் சில வாசகங்களைச் சொல்ல மஃமூம்கள் அவற்றை ஒப்புவிப்பது, கூட்டு திக்ர்கள், கூட்டுப் பிரார்த்தனைகள் என நபிவழியை குழிதோண்டிப் புதைக்கின்றனர். இவர்கள் குறித்து அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறுகின்றார்கள்.

‘நம்முடைய இந்த (மார்க்க) விவகாரத்தில் அதில் இல்லாததைப் புதிதாக எவன் உண்டாக்குகின்றானோ அவனுடைய அந்தப் புதுமை நிராகரிக்கப்பட்டதாகும் என்று அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.’ (அறிவிப்பவர்: ஆயிஷா(ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-2697)

‘செய்திகளில் மிகவும் உண்மையானது அழ்ழாஹ்வுடைய வேதமாகும். நடைமுறையில் மிகவும் சிறந்தது அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய நடை முறையாகும். காரியங்களில் தீயது (மார்க்கம் என்ற பெயரில்) புதிதாக உருவானவையாகும். புதிதாக உருவாகக் கூடியவைகள் அனைத்தும் பித்அத்கள் ஆகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும். ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில்  கொண்டு சேர்க்கும்.’ (அறிவிப்பவர்: ஜாபிர் (ரழி), நூல்: நஸயீ-1560)

மேலுள்ள நபிமொழிகள் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்ததற்கு மாற்றமாக மார்க்கத்தில் புதுமைகளை ஏற்படுத்துவது எம்மை நரகத்திற்கு அழைத்துச் செல்லும் என எச்சரிக்கின்றது. இன்னும், நாம் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மார்க்கத்தை தெளிவுபடுத்தியதன் பின்னர் நன்மை என்ற பெயரில் அதிகப்படுத்துவது மார்க்கத்தின் சொந்தக்காரனான அழ்ழாஹ்வுக்கே பாடம் கற்பிக்க முனைவதாகும். இதனையே திருமறை இவ்வாறு எடுத்தியம்புகின்றது.

‘உங்கள் மார்க்கத்தை அழ்ழாஹ்வுக்குக் கற்றுக் கொடுக்கிறீர்களா?’  (அல்குர்ஆன் 49:16)

எனவே, அழ்ழாஹ்வும், அவனது திருத்தூதர் (ஸல்) அவர்களும் கற்றுத் தந்த முறையில் ரமழான் வணக்கங்கள் உட்பட அனைத்து வணக்கங்களையும் நிறைவேற்றுவதற்கு வல்லோன் அழ்ழாஹ் அருள் புரிவானாக!

0 comments:

Post a Comment