Sunday, August 8, 2010

சர்வதேசப்பிறை ஓர் அறிமுகம்

முஹம்மட் அர்ஷாத் அல் அதரி
arshathalathary@gmail.com

அருள்மறைக் குர்ஆன் இறங்கிய சங்கைமிகு மாதமான ரமழான் மாதம் வந்துவிட்டால் முஸ்லிம்களிடம் பல்வேறு கருத்து வேறுபாடுகள் தோன்றிவிடுகின்றன. அதில் முதன்மையானது ரமழானை தீர்மானிக்க கூடிய பிறையாகும். முஸ்லிம் சமுதாயத்தின் வணக்க வழிபாடுகளான நோன்பு மற்றும் பெருநாள் வணக்க வழிபாடுகள் போன்றவற்றை தீர்மானிப்பதில் பிறை ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றது.

பிறையினை அடிப்படையாகக் கொண்டே இவ்வாறான வணக்க வழிபாடுகளை நிறைவேற்றுமாறு அருள்மறைக் குர்ஆனும், அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பொன்மொழிகளும் நமக்கு உணர்த்தி நிற்கின்றன. ஆனால், இப்பிறையினை தீர்மானிப்பதில் முஸ்லிம் சமுதாயத்தில் பல்வேறு கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன.

1.    ஒட்டுமொத்த உலகிற்கும் ஒரே பிறை (சர்வதேசப் பிறை)
2.    நாட்டுக்கொரு பிறை
3.    ஊருக்கொரு பிறை
4.    கணிப்பின் அடிப்படையில் பிறையைத் தீர்மானித்தல்

ஆகிய பிரதான அடிப்படைகளில் முஸ்லிம்களுக்கு மத்தியில் பல்வேறு கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன. ஒரே ஊரில் ஒரு சாரார் நோன்பு நோற்றிருக்க, மற்றுமொரு சாரார் உண்டு கழிக்கின்றனர். இத்தகைய கருத்து வேறுபாடுகளுள் எது சரியானது? என்பதனை இறைவன் மீதான அச்சத்தை மாத்திரம் முன்னிறுத்தி சுய விருப்பு, வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு அருள்மறைக் குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான  பொன்மொழிகளின் அடிப்படையில் நோக்குவோம்.

காலக் கணக்கினை அறிந்து கொள்ளவே சூரியனும், சந்திரனும் படைக்கப்பட்டுள்ளன. 

‘சூரியனையும் சந்திரனையும் காலம் காட்டியாகவும் அமைத்தான்.’ (அல்குர்ஆன் 06:96)
‘ஆண்டுகளின் எண்ணிக்கையையும், (காலக்) கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காக அவனே சூரியனை வெளிச்சமாகவும், சந்திரனை ஒளியாகவும் அமைத்தான். சந்திரனுக்குப் பல நிலைகளை ஏற்படுத்தினான். தக்க காரணத்துடன் அழ்ழாஹ் இதைப் படைத்துள்ளான். அறிகின்ற சமுதாயத்திற்கு வசனங்களை அவன் தெளிவாக்குகிறான்.’ (அல்குர்ஆன் 10:05)
‘பிறைகளைப் பற்றி (முஹம்மதே!) உம்மிடம் கேட்கின்றனர். ‘அவை மக்களுக்கும், (குறிப்பாக) ஹஜ்ஜுக்கும் காலம் காட்டிகள்’ எனக் கூறுவீராக!’ (அல்குர்ஆன் 02:189)
‘இரவையும், பகலையும் இரண்டு சான்றுகளாக்கினோம். உங்கள் இறைவனிடமிருந்து அருளைத் தேடவும், ஆண்டுகளின் எண்ணிக்கையையும், காலக் கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காகவும் இரவின் சான்றை ஒளியிழக்கச் செய்து பகலின் சான்றை வெளிச்சமாக்கினோம். ஒவ்வொரு பொருளையும் நன்கு தெளிவுபடுத்தினோம்.’ (அல்குர்ஆன் 17:12)
இது போன்ற அருள்மறை வசனங்கள் காலக் கணக்கினை அறிந்து கொள்வதற்காகவே சூரியனும், சந்திரனும் படைக்கப்பட்டுள்ளதாக எடுத்தியம்புகின்றன.

மாதநாட்களின் எண்ணிக்கை எத்தனை? 

‘மாதம் என்பது இப்படியும் அப்படியும் இருக்கும். அதாவது சிலவேளை இருபத்தொன்பது நாட்களாகவும், சில வேளை முப்பது நாட்களாகவும் இருக்கும் என்று அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.’ (அறிவிப்பவர்: இப்னு உமர் (ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-1913)

மேற்படி அடிப்படைகளை மனதில் நிலைநிறுத்தியவர்களாக, பிறை தொடர்பான ஆய்வுக்குள் நுழைவோம்.

அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தலைப்பிறையை தீர்மானிப்பதற்கு மூன்று வழிமுறைகளை நமக்கு கற்றுத் தந்துள்ளார்கள். அவையாவன:
01.29ம் நாளை நிறைவு செய்த பின்னர், பிறையைக் கண்டு நோன்பு நோற்பது, பிறையைக் கண்டு நோன்பை விடுவது:
‘அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பிறையைப் பார்த்து நோன்பு வையுங்கள் பிறையைப் பார்த்து நோன்பு விடுங்கள்! உங்களுக்கு மேக மூட்டம் தென்பட்டால் ஷஅபான் மாதத்தை முப்பது நாட்களாக முழுமைப்படுத்துஙகள்! (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),  நூல்: ஸஹீஹுல் புஹாரி-1909)
02.பிறை கண்ட சாட்சியத்தின் அடிப்படையில், தகவலின் அடிப்படையில் நோன்பைத் தீர்மானிப்பது:
‘இரு சாட்சிகள் (பிறை கண்டதாக) சாட்சி சொன்னால் நோன்பு வையுங்கள். நோன்பை விடுங்கள்’ (அறிவிப்பவர்: அப்துர் ரஹ்மான் (நபித்தோழர்களிடமிருந்து), நூல்: நஸயி-2116)
03. மாதத்தினை முப்பதாக பூர்த்தி செய்வது:
நமது பகுதியில் பிறை தென்படாதிருந்து, வெளியிலிருந்தும் பிறை காணப்பட்ட தகவல் வராத பட்சத்தில் மாத நாட்களின் எண்ணிக்கையை முப்பதாகப் பூர்த்தி செய்ய வேண்டும்.
‘அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பிறையைப் பார்த்து நோன்பு வையுங்கள் பிறையைப் பார்த்து நோன்பு விடுங்கள்! உங்களுக்கு மேக மூட்டம் தென்பட்டால் ஷஅபான் மாதத்தை முப்பது நாட்களாக முழுமைப்படுத்துங்கள்! (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-1909)

அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஆதாரபூர்வமான நபிமொழிகளில் பிறையைத் தீர்மானிப்பதற்கு இம்மூன்று வழிமுறைகளுமே கற்றுத் தரப்பட்டுள்ளன. நாம் பிறை தொடர்பான எத்தகைய முடிவினை எடுப்பதாக இருந்தாலும் நமது சுய விருப்பு, வெறுப்புகளுக்காக இவற்றில் ஒன்றை எடுத்து, மற்றொன்றை நிராகரிக்க முடியாது. மாறாக, இம் மூன்று வழிமுறைகளையும் உள்ளடக்கியதாகவே நமது முடிவு இருக்க வேண்டும்.

சர்வதேசப் பிறை என்றால் என்ன? 

இருபத்து ஒன்பதாவது நாளை நிறைவு செய்த பின்னர் நாம் பிறை பார்க்க வேண்டும். பிறை தென்பட்டால் அடுத்த மாதம் பிறந்து விட்டது என முடிவு செய்ய வேண்டும். மாறாக, அவ்வாறு பிறை தென்படாத பட்சத்தில் உலகின் எப்பாகத்தில் இருந்தேனும், இரண்டு நீதமான, நம்பகமான முஸ்லிம்கள் பிறை கண்டதாக சாட்சியமளித்தால், அதனை உலகளாவிய முஸ்லிம்கள் அனைவரும் ஏற்று செயற்பட வேண்டுமென்பதுவே சர்வதேச பிறையாகும்.
மேலும், அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தலைப்பிறையைத் தீர்மானிப்பதற்கு கற்றுத் தந்த மூன்று வழிமுறைகளில் ஒன்றை எடுத்து, மற்றொன்றை நிராகரிக்காது இருக்க வேண்டுமாயின் ஒருவர் சர்வதேசப் பிறையையே சரி காணவேண்டும். மாறாக, சில சகோதரர்கள் கூறுவது போன்று சர்வதேசப் பிறை என்பது சவூதிப் பிறையோ, மக்காப் பிறையோ கிடையாது என்பதனை கவனத்திற் கொள்ள வேண்டும்.

சர்வதேசப் பிறையை நாம் ஏன் சரி காண்கின்றோம்?

01.அருள்மறைக் குர்ஆனிலும், ஆதாரபூர்வமான நபிமொழிகளிலும் சர்வதேசப் பிறைக்கே வலுவான ஆதாரங்கள் கிடைக்கின்றன.

பிறை தொடர்பான, மாறுபட்ட கருத்துக்களில் சர்வதேசப் பிறையை வலியுறுத்தக் கூடிய வகையிலேயே நபிமொழிகளில் ஏராளமான, வலுவான ஆதாரங்கள் காண கிடைக்கின்றன. அவற்றில் சிலவற்றை நோக்குவோம்.

‘இரு சாட்சிகள் (பிறை கண்டதாக) சாட்சி சொன்னால் நோன்பு வையுங்கள்.நோன்பை விடுங்கள்.’ (அறிவிப்பவர்: அப்துர் ரஹ்மான் (நபித்தோழர்களிடமிருந்து), நூல்: நஸயி-2116)

‘மக்கள் எல்லோரும் பிறை பார்க்க முயன்றார்கள். நான் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ‘நான் பிறையை’ பார்த்தேன் என்று கூறினேன். அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தானும் நோன்பு நோற்றதுடன் மக்களையும் நோன்பு நோற்கக் கட்டளையிட்டார்கள்.’ (அறிவிப்பவர்: இப்னு உமர் (ரழி), நூல்: அபூதாவூத்-2342, தாரமி-1691, இப்னு ஹிப்பான்-3447, ஹாகிம்-1541, பைஹகி-2593)

‘ரமழானின் கடைசி நாள் பற்றி மக்கள் முடிவெடுக்க குழம்பினார்கள். (பிறை தென்படாததால் நோன்பும் நோற்றனர்) இரண்டு கிராமவாசிகள் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து நேற்று இரவு நாங்கள் பிறை பார்த்தோம் என்று சாட்சி கூறினார்கள். உடனே, அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களை நோன்பை விட்டு விடுமாறு கட்டளையிட்டார்கள். பெருநாள் தொழுகைக்காக மறுநாள் தொழுமிடம் வருமாறு கட்டளையிட்டார்கள்.’ (அறிவிப்பவர்: ரிப்யீ பின் கிராஷ், நூல்: அபூதாவூத்-2339, அஹ்மத்-18844)

‘அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரமழான் மாதம் முப்பதாம் நாள் சுபஹ் வேளையை அடைந்தார்கள். அப்போது இரு கிராமவாசிகள் வந்து வணக்கத்திற்குரியவன் அழ்ழாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்று உறுதி கூறி நேற்று நாங்கள் பிறை பார்த்தோம் என்று அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சாட்சி கூறினார்கள். உடனே, அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோன்பை விடுமாறு மக்களுக்குக் கட்டளையிட்டார்கள்.’ (அறிவிப்பவர்: ரிப்யீ பின் கிராஷ், நூல்: தாரகுத்னி-04)

‘மேக மூட்டம் காரணமாக ஷவ்வால் பிறை எங்களுக்குத் தென்படவில்லை. எனவே, நோன்பு நோற்றவர்களாக நாங்கள் காலைப் பொழுதை அடைந்தோம். பகலின் கடைசி நேரத்தில் ஒரு வாகனக் கூட்டத்தினர் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து நேற்று நாங்கள் பிறை பார்த்தோம் என்று சாட்சி கூறினார்கள். அப்போது அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவர்களது நோன்பை விட்டுவிடுமாறும் விடிந்ததும் அவர்களது பெருநாள் திடலுக்குச் செல்லுமாறும் அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள். (அறிவிப்பவர்: அபூ உமைர், நூல்: அபூதாவூத்-1159, நஸயீ-1557, பைஹகீ-7987, தாரகுத்னி-14, அஹ்மத்-20579)

நாம் இதுவரை பார்த்த அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பொன்மொழிகள் பிறை கண்டதாக சாட்சியம் கிடைத்தால் தூர, பிரதேச, கால எல்லைகளைப் பொருட்படுத்தாது ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றன. மேலும், 06:96, 10:05, 02:189,17:12 போன்ற அருள்மறை  வசனங்கள் பிறையைப் பற்றிக் குறிப்பிடுகையில் ‘மக்களுக்கு காலங்காட்டிகள்’ என்று குறிப்பிடுவதன் மூலம் உலகின் எப்பாகத்திலேனும் பிறை காணப்பட்டுவிட்டால் அது முழு உலகிற்குமே உரிய பிறையாகும் என்பதனை உறுதி செய்கின்றன.

எனவே, உலகில் எப்பிரதேசத்திலேனும் பிறை காணப்பட்டதாக இரண்டு நீதமான, நம்பகமான முஸ்லிம்கள் சாட்சியமளித்தால் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்கின்ற சர்வதேசப் பிறைக்கே அருள்மறைக் குர்ஆனிலும், அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் உயரிய வழிகாட்டலிலும் வலுவான ஆதாரம் கிடைக்கின்றது என்பதனை அறிந்து கொள்ளலாம்.

02.சர்வதேசப் பிறையே நடைமுறைச் சாத்தியமானது: 

சத்திய இஸ்லாமிய மார்க்கத்தைப் பொறுத்த வரையில் இன்றைய நவீன பிரச்சினைகள், இன்னும் சில நூற்றாண்டுகளுக்கு பின்னர் ஏற்படக் கூடிய பிரச்சினைகளுக்கு மாத்திரமன்றி இவ் உலகம் அழிக்கப்படுகின்ற நிலையில் வாழ்கின்ற கடைசி மனிதனுக்கும் வழிகாட்டக் கூடிய ஓர் உன்னதமான வாழ்வியல் வழிகாட்டியாகும்.

அந்த வகையில் நடைமுறைச் சாத்தியமற்ற விடயங்களை இஸ்லாம் ஒரு போதும் போதிக்காது  என்கின்ற விடயத்தை உள்ளத்தில் இருத்தியவர்களாக இப்பிரச்சினையை நோக்குவோம்.

நாடுகளின் எல்லைகளைப் பொறுத்தவரை நிர்வாக வசதிக்காக மனிதர்களாக ஏற்படுத்திக் கொண்டதாகும். யுத்தம் மற்றும் அரசியற் காரணிகளால் இணைந்திருந்த ஒரு நாடு பல நாடுகளாக பிரிவதையும், பிரிந்திருந்த  நாடுகள் இணைந்து ஒரு நாடாக மாறுவதையும் காண்கின்றோம். மனிதக் காரணிகளால் ஏற்படுகின்ற இம்மாற்றமானது அழ்ழாஹ்வின் மார்க்த்தை மாற்றியமைக்குமா?  என்பதனை நாட்டுக்கு நாடு ஓர் பிறை, ஊருக்கு ஊர் பிறை பார்க்க வேண்டும் என்று கூறுகின்ற மார்க்க அறிஞர்கள் சிந்திக்கத் தவறிவிடுகின்றனர். அந்த வகையில் நடைமுறை ரீதியான சில பிரச்சினைகளை நோக்குவோம்.

01.நாட்டுக்கு நாடு பிறை பார்க்க வேண்டும் என்கின்ற வாதத்தின் அடிப்படையில் சவூதி அரேபியாவிற்கும், இலங்கைக்குமிடையில் பிறையைத் தீர்மானிப்பதில் ஒரு நாள் அல்லது இருநாள் வித்தியாசம் ஏற்படுகின்றது. இப்போது ஒருவர் சவூதியில் வைத்து தலைப்பிறையினை தமது கண்களால் கண்டு நோன்பு நோற்கின்றார். பின்னர், ரமழானின் நடுப்பகுதியில் நாடு திரும்புகின்றார். குறித்த மாதம் சவூதிக்கும், இலங்கைக்கும் இடையில் இரண்டு நாள் வித்தியாசம் ஏற்படுகின்றது என வைத்துக் கொள்வோம். இப்போது இலங்கையில் இருப்பவர்கள் 28 வது நோன்பை பூர்த்தி செய்கையில், சவூதியிலிருந்து வருகை தந்தவருக்கு 30 வது நோன்பு பூர்த்தியாகிவிடும். இவருக்குரிய மார்க்கத் தீர்ப்பு என்ன? இவர் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் மாதம் என்பது 29 நாட்கள் அல்லது 30 நாட்கள் என்கின்ற கட்டளையினை மீறி 31 வது நோன்பையும் நோற்க வேண்டுமா? அல்லது தனித்துப் பெருநாள் கொண்டாட வேண்டுமா? தனித்துப் பெருநாள் கொண்டாட வேண்டுமென்றால் அதற்குரிய ஆதாரம் என்ன?

02.இன்று உலகளாவிய ரீதியல் துரித விமான சேவை இடம்பெற்று வருகின்றது. தற்போது வர்த்தக நோக்கிற்காக பாகிஸ்த்தானுக்கு சென்ற சில சகோதரர்கள் பாகிஸ்த்தானில் வைத்து தலைப்பிறையைப் பார்த்து விட்டு சில மணி நேரங்களில் நாடு திரும்புகின்றனர். ஆனால், இலங்கையில்  பிறை தென்படவில்லை. இவர்களுக்குரிய மார்க்கத் தீர்ப்பு என்ன? இவர்கள் பாகிஸ்த்தானில் கண்ணால் கண்ட பிறையின் அடிப்படையில் நோன்பு நோற்பதா? அல்லது இலங்கையில் பிறை காணப்படவில்லை என்பதற்காக நோன்பு நோற்காதிருப்பதா?

03.உள்நாட்டுப் பிறையின் அடிப்படையில் நோன்பு நோற்ற இலங்கையர் ஒருவர் கட்டார் நாட்டிற்கு வேலைவாய்ப்பு பெற்றுச் செல்கின்றார். குறித்த சகோதரர் 27 நோன்பை பூர்த்தி செய்துள்ள நிலையில் கட்டாரில் பிறையைக் காண்கிறார். குறித்த மாதம் கட்டாரிற்கும், இலங்கைக்கும் இடையில் இரண்டு நாள் வித்தியாசம் ஏற்படுகின்றது என வைத்துக் கொள்வோம். இவருக்குரிய மார்க்கத் தீர்ப்பு என்ன? அழ்ழாஹ்வின் தூதரின் பிறை கண்டால் நோன்பை விட்டு விடுங்கள் என்கின்ற நபிமொழியை மீறுவதா? அல்லது மாதம் என்பது 29 நாட்கள் அல்லது 30 நாட்கள் என்கின்ற நபிமொழியை மீறுவதா?

04.இன்றைய இந்தியா, பாகிஸ்த்தான் மற்றும் பங்களாதேஷ் போன்ற நாடுகள் இணைந்து ஆரம்பத்தில் பாரத நாடு (ஹிந்துஸ்த்தான்) என்கின்ற ஒரு நாடாகவே காணப்பட்டது. நாட்டுக்கு நாடு பிறை பார்க்க வேண்டும் என்பதன் அடிப்படையில் ஒட்டு மொத்த பாரத முஸ்லிம்களும் ஒரே பிறையின் அடிப்படையிலேயே நோன்பு மற்றும் பெருநாள் வணக்கங்களை அனுஷ்டித்திருப்பார்கள்.

ஆனால், பின்னர் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தினால் பாரத நாடு இந்தியா, பாகிஸ்த்தான் என்கின்ற இருநாடுகளாகப் பிரிவடைந்து, பின்னர்  பாகிஸ்த்தானில் இருந்து பங்களாதேஷ் பிரிவடைந்து இன்று வௌ;வேறு மூன்று நாடுகளாகக் காணப்படுகின்றன. நாட்டுக்கு நாடு பிறை பார்க்க வேண்டும் என்கின்ற வாதத்தின் அடிப்படையில் ஒரே பிறையில் வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டு வந்த மக்கள் இன்று மூன்று பிறைகளின் அடிப்படையில் வணக்க வழிபாடுகளில் ஈடுபட வேண்டும். நாட்டுக்கு நாடு பிறை பார்க்க வேண்டும் என்கின்ற நிலைப்பாட்டை வலியுறுத்தக் கூடிய மார்க்க அறிஞர்களே! அரசியற் காரணிகளால் ஏற்படுகின்ற மாற்றம் அழ்ழாஹ்வின் மார்க்கத்தை மாற்றியமைக்குமா?

05.உலகில் இஸ்லாமிய ஆட்சி ஏற்பட்டு விட்டது என்று வைத்துக் கொள்வோம். (இன்ஷா அழ்ழாஹ் நிச்சயம் ஏற்படும்) தற்போது பலஸ்த்தீன், ஆப்கான், ஈராக் போன்ற நாடுகளில் வாழ்கின்ற எமது ஈமானிய உறவுகள் மீது கோரத்தாக்குதல்களை மேற்கொள்கின்ற யூத, கிறிஸ்த்தவ, சியோனிஸ்டுகள் மீது போர் தொடுப்பது இஸ்லாமிய அரசின் கட்டாயக் கடமையாகின்றது. இப்போரில் அருளாளன் அழ்ழாஹ்வின் பேருதவியால் இஸ்லாமிய அரசுக்கு வெற்றி கிடைக்கின்றது. இதனை வரலாற்றில் பதிவு செய்வதாயின் எந்தப் பிறையின் அடிப்படையில் பதிவு செய்வது? அமெரிக்கப் பிறையின் அடிப்படையிலா?  பலஸ்த்தீன் பிறையின் அடிப்படையிலா?

06.அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரபியுல் அவ்வல் பிறை 12ல் மரணமடைந்தார்கள் என்று ஆதாரபூர்வமான நபிமொழகள் எடுத்தியம்புகின்றன. அவ்வாறாயின், அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்தப் பகுதியின் பிறை 12ல் மரணமடைந்தார்கள். மக்காப் பிறையின் அடிப்படையிலா? மதீனாப் பிறையின் அடிப்படையிலா?

07. ஆரம்பத்தில் ஒரு நாடாகக் காணப்பட்ட கொரியா இன்று வடகொரியா, தென்கொரியா என்கின்ற இரு நாடுகளாகக் காணப்படுகின்றது. கொரிய நாட்டு மக்கள் ஒரு பிறையின் அடிப்படையில் வணக்க வழிபாடுகளை அமைத்துக் கொள்ள வேண்டும் என்பது இறைசட்டமா? அல்லது இரு வேறுபட்ட பிறைகளின் அடிப்படையில் வணக்க வழிபாடுகளை அமைத்துக் கொள்ள வேண்டும் என்பது இறைசட்டமா?

08. இந்தியாவின் கீழக்கரை என்கின்ற பிரதேசத்திற்கும் இலங்கையின் தலை மன்னாரிற்கும் இடைப்பட்ட தூரம்வெறும் 50 கி.மீ இற்கும் குறைவான தூரமேயாகும். ஆனால் இலங்கை நாட்டின் யாழ்ப்பாணத்திற்கும், காலிக்கும் இடையிலான தூரம் 600 கி.மீ இற்கும் அதிகமான தூரமாகும்.

இந்தியாவின் கீழக்கரையில் கண்ட பிறை தலை மன்னாருக்கு செல்லுபடியாகாது என்று கூறுவது எந்த வகையில் நியாயம்?  அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரண்டு நீதமான முஸ்லிம்கள் பிறை கண்டதாக சாட்சி சொன்னால் ஏற்றுக் கொள்ளுங்கள் என பொதுவாகத்தானே கட்டளையிட்டுள்ளார்கள். ஏன் இந்த முரண்பாடு? இஸ்லாம் அறிவுபூர்வமான மார்க்கம் என்று நாம் உரைகளில் உரக்கச் சொல்வது அர்த்தமற்றுப் போய்விடுமே?

09.இன்றைய ஜேர்மன் நாடு ஆரம்பத்தில் கிழக்கு ஜேர்மன், மேற்கு ஜேர்மன் என்கின்ற இரு நாடுகளாக காணப்பட்டது. நாட்டுக்கு நாடு பிறை பார்க்க வேண்டும் என்கின்ற வாதத்தின் அடிப்படையில்  ஆரம்பத்தில்  கிழக்கு ஜேர்மன் மக்கள் ஒரு பிறையின் அடிப்படையிலும், மேற்கு ஜேர்மன்  மக்கள் ஒரு பிறையின் அடிப்படையிலும் தமது வணக்க வழிபாடுகளை நிறைவேற்றி வந்திருப்பார்கள். ஆரம்பத்தில் இரு வேறுபட்ட பிறைகளின் அடிப்படையில் வணக்க வழிபாடுகளை நிறைவேற்றி வந்தவர்கள் அரசியல் மாற்றத்தின் காரணமாக ஒரு பிறையின் அடிப்படையில் அடிப்படையில் வணக்க வழிபாடுகளை அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்கு என்ன ஆதாரம்? அரசியல் மாற்றம் அழ்ழாஹ்வின் மார்க்கத்தை மாற்றியமைக்குமா?

இவ்வாறான நடைமுறை சார்ந்த பிரச்சினைகள் ஏராளமாக காணப்படுகின்றன. இத்தகைய நடைமுறைச் சிக்கல்கள் அனைத்திற்கும் சர்வதேசப் பிறை ஒன்றே தீர்வு சொல்லக் கூடியது. மேலும், நாடுகளின், மாகாணங்களின், பிரதேங்களின் எல்லைகள் அழ்ழாஹ்வாலோ, அவனது தூதர் (ஸல்) அவர்களாலோ வகுத்து தரப்பட்டது கிடையாது. மாறாக, நிர்வாக வசதிக்காக நாம் வகுத்துக் கொண்டதாகும். எனவே, நிர்வாக எல்லைகளைக் காரணம் காட்டி பிறைத் தகவலை நிராகரிக்க முடியாது.

இற்றைக்கு சுமார் 100 வருடங்களுக்கு  முன்னர் ஒருவர் ஹஜ்ஜுக்குச் சென்று,  இறந்துவிட்டால் சென்றவர்கள் திரும்பி வந்து சொன்ன பின்புதான் இறந்தவருடைய மனைவி இத்தா இருக்கும் நிலை காணப்பட்டது. அதே போன்று தகவற் தொழிநுட்ப வளர்ச்சி குன்றியிருந்த காலத்தில் காத்தான்குடியில் காணப்பட்ட பிறைத் தகவல் கொழும்புக்கோ, திருகோணமலைக்கோ தெரிய வாய்ப்பிருக்கவில்லை. எனவே, காத்தான்குடியில் ஒரு தினத்திலும், திருகோணமலையில் வேறொரு தினத்திலும், கொழும்பில் மற்றொரு தினத்திலம் நோன்பு நோற்கும் நிலையே காணப்பட்டது. பின்பு ஏற்பட்ட தகவல் தொழிநுட்ப வளர்ச்சியின் காரணமாக முழு இலங்கையிலும் ஒரே தினத்தில் நோன்பு நோற்க கூடிய நிலை காணப்பட்டது. (அதிலும் அடிக்கடி பாரிய தவறுகள் இடம்பெறாமலில்லை. குறிப்பாக, நாட்டுக்கு நாடு பிறை பார்க்க வேண்டும் எனக் கூறுபவர்கள் கடந்த 2005 ல் மூன்று நாட்கள் வித்தியாசத்தில் நோன்பு நோற்றமை குறிப்பிடத்தக்கது.)

ஹஜ்ஜுக்காக சென்ற கணவன் இறந்த தகவல் இன்றைய நவீன தொடர்பு சாதனங்களினூடாக இறந்தவருடைய மனைவிக்கு தெரியப்படுத்தப்படுகையில் இறந்தவருடைய மனைவி ஆரம்பகால நடைமுறையை காரணம் காட்டி தகவலை நிராகரிப்பது எவ்வளவு தவறோ, அதே போன்றுதான் ஆரம்பகால நிலமையை காரணம் காட்டி கொழும்புத் தகவலை காத்தான்குடியிலோ ஏனைய ஊர்களிலோ உள்ள மக்கள் நிராகரிப்பது தவறாகும்?

அதே போன்று தவறான மற்றொரு வாதம்தான் இன்று தகவல்; தொழிநுட்பத்தில் ஏற்பட்டுள்ள அபரிதமான வளர்ச்சியை நிராகரித்துவிட்டு, ‘அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரண்டு முஸ்லிம்கள் பிறை கண்டதாக சாட்சியமளித்தால் ஏற்றுக் கொள்ளுங்கள்’ என எவ்வித வரையறைகளுமின்றி பொதுவாக கட்டளையிட்டிருக்க, அவ்விரு சாட்சிகளும் எங்கள் நாட்டிற்குள் இருந்தால்தான் ஏற்றுக் கொள்வோம் எனவும், நீதமான, நம்பகமான முஸ்லிம்களாக இருந்தாலும் எங்கள் நாட்டிற்கு வெளியில் இருந்தால் ஏற்றுக் கொள்ளமாட்டோம் என வாதிடுவது ஆகும்.

உலகின் எப்பாகத்தில் இருந்தேனும் பிறை தென்பட்டால் அதுவே குறித்த மாதத்திற்கான தலைப்பிறையாகும். இப்பூகோள அமைப்பில் நேரங்கள் மாத்திரம்தான் வித்தியாசப்படுமே தவிர, ஒரு போதும் நாள் வித்தியாசப்படாது. எனவே, உலகின் எப்பகுதியில் இருந்து தகவல் கிடைத்தாலும் அதனை ஏற்று செயற்படுத்த வேண்டிய கடமைப்பாடு எமக்கு இருக்கின்றது. மாறாக, மனோ இச்சையின் அடிப்படையில் புறக்கணிப்போமாயின் இறைவனிடத்தில் குற்றவாளியாக நேரிடும். இதனையே அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்.

‘நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இருநாட்களும் நோன்பு நோற்பதற்கு அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்.’ (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), நூல்: புஹாரி)

எனவே, இது வரை நாம் பார்த்த வலுவான ஆதாரங்களின் அடிப்படையிலும், நடைமுறை சார்ந்த பிரச்சினைகளின் அடிப்படையிலும் தலைப்பிறை என்பது உலகளாவிய மக்கள் அனைவருக்கும் ஒரே பிறைதான் என்பதனை மிகத் தெளிவாக அறிந்து கொண்டோம். பிறை கண்ட சாட்சியம் இரண்டு நீதமான, நம்பகமான முஸ்லிம்கள் மூலம் ஆதாரப்பூர்வமாக எமக்கு கிடைக்கையில், இஸ்லாம் தலைப்பிறையின் மூலம்; விரும்புகின்ற உலகளாவிய ஒற்றுமையை ஏற்படுத்த நாம் முன்வர வேண்டும்.

இறுதியாக, அழ்ழாஹ்வும், அவனது திருத்தூதர் (ஸல்) அவர்களும் காட்டிய வழிமுறையில் எமது வணக்க வழிபாடுகளை அமைத்துக் கொள்ள அருளாளன் அழ்ழாஹ் அருள்பாலிப்பானாக!

2 comments:

Admin said...

அன்பிற்கினிய சகோதரருக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

சர்வதேச பிறை(?)யை பற்றிய சில சந்தேகங்கள்:

நீங்கள் கூறிய நபிமொழிகள் சர்வதேச பிறை(?)க்கு எவ்வாறு ஆதாரங்களாக ஆகிறது?

நீங்கள் குறிப்பிட்டுள்ள ஹதீஸ்களில்,

//இரண்டு கிராமவாசிகள் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து நேற்று இரவு நாங்கள் பிறை பார்த்தோம் என்று சாட்சி கூறினார்கள்.//

//அப்போது இரு கிராமவாசிகள் வந்து வணக்கத்திற்குரியவன் அழ்ழாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்று உறுதி கூறி நேற்று நாங்கள் பிறை பார்த்தோம் என்று அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சாட்சி கூறினார்கள்.//

//பகலின் கடைசி நேரத்தில் ஒரு வாகனக் கூட்டத்தினர் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து நேற்று நாங்கள் பிறை பார்த்தோம் என்று சாட்சி கூறினார்கள். //


நீங்கள் ஒன்றை புரிந்துக் கொள்ள வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்..) அவர்களின் காலத்தில் வாகனங்களாக இருந்தவைகள் ஒட்டகம், கழுதை போன்றவைகள்தான்.

மக்காவிற்கும், மதினாவிற்கும் இடைப்பட்ட தூரம் ஐநூறு கிலோமீட்டர் ஆகும்(தோராயமாக). ஒட்டகத்திலோ அல்லது கழுதையிலோ வந்திருந்தால் கூட குறைந்தது மூன்று அல்லது நான்கு நாட்கள் ஆகியிருக்கும். அவர்கள் கூறியது //நேற்று நாங்கள் பிறை பார்த்தோம் //. அப்படியென்றால் அவர்கள் பிறை பார்த்த சமயம் நபிகள் நாயகம் (ஸல்..) அவர்கள் இருந்த (மக்கா அல்லது மதீனா)இடத்திற்கு சமீபமாக தான் இருந்திருக்கிறார்கள். அந்த ஹதீஸ்களில் கிராமவாசிகள் தூரதேசத்திலிருந்து வந்தவர்கள் என்று குறிப்பிடப்படவில்லை.

ஆக இந்த ஹதீஸ்கள் சர்வதேச பிறை(?)க்கு ஆதாரமில்லை.

நாட்டுக்கு நாடு, ஊருக்கு ஊர் என்று பிறை பார்க்க சொல்லவில்லை. தூரங்களையும், நேரங்களையும் வைத்து தான் பிறை பார்க்க வேண்டும்.

காஷ்மீரில் பார்த்த பிறை கன்னியாகுமரிக்கு பொருந்தும். ஆனால் சவூதி, அல்லது துபாயில் பார்த்த பிறை இந்தியாவிற்கு பொருந்தாது. அதே போல் இலங்கையில் பார்த்த பிறை இந்தியாவிற்கு பொருந்தும். ஆனால் சவூதி, அல்லது துபாய்க்கு பொருந்தாது.

உங்களின் என்பது கேள்விகளும் எனக்கு விதண்டாவாதமாகவே படுகிறது(மன்னிக்கவும்).

என்னுடைய கேள்வி:
நீங்கள் இந்தியாவில் அஸர் தொழுதுவிட்டு இன்னொரு நாட்டிற்கு செல்கிறீர்கள். ஆனால் அங்கு அப்பொழுது தான் ழுஹர் தொழுகை நடைபெறுகிறது. அப்பொழுது நீங்கள் எந்த தொழுகையை தொழுவீர்கள்?

அஸர் தொழுதுவிட்டதால் (ழுஹருடைய நேரத்தில்) மக்ரிப் தொழுவீர்களா?

அவர்களுடன் சேர்ந்து ழுஹர் தொழுவீர்களா?

அல்லது மக்ரிப் வரும் வரை எதையும் தொழாமல் இருப்பீர்களா?

Admin said...

திருத்தம்:

//உங்களின் என்பது கேள்விகளும்//

இதை "உங்களின் ஒன்பது கேள்விகளும்" என்று படிக்கவும்.

Post a Comment